ஆன்மிகப் பயணத்தில் மூன்று முக்கிய கிருபைகள் அவசியம் என்று சொல்வார்கள். ‘கிருபை’ என்ற சொல்லை கருணை, அருள், அல்லது அனுகிரஹம் என வரையறுக்கலாம். எனில், தன்னறிவை அடைந்து ஞானத்தில் நிலைக்க இங்கு யாருடைய கருணை நமக்கு தேவைப்படுகிறது? (1) ஈஷ்வர க்ருபா (2) குரு க்ருபா (3) ஆத்ம க்ருபா. இவை மூன்றில் மிகவும் கடினமானதாக இருப்பது ஆத்மாவின் கிருபையாகவே இருக்கிறது.
(1) ஈஷ்வர கிருபை: பகவானின் கிருபையில் எப்போதும் எத்தடையும் இருப்பதில்லை. கர்ம-பலத்தை அளிப்பவராக பார்க்கப்படுகின்ற ஈஷ்வரன், கருணாமூர்த்தியாகவும் இருப்பதனால் ஒரு சாதகனுக்கு அவருடைய அருள் எப்போதும் முழுமையாகவே கிடைக்கின்றது. ‘யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம்’ — எவனொருவன் பக்தியுடன் என்னை வழிபடுகிறானோ, சரணடைகிறானோ, அவனிடத்தில் நான் இருக்கிறேன்; என்னிடத்தில் அவன் இருக்கின்றான், என்று கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார். எனவே ஈஷ்வரனிடத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பது மட்டுமே அவரின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. மற்றபடி, ‘ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி’ என்கிறார். அனைத்து உயிர்களின் நன்மை விரும்பி அவர். அவரிடத்திலிருந்து எதிர்வினை ஒன்று நிகழ வாய்ப்பேயில்லை. எனவே ஈஷ்வர-கிருபை என்பது இந்த காற்றையும் ஆகாசத்தையும் போல எப்போதும் எங்கும் பரவியிருப்பது. சுவாசிப்பதற்கும் உழலுவதற்கும் எத்தடையும் அங்கு இல்லை.
(2) குரு கிருபை: குரு-கிருபையும் ஈஷ்வர-கிருபை போன்றதே. அங்கு சிறிது புத்திசாலித்தனமும் நிறைய அர்ப்பணிப்பும் தேவை. குருவை தேர்ந்தெடுப்பதில் அறிவுத்திறன் அவசியமாகிறது. இக்கால கட்டத்தில் நிறைய பேர் தங்களை குருமார்களாகக் காட்டிக் கொள்கின்றனர் என்பதால், தன்னை லட்சியத்தை நோக்கி நகர்த்துகிற ஆசிரியனை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு தனிமனிதனின் பொறுப்பாக ஆகிறது. தன்னுடைய தேவை அல்லது இலக்கு என்ன என்பதில் தெளிவு இருக்கும்போது, அதற்கான குரு கண்டிப்பாக நம் முன் தென்படுவார். அது ஈஷ்வரனின் நியதி. எவ்விதம் சூரிய உதயம் என்பது இயற்கையின் நியதியோ, அதுபோல உண்மையாகத் தேடுபவனுக்கு அதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்பதும் இயற்கையின் நியதியே ஆகும். எனவே எதில் ஒருவனுக்கு அர்ப்பணிப்பு இருக்கிறதோ, அதை அடைய வழிகாட்டும் ஒருவரை(குரு) அவன் கண்டிப்பாக வந்தடைவான்.
ஆன்மிக பாதையைப் பொறுத்தவரையில், ப்ரம்ம நிஷ்டனான குரு, தன்னையே அனைத்துயிர்களிடத்திலும் பார்ப்பதால், தன்னிடமிருக்கின்ற ஞானத்தை சிஷ்யனுக்கு அளிப்பதில் அவருக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை. வேதாந்தத்தில் சொல்லப்படுகிற மனக்கட்டுப்பாடு, புலனடக்கம் முதலிய தகுதியும்கூட அங்கு ஒரு பிரச்சினை அல்ல. அர்ப்பணிப்புடன் வருபவனுக்கு குருவின் கிருபை பூரணமாகக் கிடைப்பதால், அத்தகுதியை அடையும் வழியையும் அவரிடமிருந்தே, சாஸ்திரப் படிப்பினையிலிருந்தே பெறலாம். குருவானவர் ஏற்கனவே அந்தப் பாதையில் பயணம் செய்தவராக இருப்பதால், அப்பயணத்திற்குத் தேவையான விஷயங்களை சாதகனுக்கு தயக்கமின்றி காட்டிக்கொடுக்கிறார். எனவே அங்கும் எந்த தடையும் இருப்பதில்லை.
(3) ஆத்ம கிருபை: இது ஒருவனது சொந்த கிருபையைக் குறிக்கிறது. உள்ளதுக்குள்ளேயே சிக்கலான விஷயமாகவும் அதிக தடை இருக்கின்ற இடமாகவும் இருப்பதாக இதுவே இருக்கிறது. ஈஷ்வர-கிருபை சரியான குருவை அடைவிக்கிறது. குரு-கிருபை சரியான ஞானத்தை போதிக்கிறது. அதை உட்கிரஹித்து தன்மயமாக்கும் செயல் நம்மிடம் இருப்பதால் ஆத்ம-கிருபையே மிகவும் கடினமான ஒன்றாக ஆகிறது. நமக்கு நாமே பெரிய தடையாகி நிற்கின்றோம். நமது மனம் சம்ஸ்காரங்களின் துணையுடன் இந்த உலகத்தையே நமக்கு எதிராக கொண்டு வந்து நிறுத்தி, ‘எங்கே எதிர்த்து நில் பார்ப்போம்?’ என்று எப்போதும் சவால் விட்டுக் கொண்டே இருக்கிறது. இறுதியாக வெல்லப்பட வேண்டிய பகைவனாக நமது மனமே இருக்கிறது. வேதாந்த மொழியில் ‘வாசனைகள்’ என்று அழைக்கப்படுகிற பழக்கங்கள், கீறிப் பதிந்த வலிகள், ஞாபகங்கள், கருத்துகள், குறைகள், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள் போன்ற மனதின் இயல்புகள், எப்போதும் துருத்திக் கொண்டு ‘நான்’, ‘நான்’ என்று தலைதூக்கி நிற்கிறது. இதை உடைத்தெறிய, இந்த பழைய ‘நான்’-லிருந்து விடுதலை அடைய, மிகுதியான அளவில் ஆத்மாவின் கிருபை தேவைப்படுகிறது. அதனாலேயே கிருஷ்ணர், ‘ஆத்மா ஏவ ஹி ஆத்மந: பந்து: ஆத்மா ஏவ ரிபு ஆத்மந:’ — தானே தனக்கு நண்பன்; தானே தனக்கு பகைவனுமாகிறான்’, என்று கீதையில் சொல்கிறார். தனது கருணை தனக்கு கிடைக்க வேண்டியிருக்கிற இந்த விஷயத்தில், வெளியிலிருந்து கிடைக்கின்ற உதவி பயனற்றுப் போவதால், அவனே அவனுக்கு வழிகாட்டியாக ஆக வேண்டிய கட்டாயத்தை அடைகின்றான். ஆத்ம-கிருபையை அடையும் வழியறிந்தவனே தீரனாகிறான்; ஸ்தித பிரக்ஞனாகிறான்; சிவமாகிறான்; முடிவிலியில் அமர்கிறான்.
——————————————————————————————————————————————————