ப்ராத: ஸ்மரண ஸ்தோத்ரம்

ப்ராத ஸ்மரண ஸ்தோத்ரம்

ப்ராத: - காலை வேளையில்

ஸ்மரணம் - சிந்திக்க; தியானிக்க வேண்டிய

ஸ்தோத்ரம் - இறைவனைப் பற்றிய பெருமையை கூறுவது என்பது பொதுவான பொருள்; ஆனால் இங்கு அது மெய்பொருள் அல்லது ஈஷ்வர தத்துவத்தை குறிக்கிறது.

ஸ்தோத்ரம் = பாமாலை. 

ஸ்துதி: = ஸ்தூயதே அநேந இதி ஸ்தோத்ரம் = எதனால் புகழ்ச்சி செய்யப்படுகிறதோ அல்லது வணங்கப்படுகிறதோ அது ஸ்தோத்ரம். சொற்களால் வணங்குவது; செய்யுள்களால் பாமாலை தொடுப்பது. 

வேதத்தில் இறைவனை புகழ்தல் சூக்தம் என்றழைக்கப்படும். எ.கா., புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம். மற்ற இடங்களில் இவ்விதம் செய்யப்பட்டால் அது ஸ்தோத்ரம். 

ஒவ்வொருவரும் காலையில் இந்த ஸ்தோத்ரத்தை அர்த்தத்துடன் சிந்தித்து அவர்களது வாழ்க்கையை துவங்க வேண்டும் என இதனுடைய ஆசிரியர் சங்கரர் கூறுகிறார். உடல் மற்றும் மனதோடு அபிமானமில்லாததால் ஏற்படும் சுகமான இரவு உறக்கத்திற்கு பின், கர்மவசத்தினால் காலையில் எழுகிறோம். எழுந்தவுடன் உடல்-மனதோடு மீண்டும் அபிமானம் ஏற்படுவதால் இந்த உலகம் தோன்றுகிறது. பின்னர் காலை முதல் மாலை வரை இவ்வுலகத்தில் வியவஹாரம் செய்து அவற்றினால் தாக்கப்பட்டவர்களாக மீண்டும் இரவு உறங்கச் செல்கிறோம். எழுந்தவுடன் மீண்டும் இவ்வுலகோடு வியவஹாரம் எனும் போருக்குச் செல்ல ஆயத்தமாகிறோம்

போருக்கு செல்லும்போது ஒருவன் தனது பாதுகாப்பிற்கு அணிந்து கொள்ளும் கவசம்போல, உலகத்தோடு வியவஹாரம் வைப்பதற்குமுன் நம்மை பாதுகாக்க கவசத்தைப் போல இந்த அறிவை வைத்துக் கொள்ள வேண்டுமென இந்த ஸ்தோத்ரம் சங்கரரால் எழுதப்பட்டுள்ளது. இந்த மூன்று சுலோகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஞானம் ஒருவனைக் காக்கும் கவசத்தைப் போன்றது. இதனுடன் நமது வியவகாரத்தை துவங்கலாம்.

இந்த சுலோகங்களில் சங்கரர் ஒரு பெரிய ரகசியத்தை வைத்துள்ளார். ‘ராஜ வித்யா ராஜ குஹ்யம்என பகவத் கீதையில் இந்த ஞானம் புகழப்படுகிறது. குஹ்யம் எனில் ரகசியம். இந்த ஞானம் ரகசியம் என சொல்லப்பட காரணம், அவரவர்கள் அவரவர்களின் மனதில் கண்டுடெடுக்க வேண்டிய ஒரு தத்துவம் இந்த ப்ரம்ம ஞானம். உதாரணமாக, பல வருடகால ஆராய்ச்சியின் பலனாக ஒரு விக்ஞானி ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்கிறார். உதாரணமாக புவியீர்ப்பு விசை, உலகம் உருண்டையானது போன்ற அறிவை எடுத்துக் கொள்ளலாம். அந்த ஆராய்ச்சியாளன் தனது கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவிக்கும் போது, கேட்பவர்கள் அதை புரிந்து கொள்வதற்கு அத்தனை வருடகால ஆராய்ச்சி தேவையில்லை. எவ்வளவோ காலம் ரகசியமாக இருந்ததை ஒருமுறை வெளிப்படுத்திவிட்டால் அது இனி ரகசியமாக இருக்கப்போவதில்லை. ஆனால் ஒரு ஆத்மஞானி தான் அடைந்த ஞானத்தை இனியொருவரிடம் கூறும்போது அதைப் புரிய அந்த ஞானி மேற்கொண்ட அதே வழிமுறைகளை, பயணத்தை மற்றொருவனும் மேற்கொண்டால் மட்டுமே அது அவனுக்கு புரியும். அதுவரையில் அந்த ரகசியம் வெளிப்பட்டபோதிலும் ரகசியமாகவே இருக்கும். எத்தனையோ ப்ரம்மஞானிகள் நமது பரம்பரையில் வந்தும் இன்றும் இந்த ஞானம் ரகசியமாகவே உள்ளது. ஏனெனில் இது அவரவர்கள் அவரவர்களின் மனதில் கண்டுகொள்ள வேண்டிய தத்துவம். அவ்விதமாக சங்கரர் முதல் சுலோகத்தை ஆரம்பிக்கின்றார்

ஒவ்வொரு காலையையும் இந்த அறிவோடு ஆரம்பித்து, இரவு உறங்கும்வரை அதனுடனே இருந்து உறங்கச் செல்கிறோம். உறக்கத்தில் இந்த அறிவு நமக்குத் தேவையில்லை. அங்கு உலகம் இல்லையாதலால் அதற்கான கரணங்கள் எதுவும் அங்கு தேவையில்லை


=> முகவுரை:

ஆத்ம தத்துவத்தை நான் காலையில் நினைக்கின்றேன்என முதல் சுலோகம் துவங்குகிறது. முதலில் தத்துவம் என்ற சொல்லை விசாரம் செய்யலாம். தத்துவம் எனில் சாரம் அல்லது ஆதாரம் என்பது பொருள். எடுத்துக்காட்டாக, விதவிதமான வர்ணத்தில், வெவ்வேறு அளவுகளில் உள்ள பானைகளின் தத்துவம் களிமண் எனக் கூறலாம். அலைகளின் தத்துவம் நீர்; ஆபரணங்களின் தத்துவம் தங்கம். ஆகவே ஒன்றின் சாரம், அதிஷ்டானம்தத்வம்எனப்படும்

தத் - அது ; த்வம் - தன்மை => அதனுடைய தன்மை. மனுஷ்யத்வம் - மனிதனுடைய தன்மை. ம்ருகத்வம் - விலங்கினுடைய தன்மை. ஆகவேதத்என்பது பொதுவான ஒன்றாக இருக்கும்பட்சத்தில் ஒன்றினுடைய உண்மை, ஒன்றினுடைய சாரம்தத்வம்ஆகும்

இப்பொழுது எதனுடைய தத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்? ‘ஸர்வம்’, நம்மால் அறியப்படும் அனைத்தினுடைய தத்துவம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ‘அனைத்தும்என்பது மூன்றாக பிரிக்கப்படுகிறது:

1. அஹம் - நான்

2. ஜகத் - உலகம்

3. ஈஷ்வர: - உலகத்தை உருவாக்கியவர்.

நம்மால் அறியப்படும் அனைத்தும் இந்த மூன்றினுள் அடங்கிவிடும். ஆகவே இவைகளைப் பற்றிய ஞானத்தை அடைந்து வாழும் வாழ்க்கையே சிறந்ததாக இருக்கும். இவை மூன்றின் மேலோட்டமான அறிவு மட்டும் போதாது; நிச்சயமான, உறுதியான ஞானம் தேவை. ஏனெனில் உறுதியில்லாத ஞானம் பயனற்றது


=> இத்தத்துவங்கள் எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது?

மேற்கூரிய மூன்றின் தத்துவங்களையும் ஆராய்ச்சி செய்து அது குறித்து ஒரு முடிவை நிர்ணயம் செய்தாக வேண்டும். இந்த தத்துவ நிர்ணயம் இரு காரணிகளின் அடிப்படையில் செய்யப்படும்

முதலாவதாக, எதை ஒருவன் அறிவைக் கொடுக்கும் கருவி என ஏற்கிறானோ அதன் அடிப்படையில் இவைகளின் தத்துவம் நிர்ணயிக்கப்படுகிறது. சாஸ்திரத்தில் அறிவைக் கொடுக்கும் கருவி ப்ரமாணம் என அழைக்கப்படும். சிலர் தங்களது புலன்களான கண், காது, நாக்கு முதலியவைகள் எந்த அறிவை கொடுக்கின்றனவோ அதையையே இறுதி உண்மையாகக் கொள்கின்றனர். கண்கள் ஈஷ்வரனையோ அல்லது ஆத்மாவையோ காட்டுவதில்லை ஆதலால் இத்தத்துவங்கள் இல்லை என்கிறார்கள். புலன்களால் அறியப்படும் இவ்வுலகம் உண்மையென்றும், ‘நான்என்பவன் இந்த உடலாக இருக்கிறேன் எனவும் நம்புகிறார்கள். சார்வாக மதத்தை சேர்ந்த இவர்கள், புலன்களை ப்ரமாணமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட முடிவிற்கு வருகிறார்கள். இவ்விதம் எதை ப்ரமாணமாக ஏற்றுக்கொள்கிறோமோ அதைப் பொறுத்ததாக அவரவர்களின் தத்துவங்கள் அமைகின்றன.

  சிலர் இன்னும் ஆழமாக சிந்தித்து, படைப்பு என்ற ஒன்று இருப்பின் படைத்தவன் ஒருவன் இருக்கவேண்டும் என ஈஷ்வர தத்துவத்தை முன்னிறுத்துகின்றனர். மேலும் சிலர் பார்க்கின்ற அனைத்தும் தொடர்ந்து அழிந்துகொண்டே இருப்பதால் அனைத்தும் அசாரம்(ஆதாரமில்லாதது), சூன்யம் என்பதை தங்களின் தத்துவமாக கொள்கிறார்கள். இறுதியாக வேதாந்திகளான நாம் எதை அடிப்படையாகக் கொண்டு விசாரம் செய்து நம்மைப் பற்றியும், இவ்வுலகம் மற்றும் ஈஷ்வரனைப் பற்றியும் தத்துவத்தை நிர்ணயம் செய்யப் போகிறோம்? நாம் ப்ரமாணமாக எடுத்துக் கொள்வது உபநிஷத்; வேதாந்தம் - வேதத்தின் இறுதிப் பகுதி.

கண் காட்டுகின்ற அனைத்தும் உண்மையாகாது; உதாரணமாக சூரிய உதயத்தையும், நீல ஆகாசத்தையும் சொல்லலாம். சூர்யோதயம் - சூரியன் உண்மையில் உதிப்பதில்லை; உதிப்பதை போல நம் காட்சிக்கு தெரிகிறது. நீல ஆகாசம் - ஆகாசத்தில் தெரியும் நீல வண்ணம் உண்மையில் ஆகாசத்தினுடையது அல்ல. இதுபோல மனமும் புத்தியும் நம்மை ஏமாற்றுவதை நாம் பல்வேறு சூழ்நிலைகளில் அனுபவித்திருக்கிறோம். ஆகவே நம்மை ஏமாற்றாத ஒரு ப்ரமாணத்திடம் செல்ல, உபநிஷத்தை நாம் அடைகிறோம்.

உபநிஷத்தை ப்ரமாணமாக ஏற்பவர்கள்ஆஸ்திகர்கள்என்றழைக்கப்படுகின்றனர். இவர்கள் உலகத்தை பற்றியும், தன்னை மற்றும் ஈஷ்வரனைப் பற்றியும் சில தத்துவங்களை நிர்ணயம் செய்கிறார்கள். உண்மையில் பொதுவான ஒன்றை ப்ரமாணமாகக் கொண்டிருக்கும்போது வேறுபாடுகள் வரக் கூடாது. அதாவது கண்ணை ப்ரமாணமாகக் கொள்பவனுக்கும் சாஸ்திரத்தை ப்ரமாணமாகக் கொள்பவனுக்கும் தத்துவத்தில் வருகின்ற வேறுபாடுகள்   என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் உபநிஷத்தை ப்ரமாணமாகக் கொண்டவர்களே தங்களுக்குள் எண்ணற்ற கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருப்பதை அனுபவத்தில் காண்கிறோம். சிலர் உபநிஷத் உலகம் உண்மை என்று கூறுவதாகவும் வேறு சிலர் அது உலகை பொய் என கூறுவதாகவும் சொல்கிறார்கள். எனவே ப்ரமாணம் முதல் காரணியாக இருந்தபோதிலும் அது மட்டுமே ஒரு தத்துவத்தை நிர்ணயம் செய்வதில்லை, அதைப் படிப்பவனும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறான். இதுவே இரண்டாவது காரணியாக அமைகிறது. எப்படிப்பட்டவர்கள் உபநிஷத்தை படிக்கிறார்கள் என்றவளவில் நாமும் இதற்கு ஒரு முக்கிய அங்கமாகின்றோம். முழுமையான மனதூய்மையுடன் உபநிஷத்தை படிக்கும்போது ஒரு கருத்து; மனதூய்மையில்லாமல் படிக்கும்போது கண்டிப்பாக வேறொரு கருத்துக்கு வருவோம்

ஆகவே எந்தவொரு விஷயத்திலும் நமக்கு என்ன அறிவு ஏற்படுகிறது என்பது நம்மைப் பொறுத்தும், மேலும் நாம் எதைப் ப்ரமாணமாக பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தும் அமைகிறது

இனி, மனத்தூய்மையுடன் வேதாந்த சாஸ்திரத்தை படிக்கும் ஒருவன் அடையும் அறிவான ஆத்ம தத்துவம், உலகத்தை பற்றிய அறிவு மற்றும் ஈஷ்வர தத்துவம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.


=> ஆத்ம தத்துவம்:

ஆத்மா எனில்நான்என்பது பொருள். ‘ஆத்ம தத்துவத்தை நான் காலையில் நினைக்கின்றேன்என்று சங்கரர் முதல் சுலோகத்தை ஆரம்பிப்பதாகப் பார்த்தோம். ‘நான்என்பதில் நிர்ணயம் செய்ய என்ன இருக்கிறது? அதை சிந்திப்பதால் வரும் பலன்தான் என்ன? என்ற சந்தேகம் வரலாம்

நமது அன்றாட வாழ்வில், இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் நாம் விதவிதமான துயரத்தால் தாக்கப்படுகின்றோம். அவ்வேளைகளில் நமக்கு அப்பாற்பட்ட ஒரு சூழ்நிலை, ஒரு சொல் அல்லது ஒரு பொருள் தான் அத்துயரத்திற்கு காரணம் என முடிவிற்கு வருகிறோம். மற்றவர்கள் நம்மை நேசிக்காதது, மதிக்காதது அல்லது மற்றவர்கள் நம்மை ஏற்றுக் கொள்ளாதது போன்றவைகளை நம் வேதனைக்கு காரணமாக பார்க்கின்றோம். இதனால் துயரத்திலிருந்து வெளிவர மற்றவர்களின் மனதை மாற்ற முயற்சி செய்வோம். ஆனால் வேதாந்தத்திற்கு வந்தவுடன் இந்த அணுகுமுறை தலைகீழாக மாறுகிறது. ஏனெனில்உன்னை நீ நேசிக்காததே, ஏற்றுக் கொள்ளாததே உன் துயரத்திற்கு காரணம்என சாஸ்திரம் கூறுகிறது. அதாவது என்னை நான் ஏற்றுக் கொண்டுவிட்டால் இந்த உலகமே என்னை ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும் அது என்னை பாதிப்பதில்லை. மற்றவர்களின் அங்கீகாரம் எனக்குத் தேவையில்லை என மற்றவர்களின் எண்ணங்களிலிருந்து ஒருவன் பெறும் விடுதலையே உண்மையில் மோக்ஷம். ஆகவே தன்னை நேசித்தல், தன்னையே மதித்தல் போன்ற பண்புகளையே ஒருவன் அடையவேண்டும். அதற்கு தன்னைப் பற்றிய ஞானம், ஆத்ம ஞானம் மிக அவசியமாகிறது.  

அடுத்ததாக என்னைப் பற்றி எனக்கு ஏற்கனவே தெரியுமே! புதிதாகத் தெரிய என்ன இருக்கின்றது என சந்தேகம் வரலாம். உண்மையில் நாம் நமது சுயத்தை தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம். அதை நீக்குவதற்காகவே ஒருவன் ஆத்ம விசாரத்தில் ஈடுபடவேண்டும்.

உண்மையில் சங்கரர் இந்த மூன்று சுலோகங்களை விசாரத்திற்காக அமைக்கவில்லை. அவர் அதற்கு வேறு சுலோகங்களை அமைத்துள்ளார். ஒருவன் உபநிஷத் மற்றும் அதனுடைய சாரத்தை விளக்கும் கிரந்தங்களின் மூலம்நான்’, ஈஷ்வரன் மற்றும் உலகம் குறித்த தத்துவத்தை முதலில் நிர்ணயம் செய்யவேண்டும். இந்த செயல்முறைக்கு பின்னரும் நெடுங்காலம் தவறான புரிதலில் இருந்து வாழ்ந்த காரணத்தினால் நமது மனமானது பழைய தவறான புரிதலுக்குதான் இயல்பாகச் செல்லும். ஆகவே அந்த பழக்கதோஷத்திலிருந்து மீள தியானம் எனும் சாதனம் பயன்படுகிறது. சாஸ்திரத்தில் தியானம் இரு நிலைகளில் செய்யப்படுகிறது. ஒன்று ஞானத்திற்கு முன் செய்யும் தியானம்; இனியொன்று ஞானத்திற்கு பின் செய்யும் தியானம். ஞானத்திற்கு முன் செய்யும் தியானத்தில் உடல் மற்றும் புலன்களை அமைதிப்படுத்துதல், மனதைக் குவித்தல், மனதை விரிவுபடுத்துதல், மனதிலுள்ள சில குறைகளை, தீய குணங்களை நீக்குதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்வகை தியானங்கள் ஞானத்தை அடைய பெரிதும் உதவிபுரிகின்றன. ஏனெனில் ஞானத்தை அடைவிக்கும் அடிப்படை தகுதி மனத்தூய்மை மற்றும் மனமுதிர்ச்சி. இவ்விதம் ஞானத்தை அடைந்த பின்னரும் பழக்கத்தின் காரணமாக அறிவில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது; இது விபரீத பாவனை என அழைக்கப்படும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீட்டுச்சாவியை வைத்துப் பழகியுள்ளோம். ஒரு நாள் புதிய சாவி மாட்டும் ஹோல்டரில் அதை நாமே மாற்றுகிறோம். இப்போது சாவி பழைய இடத்தில் இல்லை என்ற அறிவு நமக்கு இருந்தும் ஒரு ஆறேழு முறையாவது சாவிக்காக பழைய இடத்திற்கு செல்வோம். பிறகுஅட, சாவியை அங்கு நாம் தானே மாட்டினோம்என புதிய இடத்திற்கு மீண்டும் செல்வோம். இது பழக்கத்தின் காரணமாக நிகழ்வது. இதிலிருந்து, அறிவு இருந்தபோதிலும் அறிவு கண்டிப்பாக நமக்கு பயன்படவேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால்எப்பொழுது ஓர் அறிவானது ஒருவனுக்கு முழுமையாக பயன்படுகிறதோ அப்பொழுதுதான் அது அறிவுஎன்கிறது சாஸ்திரம். பயன்படாத அறிவு செமிக்காத உணவைப்போல. ஆகவே சாஸ்திரத்திலிருந்து அடையப்பட்ட அறிவை தன்மயமாக்க செய்யப்படும் தியானம் ஞானத்திற்கு பிறகு செய்யப்படுவது; அது நிதித்யாசனம் என்றழைக்கப்படுகிறது

சங்கரரின் இந்த மூன்று சுலோகங்கள் உண்மையில் நிதித்யாசன சுலோகங்கள். பொதுவாக இதில் நாம் விசாரம் செய்யக்கூடாது. ஏற்கனவே நாம் அடைந்த ஞானத்தை, ஒவ்வொரு காலையும் இந்த சுலோகங்களின் மூலம் நினைவுக்கு கொண்டுவர வேண்டும். விஷ்ணு சஹஸ்ர நாமம், லலிதா சஹஸ்ர நாமம் போன்ற சுலோகங்கள் சப்த பிரதானம்[சப்த ஆவ்ருத்தி]. அதை உச்சரிப்பதன் மூலம் ஒரு புண்ணியம் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ப்ராதஸ்மரண சுலோகம் அர்த்த பிரதானம். இதில் ஒவ்வொரு சொல்லிலிருந்தும் கிடைக்கும் அர்த்தத்தை மனதில் நினைத்து வாழ்க்கையைத் துவங்குகிறோம். எனில் அதோடு அதை மறந்துவிடுவது என்பது பொருளல்ல. காலை முதல் உறங்கச் செல்லும்வரை இத்தத்துவத்தை நினைத்து வாழ்க்கையையே ஒரு தியானமாக ஆக்குவதற்காக, விபரீத பாவனையிலிருந்து விடுபட்டு அறிவை தன்மயமாக்குவதற்காக இந்த சுலோகங்களைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். நாம் இனி இதற்கான விசாரத்தை துவங்கப்போகிறோம். ஏனெனில் நிதித்யாசனம் என்பது அவரவர்கள் தனக்குள் செய்வது. எனவே இந்த விசாரத்திற்குப் பின் இத்தத்துவத்துடன் வாழ்க்கையைத் துவங்கி, இத்தத்துவத்துடன் வாழ்ந்து, இத்தத்துவத்துடன் இவ்வுலகை விட்டுச் செல்லவேண்டும்


=> ஆத்ம விசாரம்:

நான் யார்? என்னுடைய உண்மையான தன்மை என்ன?’ என்பதற்கான பதில் ஆத்ம விசாரத்தின் மூலம் அடையப்படுகிறது. ‘நான்என என்னை புரிந்து கொள்ளும்போது என்ன அறிவு மனதில் வரவேண்டும் என்பதை இதில் விசாரம் செய்கிறோம்

இதில் இரு நியமங்களைப் பயன்படுத்துகிறோம்:

நியமம் 1:

பார்ப்பவன்(அனுபவிப்பவன்), பார்க்கப்படும்(அனுபவிக்கப்படும்) பொருளிலிருந்து வேறானவன்.

இது சாஸ்திரத்தில் த்ருக்-த்ருஷ்ய விவேகம் என்றழைக்கப்படும். த்ருக் = பார்ப்பவன்; த்ருஷ்யம் = பார்க்கப்படுவது அல்லது அனுபவிக்கப்படுவது. இனி,

படி 1: நான் இவ்வுலகத்தை பார்க்கிறேன், அனுபவிக்கிறேன். ஆகவேநான்என்பது இவ்வுலகத்திலிருந்து வேறுபட்டது. இவ்வுலகம் த்ருஷ்யம்; அனுபவிக்கப்படுவது.

படி 2: ஸ்தூல சரீரமான இந்த உடல் என்பது என்னால் அனுபவிக்கப்படுவதா? அல்லது இந்த உடலே அனுபவிக்கின்றதா? எனில், ‘இந்த உடலை நான் அனுபவிக்கின்றேன்என்பதே இதற்கான பதில். உதாரணமாக என்னுடைய தலை, என்னுடைய கைகால்கள் என்றுதான் இந்த உடலை நாம் அணுகுகிறோம். என்னால் பார்த்து அனுபவிக்கப்படும் கைகடிகாரத்தை, ‘எனது கடிகாரம்என்கிறேன்; அதுபோலதானே கைகளைஎனது கைஎன்றும் கூறுகிறேன். ‘எனது கடிகாரம்’ , ‘எனது கைஎன்பதில் கடிகாரம் மற்றும் கை என்ற இந்த இரண்டிற்குமான நிலைபாடு சமமானதாகத் தானே இருக்கவேண்டும். என்னுடைய வாக்கிய வெளிப்பாடும் அதைத்தானே காட்டிக் கொடுக்கிறது. இதிலிருந்து, என்னுடைய கைகால்கள், என்னுடைய தலை, என்னுடைய உடல் இவைகள் அனுபவிக்கப்படுகின்றது. நான் அனுபவிப்பவன். எனவே இந்த உடல்நான்என்பதற்கான சரியான அர்த்தம் அல்ல. எப்போதெல்லாம்நான்என்று சொல்கிறேனோ அப்போது அதனுடைய அர்த்தத்தில் இந்த உடலை சேர்த்துக் கொள்ளக்கூடாது. காரணம் இந்த உடல் என்பது என்னால் அனுபவிக்கப்படுவது. இவ்வுலகை நாம் அனுபவிக்கிறோம். ‘நான்என்பதற்கு அர்த்தமாக இந்த இவ்வுலகிலிருந்து ஏதேனும் ஒரு பொருளை, அதாவது இந்த வாகனம் நான், இந்த கடிகாரம் நான், இந்த நாற்காலி நான் என கூறுகிறோமா? எனில் இல்லை. அவைகள் நம்மால் அனுபவிக்கப்படுகின்றன என்கிற தெளிவு நம்மிடம் உள்ளது. அவைகளை எனது என கூறலாமே தவிரநான்என கூறமாட்டோம். அதுபோலத்தான் இந்த உடலும். இந்த உடல் என்னால் அனுபவிக்கப்படுவதே தவிர, இந்த உடல்நான்அல்ல

 படி 3: நம்முடைய மனம். மனம் என்பது என்னால் அனுபவிக்கப்படுவதா? இல்லை நானா? எனும்போது நம்முடைய மனமும் அனுபவத்திற்குரிய விஷயம்தான். அதனால்தான் நாம் சில சமயம், ‘என் மனம் இன்று சரியில்லை; பதட்டமாக உள்ளது’, ‘இன்று எனது மனம் மிக சந்தோஷமாக உள்ளதுஎன்றெல்லாம் கூறுகிறோம். பொதுவாக நாம் மனதை கொண்டு உலகை பார்க்கின்றோமே தவிர, நம் மனதை நாம் பார்ப்பதில்லை. ஆகவே நம் மனமே நமக்கு ரகசியமாக உள்ளது. இதன் காரணமாகவே தியானத்தின் முதல் படியில் நம் மனதையே ஒரு பொருளாக பார்க்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போதுதான் அதை நாம் புரிந்துகொள்ள முடியும். அவ்விதம் நம் மனதை நாம் பார்த்து பழகும்போது, “நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த மனம் வேறு; அனுபவிக்கின்றநான்வேறுஎன்பது புரியும்

இந்த உலகம், உடல் மற்றும் மனம் என்ற மூன்று தத்துவத்தை எடுத்துகொண்டு இவைகள் மூன்றும் அனுபவிக்கப்படுவது என்பதைப் பார்த்தோம். இந்த மூன்றையும் ஒருவன் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றானே அந்த அனுபவிப்பவன், ஆத்மா, ‘நான்’, என்று புரிந்து கொள்ளவேண்டும். ஆத்மாவாகிய நான் அறிகின்ற சொரூபம், ‘த்ருக்’. உலகம், உடல் மற்றும் மனம் அறியப்படும் சொரூபம், ‘த்ருஷ்யம்’. இதில் அனுபவிக்கப்படுபவைகள், ஆத்மா என்று சொல்லப்படும்நான்என்பதற்கு வேறாக இருப்பதால் அது சமஸ்கிருத மொழியில்அனாத்மா_ நான் அல்லாதததுஎன்றழைக்கப்படும். நான் ஆத்மா; ஆத்மா அல்லாதது, அனாத்மா. அதாவது இந்த உலகம், உடல் மற்றும் மனம் ஆகியவை அனாத்மா.

அறிகின்ற சொரூபத்திற்கு, சித் அல்லது சைத்தன்யம் என்று பெயர். இதிலிருந்துநான் யார்? எனது தன்மை என்ன?’ என்ற கேள்விக்கான பதில், நான் அறிபவன் அல்லது சைத்தன்ய சொரூபம் அல்லது சித் சொரூபம். ‘த்ருக்-த்ருஷ்ய விவேகம்என்று அழைக்கப்படுகின்ற நாம் பார்த்த இந்த முதல் நியமத்திலிருந்து, பின்வரும் முடிவுகளுக்கு வருகிறோம்: நம்மால் அறியப்படுகின்ற இந்த உலகம், உடல் மற்றும் மனம் இவைகளனைத்தும் ஜடமான தத்துவம். ஆனால் ஆத்ம தத்துவம் சித் சொரூபம்; அறிவு சொரூபம்


நியமம் 2:

அறியப்படுகின்ற குணங்கள் அறிபவனைச் சாராது.’

அறியப்படுகின்ற பொருட்களுக்கு விதவிதமான குணங்கள் இருக்கின்றன. உதாரணமாக பூமிக்கு வாசனை, நீருக்கு சுவை, நெருப்புக்கு உஷ்ணம் மற்றும் உருவம் போன்ற குணங்கள் உள்ளன. பொதுவாக இவைகளை சப்த, ஸ்பர்ஷ, ரூப, ரச மற்றும் கந்தம் என்று சொல்வதுண்டு. இவ்விதமான இந்த விதவிதமான குணங்கள் ஒருவனால் அறியப்படும்போது அது அறிபவனைச் சாராது; எதிலிருந்து அறியப்படுகின்றதோ அந்தப் பொருளையே சாரும். முதல் நியமத்தின் ஒரு சிறு தொடர்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது

உதாரணமாக இந்த உடல் என்னால் அறியப்படுகிறது. முதல் நியமத்தின்படி இந்த உடல் நான் அல்ல. ஆகவே உடல் வேறு, நான் எனும் ஆத்மா வேறு. அடுத்ததாக இந்த உடலுக்கென சில குணங்கள் இருக்கின்றனபிறத்தல், வளர்தல், மாற்றமடைதல், தேய்தல் மற்றும் மரணித்தல். இரண்டாவது நியமத்தின்படி இந்த குணங்கள் என்னைச் சாராது. அதாவது உடலே நானல்ல எனும்போது இந்த உடலின் குணங்களும் நானல்ல. இனி நாம் இந்த இரண்டாவது நியமத்தை மேலும் விசாரிக்கலாம்

இப்பொழுது உதாரணமாக ரூபம் அதாவது வடிவம் என்ற ஒரு தன்மையை மட்டும் எடுத்துக் கொள்வோம். உடலின் உருவம் அறியப்படும் பொருளின் தன்மை; அறிபவனாகிய நான் அறியப்படுவதன் குணத்திலிருந்து வேறுபட்டவன் எனில் நான் உருவமற்றவன், ‘ஆத்மா அரூபம், உருவமற்றது’. மேலும் அறியப்படுகின்ற எந்தவொரு குணமும் ஆத்மாவை சாராது எனில் ஆத்மா நிர்குணமானது(நிர்குண:) எனலாம். அதாவது சப்த, ஸ்பர்ஷ, ரூப, ரச மற்றும் கந்தம் எனும் எந்தவொரு குணமும் ஆத்மாவிடம் இல்லை. இதிலிருந்து இரண்டாவது நியமப்படி ஆத்மா அரூபம்; நிர்குணம்

  அடுத்ததாக, எது உருவத்துடன் கூடியிருக்கின்றதோ அது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரையறுக்கப்பட்டதாக இருக்கும். உருவமில்லாதது வரையறைக்குட்படாததாக இருக்கும். உதாரணமாக இந்த உடல் உருவத்துடன் கூடியிருப்பதால் அது அந்த குறிப்பிட்ட காலத்தில், அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் இருக்கும்; மேலும் இது அளக்கக் கூடியதாக(எடை) இருக்கும். எனவே அந்தம், வரையறைக்குட்பட்டது. ஆனால் உருவமற்றதாக ஒன்று இருக்கும்போது அது அளவிடமுடியாததாக இருக்கும். இரண்டாவது நியமப்படி ஆத்மா உருவமற்றது எனும்போது அது அளவிட முடியாததாக, அனந்தமாக இருப்பதாக ஆகிறது. ஆகவேநான் அனந்த சொரூபம்’. இதற்கு சாஸ்திரம்பூர்ணம்என்ற சொல்லையும் பயன்படுத்துகிறது; நிறைந்தது, அளவற்றது. அனந்தமாகவும், பூர்ணமாகவும் இருப்பதற்கு சாஸ்திரம்ஆனந்தம்என்ற சொல்லையும் கொடுக்கிறது, சுகம். பொதுவாக, ஒருவனின் மனம் நிறைந்து இருக்கும்போது அவன் ஆனந்தமாக சுகமாக உணர்வான். இங்கு ஆத்மா என்பது வரையறைக்குட்படாமல், நிறைந்துள்ள அனந்தமான தத்துவம். சுகம் —> ஆனந்தம்—> பூர்ணம் —> அனந்தம்.

* முதல் நியமப்படி, ஆத்மா அறிபவன்சித் சொரூபம்.

* இரண்டாம் நியமப்படி, ஆத்மா சுக சொரூபம்.

 

அடுத்ததாக, உருவத்துடன் கூடிய, வரையறைக்குட்பட்ட, அளக்கப்படக்கூடிய அனைத்தும் அழிவிற்குட்பட்டதுஅநித்யம். உருவமற்றதாக வரையறைக்குட்படாத ஒன்று, அழியாததாகவும் உள்ளதுநித்யம். அழியாதது எனில் எல்லா காலத்திலும் மாறாமல் அப்படியே இருப்பது என்பது பொருள், அதாவது மூன்று காலத்திலும் மாறாமல் அவ்விதமே இருத்தல். இந்தஇருத்தல்என்ற தத்துவத்தை சாஸ்திரம்ஸத்என்றழைக்கிறது. ஸத் = இருத்தல்

கடிகாரம் இருக்கிறது, புத்தகம் இருக்கிறது, பேனா இருக்கிறதுஇவைகளிலும் இருத்தல் இருந்தபோதிலும் இப்பொருட்கள் எல்லா காலத்திலும் மாறாமல் அப்படியே இருப்பதில்லை; அதாவது இருத்தல் என்பது அவைகளின் சொரூபமாக இல்லை. தோன்றிக் கொண்டிருக்கிறது அவ்வளவே. ஆனால் ஆத்மா ஸத் சொரூபம்; எப்பொழுதும் மாறாமல் தொடர்ந்து இருப்பது. இதிலிருந்து ஆத்மா ஸத்-சித்-அனந்த சொரூபம். எது மூன்று காலத்திலும் மாறாமல் இருக்கும் ஸத் சொரூபமாக இருக்கின்றதோ, எது அறியும் தன்மையுடன் சித் சொரூபமாக இருக்கின்றதோ, எது வரையறைக்குட்படாததாக அனந்த சொரூமாக இருக்கின்றதோ அதுவே ஆத்ம தத்துவம்(நான்). இவ்விதமாக நாம் ஆத்ம தத்துவத்தை நிர்ணயம் செய்கிறோம், ஸத்-சித்-சுகம். ஆத்ம தத்துவம் எனில் அதுநான்என்பதன் உண்மையான பொருள் என்பதை மறந்து விடக்கூடாது.

இந்த ஸத்-சித்-சுக ஆத்மாவுடன், நமது உடல் மற்றும் மனதையும் கலந்து, அதைநான்என்பதாக கூறிக் கொண்டுள்ளோம். ஸத்-சித்-சுக ஆத்மாதான் உண்மையில் விளங்கிக் கொண்டிருக்கின்றது என்றபோதிலும் அதில் நாம் இந்த உடலையும் மனதையும் கலந்துநான்என புரிந்து கொண்டுள்ளோம். ஆத்ம விசாரத்தின்மூலம் இந்த உடலையும் மனதையும், அறிவினால் மனதினால்நான்என்பதிலிருந்து பிரிக்கிறோம். எப்பொழுதெல்லாம்நான்நான்…’ என சொல்கிறோமோ, அப்பொழுதெல்லாம்நான்என்பது என்றுமிருக்கின்ற அறிவு சொரூபமானவன், ஆனந்த சொரூபமானவன் என்பதை புரிந்து கொண்டவனாக இந்த உடலையும் மனதையும் ஒரு கருவியைப்போலக் கையாள வேண்டும்.

சாஸ்திரம் இந்த உடலையும் மனதையும் துறக்கச் சொல்லவில்லை; அழிக்கச் சொல்லவில்லை; மேற்கூரிய அறிவுடன் உடலையும் மனதையும் கையாளச் சொல்கிறது. இந்த ஞானத்துடன் இருக்கும்போது இவைகள் நமக்கு கருவிகள்; ஞானம் இல்லாதபோது இவைகள் கர்த்தாவாக, நானாக ஆகின்றது. கருவியாக இருக்கும்வரை சுகம், கர்த்தாவாக ஆகும்போது அதுவே சம்சாரம் ஆகிறது. உதாரணமாக ஒரு வாகனம் நம் கட்டுக்குள் இருக்கும் வரை அது நமக்கு அலங்காரம்; மாறாக அதன் கட்டுக்குள் நாம் சென்றால் அது அலங்கோலம். அதுபோல உடல் மற்றும் மனம் நமது கருவிகள்; அவைகளை வெறுக்கத் தேவையில்லை. ஆசிரியர் கொடுக்கும் இந்த ஞானத்துடன் கருவிகளாக கையாள வேண்டும். ஆகவே காலை எழுந்தவுடன் இந்த அறிவை நாம் ஞாபகப்படுத்தி அந்த நாள் முழுதும் இந்த அறிவுடனே இருக்க பழகுதல் வேண்டும்

——————————————————————————————————

சுலோகம்:1

प्रातः स्मरामि हृदि संस्फुरदात्मतत्त्वं

सच्चित्सुखं परमहंसगतिं तुरीयम् ।

यत्स्वप्नजागरसुषुप्तिमवैति नित्यं

तद्ब्रह्म निष्कलमहं न च भूतसङ्घः || 1 ||


ப்ராத: ஸ்மராமி ஹ்ருதி ஸம்ஸ்புரதாத்மதத்வம்

ஸச்சித்சுகம் பரமஹம்ஸகதிம் துரீயம் |

யத்ஸ்வப்நஜாகரஸுஷுப்திமவைதி நித்யம்

தத்ப்ரம்ம நிஷ்கலமஹம் ந ச பூதஸங்க: || 1 ||


ப்ராத: ஸ்மராமி ஹ்ருதி ஸம்ஸ்புரதாத்மதத்வம்

ப்ராத: (प्रातः)— காலையில், 

ஸ்மராமி (स्मरामि)— நினைக்கின்றேன்; தியானிக்கின்றேன்; என் அறிவிற்கு மீண்டும் மீண்டும் கொண்டு வருகின்றேன், 

ஹ்ருதி (हृदि)  —  இருதயத்திற்குள்; மனதிற்குள்,

ஸம்ஸ்புரத் (संस्फुरत्) — [இது ஆத்ம தத்துவத்திற்கான கொடுக்கப்படும் அடைமொழி] (i) தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்ற; (ii) சுயமாக ஒளிர்கின்ற/ தானே விளங்கிக் கொண்டிருக்கின்ற, 

* தன்னையும் விளக்கிக் மற்றவைகளையும் விளக்கிக் கொண்டிருக்கின்றது-சூரியனைப் போல.

ஆத்மதத்வம் (आत्मतत्त्वं)— ஆத்ம தத்துவத்தை; என்னைப் பற்றிய உண்மையை,…

‘நான் மனதிற்குள் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்ற ஆத்ம தத்துவத்தை மீண்டும் மீண்டும் நினைக்கின்றேன்’.

எல்லா இடத்திலும் ஆத்மா விளங்கிக் கொண்டிருந்தபோதிலும் அதன் ஸத் சொரூபத்தையும், சித் மற்றும் ஆனந்த சொரூபத்தையும் அவரவர்களின் மனதிற்குள்தான் உணரமுடியும். 

ஸச்சித்சுகம் பரமஹம்ஸகதிம் துரீயம் 

ஸச்சித்சுகம் (सत्-चित्-सुखं) —  ஸத் சொரூபமாக, சித் சொரூபமாக சுக சொரூபமாக உள்ள ஆத்ம தத்துவத்தை(நான் நினைக்கின்றேன்); இனி வரும் அனைத்து சொற்களும் இந்த ஆத்ம தத்துவத்தை விளக்கும் சொற்களாகவே உள்ளன.

பரமஹம்ஸகதிம் (परमहंसगतिं) — பரமஹம்ச: எனில் சந்யாசி. 

* நான்கு விதமான சந்யாசிகள் சாஸ்திரத்தில் பேசப்படுகிறது. 

   (i) குடீசகன் - ஒரு சிறு குடிசையமர்த்தி அதில் மட்டுமே இருக்கும் சந்யாசி. 

   (ii) பஹூதகன் — விதவிதமான தண்ணீரைக் குடிப்பவன், அதாவது ஓரிடம் தங்காமல் ஊரூராக சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் சந்யாசியைக் குறிக்கிறது. 

   (iii) ஹம்ச: — நீரை விடுத்து பாலை மட்டும் அருந்தும் ஹம்ச பறவைப் போல உலகிலுள்ள தீமைகளை விட்டுவிட்டு நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டு ஓரிடத்தில் இருந்து ஞானநிஷ்டைக்கான முயற்சியில் ஈடுபடும் சந்யாசி. 

   (iv) பரமஹம்ச: — ஆத்ம தத்துவத்தில் நிலைபெற்றவன், முக்தியை அடைந்த சந்யாசி; குடிசையில் இருக்கலாம் அல்லது ஊரூராக சுற்றலாம், இவனுக்கு எந்தவொரு நியமமும் கிடையாது. 

ஆகவே பரமஹம்ச சந்யாசிகளினால் அடையப்படுகின்ற லக்ஷியமாக இருக்கின்ற ஆத்ம தத்துவத்தை / பரமஹம்ச சந்யாசிகள் எதை அடைந்தார்களோ அந்த தத்துவத்தை நான் நினைக்கின்றேன்.

சந்யாசம் மூலம் கர்மத்தை துறந்து, கர்மத்திற்காக செலவிடப்படும் காலத்தை தன்னிடம் கொண்டவர்களாக சந்யாசிகள் இருக்கின்றனர். தன்னிடமுள்ள காலத்தை அவரவர்களின் குறிக்கோள்களுக்கேற்ப செலவிடுகின்றனர். சில சந்யாசிகள் அக்காலத்தை உபாசனைக்காகவும், சிலர் அதை தியானத்திற்காகவும், சிலர் அதை பொது நன்மைக்காகவும் செலவிடுவர். இவ்விதம் சந்யாசிகள் விதவிதமான செயல்களில் ஈடுபடலாம். மேலும் சந்யாசிகள் அனைவரும் முக்தர்கள் எனக் கூறிவிட முடியாது. ஆனால் பரமஹம்ச சந்யாசி, மோக்ஷத்திற்காகவே தனது சந்யாச வாழ்க்கையை செலவிட்டு லக்ஷியத்தை அடைந்தவர்


=> அவஸ்தா த்ரய விவேகம்

துரீயம்மற்றும் அடுத்த வரியிலுள்ளயத் ஸ்வப்ன ஜாகரசுஷுப்திமவைதிஎன்பதற்கான விளக்கத்தை பார்க்கும் முன் அதற்கான ஒரு சிறிய முகவுரை:

ஆத்மாவை அனாத்மாவிலிருந்து அறிவால் பிரித்து புரிந்துகொள்ள சாஸ்திரத்திலுள்ள இனியொரு நியதி, ‘அவஸ்தா த்ரய விவேகம்ஆகும்.

அவஸ்தா/ அவஸ்தை - அனுபவம்

த்ரயம் - மூன்று,

விவேகம் - பிரித்துப் புரிந்து கொள்ளுதல்.

அவஸ்தா த்ரய விவேகம் - மூன்று விதமான அனுபவத்தை எடுத்துக் கொண்டு பிரித்துப் புரிந்து கொள்ளுதல்

மூன்று விதமான அவஸ்தைகள்:

  (1) ஜாக்ரத் அவஸ்தா - விழிப்பு நிலை

  (2) ஸ்வப்ன அவஸ்தா - கனவு நிலை

  (3) சுசுப்தி அவஸ்தா - ஆழ்ந்த உறக்கம்

ஒவ்வொரு ஜீவனும் இந்த மூன்று அனுபவத்திற்குள்ளும் நாள்தோறும் சென்று வருகின்றான். இதைக் குறித்த விசாரத்தில் ஈடுபட சாஸ்திரம் நமது உடலை மூன்று விதமாகப் பிரிக்கிறது

  (1) ஸ்தூல சரீரம் - பார்த்து அனுபவிக்கும் இந்த உடல்

  (2) சூக்ஷம சரீரம் - கண்ணுக்கு தெரியாத நுண்ணிய உடல், அதாவது மனம்

  (3) காரண சரீரம் - காரணமில்லாமல் காரியம் எதுவும் தோன்றமுடியாது என்பது உலகிலுள்ள பொது நியதி. ஒரு செடிக்கு விதை போல, இந்த ஸ்தூலமான உடலும் சூக்ஷமமான உடலும் முறையாக வந்துள்ளது எனில் அதற்கு காரணமான ஓர் உடல் இருந்தாக வேண்டும். அதை சாஸ்திரம் காரண சரீரம் என்று சொல்கிறது. காரண சரீரம் —> சூக்ஷம சரீரம் —> ஸ்தூல சரீரம்

ஆத்மாவாகியநான்ஸ்தூல சரீரம் வரைக்கும் அபிமானம் வைக்கும்போது, இந்த உடலுடன்நான்என்ற புத்தி வரும்போது எனக்கு கிடைப்பது ஜாக்ரத் அவஸ்தை. ஸ்தூல சரீரத்திலுள்ள அபிமானத்தை விட்டுவிட்டு, சூக்ஷம சரீரத்தில் மட்டும்நான்என்ற அபிமானம் வைக்கப்படும்போது கனவு உலகம் வருகிறது. கனவில் இந்த உடல் குறித்த அபிமானம் இல்லை, ஆனால் மனம் மட்டும் இயங்குகிறது. அபிமானம் எனில் அதைநான்என எண்ணிக்கொள்ளுதல். மனதின் மீதுள்ள அபிமானத்தையும் விட்டுவிட்டு காரண சரீரத்தில் மட்டும் அபிமானம் இருக்கும்போது கிடைக்கும் அனுபவம், ஆழ்ந்த உறக்கம்.

மூன்று சரீரத்தின் மீதும் மாறிமாறி அபிமானம் வைக்கும் ஒருவன் கண்டிப்பாக ஜடமாக இருக்க முடியாது; அவன் அறிவு சொரூபமாக, உணர்வு சொரூபமாகத்தான் இருக்க வேண்டும். எது அறிவு சொரூபமானதோ அது ஆத்ம தத்துவத்தை சார்ந்தது என பார்த்துள்ளோம். எங்கெல்லாம் அறிவு இருக்கின்றதோ அங்கெல்லாம் ஆத்மா அல்லதுநான்இருக்கின்றேன். அறிவு சொரூபமானநான்எவ்வளவு தூரம்நான்என்கிற புத்தியை வைக்க எனக்கு வாய்ப்புள்ளது? அதாவது நான் அமர்ந்துள்ள இந்த நாற்காலி என வரும்போது அதைநான்எனக் கூறமுடியாது; என்னுடையது என்றுதான் கூறமுடியும். ‘என்னுடைய பேனா; என்னுடைய வாகனம்…’ என்றுதான் கூறமுடியும். ஆனால் இந்த உடல் என்று வரும்போது, சில சமயங்களில் என்னுடையது எனக் கூறுகிறேன்; சில சமயங்களில்நான்என்றே கூறுகிறேன். உடல் நடந்து வருவதைநான் நடந்து வருகின்றேன்என்று கூறுகிறேன். ஆகவே ஒவ்வொரு ஜீவனும்நான்என்ற உணர்வை, இந்த ஸ்தூல உடல் வரை மட்டுமே இழுக்க முடியும். கனவு உலகத்தில்நான்என்பது மனதோடும், சுசுப்தியில்நான்என்பது காரண சரீரத்தோடும் நின்றுவிடுகிறது. இந்த மூன்று உடலுக்கு மேல்நான்என்ற புத்தி செல்லாது. ஸ்தூல உடல் வரைநான்என்ற புத்தியை இழுத்து வைத்துள்ள, ஜாக்ரத் அவஸ்தையிலுள்ள ஜீவனை சாஸ்திரம்விஷ்வன்என்றழைக்கிறது. உடல் வரை அபிமானம் வைத்த ஆத்மாவாகிய எனக்குவிஷ்வன்என்ற புதிய நிலை வருகின்றது.

மூன்று உடல் வரை அபிமானம் வைக்க வாய்ப்பிருந்தும், உடல் மீதுள்ள அபிமானத்தை விட்டு அதேசமயம் ஆழ்ந்து உறங்காமல் மனம் வரை மட்டும் அபிமானம் வைத்து ஓர் உலகத்தை அனுபவிக்கிறேன். சில சமயம் விழித்து கொண்டிருக்கும்போதும்கூட நம் உடலை மறந்து ஏதாவது ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிக்கும்போது நம் முழு அபிமானம் நம் மனதில் மட்டும் இருக்கின்றது. இவ்வுலகத்தை நாம் மறந்து விடுகின்றோம். அப்படிப்பட்ட எனக்கு சாஸ்திரம் கொடுக்கும் பெயர்தைஜஸன்’. ஆகவே சூக்ஷம சரீரம் வரை அபிமானம் வைத்து கனவுலகை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆத்மாதைஜஸன்ஆகின்றான்

ஆழ்ந்த உறக்கத்தில் காரண சரீரத்தில் மட்டும் அபிமானம் வைக்கும்போது, சூக்ஷம சரீரமான மனம் ஒடுங்கியுள்ளது; ஸ்தூல உடலிலும் அபிமானமில்லை. இந்நிலையிலிருப்பவனை சாஸ்திரம்ப்ராக்ஞன்என்றழைக்கிறது. ‘ப்ராக்ஞன்என்பவன் காரண சரீரத்தில் மட்டும் அபிமானம் வைத்து காரண பிரபஞ்சமான அறியாமையை அனுபவித்துக்கொண்டிருப்பவன்.

இப்போது நமக்கு மூன்று அவஸ்தை, மூன்று சரீரம் மற்றும் மூன்று பெயர் கிடைத்திருக்கின்றது

  * ஜாக்ரத் -> ஸ்தூல சரீரம் -> ஸ்தூல பிரபஞ்சம்(இவ்வுலகம்) -> விஷ்வன்

  * ஸ்வப்னம் ->சூக்ஷம சரீரம் ->சூக்ஷம பிரபஞ்சம்(கனவுலகம்) -> தைஜஸன்

  * சுசுப்தி -> காரண சரீரம் -> காரண பிரபஞ்சம்(அறியாமை) -> ப்ராக்ஞன்

  இப்போது இந்த மூன்று அவஸ்தையை அனுபவிப்பவனுக்குள் ஏதாவது ஒரு தொடர்ச்சி இருக்கின்றதா என விசாரம் செய்து பார்க்க வேண்டும். ஒருகால் விழிப்பு நிலையை ஒரு ஆத்மாவும், கனவு நிலையை ஒரு ஆத்மாவும், ஆழ்ந்து உறக்கியவன் வேறானவனாகவும் என இம்மூன்று நிலையையும் அனுபவிப்பவன் வேறுவேறானவனாக இருந்திருந்தால் என்ன நேரிடும்? இப்பொழுது, ‘நான் உறங்கினேன், நான் கனவுகண்டேன், நான் இதை அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்என்று மூன்று அனுபவத்தையும் சேர்த்து கூற முடியாது. மூன்று அனுபவத்தையும் ஒருவனால் கூறமுடிகிறது என்பதிலிருந்து, இந்த விஷ்வன் தைஜஸன் ப்ராக்ஞன் என்ற மூன்று அனுபவசாலிக்குள்ளும் ஏதோவொன்று வியாபித்துள்ளது என்பது புலப்படுகிறது. இந்த மூன்றிற்குள் மாறாமல் இருப்பது ஓர் அறிவு சொரூபம். அதாவது ஒருவனிடம் மூன்று அறிபவன் இருக்கின்றான்உலகத்தை அறிபவன், கனவுலகை அறிபவன் மற்றும் ஆழ்ந்த உறக்கத்தில் அறியாமையை அறிபவன்(நான் அறியாமையை அனுபவித்தவனாக இருந்தேன் என்பது விழித்தபின் தெரிகிறது). இந்த மூன்றிற்குள் சமமாக ஒருவன் ஊடுருவி இருக்கின்றான். அவனுக்கு சாஸ்திரம்துரீயம்என பெயர் கொடுக்கின்றது. இந்த மூன்றிற்கும் அப்பாற்பட்டவனாகவும், அதேசமயம் இந்த மூன்றிற்குள்ளும் தொடர்ந்து இருப்பவனாகவும், இவைகளுக்கு சாக்ஷியாகவும் துரீயன் இருக்கின்றான்

இங்கு சங்கரர், நீ எப்பொழுதெல்லாம்நான், நான்…’ எனக் கூறுகிறாயோ அப்பொழுதெல்லாம் உன்னை நீ விஷ்வனாக, சில சமயம் தைஜஸனாக, சில சமயங்களில் ப்ராக்ஞனாக நினைக்கின்றாய். ஆனால் உண்மையில் நீ விஷ்வ தைஜஸ ப்ராக்ஞன் அல்ல; நீ துரீய தத்துவம். இங்கு துரீயம் எனில், நான்காவது ஆத்மா அல்ல; மூன்றுவித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட அதேசமயம் மூன்றிலும் வியாபித்திருக்கின்ற ஒரு தத்துவம். உதாரணமாக வளையல், காதணி மற்றும் மோதிரம் என்ற மூன்று வார்த்தையை எடுத்துக் கொள்வோம். நான்காவதாக தங்கம் என்றொரு வார்த்தையை கூறி, இந்த தங்கம் என்பது வளையலுக்குள்ளும் காதணிக்குள்ளும் மோதிரத்திற்குள்ளும் வியாபித்துள்ளது என சொல்லும்போது, இந்த தங்கம் இம்மூன்றிக்கும் வேறானதாகவும் இல்லை; அதேசமயம் இந்த மூன்றிற்கும் அப்பாற்பட்டும் இருக்கின்றது. எனவே இந்த உதாரணத்தை பொருத்தவரையில், தங்கத்தை நான்காவது தத்துவமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மூன்றிற்குள்ளும் ஊடுருவி இருக்கும் ஒன்று. அதுபோலத்தான் துரீய தத்துவமும். எனில் இந்த வளையல், காதணி மற்றும் மோதிரம் போன்றவைகள் உண்மையில் என்ன? எனும்போது இவைகளனைத்தும் அதே தங்கத்திற்கு கொடுக்கப்பட்ட விதவிதமான உருவங்களும் பெயர்களும். உண்மையில் ஆத்மா என்பது துரீய தத்துவம் ஆகும். நான் விஷ்வ தைஜஸ ப்ராக்ஞனுக்குள் ஊடுருவி இருக்கும் அறிவு(சித்) சொரூபமானவன்


=> இந்த மேற்சொன்ன அறிவினால் என்ன பலன்?

நான்இந்த உலகத்தை அனுபவிப்பவன் அல்ல; என் அனுபவத்திற்கு வரும் இந்த மூன்று உலகுக்கும் அப்பாற்பட்டவன்நான்என்ற அறிவு இந்த அனுபவங்களையும், இந்த உலகத்தையும் பொய்யாக்கிவிடுகிறது. தோன்றிக்கொண்டிருப்பது பொய்யான காட்சி என புரியும்போது அந்த பொய்த்தோற்றம் நம்மை பாதிக்காது. இவைகளனைத்தும் உண்மை என்ற எண்ணமே நமது துக்கத்திற்கு காரணமாக இருந்தது. பொய் என்ற அறிவுடன் பார்க்கப்படும் திரைப்படக் காட்சி எவ்விதம் பொழுதுபோக்காக மாறுகின்றதோ அதுபோலவே இந்த உண்மையை அறிந்த ஞானிக்கு இவைகளனைத்தும் பொழுதுபோக்காக மாறுகின்றது. வந்து செல்லும் காட்சிகள் அவனை துன்புறுத்துவதில்லை. பார்ப்பவைகளெல்லாம் வெறும் நிழல்கள்; வெறும் விளையாட்டு; பொய்க்காட்சி. இந்த நிழல்களை சாக்ஷி ரூபமாக பார்க்கின்ற அறிவு சொரூபம்நான்என்ற அறிவு அவனை இந்த உலகம் கொடுக்கும் துக்கத்திலிருந்து சம்சாரத்திலிருந்து விடுவிக்கிறது. துரீயம் என்ற சொல்லின் பொருள், மூன்று நிலைகளிலும் சம்பந்தப்படாமல் சாக்ஷியாக இருக்கின்ற அறிவு சொரூபம் ஆகும்

இனி, சுலோகத்திற்கு செல்லலாம்.

ஸச்சித்சுகம் பரமஹம்ஸகதிம் துரீயம் 

துரீயம் - ஆத்ம தத்துவம் துரீயம்.

யத்ஸ்வப்நஜாகரஸுஷுப்திமவைதி நித்யம்

யத்(यत्) - எந்த ஆத்ம தத்துவம், 

ஸ்வப்ன ஜாகர சுசுப்தி (स्प्नजागरसुषुप्ति)- கனவு, விழிப்பு, ஆழ்ந்த உறக்கம் 

அவைதி (अवैति)- பார்த்துக் கொண்டிருக்கின்றதோ; அறிகின்றதோ, 

நித்யம் (नित्यं)- என்றும், எல்லா நேரத்திலும்

எந்த ஆத்ம தத்துமான துரீயம் என்றும் சாக்ஷி ரூபமாக கனவு, விழிப்பு, ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று அவஸ்தையையும் அறிகின்றதோ…  

[ எனில் நான் விஷ்வனும் அல்ல; தைஜஸனும் அல்ல; ப்ராக்ஞனும் அல்ல; இவை மூன்றோடும் சம்பந்தப்படாதமல் எப்பொழுதும் சாக்ஷியாக பார்த்துக் கொண்டிருக்கும் துரீயன் நான்]

தத்ப்ரம்ம நிஷ்கலமஹம் ந ச பூதஸங்க:

இதுவரை, ஆத்ம தத்துவமான ‘நான்’ இந்த மூன்று உடல், மூன்று அவஸ்தைக்கு ஆதாரமானவன் எனப் பார்த்தோம். இனி, ஸ்தூல உடல் எனும்போது ஸ்தூல பிரபஞ்சம் என்ற ஒன்று இருக்கவேண்டும். அதேபோல, சூக்ஷம உடல் எனும்போது சூக்ஷம பிரபஞ்சமும், காரண உடல் எனும்போது காரண பிரபஞ்சமும் இருக்கவேண்டும். மேலும் மூன்று உடலுக்கும் ஆதாரமான ஒரு தத்துவம் இருக்கும்போது மூன்று பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக ஒரு தத்துவம் இருந்தாக வேண்டும். ஸ்தூல, சூக்ஷம மற்றும் காரண உடலுக்கு ஆத்மாகிய ‘நான்’ ஆதாரம் எனில், இந்த மூன்று பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருக்கும் தத்துவத்தை சாஸ்திரம் ‘ப்ரம்ம’ என்றழைக்கிறது. இங்கு சங்கரர், அந்த ப்ரம்மனும் இந்த ஆத்ம தத்துவமும் ஒன்றுதான் என்று கூறுகிறார். அகில பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதாக இருப்பதும், இந்த மூன்று உடலுக்கும் ஆதாரமானதும் ஒரே தத்துவம் என்கிறார். 

தத் ப்ரம்ம(तद्ब्रह्म) - அந்த ஆத்ம தத்துவமே ப்ரம்மனாக இருக்கின்றது, 

நிஷ்கலம்(निष्कलम्) — பிளவுபடாதது; அங்கங்களற்றது, 

அஹம்(अहं) - நான்.

அப்படிப்பட்ட பிளவுபடாத ப்ரம்மனாக நான் இருக்கின்றேன்.

ந ச பூத சங்க:(न च भूतसङ्घः) - பஞ்ச பூதங்களின் சேர்க்கை(மூன்று உடலும்) ‘நான்’ அல்ல. 

அறிவு சொரூபமான ‘நான்’, ஸ்தூல மற்றும் சூக்ஷம பூதத்தையும் நான் என கலந்து புரிந்துகொண்டேன். அதை நான் இப்பொழுது நீக்குகின்றேன். 

எப்பொழுதெல்லாம் ‘நான்’ என்று நினைக்கிறேனோ அப்பொழுதெல்லாம் ‘நான் இந்த உடலல்ல, மனமல்ல. ஸத்-சித்-ஆனந்த சொரூபமான ஆத்ம தத்துவம்’ எனும் அறிவு தோன்ற வேண்டும். இப்படிப்பட்ட ஆத்ம தத்துவத்தை காலையில் நான் நினைக்கின்றேன் — ப்ராத: ஸ்மராமி. காலை எழுந்தவுடன் இந்த ஸ்தூல, சூக்ஷம உடலோடு அபிமானம் ஏற்பட ஆரம்பிக்கிறது. அப்பொழுது இந்த அறிவை மனதில் கொண்டு வந்து, ‘நான் ஆத்ம தத்துவம், இந்த உடல்கள் ஒரு வாகனம்போல. சிறிது காலம் இதில் பயணித்து இவ்வுலகை பார்க்கின்றேன் அவ்வளவே’ என்ற எண்ணத்தோடு இரவு உறங்கும் வரை காலம் கழிய வேண்டும். 

————————————————————————————

சுலோகம்: 2

प्रातर्भजामि मनसा वचसामगम्यं

वाचो विभान्ति निखिला यदनुग्रहेण ।

यन्नेतिनेतिवचनैर्निगमा अवोचं_

स्तं देवदेवमजमच्युतमाहुरग्र्यम् ॥२॥


ப்ராதர்பஜாமி மனஸா வசஸாமகம்யம்

வாசோ விபாந்தி நிகிலா யதநுக்ரஹேண |

யந்நேதிநேதிவசனைர்நிகமா அவோசம்_

ஸ்தம் தேவதேவமஜமச்யுதமாஹுரக்ர்யம் || 2 ||


ப்ராதர்பஜாமி மனஸா வசஸாமகம்யம்

ப்ராதர்பஜாமிகாலையில் நான் (இப்படிப்பட்ட ஆத்ம தத்துவத்தை) வழிபடுகின்றேன்; சிந்திக்கின்றேன்/தியானிக்கின்றேன்,

வசஸாம் அகம்யம்சொல்லிற்கு அப்பாற்பட்டது,

மனஸாமனதால்

சொல்லிற்கு அப்பாற்பட்ட இந்த ஆத்ம தத்துவத்தை மனதினால் தியானிக்கின்றேன்.

ஆத்ம தத்துவம் வாக்கினால் விளக்க முடியாதது. ‘யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனஸா சஹஎன்பது உபநிஷத் வாக்கியம். ‘மனதுடன் சேர்ந்து சொல்லானது ஆத்ம தத்துவத்தை விளக்குவதற்காக சென்று பின் விளக்க முடியாமல் திரும்பி வந்துவிட்டதுஎன்பது இதன் பொருள். வாக்கினாலும் மனதினாலும் விளக்க முடியாத இப்படிப்பட்ட தத்துவத்தை நான் தியானிக்கின்றேன்.   

வாசோ விபாந்தி நிகிலா யதநுக்ரஹேண

நிகிலா:அனைத்து

வாச:சொற்கள்,

விபாந்திஒளிர்கின்றது/விளங்குகின்றது,

யத் அநுக்ரஹேணயாருடைய அணுகிரஹத்தினால்/இருப்பினால்

எந்த ஆத்ம தத்துவத்தினால் எல்லாவிதமான சொற்களும் விளங்குகின்றதோ

இந்த இரண்டு வரிகளும் கேனோபநிஷத் என்ற உபநிஷத்தின் சாரம்


=> கேனோபநிஷத்தின் சாரம்:

ஆத்ம தத்துவம் வாக் இந்திரியத்திற்கு அதாவது சொல்லிற்கு எட்டாதது என்பது அனைத்து இந்திரியத்திற்கும் எட்டாதது என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆத்மாவை கண்ணினால் கிரஹிக்க முடியாது; மூக்கினால் நுகர முடியாது; காதினால் கேட்க முடியாது. ஆத்மாவை ஸ்பசத்தினால் தொட்டுணர முடியாது. இவ்விதம் ஐந்து ஞானேந்திரியங்களாலும் கிரஹிக்க முடியாது. அதேபோல ஐந்து கர்மேந்திரியங்களாலும் இதை அடைய முடியாது; கையினால் தூக்கவோ அல்லது கால்களினால் சென்றடையவோ முடியாது. எனவே நமது இந்திரியங்களினாலும் மனதினாலும் இந்த ஆத்மாவை ஒரு பொருளாக கிரஹிக்க முடியாது. இவ்வுலகில் எதையும் நாம் புலன்கள் அல்லது மனதினால் ஒரு பொருளாகப் பார்த்துப் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் ஆத்மாவை நாம் அவ்விதம் பார்த்துப் புரிந்து கொள்ளமுடியாது.

எனவே ஆத்மாவை இந்த ஸ்தூல மற்றும் சூக்ஷம சரீரத்தினால் கிரஹிக்க முடியாது. ஆனால் அந்த ஆத்மாவினால்தான் இந்த புலன்களும் மனமும் அனைத்தையும் கிரஹிக்க முடிகிறது.  

இவ்வுலகு ஜடத்தன்மையுடன் இருப்பதைப் பார்க்கிறோம். எந்த பஞ்ச பூதத்தினால் இவ்வுலகம் உருவாகியுள்ளதோ அதே பஞ்ச பூதத்தின் சேர்க்கையால் உருவான இந்த ஸ்தூல உடலும் ஜடம்தான். ஆனால் உடலில் ஒரு உணர்வைப் பார்க்கிறோம். அதே நிலைதான் மனதிற்கும் இருக்கிறது. மனம் சூக்ஷம பஞ்ச பூதத்தினால் ஆனது; எனவே அதுவும் ஜடமானதாகத்தான் இருக்கமுடியும். ஆனால் மனதில் ஒரு உணர்வை அனுபவிக்கின்றோம். எனில் ஜடமான இவைகளுக்கு எங்கிருந்து இந்த உணர்வு, அறிவு வந்தது? ஆத்ம தத்துவத்திடமிருந்து வந்தது. ஆத்மாவிடமிருக்கின்ற அறிவு சொரூபமானது மனதில் பிரதிபிம்பிப்பதனால் ஜடமான மனது சேதனத்துவத்தை, உணர்வை அடைகிறது. மனமானது ஸ்தூல உடலினுள் இருக்கின்ற காரணத்தினால் இந்த உடலும் சேதனத்துவத்தை அடைகின்றது

இங்கு, அனுபவிக்கப்படுவது இரண்டாகப் பிரிக்கப்பட்டு விட்டது. உடலும் சரி, உலகமும் சரி அனுபவிக்கப்படுவதுதான். ஆனால் இதில் அனுபவிக்கப்படும் உடலை அனுபவிப்பவனாகவும், உலகை அனுபவிக்கப்படும் பொருளாகவும் பிரித்துவிட்டோம். அறியாமையினால் இவ்விதம் பிரித்து துவைதத்தை உருவாக்கிவிட்டோம். துவைதம் துயரம்; சம்சாரம். இனி அத்வைத ஞானத்தின் மூலமாக உலகையும் உடலையும் அனுபவிக்கப்படும் பொருள் என புரிந்து, துயரத்திலிருந்து விடுதலை அடையவேண்டும்.     

அறிவு சொரூபமான ஆத்மாவினால் ஜடமான மனதிற்கும் உடலிற்கும் அறிவு, உணர்வு வந்துள்ளது. எனவே கேனோபநிஷத், ‘கண்ணுக்கு கண்ணாக, வாக்கிற்கு வாக்காக, மனதிற்கு மனதாக இருப்பது ஆத்ம தத்துவம்எனக் கூறுகிறது. அதாவது கண் கண்ணாக செயல்பட காரணமாக இருப்பது யார்? மனமானது மனமாக விளங்க காரணமாக இருப்பது யார்? எனில் அது ஆத்ம தத்துவம். ஆத்மாவின் இருத்தலே மனதிற்கு அணுகிரஹமாக மாறுகிறது. மனதின் இருப்பிற்கு காரணமாகிறது. இப்படிப்பட்ட, மனதிற்கே மனதாக இருக்கின்ற ஆத்ம தத்துவத்தை மனதினால் கிரஹிக்க முடியாது. மனதினால் அறியப்படும் அனைத்தும் அனாத்ம தத்துவம் மட்டுமே. ஆத்மாவைச் சார்ந்தே இவைகள் விளங்கிக் கொண்டுள்ளன. இனியொன்றை சார்ந்திருக்கும் எதுவும் உண்மையல்ல. எனவே எதையெல்லாம் பார்க்கின்றேனோ, எவைகளையெல்லாம் கேட்கின்றேனோ அவைகளெல்லாம் உண்மையல்ல. எதனால் இவைகள் நடைபெறுகிறதோ அதுவே உண்மை. அப்படிப்பட்ட ஆத்ம தத்துவத்தை நான் நினைக்கின்றேன் என்று கேனோபநிஷத்தின் சாரத்தை முதலிரண்டு வரிகளில் கூறினார். இனி, வாக்கினாலோ மனதினாலோ ஆத்ம தத்துவத்தை விளக்க முடியாதெனில், உபநிஷத் வாக்கியங்களின் பொருள்தான் என்ன? எதை அடிப்படையாகக் கொண்டு குரு அதை நமக்கு உபதேசிக்கிறார். ஆத்ம தத்துவத்தை எப்படி அறிந்து கொள்வது? போன்ற சந்தேகங்கள் வரலாம். அடுத்த வரியில் சங்கரர் இதற்கு பதிலளிக்கிறார்.


=> ஆத்ம தத்துவத்தை எப்படி அறிவது?

ஒரு கோணத்தில் உபநிஷத் ஆத்ம தத்துவத்தை விளக்குகிறது. அதை குருவிடமிருந்து கேட்டு அறிவதே சிரவணம் என்று கூறுகிறோம். ஆனால் எதுவும் ஆத்மாவை விளக்காது என்றும் கூறுகிறோம். எனில் இதை எப்படிப் புரிந்துகொள்வது

சாஸ்திரம் ஆத்ம தத்துவத்தை உண்மையிலேயே விளக்கவில்லை, ஆனால் விளக்குகின்றது. மற்ற பொருள்களைப் போல ஒரு பொருளாகக் காட்டி விளக்குவதில்லை. ஆத்ம தத்துவம் ஏற்கனவே விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதனுடன் அனாத்மாவும் சேர்ந்து விளங்குகின்றது. உபநிஷத் தனது வாக்கியங்களின் மூலம் அனாத்ம தத்துவத்தை நீக்கி காட்டுகின்றது. இதன்மூலம் ஆத்ம தத்துவத்தை நாம் புரிந்து கொள்கின்றோம். உதாரணமாக தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கும் ராமன், கிருஷ்ணன் இருவரில் நான் ராமனிடம் பேச வேண்டும்; ஆனால் யார் ராமன் என எனக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம். அறிந்தவரைக் கேட்கும்போது, வெண்ணிற ஆடை அணிந்தவன் கிருஷ்ணன் என பதில் கூறுகிறார். இப்போது எனக்கு ராமன் யார் என தெரிந்துவிட்டது. அவர் கிருஷ்ணனைப் பற்றித்தான் கூறினார் எனினும் அவர் நீக்கப்பட்டவுடன் மீதமிருப்பவர் ராமன் என அறிந்துகொள்ள முடிந்தது. உபநிஷத்தும் இந்த முறையையே கையாள்கிறது. என்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கும் ஆத்ம தத்துவத்துடன் சேர்ந்து உடலும் மனமும் விளங்கிக்கொண்டுள்ளது. உபநிஷத், இந்த உடல் நீ அல்ல; மனம் நீ அல்ல என ஆத்மா அல்லாததை நீக்குகின்றது. இந்த நீக்குதலை சமஸ்கிருதத்தில்நிஷேதம்என அழைக்கிறோம். நீக்கியதற்கு பின் ஆத்மா மட்டும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதுஇது ஆத்மாஎன காண்பிக்கத் தேவையில்லை. எனவே அனாத்மாவை நீக்குவதற்காக உபநிஷத்தை படிக்கின்றோம்

ஒரு உபநிஷத்தில் படைக்கப்பட்ட அனைத்தும் ஸ்தூல பிரபஞ்சம் மற்றும் சூக்ஷம பிரபஞ்சம் என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது. கண்ணிற்குத் தெரியாத காரணத்தினால் சூக்ஷமத்திற்குள்ளேயே காரணப் பிரபஞ்சத்தையும் அடக்கி, ஆத்மா அல்லாத, அனாத்மாவான அனைத்தையும் கண்ணிற்கு புலப்படும் அனாத்மா மற்றும் கண்ணிற்கு புலப்படாத அனாத்மா என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது. பின்னர் அது, இல்லை இல்லை என இரண்டையும் நீக்குகிறது

இல்லை = ந இதி (न इति) = நேதி (नेति)

நேதி(नेति) = இது அல்ல; இது ஆத்மா அல்ல

நேதி நேதி என இருமுறை கூறக் காரணம், ஸ்தூல மற்றும் சூக்ஷம அனாத்மா, ஆத்மா அல்ல என்பதை விளக்குவதற்காக.

யந்நேதிநேதிவசனைர்நிகமா அவோசந்

யந்நேதிநேதி வசனை: - எந்த தத்துவத்தை இதி, இதிஎன்ற சொற்களால்இது ஆத்மா அல்ல, இது ஆத்மா அல்ல என்ற சொற்களால்,

நிகமா:வேதங்கள்; குறிப்பாக வேதத்தின் கடைசி பகுதியான உபநிஷத்துக்கள்

அவோசந் - பேசுகின்றதோ… 

எந்த தத்துவத்தை உபநிஷதானது இதி, இதிஎன்ற சொற்களால் பேசுகின்றதோ

இவ்விதம் அது சொல்லாமல் சொல்கிறது, அதாவது நேரடியாகச் சொல்வதில்லை; சாதகன் புரியாமல் புரிந்து கொள்கிறான், அதாவது அதைப் ஒரு பொருளாகப் புரிந்து கொள்ளாமல் தானாக, ஆத்மாவாக புரிந்து கொள்கிறான். ஆகவேதான் வேதாந்தத்தை பொருத்தவரையில் ஆசிரியர் மிக அவசியம். இவ்விதமாக அனாத்ம தத்துவத்தை நீக்கிக் காட்டும் குருவின் உபதேசத்தை புரிந்துகொள்ளும் சாதகனுக்கு இந்த உலகம், ஆகாசம் எனும் திரையில் ஓடும் ஒரு காட்சியைப் போலாகிறது. இரண்டற்ற ஆத்மா மட்டுமே உண்மை என்ற அறிவோடு வாழ்தலே மோக்ஷம். இந்த மோக்ஷத்தை வேதமானது கொடுக்கின்றது(நிகமா: அவோசந்).

ஸ்தம் தேவதேவமஜமச்யுதமாஹுரக்ர்யம்

ஸ்தம் - அதை; அந்த ஆத்ம தத்துவத்தை (நான் மனதால் எண்ணுகின்றேன்). எப்படிப்பட்ட ஆத்ம தத்துவம்? அதற்கான அடைமொழிகள் வருகின்றன… 

தேவதேவம்தேவர்களுக்கு தேவனாக இருப்பது

இங்கு தேவர்கள் என்பது நமது புலன்களைக் குறிக்கிறது. இந்த தேவர்களுக்கு தேவனாக ஆத்மா உள்ளது. கண்ணிற்கு கண்ணாக இருப்பது என உபநிஷத் கூறுவதாக ஏற்கனவே பார்த்தோம். ஆகவே ஒவ்வொரு இந்திரியத்திற்கும் அது இந்திரியமாக விளங்க காரணமாக, அதிஷ்டானமாக இருப்பது ஆத்மா

அஜம்பிறப்பற்றது;

அச்யுதம்இறப்பற்றது;

சுதி எனில் நாசம். அச்யுதம் என்றால் நாசமற்றது

ஆஹு: அக்ர்யம்என்றுமுள்ளது என பேசுகிறார்கள்.

இதுவரை ஆத்ம தத்துவத்தை எவ்விதம் ஆசிரியர் விளக்கினாரோ அவ்விதமாக ஞானிகள் இதை பேசுகிறார்கள்.

நான்என்று கூறும்போது அதற்கான உண்மைப் பொருளான ஆத்ம தத்துவத்துடன் சேர்த்து இந்த உடலையும் மனதையும் கலந்து விடுகிறோம். இதன் விளைவாக உடலினுடைய தர்மங்களான தேய்வு அழிவு போன்றவைகளும், மனதினுடைய தர்மங்களான சலனம் துக்கம் போன்றவைகளும் என்னுடைய தர்மங்களாகின்றன. உடல் நானாகும்போது உடலிலிருந்து பார்ப்பதெல்லாம் எனது விருப்பு-வெறுப்பிற்கு பொருளாகிவிடுகின்றது. மேலும் உடலை நானாகக் கொண்டு இவ்வுலகை பார்க்கும்போது இந்த உலகம் பிளவுபடுகின்றது. காரணம் இந்த உடலுக்கு சுகத்தை கொடுப்பதன்மீது விருப்பமும், துக்கத்தை கொடுப்பதன்மீது வெறுப்பும் தோன்றுகிறது. எனவே இந்த உடலிலிலுள்ளநான்என்கிற புத்தியை எடுக்கும்போது இந்த பிளவு நீங்குகிறது; உலகம் சென்றுவிடுகிறது. ஆரம்பத்தில் மோக்ஷம் என்பதற்கான வழிமுறைகள் மிக கடினமானதாகத் தெரியும்; ஆனால் உள்ளே செல்ல செல்ல சுலபமானதாக இருக்கும். எனவே காலை எழுந்தவுடன், ‘நான் ஆத்ம சொரூபம்; இப்போது இந்த வாகனத்தில் அமர்ந்து இந்த உலகத்தில பயணம் செய்கின்றேன்என்கிற அறிவை நினைத்து, பின் அன்றைய உலக விவகாரங்கள் முடிந்து உறங்கும் வரை இந்த அறிவுடனே இருக்கப் பழகுதல் வேண்டும்

—————————————————————————————————

சுலோகம்: 3

प्रातर्नमामि तमसः परमर्कवर्णं

पूर्णं सनातनपदं पुरुषोत्तमाख्यम् ।

यस्मिन्निदं जगदशेषमशेषमूर्तौ

रज्ज्वां भुजङ्गम इव प्रतिभासितं वै ॥३॥


ப்ராதர்நமாமி தமஸ: பரமர்கவர்ணம்

பூர்ணம் ஸநாதனபதம் புருஷோத்தமாக்யம் |

யஸ்மிந்நிதம் ஜகதசேஷமசேஷமூர்தெள

ரஜ்ஜ்வாம் புஜங்கம இவ ப்ரதிபாஸிதம் வை || 3 ||


ப்ராத: நமாமிகாலையில் (ஆத்ம தத்துவத்தை) வணங்குகிறேன்; தியானிக்கிறேன்; சிந்திக்கிறேன்.


=> சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள படிகள்:

சிந்தனைக்கும் வாழ்க்கைக்குமுள்ள சம்பந்தம் தெரியாத காரணத்தினால் பலர் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒருவனின் சூக்ஷமமான சிந்தனைக்கும், அவனது வாழ்க்கைக்கும் இடையே பல படிகள் உள்ளன

(i) ஒருவனின் சிந்தனைகள் மாறும்பொழுது அவனது நம்பிக்கைகள் மாறும். [thinking -> belief]

(ii) நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும்பொழுது எதிர்பார்ப்புகளில் மாற்றம் ஏற்படும். [belief -> expectation]

(iii) ஒருவனது எதிர்பார்ப்புகளில் மாற்றம் ஏற்படும்பொழுது அவனது பாவனைகளில் மாற்றம் வரும். [expectation -> attitude]

(iv) பாவனைகள் மாறும்போது அவனது செயல்முறை, மற்றவர்களிடம் நடந்து கொள்ளும்முறை, பொருட்களை கையாளும் விதம் போன்றவைகள் மாறுகிறது.  [attitude -> behaviour]

(v) ஒருவன் எப்படி நடந்து கொள்கிறானோ அதுவே அவனது குணம்; அவனது வாழ்க்கை. [Behaviour is YOU]

இவ்விதம் சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் பல படிநிலைகளில் இடைவெளி இருப்பதனால் மக்கள் பொதுவாக அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இங்கு ஆசிரியர் காலையில் ஆத்ம தத்துவத்தை சிந்திக்கச் சொல்லி, சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். ஏனெனில் சிந்தனையில் மாற்றம் வர வர, அது படிப்படியாக வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவருகிறது.

இந்த சுலோகத்தில் இனிவரும் சொற்கள் ஆத்ம தத்துவத்திற்கான அடைமொழிகள். எப்படிப்பட்ட ஆத்ம தத்துவம்? என்பதற்கான பதில்.

தமஸ: பரம்இருளுக்கு வேறானது; இருளைக் கடந்திருப்பது.

இங்கு இருள் = அறியாமை. பொதுவாக சாஸ்திரத்தில் இருள் என்பது அறியாமையுடனும் ஒளி என்பது அறிவுடனும் ஒப்பிடப்படும். இந்த ஆத்ம தத்துவம் அறியாமையை கடந்திருப்பது; அறியாமைக்கு அப்பாற்பட்டது. உதாரணமாக நம்முடைய கண்கள் வெளிச்சத்தையும் காட்டிக் கொடுக்கிறது; அதேபோல் இருளையும், ‘இது இருள்எனக் காட்டுகிறது. ஆனால் சூரியனால் என்றும் வெளிச்சத்தை மட்டும்தான் பார்க்கமுடியும்; இருளைப் பார்க்கமுடியாது; இருளை விளக்காது. மாறாக நமது கண் இருளையும் பிரகாசப்படுத்தும்; அதாவது விளக்கிக் காட்டும். அதுபோலவே நம் மனதிற்குள் ஒளிரும் அறிவு சொரூபமான ஆத்ம தத்துவம், நம் மனதிலுள்ள அறிவை மற்றும் அறியாமை இரண்டையும் பிரகாசப்படுத்துகின்றது. எனக்கு எது தெரியும் என்பதையும் எது தெரியவில்லை என்பதையும் ஏதோவொன்று விளக்கிக் கொண்டுள்ளது. இவ்விதம் எந்தவொன்று எனது உள்ளத்தில் இருந்துகொண்டு எனக்கு தெரிந்ததையும், எனக்கு தெரியாததையும் விளக்கிக் கொண்டுள்ளதோ அந்த ஆத்ம தத்துவமாக நான் இருக்கின்றேன்


=> பாதுகாப்பின்மை:

ஒவ்வொரு மனிதனின் மனதிலும் இருக்கின்ற பாதுகாப்பின்மையை(insecurity) மூன்று நிலையில் பிரிக்கலாம்

(1) வெளிப்பொருட்களைக் குறித்தது [physical] - சில பொருட்கள் தன்னிடம் இல்லை என்பதால் உணரப்படும் பாதுகாப்பின்மை. உதாரணமாக பணம், வாகனம், வீடு போன்றவற்றின் இல்லாமையை குறித்து வருவது

(2)  உணர்வு ரீதியான பாதுகாப்பின்மை [emotional] - தன்னை நேசிப்பவர்கள் யாருமில்லை எனத் தோன்றுவது.

(3) அறிவைக் குறித்தது [intellectual] - தனக்கு இருக்கின்ற அறிவு போதாது. எவ்வளவோ தெரியாத விஷயங்கள் இருக்கின்றது போன்ற அறியாமையை குறித்த பயம்; இதனால் உணரப்படும் பாதுகாப்பின்மை. பொதுவாக இருளைக் குறித்த பயம் அனைவருக்கும் உண்டு. உண்மையில் இருள் நம்மை ஒன்றும் செய்வதில்லை. ஆனால் இருளில் அங்கு என்ன உள்ளது என்பது தெரியாததால், அறியாமையினால் அந்த பயம் வருகிறது

ஒருவன் எவ்வளவு படித்தாலும் அதற்குமேல் தெரிந்து கொள்ள விஷயங்கள் இருந்து கொண்டே இருப்பதால் அது அவனை திருப்திபடுத்துவதே இல்லை. சாந்தோக்ய உபநிஷத்தில் நாரதர் சனத் குமாரரிடம் சென்று, ‘எனக்கு நக்ஷத்திர வித்யை முதல் பூத வித்யை வரை அனைத்து அறிவும் இருக்கின்றது. ஆனாலும் துயரப்படுகின்றேன்என கூறுகிறார். அதற்கு சனத் குமாரர்,‘உனக்கு ஆத்ம வித்யா இல்லாத காரணத்தினால் எவ்வளவு அறிவு இருந்தாலும் அந்த அறிவு உன்னை நிறைக்காதுஎன்கிறார். ‘தரதி சோகம் ஆத்மவித்’—ஆத்மாவை அறிந்தவனே சோகத்தை கடக்கின்றான், என்கிறார்

என்னுடைய மனதில் இருக்கும் அறியாமையை நான் பிரகாசப்படுத்துகின்றேன்; எனவே அந்த அறியாமை எனக்கு பயக் காரணமல்ல. மனதிலுள்ள அறிவையும் நானே பிரகாசப்படுத்துபவன். எனது அறிவு அறியாமை இரண்டிலும் நான் திருப்தியடைகின்றேன். எனவே அறியாமை ஒருவனுக்கு பாதுகாப்பின்மையை கொடுக்கக் கூடாது. இந்த சுலோகத்தின் முதல் வரியை உணரும்போது அந்த பாதுகாப்பின்மை வருவதில்லை. ‘தமஸ: பரம்’ - ஆத்ம தத்துவம் இருளைக் கடந்தது; அறியாமையைக் கடந்தது; அறியாமைக்கும் அப்பாற்பட்டது. இதிலிருந்து ஒன்றைத் தெரிந்த போதிலும் மகிழ்ச்சி; தெரியாத போதிலும் மகிழ்ச்சியே. தெரிந்ததும் தெரியாததும் என்னை எவ்விதத்திலும் பாதிக்காது. நான் இவைகளை கடந்தவனாக இருக்கின்றேன்

அர்கவர்ணம்சூரியனைப் போன்ற ஞான சொரூபம்; அர்க: - சூரியன்.

ஆத்ம தத்துவமானநான்அறிவு சொரூபம்; சைத்தன்யம். நான் அறியப்படும் பொருளல்ல; அறிபவனும் அல்ல; அறிய உதவும் கருவியும் அல்ல. நானே அறிவாக இருக்கின்றேன். அறிவு சொரூபமான நான், மனதிற்குள் இருக்கின்ற அறிவையும், மனதிற்குள் இருக்கின்ற அறியாமையையும் விளக்குகின்றேன்

பூர்ணம் ஸநாதனபதம் புருஷோத்தமாக்யம்

பூர்ணம்முழுமையானது; குறைபடாததது; வரையறுக்கப் படாதது; நிறைவானது.

நான்எனும் ஆத்ம தத்துவம் வரையறுக்கப் படாதது. ஒரு பொருள் மூன்று விஷயங்களினால் வரையறுக்கப் பட்டதாக ஆகிறது

(1) தேசம் [இடத்தினால்

(2) காலம் [இருக்கும் காலம்]

(3) வஸ்து [குணத்தினால்]

நமது ஸ்தூல உடலை உவமையாக எடுத்துக் கொண்டால் அது இந்த மூன்று வரையறைக்கும் உட்பட்டது. (1) உடல் இந்த குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறது என்றால் வேறு இடத்தில் இல்லை என்பது பொருள். இதிலிருந்து அது இடத்தினால் வரையறுக்கப்பட்டதாகிறது. (2) எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, உடற்பயிற்சி செய்து வாழ்ந்தாலும் தேய்வு வயோதிகம் இறப்பு என்பது உடலுக்கு உண்டு. பிறகு எதற்காக உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி எனில், இருக்கும் வரை ஆரோக்கியமாக இருப்பதற்காகவே தவிர மரணிக்காமல் இருப்பதற்காக அல்ல. இதிலிருந்து அது காலத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளது. (3) இது மனித உடல் என்றவுடனேயே, இது பறவையின் உடல் அல்ல, மிருகத்தின் உடல் அல்ல என மற்ற அனைத்திலிருந்து பிரிந்து விடுகிறது. ஒரு பொருளுக்கு, ஒரு தன்மையைக் கூறினால் அதுவே அதை மற்ற பொருட்களிலிருந்து பிரித்து விடுகிறது. இதிலிருந்து உடல் குணத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளது

இவ்விதம் எந்தவொரு பொருளும் தேச, கால மற்றும் வஸ்துக்களினால் வரையறுக்கப்படும். எந்தவொன்று இந்த மூன்றினாலும் வரையறுக்கப் படவில்லையோ அதை சாஸ்திரம் பூர்ணம் என்று சொல்கின்றது. அதாவது எல்லா இடத்திலும், எல்லா காலத்திலும் இருப்பதோடு எந்த குணமும் அற்றதாக நிர்குணமாக எது இருக்கின்றதோ அது பூர்ணம். இப்படிப்பட்ட பூர்ணமான தத்துவமாக ஆத்ம தத்துவம் விளங்குகிறது. எல்லா இடத்திலும், எல்லா காலத்திலும் எல்லாமாகவும் இருப்பவன் நான்

ஸநாதனபதம் - நித்தியமான சாத்யம்

     ஸநாதனம் - என்றுமுள்ள; நித்தியமான. பதம் - லக்ஷியம்; சாத்யம்; அடையப்படுதல். ஆகவே ஆத்ம தத்துவம் என்பது நித்தியமான சாத்யம். அதன் பொருள், ஆத்ம தத்துவத்தை நாம் அடைந்துவிட்டால் அதை நாம் இழக்க மாட்டோம். வாழ்க்கையில் எதை அடைந்தாலும் அது நம்மிடமிருந்து சென்றுவிடும். ஆனால் ஆத்ம தத்துவத்தை அடைந்த ஒருவன் அதை இழக்க மாட்டான். ஸநாதனபதம் எனில் இழக்கப்படாதது; என்றும் நம்மிடத்திலேயே இருப்பது.

என்றும் இருக்கின்ற ஒன்றை ஏன் ஒருவன் அடைய வேண்டும்? எனில், ஒரு பொருளை அடைதலை இரு வகையில் கூறலாம்:

(1) ஒரு பொருள் நம்மிடம் இல்லை. ஆகவே அதை அடைகிறோம்.

(2) ஒரு பொருள் நம்மிடம் இருக்கின்றது. ஆனால் இல்லை என்று நினைத்ததனால் அது இல்லாமல் போகிறது.  

இந்த இரண்டாவது வகையில்தான் ஒரு பொருளை அறிவினால் அடைவது சாத்தியப்படுகிறது. அப்பொருள் நம்மிடம் இருந்தும் அதைப் பற்றிய அறிவு இல்லாததால் அது இல்லாமல் போகிறது. அதைப் பற்றிய அறிவு கிடைக்கும் போது அது அடையப்பட்டதாகிறது. ஆத்ம தத்துவம் இந்த வகையைச் சேர்ந்ததே. ஏற்கனவே அடையப்பட்டிருந்தும் அறியாமையினால் இழக்கப்பட்டிருந்தது. அறியாமையினால் இழந்த பொருளை அறிவினால்தான் அடையமுடியும். ஆகவேஸநாதனபதம்’.

புருஷோத்தம ஆக்யம்புருஷோத்தமன் என்ற பெயரை உடையது. ஆக்யம் - பெயரையுடையது.

பகவத் கீதையில்புருஷோத்தம:என்ற பெயர் பரப்ரம்மத்திற்கு கொடுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், புருஷோத்தமன் என்ற பெயரை இந்த ஆத்ம தத்துவம் பெற்றுள்ளது

பகவத் கீதையில் பதினைந்தாம் அத்தியாயத்தில் ஶ்ரீ கிருஷ்ணர், இவ்வுலகிலுள்ள அனைத்தையும் மூன்றாகப் பிரிக்கிறார். அதில், கண்களுக்கு விளங்குகின்ற, பார்த்து அனுபவிக்கக் கூடியவைகள்காரிய புருஷன்என்று அழைக்கப்படுகின்றது. காரியம் - வெளித்தோற்றத்திற்கு வந்தது; புருஷன் - இறைவன், தலைவன், மேலானவன். இந்த உலகமும் ஈஷ்வரன்தான் எனினும் காரியமாக உள்ள இறைவன்; வெளித்தோற்றத்திற்கு வந்த ஈஷ்வரன். காரிய புருஷன் - ஈஷ்வரனிடமிருந்து வெளித்தோற்றத்திற்கு வந்த இந்த உலகம்.

காரியம் எனில் அதற்கு காரணமாக ஒரு தத்துவம் இருந்தாக வேண்டும். அதை மாயா தத்துவம் என வேதாந்தத்தில் கூறுகின்றோம். இந்த மாயையை பகவான், ‘காரண புருஷன்என அழைக்கின்றார்

இனி, இந்த மாயை மற்றும் மாயையிலிருந்து வந்த இந்த உலகம் இரண்டையும் கடந்ததாக, அதாவது காரிய காரணத்திற்கு அப்பாற்பட்டதாக, இவைகளுக்கு அதிஷ்டானமாக இருக்கின்ற புருஷனை பகவான், ‘உத்தம புருஷன்என அழைக்கின்றார். இந்த உத்தம புருஷ: என்ற சொல்லை திருப்பிப் போடும்போது அது புருஷோத்தம: என மாறுகிறது. ‘புருஷோத்தம:’ எனில் நிர்குண ப்ரம்மன்; அதிஷ்டானமாக ஆதாரமாகவுள்ள பரம்பொருள்; ஸத்-சித்-ஆனந்த சொரூபமான பரப்ரம்மன்.

  காரிய புருஷன் - இந்த உலகம்

  காரண புருஷன் - மாயை

  உத்தம புருஷன் (புருஷோத்தமன்) - நிர்குண ப்ரம்மன்

எனவேபுருஷோத்தம:’ என்ற சொல்லின் மூலம் இங்கு சங்கரர் ஜீவ-ப்ரம்ம ஐக்கியத்தை செய்கின்றார். எந்த ஆத்ம தத்துவத்தை நான் நினைக்கின்றேனோ அது இந்த உடலுக்கு மட்டும் ஆதாரமல்ல; இந்த பிரபஞ்சத்திற்கும் மற்றும் அதற்கு காரணமாக இருக்கின்ற மாயைக்கும் ஆதாரமாக இருக்கின்ற தத்துவம்.

யஸ்மிந்நிதம் ஜகதசேஷமசேஷமூர்தெள

யஸ்மிந்எதனிடத்தில்; எந்த ஆத்மாவினிடத்தில்,

இதம் ஜகத் அசேஷம்இந்த அனைத்துப் படைப்பும்,

அசேஷமூர்தெளபூர்ண சொரூபமான

இதம் ஜகத் - நாம் பார்க்கின்ற இந்த உலகம். அசேஷம் என்பது ஜகத்திற்கு அடைமொழி. சேஷம் - மீதி; அசேஷம் - மீதியில்லாமல், அனைத்தும்

பொதுவாக மூர்த்தி என்ற சொல்லுக்கு உருவம், வடிவம் என்று அர்த்தம். ஆனால் இங்கு தன்மை, இயல்பு என்பது பொருள்.

அசேஷமூர்தெள - பூர்ண சொரூபமான ஆத்ம தத்துவத்தில்.

முழுமையான சொரூபத்தை உடைய இந்த ஆத்ம தத்துவத்தினிடத்தில் இந்த முழு பிரபஞ்சமும்… 

ரஜ்ஜ்வாம் புஜங்கம இவ ப்ரதிபாஸிதம் வை 

ப்ரதிபாஸிதம்தோன்றிக் கொண்டிருக்கின்றதோ; ஏற்றி வைக்கப்பட்டுள்ளதோ; அத்யாசம் செய்யப்பட்டுள்ளதோ

ரஜ்ஜ்வாம்கயிற்றில்

புஜங்கமபாம்பு (வயிறே அதற்கு காலாக இருப்பதனால்- புஜங்கம)

இவபோல

வைநிச்சயமாக, உறுதியாக

கயிற்றில் பாம்பானது தெரிவது போல, கயிற்றில் பாம்பானது ஏற்றி வைக்கப்பட்டது போல இந்த ஆத்ம தத்துவத்தினிடத்தில் நிச்சயமாக அனைத்துலகமும் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது


விளக்கம்:

இந்த இரண்டு வரியில் ஆசிரியர் வேதாந்தத்தின் மையக் கருத்தை போதிக்கிறார். இந்த உலகிற்கும் ஆத்ம தத்துவத்திற்கும் அல்லது ப்ரம்ம தத்துவத்திற்கும் என்ன சம்பந்தம்? இதற்கு பதிலாக ஆசிரியர் இங்கு ஒரு உதாரணத்தை கூறி அதுபோல என விளக்குகிறார். மங்கிய வெளிச்சத்தில் கயிற்றை தவறாகப் பாம்பாக பார்க்கின்றோம். அவ்விதம் கயிற்றில் நம்மால் தவறாக பார்க்கப்பட்ட பாம்பிற்கும் அந்த கயிற்றிற்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம்தான் இந்த உலகிற்கும் ஆத்மாவிற்கும் இடையில் உள்ளது என்கிறார். அதுஅதிஷ்டான-அத்யஸ்த சம்பந்தம்என்றழைக்கப்படுகின்றது. ஒன்று அதிஷ்டானமாக இருப்பது; இனியொன்று அதிஷ்டானத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டது.  

இருக்கின்ற ஒரு பொருளை நாம்ஸத்என்று சொல்கிறோம். ஸத் - இருக்கிறது. உதாரணமாக புத்தகம் இருக்கிறது; பேனா இருக்கிறது. இல்லாத ஒன்றைஅஸத்என்று சொல்கிறோம். அஸத் - இல்லை. உதாரணமாக முயல்கொம்பு என்ற ஒன்று இல்லை. ஆகவே அது அஸத். பொதுவாக நமது அனுபவத்தில் ஒரு பொருள் இருக்கும் அல்லது அது இருக்காது என்ற இரண்டு விஷயங்கள் சாத்தியம்; அதாவது ஒரு பொருள் ஸத்தாக இருக்கலாம் அல்லது அஸத்தாக இருக்கலாம். ஆனால் இவையிரண்டிற்கும் இடையில் இனியொரு அனுபவம் சாத்தியமாகிறது. உதாரணமாக, கயிற்றில் நாம் பாம்பை பார்க்கின்றோம். இதில் பாம்பை ஸத் என்று அழைக்கலாமா? அல்லது அஸத் என்று அழைக்கலாமா? பாம்பு இருக்கிறது என்பது சரியா? இல்லை என்பது சரியா?

இந்த பாம்பை கண்டிப்பாக நாம்இருக்கிறதுஎன கூறமாட்டோம். கயிற்றைப் பற்றிய அறியாமையினால்தான் நான் பாம்பை இருக்கின்றது எனக் கூறினேன். கயிறு-அறிவு வந்த பின்னர் பாம்பு இருக்கிறது எனக் கூறப்போவதில்லை. இதிலிருந்து ஞானம் வந்த பின் அது சென்றுவிடுவதால், கயிற்றில் பார்க்கும் பாம்பை நாம் இருக்கிறது என சொல்வதில்லை. இனி, பாம்பை இல்லை ஆதலால் அது அஸத் எனக் கூறலாமா எனில் அவ்விதமும் சொல்ல முடியாது. ஏனெனில் அங்கு பாம்பு தெரிந்ததனால்தான் பயம் முதலிய உணர்வுகள் வந்தது. காட்சிக்கே பாம்பு இல்லையெனில் மனதில் பயம் வந்திருக்காது. அதாவது பாம்பு அனுபவத்திற்கு இருந்த காரணத்தினால் அதை இல்லை என்றும் கூறிவிட முடியாது. இல்லாத பொருள் எந்தவொரு காரியத்தையும் செய்யாது. பயத்தை கொடுக்கும் காரியத்தை செய்ததனால் அதுஅஸத்ஆகாது. எனவே கயிற்றில் தெரியும் பாம்பை ஸத் என்றும் கூற முடியாது, அஸத் என்றும் கூற முடியாது எனில் அதை என்னவென்று கூறுவது? தோற்றத்திற்கு மட்டும் இருந்து, அனுபவத்திற்கு மட்டும் இருந்து சில காரியத்தை செய்யும் இவ்வகையான பொருளை நமது சம்பிரதாயத்தில்மித்யாஎன்று அழைப்பர். ஆகவே எந்தவொரு பொருள் இருக்கின்றது என்றும் இல்லை என்றும் சொல்ல முடியாதோ அந்த பொருளுக்கு மித்யா என்று பெயர். இப்பொழுது மூன்று பெயர்களைப் பார்த்துள்ளோம்.

(1) ஸத்

(2) அஸத்

(3) மித்யா

இந்த மித்யாவை சிலர், ஸத் மற்றும் அஸத்-தின் சேர்க்கை என்று நினைக்கலாம். அது தவறான புரிதல். எவ்விதம் இருளையும் ஒளியையும் கலந்துவிட முடியாதோ அதுபோல இருத்தலும் இல்லாமையும் கலக்க முடியாது. தோற்றத்திற்கும் அனுபவத்திற்கும் மட்டும் இருந்து விசாரம் செய்து பார்க்கும்போது இல்லாமல் போவது மித்யா எனப்படும். இனியொரு உதாரணத்தை எடுத்து விசாரித்து பார்க்கலாம். கானல் நீர் தோற்றத்திற்கும் அனுபவத்திற்கும் இருக்கிறது. தாகத்தை தணிக்க அருகில் சென்று பார்க்கும்போது அங்கு நீர் இல்லை. அறிவு வந்தபின்னும் அது மீண்டும் நீர் போலத் தெரிந்தபோதிலும்அது மித்யா; உண்மையில் அங்கு நீர் இல்லைஎன ஏற்கனவே அறிந்ததனால் அங்கு தாகம் தணிக்க செல்லமாட்டோம்.

சாஸ்திரம் இந்த உலகத்தை, அனைத்து படைப்பையும் மித்யா எனக் கூறுகிறது. அதாவது இவைகள் அனைத்தும் அனுபவத்திற்கு இருந்தபோதிலும் அறிவு வந்தபின் இல்லாமல் போகிறது. அறிவு வந்தபின் இவ்வுலகம் இல்லாமல் மறைந்துவிடுமா? எனில் இல்லை. கானல்நீர் உதாரணத்தைபோல, நீல வண்ண ஆகாசத்தைபோல, சூரிய உதயத்தைபோல அவ்விஷயங்களைப் பற்றிய அறிவு வந்தபின்னும் அது எவ்விதம் தொடர்ந்து அனுபவத்திற்கு அதேபோலத் தெரிந்து கொண்டுள்ளதோ அவ்விதமே இவ்வுலகமும் தொடர்ந்து தெரிந்துகொண்டு தான் இருக்கும். நமது அறிவில்அது உண்மையல்ல; மித்யா, வெறும் தோற்றம்என்ற மாற்றம் வந்திருக்கும்

இவ்விதம் ஆத்ம தத்துவத்திற்கும் இவ்வுலகிற்கும் உள்ள தொடர்பு, இவ்வுலகம் ஆத்மாவின் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளது என்பதாகும். இந்த பிரபஞ்சம் மித்யா; வெறும் தோற்றம் எனக் கூறி இந்த சுலோகத்தை முடிக்கின்றார் ஆசிரியர்.

இனிஜகத் மித்யாஎனும் இந்த அறிவினால் என்ன பலன்? வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம்

   (1) பிரவ்ருத்தி - ஒன்றை நாடிச் செல்லுதல்

   (2) நிவ்ருத்தி - ஒன்றிலிருந்து விலகிச் செல்லுதல்

பொய்யான ஒன்றை குறித்து ஒருவனுக்கு எந்தவித பிரவ்ருத்தியோ அல்லது நிவ்ருத்தியோ இருக்காது. பாம்பு-கயிறு உதாரணத்தில், அது பாம்பு அல்ல, அது வெறும் தோற்றம் என்று அறிந்ததற்கு பிறகு அதிலிருந்து பயந்து ஓடத் தேவையில்லை; நிவ்ருத்தி இல்லை. கானல்நீரை பார்த்து அது வெறும் தோற்றம், அங்கு நீர் இல்லை என்று புரிந்த பிறகு தாகத்திற்காக கானல்நீரை நோக்கி செல்லமாட்டோம்; பிரவ்ருத்தி இல்லை. ஆகவே எங்குஸத்இருக்கிறதோ அங்குதான் பிரவ்ருத்தியும் நிவ்ருத்தியும் இருக்கும். மற்றபடிஅஸத்மற்றும்மித்யாஇரண்டிலும், பிரவ்ருத்திக்கும் வழியில்லை; நிவ்ருத்திக்கும் வழியில்லை

இந்த உலகத்தை நாம்ஸத்என்பதாக நினைத்துக் கொண்டுள்ளோம். அவ்விதம் அதை நாம் நினைக்கும் வரை சிலவற்றை தேடி ஓடுதலும், சிலவற்றிலிருந்து விலகுதலும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். இந்த உலகின் உண்மைத் தன்மை நீங்கும்வரை, இது மித்யாவாக ஆகும்வரை பிரவ்ருத்தி மற்றும் நிவ்ருத்தியிலிருந்து விடுதலை இல்லை. இது மித்யா என புரியும்போது இதில் எதையும் அடைய ஓட மாட்டோம்; எதனிடமிருந்து விலக எத்தனிக்க மாட்டோம்

மோக்ஷம் என்பது பிரவ்ருத்தி மற்றும் நிவ்ருத்தி இல்லாத நிலை. தேடி அடைதல் அல்லது விலகுதல் என எவ்வகையிலும் ஓட்டம் இல்லையெனில் ஒருவனது வாழ்க்கை எப்படி ஓடும்? எனில் பிராரப்தத்தின்படி ஓடுகிறது. ஒரு ஞானி பிராரப்தத்தின் கையில் தன்னை ஒப்படைத்துவிட்டு மனதில் முழு அமைதியுடன் வாழ்கிறான். மனிதர்கள் பொதுவாக அவரவர்களின் இடம், தொழில் மற்றும் நிலை குறித்து திருப்தி அடையாமல் அவைகளை மாற்றும் பொருட்டு ஓடிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த ஞானத்திற்கு பிறகு ஒருவன் இவ்விதம் எதையும் மாற்றுவதற்காக ஓடாமல், தனது நிலையில் திருப்தியுடன் வாழ்கிறான். அவனது மனதில் எந்தவித பிரவ்ருத்தியும் நிவ்ருத்தியும் இல்லை; வெறும் கர்மமாக செயலில் ஈடுபட்டு முழு மன நிறைவுடன் இருக்கின்றான்

எனவே இந்த உலகம் மித்யா என்ற ஞானத்தில் உறுதியுடன் இருத்தல் மிக அவசியம். ஞானம் உறுதியாக இல்லையெனில், பழக்க தோஷத்தின் காரணமாக உலகம் எளிதில்ஸத்’-ஆக மாறிவிடும். ‘ப்ரம்ம சத்யம்; ஜகன் மித்யாஎன்ற ஞானத்தின் உறுதியே ஞானப் பலனான மோக்ஷத்தை அடைவிக்கும். ஆகவே ஞானத்தை மனதில் நிலைக்கச் செய்ய இந்த சுலோகத்தை ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் மனதில் கொண்டுவந்து தியானம் செய்யவேண்டும். இரவு உறங்கும் வரையிலான மற்ற வியவஹாரங்களின்போதும் இந்த ஆத்ம தத்துவத்தை பற்றிய சிந்தனை மனதில் இருக்கவேண்டும்

இந்த உலகம் மித்யா எனும் உண்மையை பார்த்துப் பழக வேண்டும். சிக்கல் வரும்பொழுது இந்த அறிவை நினைக்கலாமே, ஏன் பிரச்சினை எதுவுமில்லாத காலைப் பொழுதில் நினைக்க வேண்டும்? எனில், சாதாரண மனநிலையில் இருக்கும்போது இந்த ஞானத்தை உறுதிப்படுத்திக் கொண்டால் அதன் விளைவாக எந்த சிக்கலான சூழ்நிலையில், சஞ்சலமான மனநிலையில் இந்த அறிவு தேவையோ அந்த நேரத்தில் இந்த அறிவானது மனதில் ஸ்புரிக்கும். இப்படிப்பட்ட நிலையை அடைந்தவன் ஜீவன் முக்தனாகிறான்.   

—————————————————————————————————