வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

வேதாந்தம் ஓர் அறிமுகம் - 2

(5) உபாசனை (உபாசனம் (அ) உபாசனா):

       மனதை ஒருமுகப்படுத்துவது, குவிப்பது. உப + ஆசனம் = சமீபத்தில் + இருத்தல். இதன் இலக்கணம்:

* சகுண ப்ரஹ்ம தியான ரூப மானஸ வியாபார: — எடுத்துக் கொண்ட காரியத்தில் தியானம் மூலமாக மனதை வைத்துப் பழக்குதல்(mind activity). கர்த்தாவாக(Master) உள்ள மனதை கரணமாக(servant) மாற்றுவது இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். பொதுவாக வானப்பிரஸ்த காலத்தில் மேற்கொள்ளப்படும் சாதனை இது. இருப்பினும் கிரஹஸ்த காலத்திலேயே தொடங்கப்பட்ட உபாசனை வானப்பிரஸ்த காலத்தில் துணை நிற்கும்.

(i) தியானத்திற்கான முன்னேற்பாடுகள்[Preparations]:

  * அன்னமய கோஷம் (உடல்) – அளவான செயல் மூலம் உடலை ஆரோக்கியமாக வைப்பது.

  * அளவான உணவு (அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் உண்பது).

  * இந்திரியக் கட்டுப்பாடு – தேவையான விஷயங்களுக்கு மட்டும் கண், காது போன்ற புலன்களுக்குக் கொடுத்தல்; (வானப்பிரஸ்தம் காலத்தில் மௌனம் பிரதானமாக இருப்பது சிறந்தது)

  * அதிக சுக-துக்கம் இல்லாமல் சம பாவனையுடன் இருப்பது.

  * பொறுப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும் – less responsibilities.

(ii) தியானம் பழகுதல்[Practicing stages]:

  * உடல், இந்திரியங்களை அமைதிப்படுத்தி அமர்ந்து பழகுதல் - Make it as a habit.

  * எண்ணங்களை கவனித்து மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சி

  * மானஸ பாராயணம் ( forcing your mind to a specific thought)

  * மானஸ ஜபம்

  * உபநிஷத்தில் கூறப்படும் உபாசனம் - மனதை விரிவுப்படுத்தும் முயற்சி

(iii) தியானத்தின் வகைகள்:

  * அமைதிப்படுத்தும் தியானம்[Relaxation meditation]

  * ஒருமுகப்படுத்தும் அல்லது குவிக்கும் தியானம்[Concentration meditation]

  * மனதை விரிவுபடுத்தும் தியானம்[Expansion meditation]

  *  நற்பண்புகளை தியானித்தல்[Value meditation]

  * மேற்கூரிய இந்த நான்கு வகை மட்டுமல்லாது, வேதாந்தத்தில் நிதித்யாசன தியானம் பேசப்படுகிறது. அறிவை மனதில் நிலைபெறச் செய்யும் பயிற்சிக்கு நிதித்யாசனம் என்று பெயர். 


 (6) ஞான யோகம்

       ஞானயோகம் மூன்று படிகளைக் கொண்டது. 

(1) சிரவணம் - சாஸ்திரம் கேட்டல்

(2) மனனம் - சிந்தித்தல், சந்தேகம் தெளிதல்

(3) நிதித்யாசனம் - தியானித்தல், ஞானத்தை நம் மயமாக்குவது

     * ஞானமடைவதற்கும் சாஸ்திரத்திற்கும் இடையேயான சம்பந்தம்:

     (i)  சாத்ய வஸ்து – நம் வாழ்க்கையில் அடையாததை, இல்லாததை அடைதல் (பொருள், வீடு, relaxation…)

     (ii) சித்த வஸ்து – அடைந்ததை அடைவது (already accomplished). அறியாமையில் இழக்கப்பட்ட்தை ஞானத்தின் மூலம் அடைதல்

      மோக்ஷம் என்பது தன்னிறைவைக் குறிக்கின்றது. தன்னறிவினால் உண்டாகும் மனநிறைவைக் குறிக்கின்றது. இது பூர்ணமானது, நிறைவானது.

=> திரிபுடி [மூன்று விதமான வேறுபாடுகள்]:

        * ப்ரமாதா (Subject) – ஞானத்தை அடைய விரும்புவன் ; அறிபவன்

        * ப்ரமேயம் (object) – அடைய விரும்பும் பொருள்

        * ப்ரமாணம் (instrument) – கருவி (பார்த்தல் எனும் செயலுக்கு 'கண்' ப்ரமாணம்)

இங்கு,

பரம்பொருள் பற்றிய அறிவு = பரம்பொருளை அடைதல்

அப்படிப்பட்ட பரம்பொருளான ப்ரம்மத்தை அறியும் ப்ரமாணம் வேதாந்த சாஸ்த்திரம் ஆகும்.


 ஞானயோகத்தின் நிலைகள்[Stages]:

 (i) சிரவணம் – வேதாந்தம் மற்றும் சாஸ்திரம் புரியும் வரை கேட்டல்.

சாஸ்திரத்தின் மையக்கருத்து (தாத்பர்யம்):

[1] ஈஷ்வர ஜகத் ஜீவன்

   *  நம்மை பற்றிய அறிவு

   *  உலகத்தை பற்றிய அறிவு

  *   ஈஷ்வரனைப் பற்றிய அறிவு

[2] ஜீவ ப்ரம்ம ஐக்கிய ஞானம்

                ஜீவாத்மாவும் ஈஷ்வரனும் அடிப்படையில் ஒன்று எனும் அறிவு

[3] ஜகத் மித்யா

      உலகம் வெறும் தோற்றம் (நிலையற்றது) எனும் அறிவு

(ii) மனனம் – சாஸ்திரத்தின் தாத்பர்யம் மற்றும் நமது அனுபவம் ஆகிய இரு ப்ரமாணத்திற்கும் இடையேயுள்ள முரண்பாட்டை விசாரம் செய்து சந்தேகம் தெளிதல்.

(iii) நிதித்யாசனம் ஞானத்தில்(தியானம் மூலம்) இருந்து பழகுதல்.

தியானம் உபாசனைக்கும் நிதித்யாசனத்திற்கும் பொதுவானது. ஞானம் அடைவதற்கு முன் மனதை பக்குவப்படுத்தும் தியானத்தை உபாசனை என்றும், ஞானத்திற்கு பின் அடைந்த அந்த ஞானத்தை மனதில் நிலைநிறுத்தும் தியானத்தை நிதித்யாசனம் என்றும் அழைக்கிறோம். ஸ்தித பிரக்ன் - ஞான நிஷ்டையை அடைந்தவன்; முக்தன். ஞ: - அறிபவன், ஞானி.


(7) பக்தி

      இறைவனை நாடுதல், நேசித்தல், பூஜித்தல்

     * சாதகன் – பக்தன்

     * சாத்யம் – அடையப்படும் பொருள்

     * சாதனம் – கருவி

  => பக்தியின் வகைகள்:

        (i) ஷகாம பக்தி (காம்ய பக்தி) 

          * சுகப் பிராப்தி

         * துக்க நிவர்த்தி இவற்றிற்காக செலுத்தப்படும் பக்தி

சுகத்தை அடைவதற்காகவும், துக்கம் நீங்குவதற்காகவும் செய்யப்படும் இவ்வகை பக்தியில், சாதகன் வேறு, சாத்யம் வேறு மற்றும் சாதனம் வேறு. அதாவது பக்தன் எனும் தனியொருவன், தனக்கு தேவையானதை அடைய பகவான் எனும் சாதனத்தை பயன்படுத்துகிறான்.

(ii)  நிஷ்காம பக்தி (கர்ம யோகம்)

              இங்கு சாதகன் பகவானைப் பற்றிய ஞானத்தை அடைவதற்கு தேவையான மன பக்குவத்திற்காகவென பக்தி செலுத்துகிறான். ஆகவே சாதனமும் பகவான், சாத்தியமும் பகவான். மோட்ஷத்திற்க்குத் தேவையான மனத்தூய்மைக்கு கர்ம யோகம் வழிவகுக்கும்.

(iii)  பரா பக்தி( ஞான லக்ஷண பக்தி)

                 இது ஞானியின் நிலை. இங்கு சாதகன், சாத்யம் மற்றும் சாதனம் இவை மூன்றும் ஒன்றாகிறது. ஈஷ்வரனும் நானும் வேறல்ல என்கிற பாவனையுடன் இருக்கின்ற ஞானி பரா பக்தனாகிறான். 


(8) சாதன சதுஷ்டய சம்பத்தி

       சாதன – தகுதிகள்

       சதுஷ்டய – நான்கு

       சம்பத்தி – அடைய வேண்டும்          

       சம்பந்ந: - அதிகாரி – அதாவது நான்கு தகுதியையும் உடையவன்

   * ஞானயோக சாதனைக்கு முன் அடைய வேண்டிய தகுதிகள்:

   [1] விவேகம் => நித்ய-அநித்ய வஸ்து விவேக:

நிலையானது, நிலையற்றது என பகுத்தறியும் அறிவு. நம்முடைய அனுபவம் மற்றும் பிறரது அனுபவம் வாயிலாக நிலையானது(ப்ரம்மம்) எது, நிலையற்றது(உலகம்) எது என அறிவது. உபாயம் – கர்ம யோகம்

   [2] வைராக்யம்    

         போகத்தில் அதாவது இந்திரிய சுகம் மற்றும் உலகப் பொருட்களில் விருப்பமில்லாத மனநிலை. ஆரம்ப கட்டத்தில் வரும் வெறுப்பினால் தவறில்லை, ஆனால் அது பின்னர் விருப்பற்ற நிலையாக மாற வேண்டும். உபாயம் – அநுதர்சனம்; மீண்டும் மீண்டும் விவேகத்தை விசாரம் செய்தால் வைராக்கியம் பிறக்கும்.

   [3] சமாதி ஷட்க சம்பத்தி:

        இதில் மொத்தம் ஆறு பண்புகள் உள்ளன.

(i) சமம் –> மனக்கட்டுப்பாடு (அ) மனஅமைதி

               * விருப்பு, வெறுப்பு, காமம், கோபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல்.

               * ஏற்கனவே இருக்கின்ற ஞாபக பதிவுகளிலிருந்து விலகி இருத்தல் நல்லது (Be away from already stored memories). மனமானது இரு விதத்தில் விக்ஷேபத்தை(சஞ்சலம்) அடைகிறது. (1) ஐம்புலன்கள் மூலமாக; (2) அனுபவ மற்றும் ஞாபக பதிவுகள் மூலமாக. இதில் புலன்களைக் கட்டுப்படுத்துதல் தமம். மனதைக் கட்டுப்படுத்துதல் சமம்.

        (ii) தமம் –> இந்திரியக் கட்டுப்பாடு

சஞ்சலப்படும் விஷயத்தில் இந்திரியங்களை செலுத்தாமல் இருத்தல்; ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களுக்கு நல்ல உணவு (feed) கொடுப்பதன் மூலம் மனதுக்கு நல்ல உணவு (feed) கொடுக்க வேண்டும். 

      (iii) உபரமம் – நிலைத்து இருந்து பழகுதல்

              சமத்தையும், தமத்தையும் தொடர்ந்து செய்யும் முயற்சி.

      (iv) திதிக்ஷா – சகித்தல், பொறுமை (endurance)

         சுக - துக்கம் முதலான இருமைகளை சகித்துக் கொள்ளுதல்; இது சக்தியுள்ள மனதைக் குறிக்கிறது.

      (v) சிரத்தை(ஸ்ரத்தா:) - நம்பிக்கை (belief)

           குருவினிடத்தும், சாஸ்த்திரத்தினடத்தும்(ஈஷ்வரத்துவம்) வைக்கும் நம்பிக்கை, சிரத்தை ஆகும்.

      (vi) சமாதானம் – லட்சியத்தில் மனதை வைத்தல்

    ஞான யோகம் என்ற சாதனத்தில் மனதை வைத்துப் பழகுதல்

   [4] முமுக்ஷுத்வம்

        மோக்ஷத்தை அடையும் இச்சை; உபாயம் – ஞான யோகம்

பாகம் - 3

-------------------------------------------------------------------------------------------------------------