சிவமே! என் சிவமே!
சிவம் வேண்டும் எனக்கு!
சிவத்துவம் வேண்டும் எனக்கு!!
யானெனல் விழித்த இடத்தில்,
அது கருகி மறையட்டும் சிவத்தில்!
மனமாயை முளைத்த சிவத்தில்,
அது ஒடுங்கட்டும் ஓங்கிய இடத்தில்!
நான் நீங்காத சிவம் நீ!
நீ முழுமைபெறும் சிவம் நான்!
சொல்லாழி கானலாய் பொருளிழந்து சிவத்தில்,
மோனமாய் பேரமைதி பொருள் பொதித்ததென்னில்!
முடிவிலியாய் ரூபங்கள் உன் சிவதாண்டவத்தில்,
அறிவிழியின் சுடர் தீண்டி அருவுருவாய் என்னில்!
ஓ சிவமே! என் சிவமே!!
என் தவம் நீ! உனதருள் நான்!!
பற்றெழுந்து பயம் சுமந்து சிவம் உதிக்குமோ,
அறியாமை பீடித்த பிறவிப்பிணி எனையழிக்குமோ!
எனதிருப்பின் ஆதாரமாய் உனையெண்ணித் திரியவிட்டு,
உனதிருப்பின் சாரமாய் எனைமாற்றிச் சிரிக்கின்றாய்!
ஓ சிவமே! என் சிவமே!!
எனதிருத்தலாய் நீ! உனதிருப்பாய் நான்!!
இரண்டொடுங்கி ஏகமென சொல்லிக் கரைந்தேன்,
சிவம் நானே! சிவத்துவம் நானே!!
-- அனுஷா
—————————————————————————