இறைமை

எங்கோ அமர்ந்துகொண்டு

இவ்வுலகை ஆட்டுவித்தால்

நீ இல்லாத இடமுண்டென்ற 

பிழைவந்து நேர்ந்திடுமே.


படைப்புலகின் மூலப்பொருள்

நீயின்றி வேறென்றால்

உனைமிஞ்சும் சக்தியொன்று 

உண்டென்று ஆகிடுமே.


மெய்யுணர்விலிருந்து வேறாக

அறிதலின் ஒரு பொருளாக

எனைச் சார்ந்த இருப்பாக

நீயிருக்க வாய்ப்பில்லை.


சாசுவதமாய் விளங்கி

அனைத்தையும் ஒளிர்விக்கும்

நானாகிய பிரக்ஞையிலிருந்து

பிறிதாக நீயுமில்லை.


——————————————————————