காட்சிப் பிழை

வாகனப் பயணம் வேகம் பிடித்தது,

நீலவானம் முன்கண்ணாடியை நிறைத்துப் படர்ந்தது!


விரிந்து நீளும் ஆகாயத்தின் எல்லைக்கோட்டை 

அடைய முற்பட்டன விழிகள்!

இடைமறித்து மேகம் நுழைந்த கணத்தில்,

தன்னியலாமையை ஆசுவாசப்படுத்தியது கண்கள்!


அட! அதற்கும் கீழே அழகிய கொக்கு!

மேகக்காட்சியை மறைத்த அழகி!

பறவையை திசைதிருப்பியது பைன் மரக்கூட்டமொன்று!


சட்டென சாலையோரப் பூக்களில் கண்கள் மேய…

அறிபொருளின் தொடர்மாற்றம் மாறாதிருந்தது.

காட்சிவரம்பினுள் முடிவிலாத் தேரோட்டம்!

மாறிமாறித் தோற்றங்கள் வரைந்தழிய 

அதைத் தாங்கிக் கிடக்கும் திரை 

புறத்தமைந்ததா? அகத்தமைந்ததா?


திரைக்காட்சி தொட்டுவிடுமோ அத்திரையை!

பெரும்புயலும் நனைக்காது,

கூர்வாளும் கிழிக்காது,

அடைவும் இழப்பும் தீண்டாத

அந்த சாசுவத இருப்பிடத்தில், 

காட்சியேது! சாட்சியேது!


                                             -- அனுஷா

———————————————————