ஆத்மாவின் சொரூபம் ஸத்-சித்-ஆனந்தம் ஆகும். இந்த உடலையும் மனதையும் ஆத்மாவாக எண்ணியதால் அதைச் சுற்றியதாக இருக்கின்ற இந்த உலக வாழ்க்கையை, உள்நோக்கித் திருப்பி, உண்மையான ஆத்மா அதாவது உண்மையான ‘நான்’ யார் என்பதைப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் பயணமே ஆன்மீகம் ஆகும். இந்த பயணத்திற்கானச் சரியான பாதையை காட்டிக்கொடுக்கும் கருவியாக இருப்பது வேதாந்த சாஸ்திரங்கள். இந்த சாஸ்திரங்களில், ஒருவனின் சுயசொரூபமாக ‘ஸத்(இருத்தல்)-சித்(அறிவு)-ஆனந்தம்’ சொல்லப்படுகிறது. இதில் ஆனந்த சொரூபத்தை எடுத்து சிறிது விசாரம் செய்யலாம்.
பொதுவாக மனிதன் அனுபவிக்கும் இன்பங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:
(1) விஷயானந்தம்:
புலன்கள் பொருள்களோடு சேருவதால் அனுபவிக்கப்படும் இன்பம் இது. உதாரணமாக மனதுக்கு பிடித்த உணவை உண்ணும்போது, பிடித்த பாடலைக் கேட்கும்போது, பிடித்த இடத்திற்குச் சென்று பார்க்கும்போது என மனமும் அதனால் விரும்பப்படுகின்ற விஷயமும் சேருவதால் உண்டாகிற இன்பம்.
* இந்த வகை ஆனந்தம் நிலையற்றது, ஏனெனில் சேருகின்ற புலன் மற்றும் மனம் இரண்டும் நிலையற்றது. புலன்கள் தேய்விற்குட்பட்டது, மனமோ நொடிக்கு நொடி மாறிக்கொண்டேயிருப்பது. அப்படியிருக்கையில் அதன் சேர்க்கையினால் கிடைக்கின்ற இன்பமும் தற்காலிகமானதாகவே இருக்கிறது. உதாரணமாக இன்று நம் மனதுக்கு பிடிக்கின்ற உணவு, இரண்டு வருடங்களில் பிடிக்காமல் போகலாம், அல்லது உடல் உபாதையின் காரணமாக உண்ண முடியாமல் போகலாம்.
* இவ்வகை இன்பம் துயரத்திற்கு விதையாகிறது. ஒன்றை அனுபவித்து பழகிவிட்டு அது இல்லையெனில் அது துயரம் ஆகிறது. எனவே இதில் இன்பமே நம்மை அடிமைப்படுத்தி அது பின் துன்பமாக மாறிவிடுகிறது.
* எந்தப் பொருளும் நம் மனதை முழுமையாக நிறைக்க முடியாது. இதில் தாரதம்யம் என்றழைக்கப்படும் தரநிலைகள் உள்ளன. விரும்பிய விஷயத்தை பார்க்கும்போது உண்டாகிற இன்பம் ஒரு அளவில் இருக்கும். அது ‘ப்ரியம்’ எனப்படும். அந்த விஷயம் கையில் கிடைக்கும்போது உண்டாகிற இன்பம் ‘மோதம்’ எனப்படுகிறது. விரும்பியதை அடைந்து அனுபவிக்கும்போது உண்டாகிற இன்பம் ‘ப்ரமோதம்’ எனப்படுகிறது. இவ்வகையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிநிலையில் இருக்கின்றன. மேலும் விரும்பி அடைந்த பொருள், சில காலத்திற்கு பிறகு பிடிக்காமலும் போகலாம். அல்லது இதில் கிடைக்கும் இன்பம் இவ்வளவுதானா என்கிற சலிப்பை உண்டுபண்ணலாம். எனவே எந்தப் பொருளும் ஒருவனை நிறைப்பதில்லை.
(2) வைராக்யானந்தம்:
விஷயானந்தத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்வதால் கிடைக்கின்ற ஆனந்தம் இது. ஒரு பொருளில் பற்றின்மை வந்து அதை துறக்கமுடிவதால் கிடைக்கின்ற ஆனந்தம் என்பது, அப்பொருளை அடையும்போது கிடைக்கின்ற ஆனந்தத்தை விட நூறு மடங்கு என தைத்திரீய உபநிஷத்தில் ஆனந்த மீமாம்சையில் கூறப்படுகிறது. எனவே வைராக்கியம் வர வர ஆனந்தம் அதிகரிக்கிறது.
இதிலும் தாரதம்யம் உள்ளது. ஆகையினால் இந்த வகை ஆனந்தமும் நம்மை நிறைக்காது.
(3) ஞானானந்தம் அல்லது மோக்ஷானந்தம்:
இவ்வகை ஆனந்தம், ‘நானே ஆனந்த சொரூபமானவன்’ என்கிற ஞானத்தினால் வருவது ஆகும். ஆனந்தத்தை அடைவதற்காக வெளியே எங்கும் ஓடவேண்டியதில்லை எனும் புரிதலால் இது உண்டாகிறது.
* இது நித்தியமானது, ஏனெனில் இந்த ஞானம் எல்லா நேரத்திலும் இருப்பதால் இவ்வகை ஆனந்தமும் எப்போதுமுள்ளது.
* இந்த ஞானத்தில் ஏற்றத்தாழ்வு என எதுவுமில்லையாதலால், இந்த ஆனந்தம் பூர்ணமானது, நிறைவானது. எனவே எந்த தாரதம்யமும் கிடையாது.
* இந்த ஞானம் மனதை முழுமையாக நிறைத்துவிடுகிறது. ஆழ்ந்த மனதில் எப்போதும் நிறைவுடன் இருத்தலே மோக்ஷம் ஆகும்.
(4) சொரூபானந்தம் அல்லது ப்ரம்மானந்தம்:
ஆத்மாவாகிய ‘நானே’ ஆனந்த சொரூபம். ஆனந்தம் என்பது எனது தன்னியல்பு. நம் மனமானது அமைதியாக இருக்கும்போதெல்லாம் ஆத்மாவின் ஆனந்தம் அதில் தெளிவாக பிரதிபிம்பிக்கப்படுகிறது. உண்மையில் எந்தப் பொருளும் நாம் அடைவதினால் இன்பத்தை கொடுப்பதில்லை. அதை அடையும்போது மன-ஆசையின் காரணமாக உண்டான சஞ்சலத்தில் சிறிது நேரத்திற்கு அமைதி உண்டாகிறது. அந்த அமைதியில் ஆத்மாவின் ஆனந்தம் பிரதிபிம்பிக்கப்படுகிறது. இதனாலேயே நாம் இன்பத்தை அடைகிறோம். எனவே உண்மையில் நாம் ஒரு பொருளை அடைவதற்கு முயற்சி செய்வதில்லை. அப்பொருளை அடையவேண்டும் என மனதில் உண்டான ஆசையை ஒழிக்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
சங்கரரால் எழுதப்பட்ட மனீஷா பஞ்சகத்தின் ஐந்தாவது சுலோகத்தில், நம் மனதில் நாம் அனுபவிக்கும் ஆனந்தம் என்பது ஆத்மாவின் ஆனந்தத்தினுடைய சிறு துளியே எனக் கூறுகிறார். ‘ஆத்மா எனும் பரந்த ஆனந்தக்கடலின் சில துளிகளினாலேயே, இந்திரன் முதலான தேவர்கள் குறைகளற்ற சுகபோகங்களில் ஆனந்தித்து இருக்கிறார்கள். தூய மனதுடைய முனிவர்களும், தங்களுடைய சிந்தையினாலாயே முழுமையான நிறைவினையும் இந்த ஆத்மாவின் துளியினாலேயே அடைந்து இருக்கிறார்கள். எப்போதும் நிலைத்திருக்கும் இந்த சுகக்கடலில் எவர் முற்றிலும் கலந்து, கரைந்து விடுகிறார்களோ, அவர் பிரம்மமே அன்றி, பிரம்மத்தை அறிந்தவர் அல்ல — யஸ்மின் நித்ய ஸுகாம்பூதௌ களிதீஹீர் ப்ரஹ்மைவ ந ப்ரஹமவித்’.
=> ஆனந்த மீமாம்ஸா:
தைத்திரீய உபநிஷத்தில், சுருதியானது ஆத்மாவின் ஆனந்த சொரூபத்தை குறித்து ஆனந்த மீமாம்ஸா என்ற பெயரில் விரிவான விசாரணையைச் செய்கிறது. ‘மீமாம்ஸா’ அல்லது ‘மீமாம்சை’ எனில் விசாரித்தல், ஆராய்ச்சி செய்தல் என்பது பொருள். இந்த ஆனந்த மீமாம்சை குறித்த விளக்கத்தை பார்க்கும் முன்னர், எதன் காரணமாக இது நடைபெறுகிறது என்பதை பார்க்கலாம்:
(i) ஆனந்தம் என்பது ஆத்மாவின் சொரூபமாக உள்ளது எனும் அறிவைக் கொடுக்க,
(ii) வைராக்கியத்தின் மேன்மையைக் காட்டுவதற்காக,
(iii) ஜீவ - ப்ரம்ம ஐக்கியத்தை விளக்க.
அக்னியின் சொரூபம் உஷ்ணம், ஆகையால் அக்னியானது தான் உஷ்ணமாக இருக்க வேறு எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அதுபோல, ஆத்மாவாகிய நான் ஆனந்த சொரூபம் என்பதால் எனது ஆனந்தத்திற்கு நான் வேறெதையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
பொதுவாக இன்பம் வெளிப்பொருளிலிருந்து நமக்கு கிடைக்கப்பெறுவதாகவும் இன்பத்தைச் சார்ந்து நாம் இருப்பதாகவும் அனுபவத்தைக் கொண்டுள்ளோம். அப்படியெனில், அந்த இன்பமானது பொருளுக்கும் அனுபவிப்பவனுக்கும் இடையே உண்டாகும் சம்பந்தத்தின் மூலம் பிறக்கிறதா? அல்லது அது ஒருவனின் சுவபாவமா(சொரூபமா)? விஷயமே சுகத்தைக் கொடுக்கிறதா? அல்லது சுகத்திற்கு விஷயம் ஒரு நிமித்த காரணமாக இருக்கின்றதா?
ஒருகால் விஷயம்தான் சுகத்திற்கு காரணம் எனில் ஒருவனுக்கு ஒரு குறிப்பிட்ட பொருள் எந்த அளவு சுகத்தை கொடுக்கிறதோ அதே அளவு சுகம் அனைவருக்கும் அப்பொருளிலிருந்து கிடைக்கவேண்டும். ஆனால் அது அவ்விதம் இருப்பதில்லை. உதாரணமாக தென்னிந்தியர்கள் இட்லியை உட்கொள்ளும்போது கிடைக்கின்ற அதே சுகம் வட இந்தியர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்களுக்கு சப்பாத்தி பிரியமான உணவாக இருக்கிறது. எனவே சுகத்தின் படிநிலைக்கு விஷயமே முழுக்காரணமல்ல. அது ஒரு நிமித்தம் மட்டுமே. எனில் சுகத்தின் ஏற்றத்தாழ்விற்கு(தாரதம்யம்) என்ன காரணம்?
=> மனம்:
மனம்தான் காரணம். மனதின் சூக்ஷமத்துவம்(நுண்மை) அல்லது சாந்தியானது அதிகரிக்க அதிகரிக்க நமது சுகமும் அதிகரிக்கிறது. முதிர்ந்த மனதை உடையவனும் அமைதியான மனதை உடையவனும் அதிக சுகத்த்தை அனுபவிக்கிறான். எனில் ஒருவன் தனது மனதை எப்படி சூக்ஷமப்படுத்துவது அல்லது அமைதிப்படுத்துவது? அதற்கு இரு வழிகள் உள்ளன.
(1) அறிவு(ஞானம்): அறிவு வளர வளர, மனதின் நுண்மை அதிகரித்து சுகம் அதிகரிக்கிறது. மனம் நுண்மையை அடைகிறது எனில் மிக மிக நுண்விஷயங்களை கிரஹிக்கும் சக்தியை அடைகிறது எனப் பொருள்.
(2) வைராக்கியம்: வைராக்கியம் அதிகரிக்க அதிகரிக்க அல்லது ஆசை குறையக் குறைய மனவமைதி அதிகரிக்கிறது. அமைதியான மனம் தெளிவாக சிந்திக்கும். மனவமைதியும் மனதை மிகவும் சூக்ஷமப்படுத்துகிறது.
* எனில் மனம்தான் சுகத்திற்கு காரணமா?
கண்டிப்பாக இல்லை. சுகத்தின் ஏற்றத்தாழ்வுக்கு மனம் காரணமாக உள்ளதே தவிர சுகத்திற்கு மனம் முழுமையான காரணம் அல்ல. மனதிலிருந்து சுகம் உற்பத்தி ஆகவில்லை. மனம்தான் சுகத்தின் உற்பத்தி ஸ்தானம் எனில் மனம் செயல்படாமல் ஒடுங்கியிருக்கும்போது சுகம் இருக்கக்கூடாது. ஆனால் நமது அனுபவம் வேறொன்றை காட்டிக்கொடுக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில், அதாவது மனமானது வெளித்தோற்றத்திற்கு வராமல் காரண சரீரத்தில் ஒடுங்கியிருக்கும் நிலையிலும் நாம் சுகத்தை அனுபவிக்கிறோம். எனவே மனம் சுகத்தின் உற்பத்தி ஸ்தானம் கிடையாது; மேலும் அது ஆனந்த சொரூபமும் அல்ல. ஆனால் மனதின் சூக்ஷமத்தன்மை ஆனந்தத்தின் ஏற்றத்தாழ்விற்கு காரணியாக உள்ளது என்பதைப் பார்த்தோம். இதிலிருந்து, மனம் ஒரு பிரதிபிம்பிக்கின்ற கருவி என்பதை அறிகிறோம். எதிரிலிருப்பதை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியைப் போல மனமானது ஆனந்தத்தைப் பிரதிபலிக்கிறது.
மொத்தமாக நமது அனுபவத்திற்கு இருப்பவைகள் மூன்று — விஷயம்(பொருள்), மனம் மற்றும் ‘நான்’. இதில் விஷயத்தில் ஆனந்தம் இல்லை என்றும், மனதிலும் ஆனந்தம் இல்லை என்றும் தெளிவாகிவிட்டது. மீதமிருப்பது ‘நான்’ மட்டுமே. பாரிசேஷ நியாயம் என்றொரு நியாயம் உள்ளது. அதன்படி, இருக்கின்ற மூன்றில், முதலிரண்டில் இல்லையெனில், மூன்றாவதில் அது உள்ளது என்பது நியதி. எனவே விஷயத்திலும் மனதிலும் ஆனந்தம் இல்லையெனில் மீதமிருக்கின்ற ‘நான்’-ல் தான் ஆனந்தம் உள்ளது. மனம் அந்த ஆனந்தத்தை பிரதிபிம்பிக்கின்ற கருவியாக உள்ளது.
* பிரதிபிம்பிக்கின்ற கருவி:
ஒரு பொருள் பிரதிபிம்பிக்கும் தன்மையுடையது எனில் அதற்கு கண்டிப்பாக இனியொரு தன்மையும் இருக்கவேண்டும். அது எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ அதைப்பொறுத்தே அது தன்முன்னுள்ள பொருளைத் தெளிவாகக் காட்டிக்கொடுக்கும். கண்ணாடி எவ்வளவு சுத்தமாக உள்ளதோ அதைப்பொறுத்தே அதில் பார்க்கப்படும் முகம் தெளிவாகத் தெரியும். எனவே மனம் எவ்வளவு தூய்மையானதாக உள்ளதோ அவ்வளவு அதிகமாக ஆனந்தம் பிரதிபிம்பிக்கப்படுகிறது. மனம் நுண்மை ஆக ஆக அது தூய்மை ஆகிறது, அதன் ஆனந்தம் அதிகரிக்கிறது. இதிலிருந்து மனதிற்கு வேறான, ஆனந்த சொரூபமான ஒரு தத்துவம் இருக்கிறது. அந்த ஆனந்த சொரூபம் மனதின் சூக்ஷமத்தன்மையினால் பிரதிபிம்பிக்கப்படுகின்றது. அந்த ஆனந்த சொரூபமாக இருப்பது ஆத்மாவான ‘நான்’ என்பது தெளிவாகிறது.
=> வைராக்கியத்தின் முக்கியத்துவம்:
இந்த இடத்தில் வைராக்கியத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகிறது. ஏனெனில் மனதில் நாம் அனுபவிக்கும் சுகத்தினுடைய தாரதம்யத்திற்கு(ஏற்றத்தாழ்விற்கு) வைராக்கியமே காரணம் ஆகும். மனதிலுள்ள ஆசை குறைய குறைய, அதன் சூக்ஷமத்தன்மை அதிகரிக்கிறது. மனத்தூய்மை அதிகரிக்க அதிகரிக்க ஆத்மாவின் ஆனந்தம் அதிகமாக பிரதிபிம்பிக்கப்படுகின்றது. எனவே காமத் தியாகம் அதாவது ஆசையை நீக்குதல் என்பது நடைபெறவேண்டும். காமத் தியாகம் கீழ்கண்ட இரு வழிகளில் நடைபெறுகிறது:
(1) விஷயப் பிராப்தி:
அதாவது எதை அடைய ஆசையுள்ளதோ அதை அடைந்து ஆசையை நீக்கலாம். இந்த வழியில், அந்த குறிப்பிட்ட பொருள் கிடைத்தவுடன் மனதிலுள்ள ஆசை போகிறது. இதனால் மனம் அமைதியடைகிறது. ஆத்மாவின் ஆனந்தம் பிரதிபிம்பிக்கின்றது. எனவே ஆனந்தம் உண்டாகின்றது.
(2) தோஷ த்ருஷ்ட்யா காமத் த்யாக:
இந்த குறிப்பிட்ட வழியில், ஒரு பொருளின் தோஷத்தைப் பார்த்து அடையப்படுகிற விவேகத்தினால் அதன் மீதுள்ள ஆசை நீக்கப்படுகிறது.
இவ்விரு வழிகளிலும் உள்ள வேறுபாடு என்னவெனில், ஒருவன் ஒரு பொருளை அனுபவிப்பதினால் அடைகிற சுகத்தின் அளவை விட அதைத் தியாகம் செய்யும்போது(அதன்மீது வைராக்கியம் வரும்போது) கிடைக்கின்ற சுகம் நூறு மடங்கு அதிகமானது. யாருடைய மனதில் வைராக்கியம் உள்ளதோ அவர்களுக்குத்தான் ஆத்மஞானம் உண்டாகிறது. ஞானநிஷ்டை மற்றும் மோக்ஷம் சாத்தியப்படுகிறது.
உண்மையில் மோக்ஷம் என்பது அநிர்வசநீயம், அதாவது விளக்க முடியாதது. அது ஒரு பொருளை அனுபவிப்பதைப் போல அல்ல. மனதில் வருகின்ற நிறைவு கொடுக்கின்ற ஆனந்தம் அது. எனவே மோக்ஷானந்தத்திற்கு வைராக்கியானந்தம் துணைபுரிகிறது. வைராக்கியம் என்பது கீழான விஷயத்திலிருந்து மேலான விஷயத்திற்கு வருதலைக் குறிக்கின்றது. எப்போது ஒருவனுக்கு பிரம்மலோக சுகம் உட்பட எல்லாவித விஷயங்களிடமும் வைராக்கியம் வருகிறதோ அப்போதுதான் அவன் மோக்ஷத்திற்கானத் தகுதியை அடைகிறான். இனி ஆனந்த மீமாம்சையில் சுருதி கூறும் கருத்துக்களை சுருக்கமாகப் பார்க்கலாம்.
=> ஆனந்த மீமாம்ஸா-வின் விளக்கம்:
‘இளம் பருவமுடைய, ஒழுக்கமான, சாஸ்திரங்களைப் படித்த, மனோதைரியத்துடன் கூடிய, உடல் வலுவுடைய இளைஞன் ஒருவனிடம் செழிப்பு நிறைந்த இந்த முழு பூமியும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்டவன் அடைகிற ஆனந்தம் ஒரு பங்கு ஆனந்தமாகும்’ என முதலில் இங்கு ஒரு பங்கு ஆனந்தத்திற்கான வரையறை அளிக்கப்படுகிறது. பின்னர் அந்த ஒரு பங்கை அளவுகோலாகக் கொண்டு கந்தர்வர்கள், தேவர்கள், பித்ருக்கள், இந்திரன், பிரஜாபதி மற்றும் ஹிரண்யகர்பரின் ஆனந்தம் வரை வரையறுக்கப்பட்டு அதே அளவு ஆனந்தம் வைராக்கியதுடன் கூடிய ஆசையற்ற ச்ரோத்ரியனுக்கு கிடைக்கிறது எனக் கூறப்படுகிறது. பொதுவாக ‘ச்ரோத்ரியன்’ என்பது சாஸ்திரங்களைக் கற்றறிந்த பண்டிதனைக் குறிக்கிறது. இங்கு அது ப்ரம்ம-ஞானத்தை உடையவனைக் குறிக்கிறது.
உபநிஷத் தொடர்கிறது, ‘(மேற்சொல்லப்பட்ட செழிப்புவாய்ந்த மனிதனினுடைய) நூறு மடங்கு ஆனந்தமானது மனித-கந்தர்வகளுடைய ஒரு பங்கு ஆனந்தம் ஆகும். இதே அளவு ஆனந்தம் சாஸ்திரங்களைக் கற்றறிந்து மனிதலோக சுகத்தில் வைராக்கியம் உடைய அகாமஹதனுக்கும் கிடைக்கிறது’, என்கிறது. இங்கு ‘அகாமஹதன்’ என்பது ஆசைகளற்றவனை, வைராக்கியத்துடன் கூடியவனைக் குறிக்கிறது. எனவே மனித-கந்தர்வனின் அதே அளவு ஆனந்தத்தை வைராக்கியம் உடையவனும் அனுபவிக்கிறான் எனப்படுகிறது. ஒரு சுகம் நமக்கு கிடைக்கும்போது மேலோட்டமாக அது சுகத்தைப் போலத் தெரிந்தாலும் அதை ஆராய்ந்து பார்க்கும்போது அதையொட்டிய மன சஞ்சலங்கள் தெரியவருகின்றன. உதாரணமாக நமக்கு பிடித்த உணவை சாப்பிடும்போது சுகம் கிடைப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த உணவை சாப்பிடும்போது குறைவாக சாப்பிட நேர்ந்தால், சாப்பிட்ட சுகத்தைவிட குறைவாக சாப்பிட்ட வருத்தமும்; ஆர்வத்தில் அதிகமாக சாப்பிடும்போது வயிற்றிற்கு முடியாமல் போவதும் அல்லது உப்பசத்தினால் தூக்கம் வருவதும்; சரியான அளவு சாப்பிடும்போது, ‘சரி, இன்று இது கிடைத்துவிட்டது, இதுவே நாளையும் கிடைக்குமா?’ என்ற ஏக்கமும் இருக்கிறது. ஆனால் அப்பொருளில் வைராக்கியம் வரும்போது இந்த சஞ்சலங்களிலிருந்து விடுபடுவதால் அதிக சுகம் கிடைக்கிறது.
மனித-கந்தர்வர்களுக்கு அடுத்த படியாக சுருதியானது தேவ-கந்தர்வர்களது ஆனந்தத்தை வரையறுக்கிறது. மனித-கந்தர்வர்களின் நூறு மடங்கு ஆனந்தமானது தேவ-கந்தர்வர்களுடைய ஒரு பங்கு ஆனந்தம் எனக் கூறப்பட்டு இதே அளவு ஆனந்தம் வைராக்கியம் உடைய ச்ரோத்ரியனுக்கு உள்ளது, எனக் கூறுகிறது. இவ்விதம், தேவ-கந்தர்வர்களது நூறு மடங்கு ஆனந்தமானது பித்ருக்களின் ஒரு பங்கு ஆனந்தம் என்றும், பித்ருக்களின் நூறு மடங்கு ஆனந்தம் தேவலோக தேவர்களின் ஒரு பங்கு என்றும், இந்த தேவர்களின் நூறு பங்கு ஆனந்தம் இந்திரனுடைய ஒரு பங்கு ஆனந்தம் என்றும், பின் இந்திரனுடைய ஆனந்தத்தின் நூறு மடங்கு அவனுடைய குருவான பிரஹஸ்பதியின் ஒரு பங்கு ஆனந்தம் என்றும், அவரின் நூறு பங்கு ஆனந்தம் விராட் புருஷனான பிரஜாபதியின் ஒரு பங்கு ஆனந்தம் என்றும், இறுதியாக பிரஜாபதியின் நூறு மடங்கு ஆனந்தம் ஹிரண்யகர்பருடைய ஒரு பங்கு ஆனந்தம் என்றும் கூறப்படுகிறது. இங்கு ஒவ்வொரு நிலையிலும் அனுபவிக்கப்படும் ஆனந்தத்தின் அதே அளவு, வைராக்கியத்துடன் ஞானத்தை அடைந்த ச்ரோத்ரியனுக்கும் உள்ளது என சுருதி கூறுகிறது. இறுதியாக ஹிரண்யகர்பருடைய ஆனந்தத்தின் அதே அளவு வைராக்கியத்துடன் கூடிய ஞானிக்கும் உள்ளது எனக் கூறுகிறது.
சாந்தோக்ய உபநிஷத்தானது, ‘ஸத்’- ஐ ஆதாரமாக எடுத்துக் கொண்டு அகில உலகத்திற்கு எது ‘ஸத்’ ஆக இருக்கின்றதோ, அதுவேதான் உனக்கும் ‘ஸத்’ ஆக இருக்கிறது எனக் கூறி ஐக்கியத்தைச் செய்யும். மேலும் அனைத்தையும் எது அறிகிறதோ அதே ‘சித்’ அம்சம்தான் உன்னையும் அறிகிறது எனக் கூறி ‘சித்’- ன் அடிப்படையில் ஐக்கியம் நடைபெறும். இங்கு தைத்திரீய உபநிஷத்தில், ஆனந்தத்தின் அடிப்படையில் ஐக்கியம் வருகிறது. மனிதனின் ஆனந்தத்திற்கு எது காரணமோ அதுவேதான் ஹிரண்யகர்பரின் ஆனந்தத்திற்கும் காரணமாக உள்ளது. அதாவது, ஆனந்த ஆத்மாவே இரண்டிற்கும் காரணம் ஆகும். அப்படியெனில் நாம் ஏன் இந்த பாரபட்சத்தை அனுபவிக்கிறோம்.
=> ஏன் இந்த பாரபட்சம்?
உண்மையில் ஆத்மா எந்த பாரபட்சத்தையும் காட்டுவதில்லை. ஆத்மாவை பிரதிபிம்பிக்கும் அந்தக்கரணங்களில்(மனங்களில்) வேறுபாடு இருக்கின்ற காரணத்தினால் இது இவ்விதம் நிகழ்கிறது. ஆகவே சொரூபமாக இருக்கின்ற ஆத்மா ஒன்றுதான். அந்தக்கரணத்தில் தான் வேறுபாடு. நான் மனிதனும் அல்ல, தேவனும் அல்ல, ஹிரண்யகர்பனும் அல்ல, எல்லா ஜீவராசியினிடத்தும் மாறாது பூரணமான பிம்பானந்தமாக எது இருக்கின்றதோ அது நானாக இருக்கின்றேன் எனும் ஆத்ம-ஞானமே மோக்ஷம் ஆகும். அனுபவிக்கும் ஆனந்தங்கள் வேறு; ஆனால் சொரூபமாக இருக்கின்ற ஆனந்தம் ஒன்று. இந்த ஒரு ஞானத்தினால் கிடைக்கின்ற மன அமைதி மோக்ஷம் ஆகும்.
உண்மையில் இந்த பிரதிபிம்ப ஆனந்தத்திற்கு பிம்பமாக விளங்குகின்ற முக்கிய-ஆனந்தம்(பிம்பானந்தம்) அனுபவ விஷயமல்ல. இது ஞான விஷயம். ஆனால் இந்த ஞானத்தினால் வரும் மனநிறைவு அனுபவத்திற்குரியது. இந்த மனநிலையை ஹிரண்யகர்பரின் ஆனந்தம் அல்லது வைராக்கிய ஆனந்தம் என எதனோடும் ஒப்பிட இயலாது. இந்த ஆனந்தத்தையே மோக்ஷானந்தம் அல்லது வித்யானந்தம் என்கிறோம். ஹிரண்யகர்ப பதவி வரை வைராக்கியம் கொள்பவனே ஞானத்திற்கு தகுதி பெறுகிறான். இத்தகைய வைராக்கியத்தின் பலனாகவே ஜீவ-ப்ரம்ம ஐக்கிய ஞானம் கிடைக்கிறது. இதன் பலனாக மோக்ஷானந்தம் உண்டாகிறது.
இறுதியாக தைத்திரீய உபநிஷத்தின் மஹாவாக்கியங்களில் ஒன்றாக கருதப்படும் பின்வரும் மந்திரத்துடன் இந்த விசாரத்தை நிறைவு செய்யலாம் - ஸ யச்1சாயம் புருஷே । யச்1சாஸாவாதித்3யே । ஸ ஏக: । — அந்த இந்த எந்த ஆனந்தம் மனிதனிடத்தில் உண்டோ(அந்த ஆனந்தமும்) எந்த ஒரு ஆனந்தம் ஹிரண்யகர்பரிடம் உண்டோ (அந்த ஆனந்தமும்) ஒன்று. (இரண்டும் ஒன்றேயாம்).
---------------------------------------------------------------------------------------------------------------------