கண்காட்சி
விழித்தவுடன் முதலில் எழுபவன் ‘நான்’.
வெற்றிடத்தில் இருத்தப்பட்ட ராட்டினம் போல்
இரண்டாம் ஆளாய் மனம் விழித்தது.
மெல்ல மெல்ல சுற்றத் தொடங்கி,
அசைவை நிகழ்த்த நிகழ்த்த நிரம்பியது வெற்றிடம்!
என் வீடு, என் உறவு…
என் செயல், நான் செய்கிறேன்…
என் முயற்சி, நான் வெல்கிறேன்…
என் கடந்தகாலம், நான் இயலாதவன்…
என் தவறுகள், நான் பதறுகிறேன்…
வெற்றிடம் கனத்து வழிந்தது,
நான்.. என்.. நான்.. என்… எனும் வெள்ளத்தில்.
தன்னையே சுற்றிச் சுற்றி மூச்சிறைத்து கலங்கிய இவன்,
ஒரு கணமும் நினைக்கவில்லை ஆதியில் விழித்தவனை.
திணறும் இவனைப் பார்த்திருந்த மூத்தோனாய்,
ஏகாந்தத்தின் தன்னிறைவில் அசைவற்று வீற்றிருந்தேன்.
-- அனுஷா
———————————————————