ஒளிர்விப்பவன்

அந்தியின் சாயலொத்த

முகில் சூழ்ந்த மதியத்தில்

உணவு வேட்கைப் பொழுதில்…


முற்றத்தில் தேன்சிட்டொன்று

ரீங்காரமிட்டபடி படபடப்பாய்

தனதுணவை உறிஞ்சியது.


ஜன்னல் வலையினூடே ரசித்தபடி

உள்ளமர்ந்து எனதுணவை

உட்கொண்டிருந்தேன்.


உணவெனும் ஐம்பூதப் பொருள்

உடலனெனும் ஐம்பூதத்தில் 

கலந்து கொண்டிருந்தன.


அது அதுவாக மாறிக் கொண்டிருக்க,

இவ்விரு உயிரின் இருப்பையும் 

ஒளிர்விக்கும் பெருஞ்சுடராய்,

பேரிருப்பின் உறைவிடமாய், 

பிரக்ஞையாய் நான்!

                              -- அனுஷா

———————————————————————