மனமெனும் சுவரில் சுயத்தின் சூரியன்

சுவாமி ராமதீர்த்தர், ஜனவரி 12, 1903 அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் ஹாலில் வழங்கப்பட்ட சொற்பொழிவிலிருந்து எடுக்கப்பட்ட சாரம்:

மாறா வடிவாக அமர்ந்திருக்கும் பெண்கள் மற்றும் கனவான்களே

    இன்றிரவு சொற்பொழிவின் மையப்பொருள் மாறக்கூடியவற்றில் மாறாதது. அதாவது, மாறக்கூடிய உடல்களுள் மாறாததை காட்டப்போகிறேன். இன்றும் நேற்றும் மற்றும் என்றென்றும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கின்ற அந்த சூரியனை உதாரணமாக எடுத்துக் கொண்டு மாறக்கூடியவற்றில் மாறாதது குறித்து விளக்கப் போகிறேன். மனிதனிடம் மாறக்கூடிய விஷயங்களும், மற்றும் மாறாத நித்தியமான ஆத்மாவும் உள்ளது. உண்மையான ஆத்மா என்பது சூரியனைப் போன்றது, மாறக்கூடிய கூறுகளாக மூன்று உடல்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறதுதிட உடல், நுட்பமான உடல் மற்றும் விதை உடல். இந்த உடல்களுக்கு ராமன் நான் கொடுக்கும் பெயர்கள் இவை. சமஸ்கிருதத்தில் அவை ஸ்தூல, சூக்ஷம மற்றும் காரண ஷரீரம் என்றழைக்கப்படுகிறது. இந்த மூன்று உடல்கள், அதாவது ஸ்தூல உடல், சூக்ஷம உடல் மற்றும் காரண உடல் - மாறக்கூடியவைகள். இவை ஒருவனது சுயம் அல்ல; சுயம்-அல்லாதவைகளாக இருக்கின்றன. மாறக்கூடிய, நிலையற்ற இவை ஒருவனின் சுயம் அல்ல; மெய்யான சுயம் என்பது மாறாதது, நிலையானது. இது காட்டப்பட வேண்டும். மூன்று உடல்கள் மற்றும் உண்மையான ஆத்மாவைப் பற்றிய தெளிவான விளக்கத்தை அடைய ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்

உண்மைக்கு ஓர் அற்புதமான அழகு இருக்கிறது. அது ஒருவனது இதயத்தில் ஆழமாக ஊடுருவ வேண்டுமெனில், அவன் அதை தெளிவாகக் காண்பது மட்டுமே அங்கு தேவைப்படுகிறது. சூரியனின் இருப்புக்கு அதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை. சூரியனைப் பார்ப்பது என்பதே சூரியனை நிரூபிப்பதாகும். இருக்கின்ற அனைத்தும் ஏதோ ஒரு வெளிப்புற ஒளியினால் ஒளிர்விக்கப்படுகிறது, ஆனால் ஒளியை காண்பதற்கு வேறு எந்த ஒளியும் தேவையில்லை. அவ்விதத்தில் இன்றிரவு இந்த முன்மொழிவு என்பது எந்த வாதங்களும், எந்த தர்க்கமும் இல்லாமல் உங்கள் முன் வைக்கப்பட உள்ளது. இப்போது நாம் விளக்கத்திற்குள் செல்லலாம். இப்போது ராமன் இமயமலையின் பனிமலைப் பகுதிகளுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். அங்கு அனைத்தும் வெண்மையானவை; வைரம் போன்ற மலைகள், மிகவும் திகைப்பூட்டுகிற, மின்னுகிற, அழகான, அற்புதமான வெண்ணிற பனிப்பாறைகளின் கடல் என அனைத்து பிரமிக்க வைக்கும் காட்சிகளையும் காண்கிறோம். அங்கு நாம் எந்த தாவரத்தையும், விலங்கு வாழ்க்கையையும், எந்த மனிதர்களையும் பார்க்கவில்லை. இந்த அழகிய காட்சிகளுக்கு ஆதாரமாக இருப்பது சூரியன், பிரகாசிக்கும் மகத்தான கோளவடிவினன். ஆஹா, என்ன ஒரு அற்புதமான காட்சி! சில நேரங்களில் மேகங்கள் வழியாகச் செல்லும் சூரியனின் ஒளி நிலத்தின் மீது விழுந்து, முழு நிலப்பரப்பையும் நெருப்பின் நிறத்தில் பிரகாசிக்கச் செய்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு முழு காட்சியும் மஞ்சள் நிறமாக மாறும், ஆனால் அங்கு இருப்பது சூரியன் ஒன்று மட்டுமே, வேறெதுவும் இல்லை.

இப்போது, இந்துஸ்தானத்தின் மிகப்பெரிய ஆறுகள் இந்தப் பனிப்பாறைகளில் உள்ளுறைந்து மறைந்திருக்கின்றன என்பதை கவனத்திற்கு கொண்டுவாருங்கள். இந்தியாவின் அனைத்து பெரிய ஆறுகளும் இந்தப் பனிப்பாறைகளிலிருந்து உருவாகி வெளியேறுகின்றன. இந்தப் பனிமலைகளே ஒரு நதியின் மூலாதாரம் அல்லது விதை(காரண) உடலாக உள்ளது. இனி நாம் ஒரு நதி வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்திற்குச் செல்லலாம்.

இதோ இந்த கட்டத்தில் இன்னொரு வகையான காட்சிகளைக் கொண்ட நிலப்பரப்புக்கு வருகிறோம். நாம் இன்னும் மலைகளில் தான் இருக்கிறோம், ஆனால் இங்கு பனிமூடிய சிகரங்கள் இல்லை, கீழே இன்னும் கீழேயென இருக்கிறோம். இங்கே காணப்படுகின்ற இடங்கள் அழகிய ரோஜாக்களால் நிறைந்தும், காற்றானது அவைகளின் இனிய நறுமணத்தால் நிரப்பப்பட்டும் காணப்படுகிறது. மேலும் இங்கே ஆண்டு முழுவதும் நைட்டிங்கேல்களும் கதிர்குருவிகளும் மற்றும் பிற பறவைகளும் தங்களது இனிமையான பாடல்களால் அந்த காற்றை நிரப்புகின்றன. வசீகரமான மரங்களுக்கிடையில், அற்புதமான கங்கை அல்லது வேறு ஏதேனும் ஒரு ஓடை, அதன் வளைந்த பாதையில் விளையாடி, மலைகளில் சுற்றித் திரிவதைக் காண்கிறோம். ஆஹா, எவ்வளவு அழகான ஓடைகள்! இந்த நீரோடைகளில், கரைகளில் நிற்கின்ற மரங்களின் நிழல்கள் பிரதிபலிக்கின்றன. இவ்விதமாக சுற்றிச் சுற்றி, இந்த பக்கமும் அந்த பக்கமும் திரும்பி, எல்லா இடங்களிலும் ஆடிப் பாடியவாறு இந்த ஆறுகள், ஓடைகள் ஓடுகின்றன. இது என்ன? இது நதி வாழ்க்கையின் இரண்டாவது நிலை. இங்கே நதி அதன் சூக்ஷம-உடலில் உள்ளது. அதாவது, இந்த நீரோடை வடிவம் ஒரு நதியின் சூக்ஷம-உடல் என்று சொல்லலாம். இந்த சூக்ஷம-உடல் நதியின் காரண-உடலில் இருந்து வெளிப்பட்டது. நதியின் காரண-உடலில் சூரியன் பிரகாசிப்பதை பார்த்தோம். சூரியனின் வெப்பமும் ஒளியும் நதியின் காரண-உடலில் செயல்படுவதன் மூலம் நதியின் சூக்ஷம-உடல் வெளிவந்தது. இது மிகவும் நிலையற்றது, தெளிவற்றது, வளைந்து நெளிந்து செல்வதாக உள்ளது.  

இப்போது இன்னும் கீழிறங்கி சமவெளிகளுக்கு வருவோம். இந்த சமவெளிகளில் நாம் வேறான காட்சிகளைக் காண்கிறோம். பனிமூடிய மலைகளில் விதை வடிவில் இருந்த அதே நீர், மலைகளின் கீழ்ப்பகுதியில் தனது அற்புதமான சூக்ஷம வடிவத்தை ஏற்றுக்கொண்ட அதே நீர், அதே நதி, சமவெளிகளில் இப்போது சேற்றுடன் கலந்து ஓடுவதாக மாறுகிறது. இந்த சமவெளிகளில், அதே நதி, அதே கங்கை ஒரு வலிமையான ஓடையாக ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. அது புதிய நிறத்துடன் புதிய ஆடைகளை அணிந்துள்ளது. அதனுடைய அசலான தெள்ளத்தெளிந்த தன்மையையும் மந்ததன்மையையும் தக்க வைத்துக் கொள்ளாது, சேற்றுடன் கலந்து அழுக்காகவும், கொந்தளிப்பாகவும் மாறுகிறது. அதே நேரத்தில் அதன் வேகத்தை மிகவும் மெதுவானதாக மாற்றி மிகவும் பயனுள்ளதாகிறது. இந்த மகத்தான நதியின் மேற்பரப்பில் மிதக்கும் படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. மக்கள் சென்று குளிக்கிறார்கள், மேலும் இந்த பெரிய நதியின் நீரானது கால்வாய்கள் மூலம் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கும், அதைச் சுற்றியுள்ள நாட்டை வளப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

நதி வாழ்க்கையின் இந்த மூன்றாவது நிலை, நதியின் ஸ்தூல-உடலாகும். ஒரு நதியின் வாழ்க்கை எப்படியானதாக இருக்கிறது? அதன் உண்மையான உந்து சக்தி எதுவாக இருக்கிறது? நதியின் உந்து சக்தியாக இருப்பது மகத்தான சூரியன் ஆகும். இப்போது இந்த உதாரணத்தை மனிதனுக்குப் பயன்படுத்துவோம். இனி, மனிதனின் மூன்று உடல்களும் ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புடையவை, மற்றும் மெய்யான சுயம் அல்லது ஆத்மாவுடன் அவைகளின் தொடர்பு யாது எனப் பார்ப்போம். உங்களின் ஆழ்ந்த உறக்கநிலையில், மற்ற அனைத்தையும் அறியாத, உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில், அங்கு தந்தை தந்தை இல்லை, தாய் தாயுமில்லை, வீடு வீடு இல்லை, உலகம் உலகம் இல்லை, அறியாமை மட்டுமே, அறியாமை தவிர வேறு எதுவும் இல்லாத இடத்தில், குழப்பம், மரணம், அழிவு என்பதுபோன்ற நிலையில், ஒன்றுமில்லாத நிலை என்று சொல்லக்கூடிய அந்த நிலையில் நீங்கள் உண்மையில் யார்?

பெரும்பாலோர் ஒருபோதும் ஆராயாத அந்த நிலையில், மனிதனின் காரண-உடல் அல்லது விதை-உடல் இருப்பதாக வேதாந்தம் கூறுகிறது. அந்த நிலையில், மெய்யான சுயம் அல்லது ஆத்மாவின் கீழ் மனிதனின் விதை-உடல் கிடக்கிறது. எவ்விதம் பனிமலைகளின் மீது சூரியன் பிரகாசித்ததோ, அவ்விதம் காரண-உடலின்மீது மெய்யான சுயம் பிரகாசிக்கிறது. மனிதனின் வாழ்க்கையை நதியின் வாழ்க்கையுடன் இவ்விதம் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

உங்களது ஆழ்ந்த உறக்கநிலையில் இந்த உலகம் இல்லை; மேலும் கனவுலகிலும்கூட இவ்வுலகம் இல்லை. நீங்கள் விழித்தெழுந்த பின், ஆழ்உறக்கநிலையில் எதுவுமில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் அந்த ஒன்றுமில்லை என்கிற தன்மை காரண-உடல் ஆகிறது. உங்கள் விழிப்பு-நிலை அறிவில் ஒன்றுமில்லாததாக ஆகிப்போன அந்த உறக்கநிலை, உண்மையில் உங்களது வாழ்க்கையின் பனிப்பாறைகள் ஆகும். அதிலிருந்தே இந்த உலகம் முழுவதும் உருவாகிறது அல்லது வெளிவருகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து ஒருபோதும் எதுவும் வெளிவர முடியாது என்று தத்துவவாதிகள் சொல்லும்போது, வேதாந்தம் சொல்வது என்னவென்றால், விழித்தெழுந்த பின் ஒன்றுமில்லை என்று உங்களால் சொல்லப்படுகிற அது, உண்மையில் ஒன்றுமில்லாத-தன்மை அல்ல. அது விதை-உடல். அது பனிப்பாறைகள் போன்றது எனப் புரிந்துகொண்டு, உள்ளே இருக்கும் சூரியனை உணருங்கள், உள்ளே இருக்கும் இறைவனை உணருங்கள், விதை-உடலின் அந்த பனிப்பாறையிலிருந்து இந்த முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கும் ஆத்மாவை உணருங்கள். அந்த சூரியனை அல்லது கடவுளை அல்லது ஆத்மாவை அங்கீகரியுங்கள். இதன் அர்த்தத்தை மேலும் சிறிது ஆராய்வோம்.

வழக்கு ஒன்றில் நீதிபதியின் முன்பு ஒருவன், ‘அந்த இரவில் அங்கு ஒரு மனிதன்கூட இல்லைஎன்று கூறுகிறான். அப்போது அவர் உனது வாக்குமூலம் உண்மையா? எனக் கேட்க அவன்ஆம், அதை நேரில கண்ட சாட்சி நான்எனக் கூறுகிறான். அதற்கு நீதிபதி, ‘அப்படியெனில் உனது இந்த வாக்குமூலம் உண்மையல்ல. நேரில் கண்ட சாட்சியாக நீ இருந்துகொண்டு, அங்கு யாரும் இல்லை எனக் கூறுகிறாய். ஆனால் குறைந்தபட்சம் ஒரு மனிதனாவது சம்பவ இடத்தில் இருந்ததால், அங்கு ஒரு மனிதன்கூட இல்லை எனும் உனது கூற்று முரண்பாடாக ஆகிறது’, என்கிறார்.

அதேபோல, ‘எதுவுமில்லாத அந்த ஆழ்ந்த உறக்கத்தை அனுபவித்தேன்எனக் கூறும்போது, ஒருகால் நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தால், உங்களது உண்மையான ஆன்மா, உண்மையான சூரியன், மெய்யான கடவுள் தூங்கிக் கொண்டிருந்திருந்தால், அந்த உறக்கத்தின் ஒன்றுமில்லாத தன்மைக்கும் யார் சாட்சியாக இருந்திருப்பார்கள்? எனவே ஆழ்ந்த உறக்கத்தின் ஒன்றுமில்லாத தன்மைக்கும், கனவின் குழப்பநிலைக்கும் நீங்கள் சாட்சியாக அங்கே இருந்திருக்க வேண்டும். ஒருவனின் உறக்கநிலையில், குறைந்தபட்சம் இரண்டு விஷயங்களைக் காண வேண்டும் என்று வேதாந்தம் கூறுகிறது. பனிப்பாறைகள் போன்ற ஒன்றுமில்லாத தன்மை அல்லது விதை-உடல், மற்றும் ஆழ்ந்த உறக்கநிலையின் பாழ்பட்ட தன்மையையும்கூட பிரகாசிக்கும் சாட்சியான ஒளி, சூரியன், பெருமைக்குரிய ஆத்மா, பிரகாசிக்கும் சுயம் அல்லது கடவுள். அங்கே, அந்த மெய்யான சுயம் என்பது மாறாத சூரியனாகவும், உறக்கநிலையின் ஒன்றுமில்லாத தன்மை என்பது மாறக்கூடிய மற்றும் நிலையற்ற விதை-உடலாகவும் இருக்கிறது. அது ஏன் மாறக்கூடியதாகவும் நிலையற்றதாகவும் இருக்கிறது எனில் அவன் கனவுலகத்திற்கு வரும்போது, ​​அந்த ஒன்றுமில்லாத தன்மை என்பது போய்விடுகிறது. ஒருகால் கனவுலகின் அந்த குழப்பநிலையோ அல்லது ஆழ்உறக்கத்தின் ஒன்றுமில்லாத தன்மையோ ஒருவனின் மெய்யான சுயமாக இருந்திருந்தால், அது என்றென்றும் நீடித்திருக்கும், ஆனால் அது மாறுகிறது. இந்த மாறும் திறனே அது உண்மையானதல்ல என்பதைக் குறிக்கிறது. நம்முடைய இந்த அற்புதமான உலகம் அந்த ஒன்றுமில்லாததிலிருந்து வெளிப்பட்டது என்பது ஆச்சரியமானதாக இருந்தாலும் அதுவே உண்மை

இப்போது நாம் கனவு நிலைக்கு வருகிறோம், பனிப்பாறைகளிலிருந்து கீழ் மலைகளுக்கு வருகிறோம். நீங்கள் இன்னும் மலைகளில்தான் இருக்கிறீர்கள், அதாவது உறங்கிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இங்கே ஒருவனின் சூக்ஷம-உடல், கனவு காணும் ஒருவனாக, ஒரு அற்புதமான கவிதை போன்ற நிலத்தில் தன்னைக் காண்கிறது; உங்களது இந்த கனவு காணும் சுயம் என்பது இப்போது ஒரு பறவை! அட, இப்போது ஒரு ராஜா! உடனடியாக அது ஒரு பிச்சைக்காரனாக மாறுகிறது. அது இப்போது இமயமலையில் வழிதவறி லண்டன் நகரத்தின் குடிமகனாக மாறுகிறது. ஒரு கணத்தில் இந்த நகரத்திலும் பின்னர் அந்த நகரத்திலும் உள்ளது. எவ்வளவு மாறக்கூடியது! நிலையற்றவைகளாக, மலைகளில் அங்கும் இங்கும் வேகமாக ஓடி வளைந்து நெளிந்து சென்று விளையாட்டுத்தனமாக வெவ்வேறு திருப்பங்களை எடுக்கும் நீரோடைகள் போல, உங்களின் கனவு காணும் சுயத்தின் நிலையும் உள்ளது. அதுவும் மிகவும் விளையாட்டுத்தனமாகவும், வேகமாகவும் இருக்கிறது. அங்கு நீங்கள் கற்பனை நிலத்தில் வாழ்கிறீர்கள். அங்கே இறந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள், வாழும் மக்கள், சில சமயங்களில் இறந்துவிட்டதாகக் காண்கிறீர்கள் - விசித்திரமான நிலம், கற்பனையின் நிலம் மற்றும் கவிதையின் நிலம்

நதி மலைகளைக் கடந்து தனது இரண்டாம் கட்டத்திலிருந்து கீழே சமவெளிகளுக்கு வருவதைப் போல, இரண்டாவது நிலையான கனவு அனுபவத்திற்குப் பிறகு நீங்கள் விழித்தெழுகிறீர்கள். நதி சமவெளிகளில் இறங்கும்போது ஒரு திட உடலைப் பெறுவதைப்போல, உங்கள் விழிப்புநிலையில் நீங்கள் ஸ்தூல-உடலை பெறுகிறீர்கள். மலைகளிலிருந்து ஆறுகள் இறங்கி சமவெளிகளில் நுழையும் போது, ​​அவற்றின் நுட்பமான சூக்ஷம-உடல் அப்படியே இருக்கும், ஆனால் அது சேற்றைப் போர்வையாக அணிந்து சிவப்பாக காணப்படுகிறது. எனவே மலைகளில் காணப்பட்ட அந்த நதியின் சூக்ஷம-உடல் இப்போது மாறவில்லை, ஆனால் அது ஒரு புதிய ஆடையை அணிந்துள்ளது, அதை நாம் நதியின் ஸ்தூல-உடல் என்று கூறுகிறோம். அதுபோல உங்களின் விழிப்புநிலையில், கனவுலகில் இயங்கி வந்த சூக்ஷம-உடல், அதாவது மனம் மற்றும் புத்தி போன்றவைகள் மறைந்துவிடாது, அது அப்படியே இருக்கும், ஆனால் இந்த ஸ்தூலமான கூறுகள், தலை மற்றும் உடல் கூறுகள் அனைத்தும், உடைகள் போல அணியப்படுகின்றன; நீங்கள் உறங்கும்போது, ​​இந்த ஜட ஸ்தூல-உடல் வெறுமனே கீழே இறக்கப்பட்டு, சூக்ஷம-உடல் அதிலிருந்து அகற்றப்படுகிறது. படுக்கைக்குச் செல்லும்போது மக்கள் தங்கள் ஆடைகளைக் கழற்றுவதுபோல, ஸ்தூல-உடல் கழற்றப்பட்டு ​​உங்களின் சூக்ஷம-உடல் மட்டுமே கனவுலகில் வேலை செய்கிறது.

இனி முக்கியமான ஒரு விசாரத்திற்கு வரலாம். எந்த சூரியன் நதியின் விதை-உடலில் பிரகாசித்ததோ, அதே சூரியனே நதியின் சூக்ஷம-உடலிலும், சமவெளிகளில் காணப்படுகிற ஸ்தூல-உடலிலும் சமமாகப் பிரகாசிக்கிறது. அதுபோலவே ஆழ்உறக்கநிலையின் மீது பிரகாசித்த ஆத்மா அல்லது மெய்யான-சுயம், உங்களின் கனவுலகிலும் விழிப்புநிலையிலும் பிரகாசிக்கிறது. எனில் வேறுபாடு எங்கே இருக்கிறது? வித்தியாசம் சூரியனின் பிரதிபலிப்பில் உள்ளது. நதியின் விதை-உடலில், அதாவது பனிப்பாறைகளில் சூரியன் பிரகாசித்தபோது, ​​அதன் பிரதிபிம்பம் அங்கு காணப்படவில்லை. உண்மையில் பனிப்பாறைகளில் சூரியனின் செயல் தீவிரமாக இருந்தது, ஆனால் சூரியனின் பிரதிபலிப்பு அல்லது பிரதிபிம்பம் அங்கு தென்படவில்லை. ஆனால் சூரியன் நதியின் சூக்ஷம-உடலில் பிரகாசிக்கத் தொடங்கியபோது அதன் பிரதிபிம்பம் தென்படுகிறது. இந்த பிரதிபிம்பம் எதைக் குறிக்கிறது? சூரியனில் எந்த மாற்றமுமில்லை; பிரதிபிலிப்பில் அல்லது பிரதிபிம்பத்தில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அதுபோலத்தான், உங்களின் ஆத்மா, மெய்யான-சுயம் அல்லது கடவுள் ஆழ்உறக்கநிலையில் விதை-உடலில் பிரகாசிக்கிறார். ஆனால் அங்கு எந்த அகங்காரமும் இல்லை, “நான் தூங்குகிறேன்”, “நான் வளர்கிறேன்”, “நான் உணவை ஜீரணிக்கிறேன்”, “நான் இதைச் செய்கிறேன்என்ற எந்த தன்னிலை பாவனையும் உங்களுக்கு இல்லை; அதாவது, எந்த ஈகோவும், தானெனும் தன்மையும் அங்கு இல்லை. மெய்யான-சுயம் இருக்கிறது, ஆனால் அங்கு எந்த அகங்காரமும் இல்லை. இன்னும் சரியாகச் சொல்வதானால், மக்களால் தங்களதுசுயம்எனப் பார்க்கப்படும் தவறான வெளிப்பாடான தானெனல் தன்மை அங்கு இல்லை.

அந்தநான்எனும் அகங்காரம், கனவு நிலையிலும் பின்னர் விழிப்பு நிலையிலும் தெரிய ஆரம்பிக்கிறது. பனிப்பாறைகளில் தென்படாத சூரியனின் பிரதிபிம்பம், நதியின் சூக்ஷம-உடலில் தென்பட்டபோதிலும் அது தெளிவானதாக இருக்காது. சலசலப்புடன் மங்கலானதாக இருக்கும். அதுபோலவே கனவுலகில் ஆத்மாவின் பிரதிபலிப்பு தெளிவற்று மங்கலானதாக இருக்கிறது; தானெனும் தன்மையும் திட்டமற்றதாக, நிலையற்றதாக, மாறக்கூடியதாக இருக்கிறது.

அடுத்ததாக சேற்று நதியில் சூரியனின் பிம்பம் இன்னும் தெளிவானதாகக் காணப்படுகிறது; அதுபோலவே விழிப்புநிலையிலும் சுய-சூரியனான ஆத்மாவின் பிரதிபலிப்பு தெளிவானதாக இருப்பதால், இந்த அகங்காரம் - “நான் இதைச் செய்கிறேன்”, “நான் இது”, “நான் அது”, என்பதான இந்த அகங்காரம் இங்கு திட்டவட்டமாக, நிலையானதாக, தெளிவானதாகக் காணப்படுகிறது

வேதாந்த தத்துவம், கனவுலகமும் விழிப்புணர்வும் ஒருவனின் ஆழ்ந்த உறக்கத்தின் ஒன்றுமில்லாத தன்மை அல்லது அறியாமை எனும் குழப்பத்திலிருந்து தோன்றியதாகக் கூறுகிறது. உலகம் என்று ஒன்றுமில்லை அல்லது உலகம் அறியாமையின் விளைவு என்று வேதாந்திகள் கூறுகிறார்கள். அதன் அர்த்தம் என்னவெனில், ஆழ்உறக்கநிலையின் ஒருவிதமான ஒன்றுமில்லாத தன்மை அல்லது இனியொரு விதத்தில் சொல்வதானால், செறிவாகவுள்ள அறியாமை அல்லது இருள்போன்ற நிலையிலிருந்து இந்த உலகம் வெளிவருகிறது; இந்த வேறுபாடுகளும் மாற்றங்களும் வருகின்றன, என்பதைக் குறிக்கிறது. மேலும் அந்த அறியாமை மாறக்கூடியது. உங்களுக்குத் தெரியும், உங்களது கனவுலகில் இரண்டு வகையான விஷயங்கள் உள்ளனஅறிபவன்(எழுவாய்) மற்றும் அறியப்படும்பொருள்(செயப்படுபொருள்). வேதாந்தத்தின்படி, அறிபவன் மற்றும் அறிபடுபொருள் இரண்டும் ஒரே சமயத்தில் தோன்றும். அங்கு உங்கள் கனவுகளில், ஒரு பக்கத்தில் பார்ப்பவராகவும் மறுபுறம் பார்க்கப்படும் பொருளாகவும் நீங்களே மாறுகிறீர்கள். அதாவது கனவு ஒன்றில் நீங்கள் ஒரு குதிரையையும் சவாரி செய்பவராக உங்களையும் பார்க்கும்போது, இரண்டும் ஒரே சமயத்தில் தோன்றும். ஒரு மலையைக் கண்டால், மலை எனும் பார்க்கப்படும் பொருளும் அதை பார்க்கும் பார்வையாளரான நீங்களும் ஒருசேர தோன்றுவீர்கள். அங்கே கனவின் கடந்த காலமும் எதிர்காலமும் அப்பொருளுடன் ஒரே நேரத்தில் சேர்ந்தே தோன்றுவதாக இருக்கும்; கனவின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம், கனவின் காரணகாரியங்கள் மற்றும் அதன் எழுவாய் மற்றும் செயப்படுபொருள், இவை அனைத்தும் ஒருசேர அதே சமயத்தில் தோன்றும்

அதுபோல, உங்கள் விழிப்பு நிலையிலும் பார்ப்பனும் பார்க்கப்படும் பொருளும் நீங்களே என வேதாந்தம் கூறுகிறது. அந்தப் பக்கம் தெரிகிற நண்பர்கள் மற்றும் எதிரிகளும், இந்த பக்கம் இருக்கிற பார்வையாளனும் நீங்களே. அதாவது, பார்ப்பவன் மற்றும் பார்க்கப்படும் பொருள் இரண்டும் நீங்களே. அனைத்தும் நீங்களே தான்

ஆனால் கனவின் இந்த நிகழ்வுகள், ஆழ்ந்த உறக்கநிலை மற்றும் விழிப்புநிலையின் நிகழ்வுகள் என அனைத்தும் மாறக்கூடியவை, நிலையற்றவை, நிச்சயமற்றவை, தெளிவற்றவை. சூரியனுடன் ஒப்பிடப்பட்ட ஆத்மாவான உங்களது மெய்யான-சுயம் என்பது, நதியின் மூன்று உடல்கள் மீது பிரகாசித்த சூரியனைப் போலவே, இங்கு காரண, சூக்ஷம மற்றும் ஸ்தூல எனும் மூன்று உடல்கள் மீதும் பிரகாசிக்கிறது. அந்த ஆத்மா மாறாதது, நிலையானது. அந்த ஆத்மா அல்லது சூரியன் உங்களின் ஆழ்உறக்கநிலையின் பனிப்பாறையில் பிரகாசிக்கிறது; அதுவே உங்களின் விழிப்புநிலை அனுபவத்தையும் ஒளிர்விக்கிறது. மேலும் அந்த சூரியன், ஒரு நதியின் மூன்று உடல்கள் மீது மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள அனைத்து ஆறுகளின் மூன்று உடல்கள் மீதும் ஒரே மாதிரியாகப் பிரகாசிக்கிறது. அதேபோலவே இந்த உடல் எனும் நதியானது, அந்த உடலின் நதியிலிருந்து வேறுபட்டால் என்ன? இந்த உடலின் வாழ்க்கைப் பாதையானது, அந்த உடலின் பாதையிலிருந்து மாறுபட்டிருந்தால் என்ன? ஆனால் இந்த அனைத்து நதிகளின் வாழ்க்கையும், இந்த அனைத்து நீரோடைகளின் இருத்தலும் ஒரே நித்தியமான, மாறாத, நிலையான ஆத்மாவை அல்லது சூரியன்களின் சூரியனைக் கொண்டுள்ளன. அது எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், மாறாமல் அவற்றின் மீது ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக பிரகாசிக்கிறது. நீங்களே அது! அது நீங்களே! அதுவே உங்களது மெய்யான சுயம் என்பதை அறியுங்கள். உங்களின் அந்த உண்மையான சுயமே, உங்களது நண்பனின் மெய்யான சுயமாகவும், மேலும் அனைத்தின் உண்மையான சுயமாகவும் இருக்கிறது

அந்த மெய்யான சுயம் விழிப்புநிலையில் உங்களுடன் இருப்பது மட்டுமல்லாமல், ஆழ்ந்த உறக்கநிலையிலும் அது அவ்விதமே உள்ளது; எல்லா நிகழ்வுகளிலும் எல்லா சூழ்நிலைகளிலும் அது அவ்விதமே சமமாக உள்ளது.

அந்த மெய்யான சுயமானது எல்லா கவலைகளுக்கும், எல்லா பயங்களுக்கும் மேலாக, எல்லா துன்பங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் மேலான தளத்தில் நிற்கிறது என்பதை உணருங்கள். யாரும் உங்களது சுயத்திற்கு அதாவது உங்களுக்குத் தீங்கு செய்ய முடியாது, யாரும் உங்களைத் துன்புறுத்த முடியாது.

—————————————————————————