அனைத்துமாய் நீ…
சுயவரலாறென்னும் ஆழ்கிணற்றில்
மூச்சிறைக்க மூழ்கித்தோற்கும்
பற்றும் நீ.
ஆயிரம் முறை தோற்கினும்
புன்னகையுடன் மறுமுயற்சிக்கும்
உறுதியும் நீ.
மறக்கத் துடிப்பவற்றை நினைவுப்படுத்தி
நினைக்கத் துணிவதை மறைத்து
விளையாடுபவன் நீ.
பேரானந்த சுயத்தை
அற்ப புலனின்பத்தால் மறைக்கும்
அறியாமை நீ.
விழிநிலையாய் கனவுமாய்
ஆழ்ந்த உறக்கமாய்
இவை மூன்றின் சாட்சியுமாய் நீ.
——————————————————————