மரணிக்கும் அனுபவம்
எனது மரணம் புதிதல்ல எனக்கு!
கனவுலகில் தானாகிப் போன தோட்டக்காரி,
விழித்ததும் தோட்டமற்றவளாய் மரணித்துப்போனாள்.
நனவிலும் முடியாத தொடர்கதையாய் மரணங்கள்…
சமைத்தவள் மரணித்து உண்பவளாய் பிறந்து,
ருசித்தவளும் மரித்த க்ஷணத்தில்
உண்கலம் சீர்படுத்தும் மறுபிறப்பு!
இப்படிதானே ஒவ்வொரு மரணமும்…
குழந்தை மரணித்து குமரியாய்,
மாணவியின் பாத்திரம் அழிந்து ஆசிரியை,
மகளெனும் பணிமுடித்து மனைவியாய் புதுப்பிறப்பு!
தோற்றத்தின் பரவசத்தில் இழப்பு புதைபட்டாலும்
இழப்பும் கூட பழகிப் போன ஒன்றே…
நாள்தோறும் உறக்கத்தில் தானெனல் இழந்து
உற்சாகமாய் மரணிக்கப் பழகியவள் என்பதால்…
மரண அனுபவம் புதிதல்ல எனக்கு!
-- அனுஷா
———————————————————————