சுவாமி ராம தீர்த்தர், ஜனவரி 10, 1903 அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கிரேட் கோல்டன் ஹாலில் கொடுத்த விரிவுரையிலிருந்து எடுக்கப்பட்ட சாரம்:
எல்லையற்ற வடிவாய் அமர்ந்திருக்கின்ற பெண்கள் மற்றும் கனவான்களே,
எனது உரையைத் தொடங்குவதற்கு முன், பொதுவாக விரிவுரையைக் கேட்பவர்கள் குறித்து சில வார்த்தைகள் பேச வேண்டும்.
பெரும்பாலான மக்கள் தங்கள் காதுகளால் கேட்காமல் மற்றவர்களின் காதுகளாலேயே கேட்கிறார்கள். தங்கள் கண் வழியாக பார்ப்பதற்கு பதிலாக தங்களின் நண்பர்களின் கண்களால் பார்க்கிறார்கள். சொந்த ரசனையுடன் சுவைக்க மறுத்து மற்றவர்களின் சுவையைக் கொண்டு ருசிக்கிறார்கள். இது எவ்வளவு நியாயமற்றது! மனிதர்களே, உங்களின் சொந்த காதுகளைப் பயன்படுத்துங்கள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொந்தக் கண்களைப் பயன்படுத்துங்கள்; சொந்த புரிதலைப் பயன்படுத்துங்கள். மற்றவர்களின் கருத்துக்களால் மதிமயக்கம் கொள்ளாதீர்கள். இந்த பலவீனத்திற்கு எதிராக ஒருவன் எவ்வளவு உறுதியாக நிற்கிறானோ அவன் அவ்வளவு சுதந்திரத்துடன் இருக்கிறான்.
இந்த ராமனின் சொற்பொழிவில் ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த காதுகள் மற்றும் சொந்த அறிவின் மூலமாக பங்குகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். நீங்கள் மேற்கொள்ளும் தீர்ப்பு உங்களுடையதாக இருக்கட்டும். இவ்விதமாக நீங்கள் இந்த விரிவுரையில் பங்கேற்கும்போது மிகப் பெரிய பலனை அடைவீர்கள் என ராமன் உறுதியளிக்கிறேன். இதன்மூலம் உங்களது அனைத்து விதமான கவலைகளுக்கும் பயத்திற்கும் பிரச்சனைகளுக்கும் மேலாக உங்களை வைப்பீர்கள்.
சாதாரணமாக மக்கள் மகிழ்ச்சிக்காக செல்வத்தை விரும்புகிறார்கள். ஆனால் செல்வம் மகிழ்வைத் தராது. உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கப்போகும் ஒன்று இங்கு இருக்கிறது. பங்கேற்பாளர்களில் சிலர், உள்ளத்தை தொடுகிற மற்றும் உடனடி விளைவை உண்டாக்குகிற விரிவுரைகளை விரும்புவதாகக் கூறுகின்றனர். தயவு செய்து குழந்தைகளைப் போல இருக்காதீர்கள். ஒரு குழந்தைக்கு ரூபாய் நோட்டையும் மிட்டாய் துண்டையும் காட்டினால், அது சிறிதும் யோசிக்காமல் மிட்டாய் துண்டுகளையே எடுக்கும். ஏனெனில் அதுவே உடனடியாக இனிப்பை கொடுக்கக் கூடியது. அதற்கு இணையாக வெள்ளியோ அல்லது தங்கமோ இருந்தால்கூட அவன் அதை எடுக்கமாட்டான். அந்தக் குழந்தையை போல இருக்காதீர்கள். சில நேரங்களில் விரிவுரைகள் உடனடி விளைவை உருவாக்கும். அவைகள் வெறும் மிட்டாய் போன்றவை; நிலைத்திருப்பதில்லை. ஆனால் மிகவும் நிலையான மற்றும் நீடித்த தாக்கத்தை உருவாக்கும் ஒன்றை இங்கு அளிக்கப்போகிறேன்.
இன்றிரவு விவாதத்திற்கான கருப்பொருளாக நாம் எடுத்துக் கொள்ளவிருப்பது ‘வரம்பினுள் வரம்பற்றது’ எனும் தத்துவம். ஒரு தத்துவத்தையோ அல்லது அறிவையோ பிரபலப்படுத்துவதென்பது மிகக் கடினமானது. உங்களை முடிவற்ற செயல் சக்தியாக மாற்றுகிற ஓர் அறிவை ராமன் கொண்டு வந்துள்ளேன். கடினமான மற்றும் புரிதற்கரிய இந்த தத்துவத்தை, முடிந்தவரை எளிதாக்க நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.
இந்த உலகில் ஒருவனால் காணக்கூடிய மிகமிகச் சிறிய விஷயம் எதுவோ அதிலிருந்து தொடங்குவோம். கடுகு விதை அல்லது கசகசா விதை போன்ற ஏதேனும் ஒரு மிகச் சிறிய விதையை எடுத்துக் கொள்ளலாம். அதை உங்கள் உள்ளங்கையில் வைத்துப் பாருங்கள். விதை என்றால் என்ன? உங்கள் கண் முன் காணப்படுகிற, அல்லது மணக்கிற, அல்லது ஒரு குறிப்பிட்ட எடையுடன் இருக்கின்ற, நீங்கள் தொட்டுக்கொண்டிருக்கின்ற அந்த சிறிய பொருள்தான் விதையா? அல்லது விதை என வேறு ஏதாவது அதில் இருக்கிறதா? சிறிது ஆராயலாம்.
இப்போது அந்த விதையை பூமியில் விதைப்பதாக வைத்துக் கொள்வோம். மிகக் குறுகிய காலத்தில், அந்த விதை முளைத்து, ஒரு அழகான செடியாகத் துளிர்க்க ஆரம்பிக்கின்றது. பின்னர் உரிய நேரத்தில் அந்த முதல் அசல் விதையிலிருந்து, ஆயிரக்கணக்கான விதைகளைப் பெறுகிறோம். இந்த ஆயிரக்கணக்கான விதைகளை மீண்டும் விதைக்கும்போது அது லட்சக்கணக்கான விதைகளை கொடுப்பதாக ஆகிறது. இந்த லட்சக்கணக்கான விதைகளை மீண்டும் விதைத்தால், அதே வகையான விதைகளை கோடிக்கணக்கில் பெறுகிறோம். இந்த நிகழ்வு எதைக் குறிக்கிறது? நாம் தொடங்கிய அந்த முதல்-விதை, அசல் விதை, இப்போது எங்கே?
பூமியினுள் அழிந்துபோனதாக ஆன அந்த விதை இப்போது எங்கும் காணப்படவில்லை. ஆனால் அந்த அசல் விதையிலிருந்து இன்று அதே வகையைச் சார்ந்த கோடிக்கணக்கான விதைகள் கிடைத்துள்ளன. என்ன ஒரு எல்லையற்ற ஆற்றல்! எல்லையற்ற செயல்திறன்! எப்படியானதொரு முடிவிலா வல்லமை நாம் தொடங்கிய அந்த அசல் விதையில் மறைக்கப்பட்டு இருந்திருக்கிறது.
இப்போது ஒரு கேள்வி கேட்கப்படுகிறது: நீங்கள் ‘இது ஒரு விதை’ எனக் கூறும்போது உண்மையில் அதன் அர்த்தம்தான் என்ன? ‘விதை’ என்ற சொல்லானது வெறுமனே விதையின் வடிவத்தை, அதன் அளவை, எடையை அல்லது மணத்தை குறிக்கிறதா? அந்த வெளிப்புற தோற்றம்தான் விதையா? அப்படியெனில் அதே எடை மற்றும் நிறத்தில், அதே வாசனையுடன் அதே வடிவத்தில் செயற்கையாக ஒரு விதையை உருவாக்கினால், அந்த செயற்கை-விதை உண்மையான விதையாக ஆகிவிடுமா? கண்டிப்பாக இல்லை. எனவே, ‘விதை’ என்ற வார்த்தைக்கு மேலோட்டமான அர்த்தமும், உள்ளர்த்தமும் இருப்பதைக் காண்கிறோம். நமது புலன்களால் உணரக்கூடிய அதன் வடிவம், அளவு, எடை உள்ளிட்ட பண்புகள் அதன் மேலோட்டமான அர்த்தமாகிறது. ஆனால் ‘விதை’ என்பதன் உண்மைப்பொருள் விதை வடிவினுள் மறைந்திருக்கும் அந்த வரம்பிலா ஆற்றலை, வரம்பிலா செயல்திறனைக் குறிக்கிறது. அங்கு நாம் எல்லையினுள் எல்லையற்றதைக் காண்கின்றோம். வரம்பிலா ஆற்றலானது ஒரு குறிப்பிட்ட வரம்பினையுடைய வடிவத்தினுள் இருப்பதைக் காண்கின்றோம். அந்த எல்லையற்ற தன்மையே அவ்விதையின் உண்மைப்பொருள், வெறும் வெளித்தோற்றம் அல்ல.
இப்போது, இந்த வரம்பிலா ஆற்றலானது அந்த விதையினுடைய உருவத்தின் அழிவில் அழிந்துவிடுகிறதா? ஏனெனில் விதையின் வடிவம் பூமியில் விதைத்தவுடன் அழிகிறது. ஆனால் உண்மையான விதையின் எல்லையற்ற தன்மை அழிவிற்குட்பட்டதா எனில் கண்டிப்பாக இல்லை. முடிவிலிக்கு மரணம் கிடையாது, அது ஒருபோதும் அழியாது. இன்று நாம் அந்த முதல்-விதையின் ஆயிரமாவது வழித்தோன்றலாகவுள்ள ஒரு விதையை எடுத்துகொண்டு, அதை மீண்டும் விதைப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போதும் இந்த விதையானது, அந்த முதல்-விதையிலிருந்த அதே எல்லையற்ற சக்தியுடன் இருப்பதைக் காண முடியும். பத்தாவது கோடி சந்ததியாகவுள்ள விதையிலும் அந்த அசல் விதையிலிருந்த அதே சக்தியையும் பல்கிப் பெருகும் அதன் செயல்திறனையும் அப்படியே பார்க்கமுடியும்.
இதிலிருந்து விதையின் உண்மைப்பொருளாக இருக்கின்ற அந்த வரம்பிலா ஆற்றலானது முதல்-விதையிலிருந்ததைப் போலவே ஆயிரமாவது சந்ததியிலும், பத்தாவது கோடியாகவுள்ள சந்ததியிலும் இருப்பதைப் பார்க்கிறோம். அசல் வடிவம் அழிந்தது, ஆனால் அதன் ஆற்றல் அழிக்கப்படவில்லை. விதையின் உடல் இறந்தது, ஆனால் விதையின் ஆன்மா இறக்கவில்லை. அது மாறாதது; நேற்றும், இன்றும் என்றும் மாறாது. அந்த எல்லையிலா ஆற்றலானது சிறிதும் அதிகரிப்பதில்லை, சிறிதும் குறைவதுவுமில்லை. அது அழியாதது; மாறாதது.
அடுத்ததாக, புரோட்டோசோவா எனப்படுகிற மிகச் சிறியவகை நுண்ணுயிரியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அதை இரண்டு சமபகுதிகளாகப் பகுப்பதாக வைத்துக் கொள்வோம். இதனால் அது இறக்கிறதா எனில் கிடையாது. அது இரண்டாக மாறுகிறது. இந்த இரண்டையும் எடுத்து மீண்டும் பகுக்கும்போது, அது அசல்-நுண்ணுயிரியின் அதே ஆற்றலும் வல்லமையும் கொண்ட நான்கு நுண்ணியிரிகளாக மாறுகிறது. இவ்விதமாக இதை எவ்வளவு வேண்டுமானாலும் பெருக்கலாம். இங்கும் இந்த நுண்ணுயிரியின் உடல் அல்லது வடிவம் என்பது அதன் மேலோட்டமான அர்த்தமாகவே உள்ளது. ஆனால் அதன் உண்மையான அர்த்தம் என்பது உள்ளேயுள்ள அதன் ஆற்றல், உள்ளிருக்கும் அதன் உயிர்சக்தி ஆகும்; அதுவே உண்மையான நுண்ணுயிரி. அதனால்தான் உருவம், எடை, நிறம், அளவு உள்ளிட்ட பண்புகளுடன் வெளித்தோற்றத்தில் தெரிகிற புரோட்டோசோவாவை வெட்டும்போது அது இறப்பதில்லை. உடலின் மரணம் வடிவத்தையே அழிக்கிறது, ஆன்மாவை அல்ல. ஒரு நுண்ணுயிரியைக் கொண்டு, அதை லட்சக்கணக்கில் பெருக்க முடியும். இங்கும் ஒரு எல்லையற்ற சக்தி அதன் உடலில் மறைந்துள்ளது. எல்லையினுள் முடிவிலி! வரம்பினுள் வரம்பின்மை!
உடல்கள் பெருகும்போது அதனுள் இருக்கின்ற அந்த எல்லையற்ற ஆற்றல் கூடுகிறதா? அல்லது குறைகிறதா? என்ற கேள்வி எழலாம். உண்மையில் அது கூடுவதும் இல்லை, குறைவதும் இல்லை. வரம்பிற்குட்பட்ட வெளித்தோற்றத்திற்குள் இருக்கின்ற அந்த நுண்ணுயிரியின் உண்மையான வரம்பின்மை என்பது மாறாதது.
இது வேதாந்தத்தில் பின்வரும் உதாரணத்தின் மூலம் விளக்கப்படும்:
ஒருபோதும் கண்ணாடியைப் பார்த்திராத ஒரு சிறு குழந்தை ஒருமுறை தனது தந்தையின் அறைக்குள் ஊர்ந்து செல்ல நேர்ந்தபோது அங்கு ஒரு கண்ணாடி தரையில் கிடந்தது. அக்கண்ணாடியின் ஒரு முனை சுவரில் சாய்ந்தும் மறுமுனை தரையைத் தொடுமாறும் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிறிய குழந்தை கண்ணாடி வரை ஊர்ந்து சென்றது. கண்ணாடியில் தனது சொந்த அளவிலான குழந்தையைப் பார்த்ததும் அதனருகில் சென்று அதனுடன் கைகுலுக்கப் போக அக்கண்ணாடி கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்தது. இப்போது கண்ணாடியில் ஒரு குழந்தைக்குப் பதிலாக இரண்டு குழந்தைகள் இருப்பதை அந்த குழந்தை பார்த்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் மிரட்டும் விதத்தில், “இங்கே என்ன செய்கிறாய்?” என்றாள். அதற்கு அக்குழந்தை, “ஓ, நான் இரண்டு செய்தேன், நான் இரண்டு செய்தேன்” என குதூகலித்தது. இக்குழந்தை இப்போது ஒரு குழந்தையிலிருந்து இரண்டு குழந்தைகளை உருவாக்கியுள்ளது. அச்சிறு குழந்தை வயதுக்கு முன்னரே இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிவிட்டது.
இனி இந்த இரண்டு கண்ணாடித் துண்டுகளை நான்காக உடைக்கும்போது நான்கு குழந்தைகள் கிடைக்கும், எட்டு துண்டுகளாக உடைத்து எட்டு குழந்தைகளை உருவாக்க முடியும். இவ்விதத்தில் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம். இப்போது ஒரு கேள்வி! இந்த கண்ணாடியை உடைப்பதால் அந்த உண்மையான-குழந்தை, அல்லது அதன் உண்மையான-தெய்வீகத்தன்மை என்பது அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா? எனில், அது கூடுவதும் இல்லை, குறைவதும் இல்லை. அந்த கண்ணாடியால்தான் அதிகரிப்பும் குறைவும் நிகழ்கிறது. அதைப் பார்த்துக்கொண்டிருக்கிற குழந்தையிடம் எந்தப் பெருக்கமும் இல்லை, அது அப்படியே உள்ளது. எல்லையற்றதை எவ்வாறு அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்? முடிவிலி அதிகரித்தால், அது முடிவிலி அல்ல; முடிவிலி குறைந்தால் அது முடிவிலி அல்ல.
நுண்ணுயிரியை பகுக்கும் உதாரணமானது, கண்ணாடியில் தோன்றும் குழந்தையின் உடல் குறித்த நிகழ்வோடு ஒப்பிடப்பட்டு பின்வரும் வேதாந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. ஒரு நுண்ணுயிரியின் உடல் இரண்டாகப் பிளவுபடும்போது, அதன் சக்தி, அல்லது உள்ளிருக்கும் அந்த உண்மையான முடிவிலி, அல்லது அதனுடைய ஆத்மா, அல்லது அதன் தெய்வத்தன்மை என்பதாக எந்த பெயர் கொடுக்கப்படினும் சரி, அந்த உயிரின் மெய்ப்பொருள் என்பது பிளவுபடுவதில்லை. பிளவுகளுக்கு உட்பட்டு அதன் உடல்கள் பெருக்கத்தை அடையும்போதும் அதன் உள்ளிருக்கும் உண்மைத்தன்மை அல்லது சக்தி பெருகுவதில்லை. அதாவது உண்மையான-குழந்தை மற்றும் நுண்ணுயிரியின் உடல் என்பது உடைந்த கண்ணாடி துண்டுகள் போன்றவை. நுண்ணுயிரியின் உடல் பிரிக்கப்பட்டு, உட்பிரிக்கப்பட்டு என மீண்டும் மீண்டும் பிகுக்கப்படும்போதும், அதனுள் இருக்கின்ற அந்த மாற்ற முடியாத எல்லையற்ற சக்தியானது, ஆயிரம் மடங்கு லட்சம் மடங்கு என பிரிக்கப்படுகிற அனைத்து உடல்களிலும் பிரதிபலித்து, தன்னை சமமாக வெளிப்படுத்துகிறது. ஆனால் ‘அது’ உண்மையில் அப்படியே இருக்கிறது. அது ஒன்றுதான், ஒன்றே ஒன்றுதான், இருமையோ பன்மையோ அங்கு இல்லை. எப்பொழுதும் ஒன்றுதான். என்னவொரு அதிசயம்!
என்னவொரு ஆனந்தம்! இந்த உடல் வெட்டப்பட்டாலும் நான் இறக்க மாட்டேன். எனது உண்மையான சுயம், உண்மையான ‘நான்’ இறப்பதில்லை. இந்த உடலை உயிருடன் எரித்தாலும் சரி ‘எனக்கு’ எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. உள்ளத்தில் உள்ள அந்த முடிவிலியை உங்களது சுயம் என உணருங்கள். அதுவே உண்மையான ‘நீங்கள்’ எனத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவன் தன்னைத்தானே அறிந்து கொள்ளும் தருணத்தில், தனது உண்மையான இயல்பை உணரும் அதே தருணத்தில், அவன் எல்லாவற்றிலிருந்தும், எல்லா சிரமங்கள் துன்பங்கள் ஆபத்துகள் மற்றும் வலிகள் என அனைத்திலிருந்தும் விடுதலையை அடைகிறான். அதை அறிந்து உண்மையான நீங்களாக இருங்கள்! எல்லா உடல்களிலும், தெரிகின்ற அனைத்து ஆளுமைகளிலும், வெளித்தோற்றத்திற்கு வந்துள்ள அனைத்துவகையான உருவங்களிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது ஒரு எல்லையற்ற சக்தியே என்பது என்னதொரு அதிசயம். ‘நான்’ எல்லையற்றவன், ‘நான்’ எனும் இந்த முடிவிலியே சிறந்த பேச்சாளர்களின் உடலிலும், சிறந்த மனிதர்களின் உடலிலும், மிகவும் மோசமான உயிரினங்களின் உடலிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. எல்லையற்றவனான ‘நான்’, இந்த உடல் அல்ல என்பதை உணரும்போது ஒருவன் சுதந்திரமாக இருக்கிறான். இவை வெற்று வார்த்தைகள் அல்ல; இது வெறும் கற்பனைப் பேச்சு அல்ல, இதுவே உண்மையான மெய்மை. உண்மையான மெய்மையை, உண்மையான சக்தியை, ஒருவன் உணரும்போது அவன் எல்லையற்றவனாக, அனைத்து இன்னல்களிலிருந்தும் உடனடியாக மேலெழுகிறான். என்னவொரு ஆனந்தம்! என்னவொரு ஆனந்தம்!
---------------------------------------------------------------------------------------------