||2.5||
गुरूनहत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भौक्ष्यमपीह लोके ।हत्वाऽर्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान्रुधिरप्रदिग्धान् ।। ५ ।।
பு4ஞ்ஜீய போ4கா3ந் ருதி4ரப்ரதி3க்3தா4ன் ।। 5 ।।
महानुभावान् மஹாநுபா4வான் மேன்மை பொருந்திய गुरून् கு3ரூன் குருவை
अहत्वा அஹத்வா கொல்லாமல் इह लोके இஹ லோகே இவ்வுலகில்
भौक्ष्यम् अपि பை4க்ஷயம் அபி பிச்சையெடுத்த உணவு கூட भोक्तुं போ4க்தும் உண்பது
श्रेय: हि ஸ்ரேயோ ஹி நிச்சயமாக சிறந்தது तु து ஆனால்
गुरून् கு3ரூன் பெரியவர்களை हत्वा ஹத்வா கொன்றால்
रूधिरप्रदिग्धान् ருதி4ரப்ரதி3க்3தா4ன் இரத்தம் கலந்த
अर्थकामान् भोगान् அர்த்த2காமான் போ4கா3ந் சுகம் தரும் பொருட்களை
इह एव இஹ ஏவ இவ்வுலகிலேயே भुञ्जीय பு4ஞ்ஜீய அனுபவிப்பேன்.
உத்தமர்களாகிய குருமார்களைக் கொல்லாமல், இவ்வுலகில் பிச்சையெடுத்த உணவு உண்பது கூட சிறந்தது. ஆனால் குருக்களைக் கொன்றால் இரத்தம் கலந்த போகத்தை தான் இவ்வுலகில் அனுபவிப்பேன்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சை யெடுத்துண்பதும் நல்லது. பொருளை விரும்பி குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்திற் கலந்தனவாம்.
விளக்கம்:
=> சந்நியாச வாழ்க்கைமுறை:
அர்ஜுனன், குருவை கொன்று அவரின் ரத்தத்தால் நனைந்த சுக போகங்களை அனுபவிப்பதைக் காட்டிலும் பிச்சையெடுத்தல் சிறந்தது என்கிறான். சாஸ்த்திரப்படி 2 விதமான மனிதர்கள் யாசிக்கலாம் - ப்ரம்மசாரிகள் மற்றும் சன்னியாசிகள். கற்றலின் பொருட்டு ஆசாரியர்களுடன் குருகுலவாசம் மேற்கொள்ளும் ப்ரம்மசாரிகளுக்கு யாசித்தல் அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்நிலையை அர்ஜுனன் கடந்துவிட்டான். எஞ்சியிருப்பது சந்நியாச வாழ்க்கைமுறை மட்டுமே. போரிலிருந்து விலகுவதன் மூலம், ராஜ்ஜியத்தை துறந்து, சுக போகங்களை விட்டு துறவறம் மேற்கொள்ள வேண்டுமென்பது அவனுடைய எண்ணமாக இருந்தது. இதனை மனதில் கொண்டே பகவானிடம், ‘எது சிறந்தது, கர்ம யோக வாழ்க்கைமுறையா? அல்லது சந்நியாசமா?’, ‘என்னை ஏன் கர்மத்தில் ஈடுபட சொல்கிறீர்கள்?’ என மீண்டும் மீண்டும் அத்யாயம் 3 மற்றும் 5-லும், மேலும் 18வது அத்யாயத்திலும் கூட ‘த்யாகத்திற்க்கும் சந்நியாசத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?’ என்று கேட்கின்றான்.
||2.6||சிஷ்ய லக்ஷணம் - 3வது படியான ‘தனக்கு தெரியாததை’ உணர்வது:
न चैतद्विद्म: कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयु: ।
यानेव हत्वा न जिजीविषामस्तेऽवस्थिता: प्रमुखे धार्तराष्ट्रा: ।। ६
ந சைதத்3வித்3ம: கதரந்னோ க3ரீயோ
யத்3வா ஜயேம யதி3 வா நோ ஜயேயு: ।
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்
தேऽவஸ்தி2தா: ப்ரமுகே தா4ர்தராஷ்ட்ரா: ।। 6
न: ந: எங்களுக்கு कतरत् கதரத் எது गरीय: க3ரீய: சிறந்தது एतत् ஏதத் இதை
न च विद्म: ந ச வித்3ம: நாம் அறியோம் यद्वा जयेम யத்3வா ஜயேம (நாம்) ஜெயிப்போமா
यदि वा யதி3 வா அல்லது न: जयेयु: ந: ஜயேயு: நம்மை ஜெயிப்பார்களோ
यान् एव யான் ஏவ எவர்களை हत्वा ஹத்வா கொன்று
न जिजीविषाम: ந ஜிஜீவிஷாம: உயிர்வாழ விரும்பமாட்டோமோ
ते धार्तराष्ट्रा: தே தா4ர்தராஷ்ட்ரா: அந்த திருதராஷ்டிரக் கூட்டத்தார்
प्रमुखे ப்ரமுகே எதிரில் अवस्थिता: அவஸ்தி2தா: நிற்கின்றனர்.
நாம் வெற்றி கொள்வோமா? அல்லது அவர்கள் நம்மை வெற்றி கொள்வார்களா? இதில் எங்களுக்கு எது சிறந்தது என்பதை நாம் அறியோம். எவர்களைக் கொன்று வாழ்வதற்கு கூட விரும்பமாட்டோமோ அந்த திருதராஷ்டிரக் கூட்டத்தார் எதிரில் நிற்கின்றனர்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் — இவற்றுள் எது நமக்கு மேன்மை என்பது விளங்கவில்லை. எவரைக் கொன்ற பின் நாம் உயிர் கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கின்றார்கள்.
விளக்கம்:
=> அர்ஜுனனின் மனக்குழப்பம்:
இங்கு அர்ஜுனன் தனக்கு எது சிறந்தது என தெரியவில்லை — எதிரிகளாக நின்று கொண்டிருக்கும் தன் சொந்தங்களையே வெல்வதா? அல்லது அவர்களிடம் தோற்பதா? இவர்கள் அனைவரையும் கொன்று பெற்ற வெற்றி இரு தரப்பிற்க்கும் எந்த நன்மையையும் அளிக்காது. அதை விரும்பவும் இல்லை. ஆகவே ‘கோழையை போல் பேசாதே! எழு, போர் புரி’ என கூறும் க்ருஷ்ணனைப் பார்த்து குழம்பியவனாக, திருதராஷ்டிரக் கூட்டத்தினரை அழிப்பதால் கிடைக்கும் வெற்றியை பாண்டவர்கள் விரும்பமாட்டார்கள் என வாதிடுகிறான். தனது மனகுழப்பத்திற்கான விடை தெரியாதவனாக மேலும் தொடர்கிறான்.
---------------------------------------------------------------------------------
||2.7|| இங்கு அர்ஜுனனிடம் 4-ம் தகுதியான ‘சரணடைதல்’ நடைபெறுகிறது:
कार्पण्यदोषोपहतस्वभाव: पृच्छामि त्वां धर्मसम्मूढचेता: ।
यच्छ्रेय: स्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम् ।। ७
கார்பண்யதோ3ஷோபஹதஸ்வபா4வ:
ப்ருச்சா2மி த்வாம் த4ர்மஸம்மூட4சேதா: ।
யச்ச்2ரேய: ஸ்யாந்நிஸ்சிதம் ப்3ருஹி தன்மே
சிஷ்யஸ்தேऽஹம் சா1தி4 மாம் த்வாம் ப்ரபன்னம் ।। 7
कार्पण्य दोष उपहतस्वभाव: கார்பண்ய தோ3ஷ உபஹதஸ்வபா4வ: சிறுமை என்னும் தோஷத்தினால் இயல்பிலிருந்து வீழ்ந்தவனாய்
धर्मसम्मूढचेता: த4ர்மஸம்மூட4சேதா: தர்மத்தைப் பற்றிய அறிவை இழந்த மனதுடையவனாய்
त्वां த்வாம் உங்களை पृच्छामि ப்ருச்சா2மி கேட்கின்றேன் मे மே எனக்கு यत् யத் எது
श्रेय: स्यात् ச்1ரேய: ஸ்யாத் சிறந்ததாக இருக்கிறதோ (நன்மையை தருவதோ)
तत् தத் அதை निश्चितं நிஸ்சிதம் நிச்சயமாக ब्रूहि ப்3ருஹி கூறுங்கள்
अहं அஹம் நான் ते தே உங்களுடைய शिष्य: சிஷ்ய: சிஷ்யன் त्वां த்வாம் உங்களை
प्रपन्नम् ப்ரபன்னம் சரணடைந்த मां மாம் எனக்கு शाधि சா1தி4 உபதேசியுங்கள்.
சிறுமை என்னும் தோஷத்தினால் இயல்பிலிருந்து வீழ்ந்தவனாய், அறநெறியை பற்றிய அறிவை இழந்து உங்களைக் கேட்கின்றேன். எனக்கு எது நன்மை என்பதை நிச்சயமாகக் கூறுங்கள். நான் உங்களுடைய சிஷ்யன். உங்களைச் சரணடைந்த எனக்கு உபதேசியுங்கள்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கின்றேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்தி சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளைத் தருக.
விளக்கம்:
=> ச்1ரேயஸ் (நன்மை):
கடோபநிஷதத்தில் யமதர்மராஜா நசிகேதனுக்கு 3 வரங்களை அருளுகிறார். அதில் முதலிரண்டு வரங்களை தனது தந்தைக்காகவும் மற்றவர்களுக்காகவும் உபயோகிக்கிறான் நசிகேதன். மூன்றாவது வரத்தை தன் பொருட்டு உபயோகித்து தனக்குள்ள சந்தேகமான, ‘மனிதன் இறந்த பின்னும் இருக்கின்றான் என சிலரும், இல்லையென்று சிலரும் கூறுகிறார்கள். இந்த சந்தேகம் குறித்த விளக்கத்தை மூன்றாவது வரமாக பெற விருப்புகிறேன்’ என கேட்கின்றான். முதலில் விளக்கம் அளிக்கத் தயங்கிய யமன், பிறகு உபதேசத்தை ஆரம்பிக்கின்றார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நன்மை(ச்1ரேயஸ்), இன்பம்(ப்ரேயஸ்) இவைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் உரிமை மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ச்1ரேயஸ் (நன்மை) x ப்ரேயஸ் (இன்பம்).
ச்1ரேயஸ் - நன்மை - வீடுபேறு - மோக்ஷம்
ப்ரேயஸ் - இன்பம் - அறம், பொருள், இன்பம்
நசிகேதன் யமனிடம் இந்த நன்மையையே (ச்1ரேயஸ்) கேட்டான்.
=> அர்ஜுனனும் தனக்கு இன்பம் வேண்டாம்(முந்தய ஸ்லோகங்களிலிருந்து), எது நன்மை என சொல்லுங்கள் என்று கூறி சிஷ்யனாக மாறுகிறான்.
शिष्य: சிஷ்ய: - शासने योग्य: शिष्य: சா1சனே யோக்3ய: சிஷ்ய: - உபதேசம் செய்வதற்கு தகுதியானவன்.
=> நன்மையை தற்காலிக நன்மை(relative), முழுமையான நன்மை(absolute) என பிரிக்கலாம் என்ற போதிலும், இங்கு அர்ஜுனன் முழுமையான நன்மையை கேட்பதாகவே எடுத்துக் கொண்டு பகவான் உபதேசத்தை செய்கிறார்.
||2.8|| தனக்கு சரணடைவதற்கு வேறு இடம் கிடையாது என அர்ஜுனன் காட்டுதல்:
न हि प्रपश्यामि ममापनुद्याद्यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् ।
अवाप्य भूमावसपत्नमृध्दं राज्यं सुराणामपि चाधिपत्यम् ।। ८
ந ஹி ப்ரபச்1யாமி மமாபனுத்3யாத்3
யச்சோ2கமுச்சோஷணமிந்த்ரியாணாம் ।
அவாப்ய பூ4மாவஸபத்னம்ருத்3த்4ம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதி4பத்யம் ।। 8
भूमौ பூ4மெள பூமியில் असपत्नं அஸபத்னம் எதிர்ப்பில்லாத ऋध्दं ருத்3த்4ம் செழிப்பான
राज्यं च ராஜ்யம் ச ராஜ்யத்தையும் सुराणाम् अपि ஸுராணாம் அபி சுரர்களுக்கும்
अाधिपत्यम् ஆதி4பத்யம் அதிபதியாயிருப்பதையும் अवाप्य அவாப்ய அடைந்து मम மம என்னுடைய इन्द्रियाणां இந்த்ரியாணாம் புலன்களுடைய उच्छोषणम् உச்சோஷணம் எரிக்கின்ற
शोकम् சோ1கம் சோகத்தை अपनुद्यात् அபனுத்3யாத் நீக்கும்
यत् न हि प्रपश्यामि யத் ந ஹி ப்ரபச்1யாமி என்பதை நிச்சயமாக பார்க்கவில்லை.
பூமியில் செழிப்பான நிகரில்லாத ராஜ்ஜியத்தை அடைந்த போதிலும், அமரர்களுக்கும் அதிபதியானாலும், என் புலன்களைப் பொசுக்குகின்ற துன்பத்தை அவை துடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர்மிசை ஆட்சி பெறினும், புலன்களை யடர்க்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை.
விளக்கம்:
ஒருவன் தனது துயரத்திற்கு எது காரணமென முடிவு செய்கிறானோ அதை அடிப்படையாகக் கொண்டுதான் அவனுடைய வாழ்க்கை பயணத்தை தேர்ந்தெடுப்பான். செல்வம் இல்லாதது காரணம் என நினைத்தால் பணம் சம்பாதித்தல் அவனது குறிக்கோளாகிறது.
ஆனால் இங்கு அர்ஜுனன் தனது துயரத்தை எது நீக்கும் என தெரியாதவனாக, எவைகளெல்லாம் தனது சோகத்தை நீக்காது(எந்த ராஜ்யமும் என்னை திருப்திப்படுத்தாது) என்ற அறிவுடனும், தனது மனக் குழப்பத்தை பகவான் நீக்குவார் என்ற முழுமையான நம்பிக்கையுடனும் அவரைச் சரணடைகிறான்.
சாஸ்திரத்தை படித்து அதிலிருந்து பயனை அடைய 4 வித தகுதிகளை ஒருவன் பெற்றிருக்க வேண்டும். அத்தகுதிகளை உடையவன் அதிகாரி(अधिकारी) என்று அழைக்கப்படுகின்றான். அவை:
சாதன சதுஷ்டய சம்பத்தி (साधन चतुष्टय सम्पत्ति):
சாதன – தகுதிகள்
சதுஷ்டய – 4
சம்பத்தி – அடைய வேண்டும்
சம்பந்ந: - அதிகாரி – 4 தகுதியுடையவன்
ஞான யோக சாதனைக்கு முன் அடைய வேண்டிய தகுதிகள்:
(1) விவேகம்
நித்ய-அநித்ய வஸ்து விவேக:
நிலையானது, நிலையற்றது என பிரிக்கும் அறிவு.
நம்முடைய அனுபவம் மற்றும் பிறரது அனுபவம் வாயிலாக நிலையானது(ப்ரம்மம்) எது, நிலையற்றது(உலகம்) எது என அறிவது. உபாயம் – கர்ம யோகம்
(2) வைராக்யம்
போகத்தில் (இந்திரிய சுகம், உலகப் பொருட்கள்) விருப்பமில்லாத மனநிலை.
உபாயம் – அணுதர்சனம்; மீண்டும் மீண்டும் விவேகத்தை விசாரம் செய்ய, வைராக்யம் பிறக்கும்.
(3) சமாதி ஷக்க சம்பத்தி:
இதில் 6 பண்புகள் உள்ளன.
(i) ச1ம: – மனக்கட்டுப்பாடு (அ) மனஅமைதி
(ii) த1ம: – இந்திரியக் கட்டுப்பாடு
(iii) உபரம: / உபரதி: – நிலைத்து இருந்து பழகுதல்
சமத்தையும், தமத்தையும் தொடர்ந்து செய்யும் முயற்சி.
(iv) திதிக்ஷா (சகித்தல்) – பொறுமை (endurance)
சுக - துக்கம் முதலான இருமைகளை சகித்துக் கொள்ளுதல்;
(v) ஸ்ரத்தா4 - நம்பிக்கை (belief)
குருவினிடத்தும், சாஸ்த்திரத்தினடத்தும்(ஈஸ்வரத்துவம்) நம்பிக்கை
(vi) சமாதானம் – இலட்சியத்தில் மனதை வைத்தல்
ஞான யோகம் என்ற சாதனத்தில் மனதை வைத்துப் பழகுதல்
(4) முமுக்சுத்வம்
மோட்ஷம் அடைய இச்சை; உபாயம் – ஞான யோகம்