ஆழ்மெளனி
சொல்லே….
உலகை சிருஷ்டித்து பெயர்களென ஒளிர்கிறாய்,
சுற்றமாய் பெருகி உறவுகளுள் பிணைக்கிறாய்,
வாஞ்சைகளென வளர்ந்து வேகத்தில் திணிக்கிறாய்.
எதையோ நிச்சயித்து வழிதேடி அலைகிறாய்,
இலக்கின்றி சுழன்றும் அடங்காமல் சுரக்கிறாய்.
உன்னைப் பின்தொடர்ந்தே என் வாழ்வு கழிகிறது,
சப்தத்திலே மூழ்கி நிசப்தம் மறைகிறது.
மெளனமெனும் எனது நாதத்தில்
சொல்லே, நீ பிறக்கிறாய்;
எமது கிரணங்களைத் திசைதிருப்பி
ஊறித் திளைக்கிறாய்.
சொல்லடங்கிய பேரமைதி எனது வீடு,
அங்கு சிதைவற்ற பேரானந்தம் எனது இயல்பு.
உனதொலியெனும் பிம்பத்தை
பிரகாசிக்கிற எனதொளி,
சொற்களற்ற வான்வெளியில்
என்றென்றும் ஆதவனாய்.
———————————————————