தத்துவம் ஏன் பயில வேண்டும்?

தத்துவம் ஏன் பயில வேண்டும்? எனக்கு அமைந்திருக்கிற வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மரணிக்கலாமே? தத்துவம் என்பதை நான் ஏன் கடினப்பட்டுப் பயில வேண்டும்?

இந்த கேள்வியை சிறிது விசாரணை செய்து பார்க்கலாம். தத்துவம் என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்வதன் மூலம் அது நமக்கு தேவையா என்கிற தீர்மானத்திற்கு வரலாம். தத்துவம் எனும் வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. அதில் பிரதானமானதுமேலான உண்மை’,  ‘யதார்த்த நிலை’, ‘மெய்ப்பொருள்’. அதாவது மேலான ஒரு உண்மையைப் பற்றிய அறிவை அடைவது தத்துவத்தை பயிலும்போது நிகழ்கிறது. மேலானதொரு உண்மையெனில் என்ன? சமஸ்கிருத மொழியில் இதுதத்வம்என எழுதப்படுகிறது. தத் + த்வம் = தத்வம். ‘தத்எனில் அது; ‘த்வம்எனில் நீ. எனவே இதன் அர்த்தம்அது நீயேஎன்பதாகிறது. எது நீயே? இந்தஅதுஎன்பதை அவரவர்களின் நோக்குநிலையிலிருந்து நிரப்பலாம்

1. ஒருவன் கடவுள் பக்தி மிகுந்தவனாக, தனது வாழ்க்கையின் சுக-துக்க தருணங்களை இறையோடு தொடர்புப்படுத்துவனாக இருக்கிற பட்சத்தில், அந்த தத்வம் எனும் சொல்இறை நீயேஎனப் பொருள்படும். நீ தேடிக் கொண்டிருக்கிற கடவுள் நீயே எனப் பொருள்படும்

2. சிலருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கும். ஆனால் இயற்கையின் மீது அல்லது தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்கிற அளவில் ஒரு மேலான சக்தியை நம்புபவராக இருக்கலாம். அவர்கள்அதுஎன்னுமிடத்தில்அந்த மேலான சக்தி நீயேஎன நிரப்பலாம்

3. சிலருக்கு, ஏன் இந்த வாழ்க்கை? அனைவரும் பிறக்கிறார்கள்; சில குறிப்பிட்ட காலம் அல்லல்பட்டு வாழ்கிறார்கள்; பிறகு மரணித்து விடுகிறார்கள். இவ்வளவுதானா இந்த வாழ்க்கை? இதற்குமேலும் ஏதேனும் அர்த்தம் இதில் உள்ளதா? இந்த வாழ்க்கையின் உண்மைப்பொருள்தான் என்ன? என்கிற தீவிர கேள்விகள் இருக்கும். அவர்கள்அதுஎன்னுமிடத்தில்அந்த உண்மைப் பொருள் நீயேஎன நிரப்பலாம்.

எனவே மொத்தத்தில் தத்துவம் என்பது நம்மைப் பற்றிய அறிவைக் கொடுப்பது; ‘நான்என்பதன் உண்மையான அர்த்தத்தை விளக்கிக் கூறுவது ஆகும். ‘நான்என்று ஒவ்வொருமுறை உரைக்கும்போதும் நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளும்நான்என்பது சரிதானா? இல்லை தவறாக புரிந்து வாழ்ந்து கொண்டுள்ளோமா? என்பது குறித்த பகுப்பாய்வு தத்துவத்தில் செய்யப்படுகிறது. ‘நான்என்பது நேரடியாக அறியப்படும் ஒரு எளிய உண்மை எனினும் அதில் நிறைய ரகசியங்கள் உள்ளன. அது ரகசியமாக மாறியதற்கு காரணமே அதை நாம் தவறாக புரிந்து கொண்டதுதான்

உதாரணமாகக் கூறுவதானால், ‘நான்என்கிற சொல்லுக்கு நாம் இந்த உடல் மனதை அர்த்தமாக எடுத்துக் கொள்கிறோம். உண்மையில் அவைகள்நான்என்கிற பிரக்ஞை உணர்வினால் அறியப்படுகிற வெறும் அறிபடு-பொருள்களே(objects) ஆகும். அறிபவனாக(subject) வீற்றிருக்கும்நான்என்பவன் வேறு. ஆனால் நமது முழு வாழ்க்கையையும் இந்த உடல் மனதின் மீது முதலீடு செய்தவர்களாக மரணத்தை அடைகிறோம். மரணிக்கும் தருவாயிலும், திருப்தி அற்றவர்களாக, ஏதேனும் ஒன்று தொக்கி நிற்பதாக, அடுத்த பிறவியென்று இருந்தால் அதை நான் செய்யவேண்டும் என பயணத்தை தொடர்கிற நோக்கத்தில் உடல் துறக்கிறோம். என்னுடையதான அனைத்தையும் விட்டுவிட்டுச் செல்கிறேனே என்கிற ஏக்கதில் விடை பெறுகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.  

தத்துவம் பயில்வதன் நோக்கம், ‘நான்என்பதன் மெய்ப்பொருளை அறிவது ஆகும். ‘நான்என்கிற அந்த மேலான சொரூபத்திற்கு மரணமில்லை என்கிற உண்மையை அறிவதன் மூலம் இந்த வாழ்க்கையின் அர்த்தத்தை பூர்த்தி செய்வது, ஏக்கமும் அதிருப்தியும் அற்ற ஆனந்த சொரூபம்நான்என்கிற உண்மையை தெரிந்து கொள்வது ஆகும். இதை நமது மரபுஆத்மஞானம்எனக் கூறுகிறது. ஆத்மாவைப் பற்றிய அறிவை அடைதல் ஆத்ம ஞானம். ஆத்மா எனில்நான்’.

இந்த தத்துவத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் பிரமாணமாக(கருவி) நமது மரபு பிரஸ்தான த்ரயத்தை பரிந்துரைக்கிறது. பிரஸ்தான த்ரயம் எனில்உண்மைக்கான மூன்றுஎன்று பொருள். பத்து உபநிஷத்துக்கள், பிரம்மசூத்திரம் மற்றும் பகவத்கீதை ஆகியவை இதில் அடங்கும்

எந்தவொரு அறிவையும் அடைவதற்கு அதற்கேயுண்டான சில வழிமுறைகளும்(methodology) அதை தெளிவாக விளக்கிக் கூறும் குருவும் தேவை. நாமே நேரடியாக படித்து அந்த தத்துவத்தைப் பற்றிய அறிவை அடையலாமே எனக் கேட்கலாம். ஆனால் ஓர் அறிவை நாம் அடைய முற்படும்போது நமக்கு ஏற்கனவே இருக்கிற அனுபவத்தைக் கொண்டுதான் அந்த விஷயத்தை ஆராய்வோம். நமது அனுபவத்திற்கு வராத எவ்வளவோ புதிய கோணங்கள் இருக்கலாம். ஆகவே எந்த கோணத்தில் அதை சிந்தித்தால் அதன் பொருள் தெளிவாக விளங்கும் என்பது ஏற்கனவே அந்த அறிவை அடைந்த குருவிற்கு மட்டுமே தெரியும். எனவேதான் தத்துவம் என்பது குரு வழியாக கேட்கப்பட வேண்டும். இதை நமது மரபுசிரவணம்’, அதாவது கேட்டல் எனக் கூறுகிறது.  

அடுத்ததாக, நாம் ஏற்கனவே பார்த்ததுபோலநான்என்பதன் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம். நான் மரணிப்பவனாக, அதிருப்தி ஏக்கம் பயம் முதலிய துயரத்துடன் கூடியவனாக, வரையறைகளுக்கு உட்பட்டவனாக என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சாஸ்திர தத்துவமோநான்என்பது மரணமற்ற, வரையறைகளற்ற, துக்கமற்ற ஆனந்த சொரூபம் என்கிறது. எனவே ஆரம்ப கட்டத்தில் நமது அனுபவத்திற்கும் சாஸ்திரம் கூறும் தத்துவத்திற்கும் பெரிய முரண் தெரிகிறது. சரியான நோக்கிநிலையில் நின்று அதைச் சிந்தித்து, சந்தேகத்தை நீக்குவதுமனனம்எனப்படுகிறது

தன்னைப் பற்றிய அறிவில் தெளிவு பிறந்தவுடன், இறுதியாக, ‘நிதித்யாசனம்எனும் தியானம் பரிந்துரைக்கப்படுகிறது. ‘நான்இந்த உடல் மனம் என்கிற நோக்கிலேயே இவ்வளவு நாட்கள் நமது வாழ்க்கை வாழப்பட்டிருக்கிறது. இப்போதுநான்என்பது உடலோ அல்லது மனமோ அல்ல; இந்த உடலையும் மனதையும் பிரகாசிக்கிற மேலான பிரக்ஞை சொரூபம் என்கிற அறிவு தெளிவாக புரிந்து கொள்ளப்பட்ட பின்னரும் பழக்கதோஷத்தின் காரணமாக நமது மனம் மீண்டும் மீண்டும்நான்என்பதன் அபிமானத்தை பழைய இடத்திலேயே வைக்கிறது. எனவேநான்என்பதன் அபிமானத்தை சரியான இடத்தில் வைத்துப் பழகுதல் நிதித்யாசனம் ஆகும். இதை அறிவில் நிலைபெறுதல், அல்லது நிஷ்டை அடைதல் எனக் கூறலாம்

சிரவணம், மனனம் மற்றும் நிதித்யாசனம் இவை மூன்றும் சேர்த்து ஞானயோகம் எனப்படும். தன்னறிவை அடையும் வேட்கை உடையவன் இந்த ஞானயோகப் பாதையில் பயணிக்கிறான்.  

எனில் சாதாரண மனிதர்களாக நாம் வாழும் இந்த வாழ்க்கை பொருளற்றதா? என்கிற கேள்வி எழலாம். கண்டிப்பாக இல்லை. என்னதான் நேரடியாக விளங்கிக் கொண்டிருப்பதாக இருந்தாலும் ஆத்ம அறிவு என்பது ஒரு மிக நுண்ணிய சூக்ஷமமான விஷயம் ஆகும். அதை புரிந்துகொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு மன முதிர்ச்சியும் விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுபட்ட அமைதியான மனமும் தேவைப்படுகிறது. ஆத்ம ஞானத்தை அடைவற்கான முன்நிபந்தனையாகவே இவைகள் அமைகின்றன. இதுஷமாதி-ஷட்க-சம்பத்திஎன சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. வைராக்கியம், விவேகம், புலனடக்கம், மனக்கட்டுப்பாடு, மன அமைதி, மோக்ஷத்திற்கான இச்சை போன்றவை இதில் அடங்கும். இத்தகுதிகளை அடைவதற்கான இடமாக இந்த உலக வாழ்க்கை தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. கிருஷ்ணனால் கீதையில் பரிந்துரைக்கப்படும் கர்ம-யோகம் எனும் வாழ்க்கைமுறையை மேற்கொள்வதன் மூலம் இந்தத் தகுதிகளை நாம் அடையப் பெறுகிறோம். இத்தகுதிகளை நாம் அடைய அடைய ஞானயோகத்தையும் நமது வாழ்வின் ஓர் அங்கமாக மாற்ற முற்படலாம். இவ்விதம் ஆத்ம-அறிவு கேட்கப்பட்டு, தெளிவு ஏற்பட ஆரம்பிக்கும் காலகட்டத்தில், அது நம்மை இன்னும் தீவிரமாக இந்தப்பாதையில் பயணிக்கச் செய்கிறது 

இனி, இந்த தன்னறிவின் பயன்தான் என்ன என்கிற கேள்வியும் நியாயமானதேஇந்த உடல் மற்றும் மனம் நான் அல்ல என்கிற அறிவு கிடைக்கப் பெறும்போது, உடல் மனதினால் ஏற்படுகிற துயரத்தின் வீரியம் குறைய ஆரம்பிக்கிறது. சுவாமி பரமார்த்தனந்தர் இதை FIR(Frequency Intensity Recovery-time) எனக் குறிப்பிடுவார். அதாவது மனதினால் ஏற்படுகிற துயரத்தின் வருகை, அதன் ஆழம் மற்றும் அத்துயரத்திலிருந்து மீண்டுவரும்-நேரம் இவைகள் குறைய ஆரம்பிக்கின்றன. மேலும், தன்னறிவின் பயன் தன்னை அறிதல். தன்னை அறிதல் என்பது தன்னை அடைதலைக் குறிக்கிறது. ‘நான்என்பது மரணமற்ற எல்லையற்ற ஆனந்த சொரூபம் என்பதால் தன்னறிவை அடைபவன் மரணமற்ற நிலையை, மோக்ஷம் என நமது மரபினால் பெயரிடப்பட்டுள்ள பேரானந்தத்தை அடைகிறான். மோக்ஷம் என்பது மரணத்தில் உடலை விடும்போது அடையப்படுகிற ஒரு நிலை எனும் தவறான கருத்தும் உள்ளது. ஆனால்ஜீவன் முக்திஎனக் கூறப்படுகிற இந்த மோக்ஷ நிலை, ஒருவன் உயிருடன் இருக்கும்போதே துக்கமற்ற நிலையை அடைவதைக் குறிக்கிறது. நிச்சலன ஆனந்தத்துடன் ஒன்றாவதைக் குறிக்கிறது. இந்த உலகின் மூலாதாரமாகத் தன்னை பார்ப்பவனாக, தனது பிரக்ஞையிலிருந்து பிறிதான இறைதத்துவம் என எதுவுமில்லை என்பதை உணர்ந்தவனாக, அவன் அத்வைதத்தை(இரண்டல்லாத நிலை) அடைவதைக் குறிக்கிறது

---------------------------------------------------------------------------------------------