நினைவில்லையெனக்கு!
நானில்லாத தருணமேதும்
நினைவில்லையெனக்கு!
உறக்கத்தில் உடலிழந்த போதும்,
ஆழ்துயிலில் மனமிழந்த போதும்,
நானில்லாமல் போன நினைவில்லை எனக்கு.
குழந்தையுடல் மறைந்தழிந்த பின்பும்,
இளமைச் சாயல் தேய்ந்தழிகிற போதும்,
நான் மாறியதாய் துளி நினைவில்லை எனக்கு.
தேசம் விட்டு பிறதொரு தேசமென்றும்
ஊர் விட்டு வேறோர் ஊரென்றும்
பல இடங்களில் வாழ்ந்தாயிற்று.
நான் இடம்பெயர்ந்த உணர்வென்று
என்னிடத்து எதுவுமில்லை.
மகிழ்வென்று ஆர்பரித்தும்
மனம்வெடித்து நிலைகுழைந்தும்
பல தருணங்கள் கடந்தாயிற்று.
நான் அனுபவித்த அனுபவங்களென
எந்தவொன்றும் தோன்றவில்லை.
நானில்லாத உலகமொன்றும் நினைவிலில்லை.
நானில்லாத தருணமேதும் பிறக்கவில்லை.
எதிலும் நானில்லை,
நானின்றி எதுவுமில்லை.
——————————————————————