சுயம் அறியும்
புதிய நகரமொன்றில்
வீதி வீதியாய் திரிந்து
யார்யாரிடமோ விசாரித்து
வீடுவீடாய் ஏறியிறங்கி
குடியமர இடம் தேடிக்கொண்டிருந்தோம்.
சட்டென சந்தப் பாடலொன்று ஒலிக்க
கைப்பேசியின் அலாரத்தில் விழித்தபோது
படுக்கையறையின் பஞ்சணையில்
உடல் கிடத்தியிருந்தேன்.
கனவுலக தன்முனைப்பின் எல்லா தேடல்களும்
நனவுலக நாயகிக்கு பொருளற்றுப் போய்விட்டிருந்தது.
ஆழ்துயிலோ கனவோ விழிப்போ
மாறிக்கொண்டேயுள்ள இந்நிலைகளே
ஒன்றுக்கொன்று பயனற்றுப்போக…
இம்மூன்றின் ஆதாரமாய் விளங்குமெனக்கு
இவைகள் என்ன பலனைத் தந்துவிட முடியும்!
இவ்வெல்லைக்குள் நிகழ்த்தப்படும் சாதனைகள்
பூரணமாம் என் சுயத்தின் இருத்தலுக்கு
என்ன பெருமை சேர்த்துவிட முடியும்!
-- அனுஷா
————————————————————————