விழிகளின் மறையொளி
இரை மட்டுமேயென
இலக்கின்மீது குவிந்த
வேங்கையின் வைராக்கிய கண்கள்!
ஆத்மபிரேமையின் அளவையை
தழும்பாமல் கடத்தத் துடிக்கும்
ராதையின் தவிப்பு விழிகள்!
ஆசையின் கைச்சிறைத் துறந்து
அமைதியின் அணைப்பில் அமர்ந்த
புத்தனின் நிச்சலனக் கண்கள்!
தன்னிடத்தில் நிலைத்தொழுகி
பேருவகையின் விளிம்புதொட்ட
கண்ணனின் குறுநகை விழிகள்!
மெளனமெனும் மொழியுடுத்தி
பரத்தினை சைகையால் சுட்டும்
தென்முகனின் ஞானக் கண்கள்!
சிருஷ்டியின் சுழல்புள்ளியில் ஒடுங்கி
லயத்தின் பேரின்பத்தில் திளைக்கும்
ஈசனின் தியான விழிகள்!
இத்துனை கண்கள்வழி
கணமேனும் புகுந்துவிட்டவன்
ரகசியத்தின் வழியறிந்தவனோ!
——————————————————————