ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் முகவுரை:

ஸ்தோத்ரம் = பாமாலை. 

ஸ்துதி: = ஸ்தூயதே அநேந இதி ஸ்தோத்ரம் = எதனால் புகழ்ச்சி செய்யப்படுகிறதோ அல்லது வணங்கப்படுகிறதோ அது ஸ்தோத்ரம். சொற்களால் வணங்குவது; செய்யுள்களால் பாமாலை தொடுப்பது. 

வேதத்தில் இறைவனை புகழ்தல் சூக்தம் என்றழைக்கப்படும். எ.கா., புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம். மற்ற இடங்களில் இவ்விதம் செய்யப்பட்டால் அது ஸ்தோத்ரம். 


=> ஸ்தோத்ரத்தின் பங்கு:

ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் பக்தியெனும் சாதனைக்கு முக்கியமாக தேவைப்படுவது ஸ்தோத்ரம்; இது பக்தியின் அங்கம். வாக் இந்திரியத்தை பிரதானமாகக் கொண்டது. உபாசனம் எனும் சாதனைக்கும் ஸ்தோத்ரம் முக்கிய பங்கு வகிக்கிறது. மன ஒருமுகப்பாட்டிற்கு உதவுவது.

பொதுவாக ஸ்தோத்ரங்களின் இறைவனை வர்ணிப்பவைகளாக இருப்பதால் அவைகள் விசாரத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவது கிடையாது.  அது முழுக்க முழுக்க பக்தி செலுத்தலுக்காகவும், மன ஒருமுகப்பட்டிற்கும் உபயோகப்படுத்துவது வழக்கம். இதில் புகழப்படும் தெய்வத்தை குறித்து இரு பார்வைகள் வைக்கப்படும். ஒன்று அனைத்தும் உனது. இரண்டாவது அனைத்துமாகவும் நீயே உள்ளாய் என்பது ஸ்தோத்ரத்தின் மையக்கருத்து. இது ஓரளவுக்கு நம் மனதை தூய்மைபடுத்த உதவும். இவ்வகை பக்தியின் பலன்: 

1. நல்ல குணங்கள் வந்து சேரும் 

2. கெட்ட குணங்கள் வராது.


=> ஸ்தோத்ரத்தின் பலன்:

பக்தி, மன ஒருமுகப்பாடு, பாராயணம், தியானத்தில் மானச பாராயணம் 

தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்:

  இது மற்ற ஸ்தோத்ரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மற்றவைகளில் கிடைக்கும் பலனும் உண்டு. இது இனியொரு பணியையும் செய்கிறது. இது வெறும் பாராயண ஸ்தோத்ரமாக மட்டுமில்லாமல் வேதாந்த கிரந்தமாகவும் செயல்படுகிறது. வேதாந்ததின் சாரம் இதில் உள்ளதால் இது விசாரத்திற்கும் பயன்படுகிறது. ஆகவே இது சிரவணம் என்ற சாதனைக்கு உட்பட்டது. மேலும் அர்த்தம் தெரிந்து பாராயணம் செய்யும் போது இது நிதித்யாசனமாகவும் மாறுகிறது. 


=> தக்ஷிணாமூர்த்தி:

தக்ஷிணாமூர்த்தி சிவனின் அம்சம் அல்லது சிவனின் வெளிப்பாடு. 

உலகைப் படைத்த பிரம்மதேவர், முதன்முதலில் தனது மனதிலிருந்தே சனகர் முதலிய நான்கு பேரை சிருஷ்டி செய்தார். அவர்களுக்கு வேதத்தை பற்றிய முழு அறிவையும் கொடுத்தார். வேத அறிவை அடைந்த முனிவர்கள், இவ்வுலகை குறித்து முழு வைராக்கியத்தை கொண்டிருந்ததால் நிவ்ருத்தி மார்க்கம் என கூறப்படும் சந்யாச வாழ்க்கையை மேற்கொண்டனர். அனைத்து ஞானமும் இருந்தும் இவர்களின் மனம் நிறைவற்றதாகவே இருந்தது. காரணம், உடல் நிலையற்றது; உலகம் நிலையற்றது என தெரிந்துவிட்டது. எது நிலையானது, ‘நான்’ எனும் அபிமானத்தை எதில் வைக்கவேண்டும் என்று தெரியவில்லை. பாதி கிணறு மட்டும் தாண்டியவர்களாக தனது தந்தையான பிரம்மதேவரிடம் சென்று, ‘எங்களுக்கு எங்களை பற்றிய ஞானத்தை கொடுங்கள்; ஆத்ம ஞானத்தை அளியுங்கள்’ என்று கேட்டனர். தந்தை எனும் உறவினால் ஞானத்தை அடைய உதவும் சிரத்தை தடைப்படலாம் என பிரம்மதேவர் இவர்களை சிவனிடம் அனுப்பி இவர்களின் குழப்பத்திற்கு தீர்வு காணுமாறு பணித்தார். ‘நான்’ எனும் சொல்லை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்ற கேள்விக்கான ஆத்ம ஞானத்தை போதிக்கும் ஒரே நோக்கத்துடன் சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி உருவம் எடுத்து ஆல மரத்தடியில் அமர்ந்தார். இவர்களுக்கு ஆத்ம வித்யையை வழங்கினார். ஆகவே தக்ஷிணாமூர்த்தி ஆத்ம வித்யைக்கான அதிஷ்டான தேவதை. செல்வத்திற்கு லட்சுமி, வீரத்திற்கு துர்கா என ஒவ்வொரு விஷயத்திற்கும் ஈஷ்வரனின் வெளிப்பாடாக ஒரு அதிஷ்டான தேவதை உண்டு. அவ்விதத்தில் ஆத்ம ஞானத்திற்கான ஈஷ்வரனின் வெளிப்பாடு தக்ஷிணாமூர்த்தி.       


=> தக்ஷிணாமூர்த்தி என்ற சொல்லின் பொருள்:

தக்ஷிணா + மூர்த்தி

தக்ஷிணா என்பதற்கு நான்கு அர்த்தங்கள் உள்ளது. 

    1. தெற்கு திசை  

    2. சாமர்த்தியமானவன்(நிபுண:, capable)  

    3. வலது பக்கம்  

    4. தக்ஷிணை(காணிக்கை). 

        இதில் முதல் இரண்டு பொருள் மட்டும் இங்கு பொருந்தி வரும்மூர்த்தி = உருவம்/விக்கிரஹம்.

 

1. தக்ஷிணாமூர்த்தி = தக்ஷிண திக் அபி4முகா மூர்த்தியஸ்ய : சிவ:  = எந்த விக்கிரஹமானது தெற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளதோ, அந்த தேவன் தக்ஷிணாமூர்த்தி = எல்லா இடத்திலுமுள்ள சிவபெருமான், தெற்கு திசையை நோக்கி அமர்ந்தவராக உடலை எடுத்துள்ளார்.

ஏன் தெற்கு? யமதர்ம ராஜா இருக்கும் திசை தெற்கு. ஆகவே தக்ஷிணாமூர்த்தி யமனை நோக்கி எதிர்த்து அமர்ந்துள்ளார். உடல் தாங்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள் பொதுவாக மரண பயத்தினால் கட்டுண்டு யமனிருக்கும் திசை நோக்க அஞ்சுவர். தக்ஷிணாமூர்த்தி உடலோடு இருந்தபோதிலும்நான் பரப்ரம்மஎன்ற ஞானத்துடன் இருந்த காரணத்தினால் மரணத்தை வென்றவராக யமனை நோக்கி அமர்ந்திருக்கின்றார்

2. தக்ஷிணாமூர்த்தி = இரண்டாவதில் தக்ஷ் என்றால் சாமர்த்தியம் என்று பொருள். அதிலிருந்து தக்ஷிண: என்ற சொல் வருகிறது. இங்கு நெடில்(தீர்க்கம்) வராது. ஆகவே தக்ஷிணமூர்த்தி என்றுதான் எடுத்து கொள்ளமுடியும். தக்ஷிணாமூர்த்தி = தக்ஷிண: + அமூர்த்தி.

தக்ஷிண: = சாமர்த்தியமானவர்; அமூர்த்தி: = உருவமற்றவர்

  இதன் தாத்பர்யம் என்னவெனில், இந்த தக்ஷிணாமூர்த்தி உண்மையில் ஈஷ்வரனாகவே இருக்கின்ற காரணத்தினால் மாயையை தன்னுடைய வசத்தில் வைத்து இந்த முழு பிரபஞ்சத்தையே சிருஷ்டி, ஸ்திதி மற்றும் லயம் செய்யும் சாமர்த்தியமுடையவர். சில சமயம் தக்ஷிணாமூர்த்தி முன்ஶ்ரீசேர்க்கும் வழக்கமுள்ளது. ஶ்ரீ என்பது மாயையை குறிக்கிறது. மாயையை தன் வசம் வைத்து இவ்வுலகை படைத்து, காத்து பிறகு தனக்குள் எடுத்துக் கொள்கிறார்- ‘ஶ்ரீ யுக்த தக்ஷிணாமூர்த்தி’. இது ஒருபுறமிருக்க, உண்மையில் அவர் எப்படிப்பட்டவர்? அமூர்த்தி: = உருவமற்றவர்; நிர்குண சொரூபமானவர். உடலற்றவர். ஆகவே இந்த இரு சொல்லும் ஈஷ்வர தத்துவத்தையும், ப்ரம்ம தத்துவத்தையும் குறிக்கிறது. ‘ஈஷ்வரனாகவும், ப்ரம்மனாகவும் யார் இருக்கின்றாரோ அவர் தக்ஷிணாமூர்த்தி’.

தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்’ - இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியை இந்த ஸ்தோத்ரத்தின் துணைக் கொண்டு வணங்குகிறோம்

இது சங்கரரால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இதில் 10 சுலோகங்கள் உள்ளன. இவைகளுக்கு ஸ்வயம் பிரகாச முனி என்பவர் சில தியான சுலோகங்கள் கூறியிருக்கிறார். முதலில் அதன் விளக்கத்தைக் காண்போம்

--------------------------------------------------------------------------------------------------------------------


தியான சுலோக விளக்கம்:

மெளனவ்வ்யாக்யா ப்ரகடித பரப்ரம்ம தத்வம் யுவாணம்

வர்ஷிச்1டாந்தே வசத் ரிஷிகணை: ப்ரம்மநிஷ்டை:

ஆசார்யேந்த்ரம் கரகலித சிந்முத்3ரமானந்த ரூபம்

ஸ்வாத்மாராமம் முதி3 வதனம் தக்ஷிணாமூர்த்திமீடே || 1 || 


தக்ஷிணாமூர்த்திம் ஈடே

தக்ஷிணாமூர்த்திம் - தக்ஷிணாமூர்த்தியை, (அஹம்)ஈடே - நான் வணங்குகிறேன்

எப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தி?


மெளனவ்வ்யாக்யா ப்ரகடித பரப்ரம்ம தத்வம் யுவாணம்

மெளனவ்வ்யாக்யா - மெளனத்தையே உபதேசமாகக் கொண்டு; ப்ரகடித பரப்ரம்ம தத்வம் - பரப்ரம்ம தத்வம் விளக்கப்பட்டது/நிர்குண ப்ரம்மத்தின் சொரூபத்தை விளக்கினார்.

சனகாதி முனிவர்களுக்கு எதுநான்அல்ல என ஏற்கனவே தெரிந்திருந்தது. ஆனால் எதில்நான்என்ற புத்தியை வைக்கவேண்டும் என்ற ஞானமில்லாமல் இருந்தது. ஆகவே குருவாகிய தக்ஷிணாமூர்த்தி பெரிய உபதேசம் எதுவும் செய்யாமல் ஒரு முத்திரையைக் கொண்டு மெளனமாகவே அதை அம்முனிவர்களுக்கு போதித்து விட்டார். கோபப்படாதே என மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதைக்காட்டிலும் கோபப்படாமலிருப்பதே பெரிய உபதேசம்.

யுவாணம் - இளமையானவரை; இளமையான உருவத்தில் அமர்ந்தார்; கால தத்துவத்தை கடந்தவர்.


வர்ஷிச்1டாந்தே வசத் ரிஷிகணை: ப்ரம்மநிஷ்டை:

வர்ஷிச்1: - மிக மூத்தவர்கள்/வயதானவர்கள் அந்தே - குருகுலத்தில் வசத் - வசித்துக்கொண்டிருக்கின்ற ரிஷிகணை: - 4 ரிஷிகளின் கூட்டத்தினால் ஆவ்ருதம் - சுற்றி அமர்ந்துள்ளார்கள்.

எப்பொழுதுமே குருகுலத்தில் வசித்துக்கொண்டிருக்கின்ற 

மிக வயதான இந்த நான்கு சனகாதி முனிவர்களும் மிக இளமையான தக்ஷிணாமூர்த்தியை சுற்றி அமர்ந்துள்ளார்கள்.

மூன்று விதமான முதுமை:

  1. வயோ வ்ருத்34: — வயதினால் முதுமை

  2. ஆசார வ்ருத்34: — ஒழுக்கத்தினால் வயதானவன்

  3. ஞான வ்ருத்34: — ஞானத்தினால் வயதானவன்; ஞானத்தினால் கிடைத்த பக்குவத்தின் காரணமாக அனைத்து பொறுப்புகளையும் உதறியவன்.

நான்கு சனகாதி முனிவர்களும் மேற்கூரிய மூன்று விதத்திலும் முதுமையை, மேலான நிலையை அடைந்தவர்கள். ஆசாரத்தினாலும் ஞானத்தினாலும் மன வளர்ச்சியை அடைந்தவர்கள். இவர்கள் எப்படித் தங்களது காலத்தை கழித்துக் கொண்டிருந்தார்கள்?

ப்ரம்மநிஷ்டை: - சகுணப்ரம்மத்தை உபாசனை செய்து கொண்டிருந்தார்கள். ஜபோநிஷ்ட: - ஜபத்தில் மனதில் வைத்தவர்கள்.

முதிய பருவத்தில் ஜபம் எனும் சாதனையில் சுகத்தை பழகிக்கொண்டால், வியவஹாரத்திலிருந்து விலகி பின்னர் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் மேலான முறையில் நமது காலத்தை கழிக்க, நம்மிடத்தியேலே இருக்க இப்பயிற்சி உதவும்.


ஆசார்யேந்த்ரம் கரகலித சிந்முத்3ரமானந்த ரூபம்

ஆசார்யேந்த்ரம் - [தக்ஷிணாமூர்த்திக்கான அடைமொழி இது; ஆசார்யாணாம் இந்தர:] - ஆசார்ய + இந்த்ரம்ஆசிரியர்களுக்குள் தலைவனாக, சிறந்தவனாக இருப்பவர்.

மற்றவர்கள் புரிந்துகொள்ளுமளவு விளக்குவதற்கு ஒரு தனி திறமை தேவை. பேசிப் புரிய வைப்பதற்கே கடினமான ஓர் அறிவை, இவர் மெளனத்தினாலேயே, ஒரு முத்திரையை காட்டி புரிய வைத்தார்.

கரகலித சிந்முத்3ரம்கையில் [வைக்கப்பட்ட] சிந் முத்திரையை ஏந்தியவரை( நான் வணங்குகின்றேன்).

இந்த உடல், மனம், உலகம் அனைத்தும் ஜடமானது; நிலையற்றது என புரிந்து கொண்ட சனகாதி முனிவர்களுக்கு ஒரு பெரிய குழப்பம் வந்தது. ‘நான்என்று நினைத்து கொண்டிருந்த இந்த உடல் மற்றும் மனம் நானல்ல எனில் எந்த இடத்தில்நான்என்ற புத்தியை வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இப்போது தக்ஷிணாமூர்த்தி சிந் முத்திரையைக் காட்டிநான்என்ற புத்தியை பரப்ரம்மனிடத்தில் வைக்கவேண்டும் என மெளனமாகக் கூறுகிறார். சிந் முத்திரையின் நீட்டப்பட்டுள்ள மூன்று விரல்களும் நமது மூன்று சரீரங்களை(ஸ்தூல, சூக்ஷம, காரண) காட்டுகிறது. ஆள்காட்டி விரல், ஜீவாத்மா எனும் அஹங்காரத்தை குறிக்கிறது. நாம் சாதாரணமாக கையை வைத்திருக்கும் போது இந்த ஆள்காட்டி விரல் எப்போதும் மற்ற மூன்று விரல்களுடன் சேர்ந்தே இருக்கும். இது இயற்கையாகவே, இந்த ஜீவாத்மா மூன்று சரீரத்தோடு அபிமானம் வைத்திருப்பதை குறிக்கிறது. மற்ற நான்கு விரல்களும் வேலை செய்வதற்கு ஆதாரமாக இருக்கின்ற கட்டை விரல், பரமாத்மாவைக் குறிக்கிறது. இங்கும் இயற்கையாகவே எல்லா ஜீவாத்மாக்களும் பரமாத்மாவிடம்நான்என்ற அபிமானத்தை பிரித்து, மூன்றில் ஏதேனும் ஒரு சரீரத்தில்நான்எனும் புத்தியை வைத்திருக்கின்றது. ஆகவே சிந் முத்திரையின் மூலம் தக்ஷிணாமூர்த்தி, இந்த மூன்று சரீரத்திலுள்ள அபிமானத்தை நீக்கி, பரமாத்மாவிடம்நான்என்கிற புத்தியை வைக்க வேண்டும் என காட்டுகிறார். முத்திரையில் கட்டை விரலும் ஆள்காட்டிவிரலும் ஒரு வட்டத்தை தோற்றுவிக்கிறது. இது பூர்ணத்தைக் குறிக்கிறது. ஆரம்பமும் அதாவது தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை. அப்படிப்பட்ட நிலையை அடைகின்றான். சிந் முத்திரைக்கு வழங்கப்படும் மற்ற பெயர்கள், ஞான முத்ரா மற்றும் மெளன முத்ரா.    

ஆனந்த ரூபம் - ஆனந்தமாக; மன நிறைவுடன்; பூர்ணமாக இருக்கின்றார்.

இது சிந் முத்திரையை சரியாக புரிந்து கொள்வதன் விளைவைக் குறிக்கிறது.


ஸ்வாத்மாராமம் முதி3 வதனம் தக்ஷிணாமூர்திமீடே

ஸ்வாத்மாராமம் - தன்னிடத்திலேயே தான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார். எந்த விதமான வெளிப்பொருளுமில்லாமல் தன்னிடத்திலேயே ஆனந்தமாக இருத்தல்

முதி3 வதனம் - மகிழ்ச்சியான முகத்துடன் இருப்பவர்; ஆழ்ந்த அமைதியுடன் இருபவரது முகத்திலும் அந்த அமைதி மற்றும் மகிழ்ச்சி வெளிபடுகிறது.

 தக்ஷிணாமூர்த்திமீடே - இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியை நான் நமஸ்காரம் செய்கின்றேன்.


சுலோகம்:2 

வடவிடபி சமீபே பூ4மிபா4கே3 நிஷண்ணம்

சகலமுனி ஜனானாம் ஞானதா3தாரம் 

த்ரிபு4வன குருமீச1ம் தக்ஷிணாமூர்தி தே3வம்

ஜனனமரணது3:2 ச்சே23 3க்ஷம் நமாமி || 2 ||


வடவிடபி சமீபே - ஆல மரத்தின் அடியில்

பூ4மிபா4கே3 நிஷண்ணம் - பூமியின் பாகத்தில்(திட்டு போன்ற இடத்தில்) அமர்ந்திருந்தார் 

சகலமுனி ஜனானாம் ஞானதா3தாரம் - தனக்கு கீழ் அமர்ந்துள்ள அனைத்து சிஷ்யர்களுக்கும்(முனிகள்) ஞானத்தைக் கொடுப்பவர்

ஆராத் [சாக்ஷாத்] - மிக தெளிவாக நேரடியாக; உடனடியாக (ஞானத்தைக் கொடுத்தார்).

த்ரிபு4வன குரும் - மூன்று புவனங்களுக்கும் குருவாக இருப்பவரை,

இந்த ஞானத்தை வழங்கக்கூடிய அனைத்து குருவின் வடிவிலும் இருப்பவர்.

ஈச1ம் - அனைத்தையும் ஆள்பவரை,

தக்ஷிணாமூர்த்தி தே3வம் - தக்ஷிணாமூர்த்தி என்ற பெயரையுடைய தேவனை

ஜனன மரண து3:2 சே23 3க்ஷம்பிறப்பு இறப்பு எனும் துக்கத்தை நீக்கும் சாமர்த்தியவான்; நிபுணன். ஞான முத்திரை எனும் ஆயுதத்தினால் நமது துக்கத்தை நாசப்படுத்துபவர்

நமாமி - இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியை நான் நமஸ்காரம் செய்கின்றேன்.


சுலோகம்:3

சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்3தா4: சி1ஷ்யா குருர்யுவா

குரோஸ்து மெளனம் வ்யாக்யானம் சி1ஷ்யாஸ்துச்சிந்நஸம்ஸயா: || 3 ||


சித்ரம் வடதரோர் மூலே - ஆலமரத்தின் கீழ் ஓர் ஆச்சரியமான காட்சி உள்ளது.

வ்ருத்3தா4: சிஷ்யா: - சிஷ்யர்களெல்லாம் வயதானவர்கள்,

குரு: யுவா - குருவானவர் மிக இளமையானவர்

* இது ஒரு ஆச்சரியம்

குரோஸ்து மெளனம் வ்யாக்யானம் - குருவோ மெளனமாக இருக்கிறார்; மெளனமாக விளக்கத்தை அளிக்கிறார்.

சிஷ்யா: து - ஆனால் சிஷ்யர்கள் 

சிந்ந ஸம்ஸயா: - நீக்கப்பட்ட சந்தேகங்கள்

* மெளனத்திலிருந்தே சந்தேகங்கள் நீக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இது இரண்டாவது ஆச்சரியம். இங்கு குரு மற்றும் சிஷ்யர்கள், இருதரப்பினருமே பெருமைக்குரியவர்களே. ஏனெனில் மெளன விளக்கத்தை சரியாக புரிந்துகொள்ள சிஷ்யர்களும் அந்த அளவு தகுதியுடன் இருந்தனர். ஒருமுறை புத்தரிடம் சிஷ்யன் ஒருவன், ஆத்மா என்றால் என்ன? என்ற கேள்வியைக் கேட்டான். அதற்கு மெளத்தை பதிலாக அளித்தார் புத்தர். உடனே சிஷ்யன், ‘சூன்யம் தான் ஆத்மாஎன முடிவெடுத்தான். இனியொரு சிஷ்யன், வந்துபோகிற க்ஷனிகமான எண்ணங்கள் தான் ஆத்மா என முடிவுசெய்தான். இந்த மெளனம் நான்கு விதத்தில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இதனால் புத்த மதத்தில் நான்கு பிரிவு தோன்றியது. ஆகவே குருவின் உபதேசத்தை சரியாக புரிந்துகொள்ளும் சிஷ்யர்களும் ஆச்சரியம் தான்


சுலோகம்:4

நித4யே ஸர்வவித்3யானாம் பி4ஷஜே 4 ரோகி3னாம் 

குரவே ஸர்வலோகானாம் தக்ஷிணாமூர்தயே நம: || 4 ||


ஸர்வ வித்3யானாம் நித4யே - எல்லா ஞானங்களுக்கும் பொருள் களஞ்சியமாக இருப்பவர்.

பி4ஷஜே 4 ரோகி3னாம் - சம்சாரம் என்ற நோயை உடையவர்களுக்கு வைத்தியராக இருப்பவர்.

அனைவருமே சம்சாரம் என்ற நோயினால் பீடிக்கப்பட்டவர்களாக இருந்தும், ஏன் அனைவரும் இந்த ஞானம் எனும் வைத்தியத்திற்கு வருவதில்லை. யதார்தத்தில், நோய் இருப்பதை விட, தனக்கு நோய் இருக்கிறது என கண்டுகொண்டவர்களே மருத்தவரிடம் செல்கிறார்கள். அதுவே இங்கும் நடைபெறுகிறது. தன்னை சம்சாரியாக உணர்ந்து கொண்டவன் அதிகாரிதுவத்தை அடைகிறான். ஞானத்தை தேடிச் செல்கிறான். முமுக்ஷு ஆகிறான்

குரவே ஸர்வ லோகானாம் - எல்லா லோகங்களுக்கும் குருவாக இருப்பவர்.

தக்ஷிணாமூர்த்தயே நம: - இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியை வணங்குகிறேன்


சுலோகம்:5

ஓம் நம : ப்ரணவார்தாய ஶுத்தஜ்ஞானைகமூர்தயே 

நிர்மலாய ப்ரஶாம்தாய தக்ஷிணாமூர்தயே நம: || 5 ||


ஓம் நம ப்ரணவார்த்தாய - ஓங்காரத்தின் அர்த்தமாக விளங்குபவர்.

மாண்டூக்ய உபநிஷதத்தில் ஓங்காரத்தின் பொருள் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது. ‘ஓம்எனும் சொல்லில் உள்ள, + + ம் முதலிய அங்கங்களுடன், ‘அமாத்ராஎன்று கூறப்படும் மெளனமும் ஓர் அங்கமாக அங்கு விளக்கப்படுகிறது. அதில் , மற்றும் ம் முதலியவைகள் சகுண ப்ரம்மத்தையும், ‘அமாத்ராநிர்குண ப்ரம்மத்தைக் குறிக்கிறது. ஓங்காரத்தின் உண்மையான பொருளான நிர்குண ப்ரம்ம சொரூபத்தை விளக்கும் தத்துவமாக இருப்பவர்.

சுத்34 ஞான ஏக மூர்த்தயே - தூய்மையான ஞானமாக, ஒரே சொரூபமாக இருப்பவர்.

சுத்தமான ஞானம் என கூறப்படுவதிலிருந்து, அசுத்தமான ஞானம் என ஏதேனும் உள்ளதா? எனில், ஆம். மனதில் தோன்றும் பொருள்களைப் பற்றிய எண்ணங்கள் அசுத்தமான அறிவு. ஏனெனில் அவைகள் தோன்றும் சிறிது காலத்தில் மறைந்து விடும். ஆனால் சொரூப ஞானம் என்றும் மறையாதது; அழியாதது

நிர்மலாய - அழுக்கற்றவர்க்கு; தூய்மையானவருக்கு

ஸ்தூலம், சூக்ஷமம் மற்றும் காரணம் என்ற மூன்று விதமான சரீரங்கள் அழுக்கு எனப்படுகிறது. இவ்விதமான அழுக்கற்றவருக்கு என்பது பொருள். தக்ஷிணாமூர்த்தி சரீர வடிவத்தில்தான் அமர்ந்துள்ளார் என்றபோதிலும் இவருக்கு அந்த சரீரத்தில்நான்என்ற அபிமானம் கிடையாது. ஆகவேநிர்மலாய’.

ப்ரசா1ந்தாய - சாந்தியுடன் அமர்ந்துள்ள; ஆனந்த ரூபமாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்ற

தக்ஷிணாமூர்த்தயே நம: - இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியை வணங்குகிறேன்.

பொதுவாக தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம், நாம் பார்த்த இந்த ஐந்து தியான சுலோகதோடு உச்சாடனம் செய்யப்படுவது வழக்கம். இனி தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ர விளக்கத்தை காணலாம்.

------------------------------------------------------------------------------------------------------------

ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ர விளக்கம்

 சுலோகம்:1 

விஶ்வம்தர்பண த்ருஶ்யமான னகரீ துல்யம் னிஜாம்தர்கதம்

பஶ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதானித்ரயா |

யஸ்ஸாக்ஷாத்குருதே ப்ரபோதஸமயே ஸ்வாத்மானமே வாத்வயம்

தஸ்மை ஶ்ரீகுருமூர்தயே நம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே

विश्वं दर्पणदृश्यमाननगरीतुल्यं निजान्तर्गतं

पश्यन्नात्मनि मायया बहिरिवोद्भूतं यथा निद्रया

यः साक्षात्कुरुते प्रबोधसमये स्वात्मानमेवाद्वयं

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥१॥


கண்ணாடியில் தோன்றுகின்ற நகரத்திற்கு நிகரான, தன் உள்ளே உள்ள உலகதை எவ்விதம் உறக்கத்தில் (உள்ளே உள்ள உலகம் வெளியில் தோன்றுவதுபோல காணப்படுகிறதோ அவ்விதம்) யார் தன்னிடத்தில் மாயையால் வெளியே உண்டானது போல் பார்த்துக் கொண்டு, ஞானம் வந்தபின் இரண்டற்ற தன் ஆத்மசொரூபத்தை மட்டும் அறிகிறாரோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).


விளக்கம்:

பத்து சுலோகங்கள் கொண்ட இந்த தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தில் முதல் மூன்று சுலோகங்கள் தத், த்வம், அஸி என்கிற சொற்கள்(பதங்கள்) முறையே விளக்கப்படுகின்றது. அதாவதுதத்வமஸிஎனும் மஹாவாக்யம் விளக்கப்படுகின்றது. இதில் முதல் சுலோகத்தில்த்வம்எனும் சொல் விளக்கப்படுகின்றது.


முகவுரை

வேதத்தின் சாரம் இரண்டு. வேதத்தின் முதல் பகுதியானது, யாகங்கள் சடங்குகள் தியானங்கள் முதலிய விதவிதமான சாதனைகளைக் கொடுத்து இந்த உலகத்தை சாத்யமாக அடைய வைக்கிறது. இந்த உலகத்திலுள்ள ஏதேனும் ஒரு பொருளையோ அல்லது வேறொரு உலகத்தையோ அடைய வைக்கிறது.  

வேதத்தின் இறுதிப் பகுதியான வேதாந்தம் அல்லது உபநிஷத்துக்கள், இந்த உலகம், இதை அனுபவிக்கும் ஜீவன் மற்றும் இவையிரண்டையும் படைத்த ஈஷ்வரன் இவற்றின் தன்மையை விசாரம் செய்கின்றது. மூன்றிற்குமிடையேயான சம்பந்தத்தை விசாரம் செய்து இவற்றின் தத்துவத்தை நிலைநாட்டுகிறது

 => உபநிஷத் என்ன சொல்கிறது?

முதல் படியாக, இந்த உலகிற்கும் ஜீவனுக்கும் ஈஷ்வரன் காரணம் எனக் கூறுகிறது. அதாவது ஜீவன் காரியம்; ஈஷ்வரன் காரணம். இரண்டாவதாக இந்த ஜீவனும் ஈஷ்வரனும் அடிப்படையில் வேறல்ல; ஒன்று எனச் சொல்கிறது. ஜீவனும் ஈஷ்வரனும் ஐக்கியம் எனக் கூறி உபதேசத்தை முடிக்கிறது

எப்படி ஒரு பொருள் ஒன்றிலிருந்து இனியொன்றாக வெளிவந்து, பிறகு அதிலிருந்து வேறுபடாததாக இருக்கமுடியும்? அதாவது ஜீவன் ஈஷ்வரனிடமிருந்து தோன்றி, பிறகு எப்படி ஐக்கியமாக, வேறுபடாததாக இருக்கமுடியும்ஆனால் இது சாத்தியம். உதாரணமாக கடல் மற்றும் அதன் அலைகளை எடுத்துக் கொள்ளலாம். கடல் அலைகளுக்கு மூலகாரணம். அலைகளின் சாரமும் கடலின் சாரமும் ஒன்றே, அது தண்ணீர். ஆகவே நீர் பொதுவான ஆதாரமாக இருப்பதால் கடலும் அலைகளும் ஒன்று எனக் கூறலாம். அலைகள் கடலிலிருந்து தோன்றுகிறது என்பதை ஏற்றுக்கொள்வதைப் போலவே கடலும் அலைகளும் ஒன்று என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுபோலவே, ஜீவனும் தன்னைப் பற்றிய சரியான அறிவு இல்லாமல் இந்த உடலோடு அபிமானம் கொள்ளும் போது, ‘நான்(ஜீவன்) ஈஷ்வரனிடமிருந்து தோன்றியவன்என்கிறான். பிறகு ஜீவனைஅவஸ்தா த்ரய விவேகம்உள்ளிட்ட வழிமுறையைப் பயன்படுத்தி விசாரம் செய்து, ‘நான் இந்த சரீரத்திலிருந்து வேறுபட்ட ஆத்மாஎன்று புரிந்து கொள்கின்றான். ஆகவே இந்த ஆத்மாவும் ஈஷ்வரனின் உண்மையான சொரூபமும் ஒன்று என அறிகின்றான். ஈஷ்வரன் ஜகத் காரணம் எனக் கூறுகிறோம். ஜீவனும் ஈஷ்வரனும் ஐக்கியமெனில் இந்த உலகம் ஜீவனிடமிருந்து தோன்றுகிறது எனக் கூறுவதில் விரோதமில்லை. ஜீவனின் ஆதாரமும் ஈஷ்வரனின் ஆதாரமும் ஒன்றுதான் எனில் ஈஷ்வரனிடமிருந்து உலகம் தோன்றுகிறது எனக் கூறுவதும் ஜீவனிடமிருந்து உலகம் தோன்றுகிறது எனக் கூறுவதும் சரியே. இத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே ஆசிரியர் இந்த ஸ்தோத்ரத்தின் முதல் வரியை ஆரம்பிக்கிறார்


விளக்கம்:

ஜீவாத்மாவையும் ஈஷ்வரனையும் ஒன்று என கூறும் வாக்கியத்திற்குமஹா வாக்யம்என்று பெயர். முதல் சுலோகத்தில் ஆசிரியர் ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தைக் கூறுகிறார். முதலில் ஜீவனின் தன்மை விசாரிக்கப்பட்டு பின் ஈஷ்வரனுடன் ஐக்கியம் சொல்லப்படுகிறது. ஆகவே முதல் சுலோகம், ‘த்வம் பத சோதன மஹா வாக்யம்’, த்வம் பதம் விசாரம் செய்யப்பட்டு மஹா வாக்யம் பேசப்படுகிறது. இங்கு தக்ஷிணாமூர்த்தி ஈஷ்வரனாக எடுத்துக் கொள்ளப்படுகிறார்

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

ஆத்மஞானத்துடன் குருவின் வடிவத்தில் அமர்ந்துள்ள, மாயையை தன்வசம் வைத்தவரான தக்ஷிணாமூர்த்திக்கு இந்த எனது நமஸ்காரத்தை சமர்ப்பணம் செய்கிறேன்

ஶ்ரீ - மாயா சக்தியை தன்வசம் வைத்தவர் அல்லது ஆத்மவித்யையை உடையவர்

அனைத்து சுலோகங்களிலும் இந்த வரியே கடைசி வரியாக உள்ளது. இந்த வாக்கியமே இதை ஒரு ஸ்தோத்ரமாக காட்டுகிறது. மற்ற மூன்று வரிகளும் இதை ஒரு வேதாந்த கிரந்தமாக காட்டுகிறது

சாதாரணமாக ஈஷ்வரனை தனியாக அறிமுகப்படுத்தி, ஜீவனை தனியாக அறிமுகப்படுத்தி விசாரம் செய்து ஐக்கியம் என்று சொல்வது வழக்கம். ஆனால் இங்கு சங்கரர், இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்தியே மாயையின் வசத்தினால் ஜீவனாக இருந்து, பின் ஞானத்தினால் தன் உண்மை சொரூபத்தை புரிந்து கொண்டுள்ளார் என்று இந்த தக்ஷிணாமூர்த்தியுடன் ஜீவனை  ஐக்கியப்படுத்துகின்றார். ஆகவே இங்கு மஹா வாக்யம்ஜீவ தக்ஷிணாமூர்த்தி ஐக்கியம்’. ஏற்கனவே நாம் தக்ஷிணாமூர்த்தியை ஈஷ்வரனாக புரிந்துள்ளோம். ஆக, ஜீவ-ஈஷ்வர ஐக்கியம். எப்போதெல்லாம் இவ்வித ஐக்கியத்தை செய்கிறோமோ அப்போதெல்லாம் நாம் ஜீவனின் தன்மையை விசாரித்து சரியாக புரிந்துகொண்டு செய்யவேண்டும். ஜீவனின் தத்துவத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். உடலுடன் புரிந்துகொண்ட ஜீவனைக் கொண்டு ஐக்கியம் சாத்தியமில்லை. இங்கு ஆசிரியர் ஜீவ தத்துவத்தை எப்படி நிர்ணயம் செய்கின்றார்? ஜீவாத்மாவுக்கும்(நமக்கும்) இந்த உலகுக்குமுள்ள ஒருவித சம்பந்தத்தை காட்டுகின்றார்.

  அது சத்ய-மித்யா சம்பந்தம். சத்தியமான ஒரு பொருளுக்கும் மித்யாவான ஒன்றுக்கும் உள்ள சம்பந்தம். உதாரணம் மாலைநேர மங்கிய வெளிச்சத்தில் கயிற்றை பாம்பாகப் பார்த்தல். கயிற்றின் மீது பாம்பானது தோற்றிவிக்கப்பட்டுள்ளது. பொய்யாக தோன்றிக்கொண்டிருக்கும் பாம்பிற்கு உண்மையான கயிறு ஆதாரமாக உள்ளது. இதுவே சத்ய-மித்யா சம்பந்தம். ஆக, ஆத்மாவாகிய ஜீவன் சத்யம்; உலகம்(விஸ்வம்) மித்யா. ‘விஸ்வம்என்ற சொல்லிற்கு இரண்டு உதாரணங்களை அடைமொழிகளாக ஆசிரியர் இங்கு கொடுக்கிறார்


 (1) 3ர்பண த்3ருஷ்யமான நக3ரீ துல்யம்முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரிகின்ற நகரத்திற்கு சமம். பிரதிபிம்பத்திற்கு சமம்.

கண்ணாடி - ஜீவாத்மா; பிரதிபிம்ப நகரம் - உலகம். இந்த உதாரணத்தை மையமாகக் கொண்டு கீழ்வரும் கருத்துக்களை சேகரிக்கலாம்:

(i) பிரதிபிம்ப நகருக்கு கண்ணாடி ஆதாரம். அதுபோல இவ்வுலகிற்கு ஆத்மா ஆதாரம்; அதிஷ்டானம்

(ii) கண்ணாடி சுதந்திரமானது(சுதந்திர சத்தா); அதாவது வந்துசெல்கின்ற பிரதிபிம்பங்களால் கண்ணாடியின் இருப்பு பாதிக்கப்படுவதில்லை. பிரதிபிம்பம் கண்ணாடியைச் சார்ந்து இருக்கிறது(பரத சத்தா). எனில், ஆத்மா சுதந்திரமாக இருக்கிறது. இந்த உலகமானது ஆத்மாவைச் சார்ந்து இருக்கின்றது. சத்ய-மித்யா சம்பந்தம்.

(iii) கண்ணாடி ஒன்று. ஆனால் அதில் பிரதிபிம்பிக்கின்ற பொருட்கள் பலவாக உள்ளது. அதுபோல, ஆத்மா ஒன்றாக இருக்கின்றது(ஏகம்). ஆனால் உலகமோ விதவிதமாக இருக்கின்றது(த்வைதம்).

(iv) பிரதிபிம்பிக்கின்ற பொருள் சுத்தமாக இருந்தாலும், அசுத்தமாக இருந்தாலும் அது சுத்தமான இந்த கண்ணாடியைத் தொடுவதில்லை. அது சுத்த சொரூபம்; எதிரில் இருப்பதை அப்படியே பிரதிபிம்பிக்கும். அதுபோல ஆத்மா சுத்த சொரூபம். இந்த உலகின் சுத்த அசுத்தங்கள் ஆத்மாவை பாதிப்பதில்லை.

(v) கண்ணாடி அஸங்க சொரூபம். பிரதிபிம்பிக்கின்ற பொருளோடு எந்த சம்பந்தமுமில்லாமல் உள்ளது. அதுபோல உலகை விளக்கிக் கொண்டுள்ள ஆத்மாவிற்கு உலகுடன் எந்த சம்பந்தமும் உண்மையில் இல்லை. ஆத்மா அஸங்க சொரூபம். உலகம் மித்யாவாக உள்ள காரணத்தினால் அங்கு ஸங்கம் வைக்க எந்தவொன்றும் இல்லை.


(2) நிஜாந்தர்க3தம் விஸ்வம்தனக்குள்ளே இருக்கின்ற உலகத்துக்கு சமம் இந்த உலகம்; அதாவது கனவு உலகத்தை போன்றது இந்த உலகம். இதிலிருந்து, விழித்து கொண்டிருப்பவன்(விஷ்வன்_waker) - ஆத்மா; கனவுலகம் - நாம் அனுபவிக்கும் இந்த உலகத்திற்கு உதாரணம். இந்த உதாரணத்திலிருந்து கிடைக்கும் அம்சங்கள்:

இதிலும் நாம் ஏற்கனவே (1)-ல் பார்த்த ஐந்து கருத்துக்களும் பொருந்தி வரும். ஆகவே அவைகளல்லாமல் மீதமுள்ள மற்ற கருத்துக்களை இனி விசாரிக்கலாம்

(i) முன் உதாரணத்தில், கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பத்தை கண்ணாடியே பார்க்க முடியாது. அதில் தோன்றுவதைப் பார்க்க மூன்றாவதான இனியொரு ஆள் தேவைப்படுகிறது. ஆனால் இந்த உதாரணத்தில், எவனொருவனிடமிருந்து கனவுலகம் தோன்றுகிறதோ அவனே அதைப் பார்ப்பவனும் ஆகிறான்

(ii) கண்ணாடியில் பிரதிபிம்பம் தெரிய, வெளியில் உண்மையான ஒரு பொருள் இருக்க வேண்டுமே என்ற கேள்வி வரலாம். ஆனால் இந்த உதாரணத்தில் கனவுலகம் நமது பதிவுகளிலிருந்து (சம்ஸ்காரத்திலிருந்து) தோன்றுவதால், வெளியில் அப்படி ஒரு உலகம் இருக்கவேண்டிய தேவையில்லை. எவ்விதம் கனவில் பொய்யாக ஒரு உலகம் தோன்றுகிறதோ அதுபோல இந்த வெளிஉலகமும் பொய்யானது.   

(iii) கனவை உற்பத்தி செய்கிற நானே, அந்த கனவுலகில் ஒரு போலிநான்’- உற்பத்தி செய்து, ‘நான்அனுபவிக்கும் சூழ்நிலையையும் பொருட்களையும் தோற்றுவித்து, அதனால் வரும் இன்ப-துன்பத்தை அனுபவித்துக் கொண்டுமிருக்கிறேன். ஒருகால் அங்குநான்என்ற ஒருவன் இல்லையெனில் கனவை ஒரு திரைப்படத்தை போலல்லவா பார்த்துக் கொண்டிருப்போம். இன்பம் ஏது? துன்பம் ஏது? எனவே, கனவில் நானே கனவுலகை அனுபவிப்பவனாகவும், அனுபவிக்கும் பொருளாகவும், அனுபவிக்க உதவும் கருவியாகவும் மூன்றாகப் பிரிகின்றேன். திரிபுடி - பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்க்க உதவும் கருவி(இந்திரியங்கள்). கனவில் காணப்படும் திரிபுடி எவ்விதம் பொய்யோ, மூன்றும் ஒருவனிடமிருந்தே(கனவு காண்பவனிடமிருந்தே) உருவானதோ, அவ்விதம் இவ்வுலகமும் ஆத்மாவிடமிருந்து உருவானது; பொய்யானது.

இவ்விதம் கனவானது உன்னிடத்தில் இருப்பது போல் இந்த உலகமே உன்னிடத்தில்தான் இருக்கின்றது என ஆசிரியர் கூறுகிறார். எனில் அதை எனக்குள்ளே தானே பார்க்க வேண்டும்? ஆனால் அனுபவத்தில் அது எனக்கு வெளியில் தெரிகின்றதே! எனில்…..


பஷ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூ4தம் யதா2 நித்3ரயா

மாயயா பஹி: உத்பூ4தம் இவ மாயையினால் வெளியே தோன்றியிருப்பது போல தெரிகின்றது.

விழித்துக் கொண்டிருக்கும் போது கனவுலகம் தோன்றுவதில்லை. கனவுலகம் தோன்ற ஒருவன் முதலில் உறக்கத்தில் விழவேண்டும். இங்குநித்ராஎன்பது ஒருவிதமான சக்தி. அது என்ன சக்தியெனில், நித்திரையில் முதலில், ‘நான் விழித்திருப்பவன்என்ற அறிவானது மறைக்கப்படுகின்றது. இரண்டாவதாக கனவுலகம் தோன்றுகிறது. ஆகவேநித்ராஎன்பதற்கு இருவிதமான சக்திகள் உள்ளது. (1) விழித்திருப்பவனை மறைக்கும் சக்தி  (2) தனக்குள் ஒரு பிரபஞ்சத்தை தோற்றுவிக்கும் சக்தி.

 யதா2 நித்3ரயாஎப்படி உறக்கத்தினால்

எப்படி உறக்க-சக்தியானது நமக்குள் உள்ள உலகத்தை கனவில் வெளிவந்ததுபோலத் காட்டுகின்றதோ, அப்படி மாயா-சக்தியினால் ஆத்மாவின் உள்ளே இருக்கின்ற உலகம் வெளிவந்ததுபோலத் தெரிகின்றது. எனில் பிரபஞ்சம் உண்மையில் எங்கு உள்ளது?

ஆத்மனி - தன்னிடத்தில்; சச்சிதானந்த சொரூபத்தில்.

பஷ்யந்பார்த்துக் கொண்டு 

தன்னிடத்தில் உள்ள உலகத்தை எவன் மாயையினால் வெளியே உள்ளதாகக் பார்த்துக்கொண்டு

 

: ஸாக்ஷாத்குருதே ப்ரபோ34சமையே ஸ்வாத்மானமேவாத்3வயம்

ப்ரபோ34சமையே— (ஆத்மாவை பற்றிய)ஞானம் ஏற்படுகின்ற காலத்தில்,

ஸ்வாத்மானம் அத்3வயம் ஏவஇரண்டற்ற தன்னை

: ஸாக்ஷாத்குருதேயார் தெளிவாக அறிகிறாரோ

இவ்விதம் அறிகின்ற தக்ஷிணாமூர்த்தியை நான் நமஸ்காரம் செய்கின்றேன்தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே.

=> ‘பஷ்யந்என்பதன் விளக்கம்:

     கனவில் இருந்த திரிபுடி வேறுபாடுகள், விழித்தவுடன் மறைந்து விஷ்வன் ஒருவனாக மட்டும் எஞ்சுகிறது. ஞானம் வருவதற்குமுன் நமக்கு வெளியே இப்பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றோம். ஆனால் ஞானம் வந்ததற்கு பின்னும் நாம் இவ்வுலகத்தை அனுபவிக்கிறோமே என்றால், அவ்விதம் நடக்கத்தான் செய்யும். அதுதான் கனவுலகிற்கும் நனவுலகிற்குமுள்ள வேறுபாடு. இதையேபஷ்யந்எனும் சொல் காட்டுகின்றது. அதாவது அவன் உலகைப் பார்த்துக்கொண்டே தன்னை இரண்டற்றவனாக புரிந்து கொள்கிறான்

பஷ்யந்பார்த்துக் கொண்டு.

 (1) எந்த ஜீவன் முதலில் அறியாமையினால் தனக்கு வேறானதாகவும் வெளியில் இருப்பதாகவும் உலகத்தைப் பார்த்தானோ, அந்த ஜீவனே ஞானத்திற்கு பிறகு தன்னை இரண்டற்றவனாக உணர்கின்றான். ஆகவே இலக்கணப்படிபஷ்யந்என்ற சொல் லக்ஷணார்த்தம்; அல்லது ஹேது என்கிறோம். ஜீவனின் லக்ஷணத்தின் அடிப்படையில்பஷ்யந்’.

(2) கனவு உதாரணத்தில், கனவுலகமானது விழித்தவுடன் மறைந்துவிடுகிறது. கனவைப் போல்தான் இவ்வுலகமும் என கூறும்போது, ஞானம் வந்தவுடன் இந்த உலகமானது மறைந்துவிடுமா? எனில் அவ்விதம் நடப்பதில்லை. இதற்கு பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். வானம் நீல வண்ணம் அல்ல என்பதை விக்ஞானத்தின்மூலம் அறிந்த பிறகும் அந்த நீல வண்ணத்தை தொடர்ந்து நம்மால் பார்க்கமுடிகிறது. அதேபோல, சூரிய உதயம் என்பது உண்மையில் நடப்பதில்லை என்ற அறிவிற்கு பிறகும் அந்த அனுபவம் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது. ஆகவே மித்யா விஷயத்தில் இருவிதமான அனுபவங்கள் சாத்தியம். ஒன்று பாம்பு-கயிறு உதாரணத்தை போல, அது பொய் என தெரிந்தவுடன் அது மறைந்துவிடும். இனியொன்று கானல்நீரை போல, பொய் என்று தெரிந்தபிறகும் அது அனுபவத்திற்கு தொடர்ந்து இருக்கும். கண்ணை விட்டு மறையாது. தொடர்ந்து இருக்குமெனில் பின் ஞானத்தினால் என்ன பயன்? எனில், ஞானத்திற்கு முன் கானல்நீரினால் தாகம் தணியும் என அங்கு செல்கிறோம். ஆனால் ஞானத்திற்கு பின், தாகத்தை தணிக்க கானல்நீரை நோக்கிச் செல்ல மாட்டோம். அந்த பிரவ்ருத்தி இருக்காது

இங்குபஷ்யந்என்பது இந்த த்வைத பிரபஞ்சத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன்னைத் தவிர வேறு யாருமில்லை என்பதை உணர்கின்றான்.

------------------------------------------------------------------------------------------------------------------------------

சுலோகம்: 2

பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் பிராங் நிர்விகல்பம் புந:

மாயா கல்பித தேஷகாலகலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம் |

மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ : ச்வேச்சயா

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ||

बीजस्याऽन्तरिवाङ्कुरो जगदिदं प्राङ्गनिर्विकल्पं पुनः

मायाकल्पितदेशकालकलना वैचित्र्यचित्रीकृतम्

मायावीव विजृम्भयत्यपि महायोगीव यः स्वेच्छया

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥२॥


விதையில் உள்ள முளைபோல் இந்த உலகம் படைப்பிற்கு முன் வேற்றுமையற்றதாக இருந்து பின் மாயையால் கல்பிக்கப்பட்ட இடம், காலம் முதலியவற்றின் சேர்க்கையால் ஏற்பட்ட வேற்றுமையால் பலவகைப்பட்டதாக செய்யப்பட்டது. (இப்படியான உலகை) யார் மாயாவியைப்போலவும் பெரிய யோகியைப் போலவும் தன் ஸங்கல்பத்தினால் படைத்தாரோ அந்த அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).


விளக்கம்:

தத்பத விசாரம் நடைபெற இருக்கின்றது; ஈஷ்வர விசாரம். ஈஷ்வரனுக்கும் இவ்வுலகுக்கும் எப்படிப்பட்ட சம்பந்தம் உள்ளது என காட்டுகிறார் ஆசிரியர். முதலில் சில தவறான கருத்துக்களை எடுத்துக் கொண்டு அது எவ்விதம் தவறு என்பதை விசாரம் செய்வோம்

சிலர், ஈஷ்வரனை ஜகத் காரணம் எனக் கூறினாலும் ஈஷ்வரன் வேறு இந்த உலகம் வேறு என்கிறார்கள். ‘ப்ருதக் ஸத்தா’ - முற்றிலும் வேறு வேறு இருப்பு

சிலர் ஈஷ்வரனை ஜகத் காரணம் எனக் கூறி, உலகமானது ஈஷ்வரனின் அங்கமாக ஒரு உறுப்பாக இருப்பதாக சொல்கிறார்கள். சிலர் இந்த உலகம் என்று ஒன்று கிடையாது; சூன்யம் எனச் சொல்கிறார்கள். சிலர் இந்த உலகம் சுபாவமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும்ஜகத் சிருஷ்டம்’ - அதாவது படைக்கப்பட்டது என கூறுகிறார்கள். ஆனால் சங்கரர் இங்குஜகத் கல்பிதம்’ — ஏற்றிவைக்கப்பட்டது என்கிறார். இதுவே வேதாந்திகளான நம்முடைய வாதம். இதை சாஸ்திரம் படிப்படியாகக் கற்பிக்கிறது

முதல் படியிலேயேஇவ்வுலகம் பொய்என கூறினால், அதிஷ்டானத்தை அறியாத காரணத்தினால் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே அது சில படிமுறைகளைக் கையாளுகிறது

முதலில் சாஸ்திரம், இந்த ஜகத் படைக்கப்பட்டதாகவே எடுத்துகொள்கிறது. உலகம் படைக்கப்பட்டது எனில் படைத்தவன் யார்? அவருக்கு ஈஷ்வரன் என்ற பெயரைக் கொடுக்கின்றது. முதல்படி, ‘ஜகத் காரியம்; ஈஷ்வரன் காரணம்’. 

அடுத்த கேள்வி: எப்படிப்பட்ட காரணம்? பொதுவாக இருவகை காரணங்கள் உள்ளன

     (i) உபாதான காரணம்; சிருஷ்டி, ஸ்திதி, லய காரணம். .கா., பானைக்கு களிமண்

     (ii) நிமித்த காரணம்; சிருஷ்டி மாத்ர காரணம். தோற்றத்திற்கு மட்டும் காரணமாக இருப்பது - .கா., குயவன்.

இவ்வுலகிற்கு ஈஷ்வரனே உபாதான காரணம் மற்றும் நிமித்த காரணம் என்கிறது சாஸ்திரம். எதை நமக்கு புகட்ட சாஸ்திரம் இவ்விதம் சொல்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்தில் பானையை நாம் கையாளுகிறோம் என்றால் உண்மையில் அதன் உபாதான காரணமான களிமண்ணையே கையாளுகிறோம். அதுபோல, ஈஷ்வரனே இவ்வுலகின் உபாதான காரணம் எனில், இவ்வுலகை கையாளும்போது ஈஷ்வரனைத்தான் கையாளுகின்றோம். ஆகவே ஈஷ்வரனே இவ்வுலகமாகத் தோன்றுகின்றார். இந்த ஈஷ்வர திருஷ்டிக்காக இந்த உதாரணம் சாஸ்திரத்தினால் கொடுக்கப்படுகிறது. மற்றபடி இந்த உதாரணத்தை நீட்டித்தால், களிமண்ணானது சிறிதேனும் மாற்றத்திற்குட்பட்ட பின்னரே பானையாக மாறுகிறது. அதுபோல ஈஷ்வரன் மாற்றத்தை அடைகிறாரா? எனில், அப்போது சாஸ்திரம் நம்மை அடுத்த படிக்கு இட்டுச் செல்கிறது.

ஈஷ்வரனிடம் இரண்டு தத்துவங்கள் உள்ளன. ஒரு தத்துவம் - ப்ரம்ம தத்துவம்; சைத்தன்ய தத்துவம்; ஞானம். இதன் அடிப்படையில் அவர் இவ்வுலகிற்கு நிமித்த காரணமாக இருக்கின்றார். ஆகவே அவர் மாற்றமடையாமல் சங்கல்பத்தினால் இதை படைக்கின்றார்.

இனியொரு தத்துவத்தை சாஸ்திரம்மாயாஎன அறிமுகப்படுத்தி, அது இவ்வுலகிற்கு உபாதான காரணமாகின்றது எனக் கூறுகிறது. ஆகவே ஈஷ்வரனின் ப்ரம்ம தத்துவம் நிமித்த காரணமாகவும், மாயா தத்துவம் உபாதான காரணமாகவும், அவர் தன்னளவில் மாற்றமடையாமல் இவ்வுலகை படைக்கின்றார்

ஒரு பொருள் தன்னளவில் மாற்றமடையாமல் ஒன்றிற்கு உபாதான காரணமாக இருக்கின்றது எனில், அது அப்பொருளுக்கு 'விவர்த உபாதான காரணம்' என சாஸ்திரம் கூறுகின்றது. இருவகையான உபாதான காரணம்:

(1) முழுமையாக மாற்றமடைந்து இனியொன்றாக, காரியமாக மாறுவது. .கா., பால்-தயிராக மாறுதல்

(2) தான் மாற்றமடையாமல் இனியொன்றிற்கு உபாதான காரணமாக இருத்தல்.கா., கயிறு-பாம்பு

இந்த இரண்டாவது உதாரணத்தில், தான் மாற்றத்தை அடையாமல் உபாதான காரணமாக இரு காரியமானது மித்யா; அதாவது உண்மையில் இல்லை. கயிற்றில் பாம்பு மித்யா. அவ்விதமே ஈஷ்வரன் மாறாமல் இவ்வுலகிற்கு உபாதான காரணமாக இருக்கிறார் எனில் காரியமான இந்த ஜகத் மித்யா; உண்மையில் அது அங்கு இல்லை - கல்பிதம். இதுவே இரண்டாம் படி

பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் பிராங் நிர்விகல்பம் புன:

 

முதல்படியை உதாரணத்துடன் விளக்குகிறார் ஆசிரியர். தோன்றுவதற்குமுன் விதைக்குள்(பீஜஸ்யாந்த) வேறுபாடில்லாமல் இருந்த செடிமுளைகளைப்போல(அங்குர இவ), விகல்பத்துடன், வேறுபாடுகளுடன் தோன்றிக்கொண்டிருக்கும் இந்த உலகமானது, இது தோன்றுவதற்கு முன்(பிராங்) வேறுபாடில்லாமல்(நிர்விகல்பம்) இருந்தது. மீண்டும் சிருஷ்டி காலத்தில்(புன:) தோற்றத்திற்கு வந்தது. இங்கு புன: என்ற சொல், சிருஷ்டி ஆதி-அந்தம் அற்றதாக மற்றும் அவ்யக்த-வ்யக்த ரூபமாக மாறிக் கொண்டேயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதாவது முதல் சிருஷ்டி என்பது கிடையாது.

இதில் விதை உதாரணத்தில், விதையே செடிமுளைகளாக மாறுகிறது. அதுபோல ஈஷ்வரன் மாற்றமடைந்து சிருஷ்டியை படைக்கிறாரா என்ற கேள்வி வரும்போது…  

மாயா கல்பித தேஷகாலகலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம்

மாயையினால் ஏற்றிவைக்கப்பட்ட, கற்பனை செய்யப்பட்ட(மாயா கல்பித) இந்த ஆகாசம் மற்றும் கால(தேஷகால) சம்பந்தத்தினால்(கலனா) விதவிதமாக (வைசித்ர்ய) வரையப்பட்டது(சித்ரீக்ருதம்).

மாயையினால் இவ்வுலகம் தேசகாலத்தில் விதவிதமாக வரையப்பட்டதாக உள்ளது.

மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ : ச்வேச்சயா

படைத்தல் என்ற செயலுக்கு விதவிதமான காரகங்கள்(கருவி, உழைப்பு, இடம், யாருக்கு …) தேவை. ஈஷ்வரனுக்கு இதுபோன்ற காரகங்கள் என்னென்ன என்பதற்கு இங்கு உதாரணங்கள் கொடுக்கப்படுகின்றன. ஒன்று இந்திரஜாலம் செய்யும் மாயாவி. அவன் நமது இந்திரியங்களுக்கு பொய்யான ஒரு விஷயத்தை காட்டுகிறான். இனியொன்று யோகி. அவன் யோகசக்தியினால் சங்கல்பத்தினாலேயே ஒன்றை படைக்கிறான்; விஸ்வாமித்திரர் சொர்க்கத்தை உருவாக்கியதைப் போல. இவ்விதத்தில் ஈஷ்வரன் எந்தவிதமான காரகங்களும் இல்லாமல் சங்கல்பத்தினாலேயே இவ்வுலகத்தைப் படைக்கின்றார்

இந்த மாயாவிகள் பொருட்களை காண்பிப்பதைப் போல(மாயாவி இவ), பெரிய யோகியைப் போல(மஹா யோகி இவ) வெறும் இச்சையினால், சங்கல்பத்தினால் மட்டும் (ஸ்வ இச்சயா)

 இந்த பிரபஞ்சம் தோற்றுவிக்கப்படுகின்றது (விஜ்ரும்பயதி).

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

இப்படிப்பட்ட ஈஷ்வரனாக இருக்கின்ற தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்

முதல் சுலோகத்தின்படி, மித்யா பிரபஞ்சத்தின் ஆதாரம் ஜீவாத்மா. இரண்டாம் சுலோகத்தின்படி, மித்யா பிரபஞ்சத்தின் ஆதாரம் ஈஷ்வரன். எனில், ஜீவனும் ஈஷ்வரனும் உண்மையில் வேறல்ல. அப்படியெனில் இந்த மித்யா பிரபஞ்சத்தில் ப்ரம்மன் எப்படி நுழைந்துள்ளது? ஆதாரமாக இருக்கின்ற ஜீவனும், ஈஷ்வரனும் எப்படி மித்யா உலகில் நுழைந்தார்கள்


----------------------------------------------------------------------------------------------

சுலோகம்: 3

யஸ்யைவ ஸ்புரணம் ஸதாத்மகமஸத்கல்பார்தகம் பாஸதே

ஸாக்ஷாத்தத்வமஸீதி வேதவசஸா யோ போதயத்யாஶ்ரிதான் |

ய: ஸாக்ஷாத்கரணாத்பவேன்ன புரனாவ்றுத்திர்பவாம்போனிதௌ

தஸ்மை ஶ்ரீகுருமூர்தயே நம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே ||

यस्यैव स्फुरणं सदात्मकमसत्कल्पार्थकं भासते

साक्षात्तत्त्वमसीति वेदवचसा यो बोधयत्याश्रितान्

यत्साक्षात्करणाद्भवेन्न पुनरावृत्तिर्भवाम्भोनिधौ

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥३॥


எந்த ஆத்மா பிரகாசம் இல்லாத பொருளுக்கு நிகரான உலகத்தில் ஸத் ரூபமாக (= ஸத் ஸத் என்று) விளங்குகிறதோ, எவர் தன்னை அண்டியவர்களை தத்த்வமஸி (= நீ அதுவாக இருக்கிறாய்) என்ற வேத வாக்கியத்தால் நேரடியாக உபதேசிக்கிறாரோ, எந்த தத்துவத்தை அறிவதால் துயரக்கடலிற்கு மீண்டும் திரும்புதல் இல்லையோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).


=> முகவுரை:

அஸி பத விசாரம்இங்கு நடைபெறுகிறது; அதாவது ஐக்கியம் செய்யப்படுகிறது. ஒரு காரணம்(களிமண்), காரியமாக(பானையாக) மாறும்போது அதனுடன் இரு விஷயங்கள் புதிதாக சேர்ந்துள்ளன என்று பொருள்

    (1) நாம[பெயர்]   (2) ரூபம்[வடிவம்]. 

  அடுத்ததாக ஒரு பொருள் இருக்கின்றது எனக் கூறும்போது அது இரு அம்சத்தை குறிக்கிறது: (i) நாமரூப அம்சம்  (ii) அதிஷ்டான அம்சம். உதாரணமாக, ‘பானை இருக்கின்றதுஎனக் கூறும்போது,

  பானை இருக்கின்றது —> பானை(நாம மற்றும் ரூபம்);   

இருக்கின்றது (ஸத் அம்சம்)

இதிலுள்ள அந்தஸத்அம்சமானது காரணத்தினால்(cause) காரியத்திற்கு(effect) கிடைத்துள்ளது. ஆகவே காரணமானது காரியத்தில்ஸத்ரூபமாக வியாபித்துள்ளது.  

   காரணம் + நாமரூபம் = காரியம்

 நாமரூபம் என்பது உண்மையில் எந்தப் பொருளும் இல்லை. ஆகையினால் அதுஅஸத்’-க்கு சமம்; இல்லாததற்கு சமம்(கல்பம்). 


விளக்கம்:

யஸ்யைவ ஸ்புரணம் ஸதாத்மகமஸத்கல்பார்தகம் பாஸதே


ஸத் சொரூபமாக இருக்கின்ற(ஸதாத்மகம்) எந்த ஆத்மாவினுடைய/பரம்பொருளினுடைய வெளிப்பாடு(யஸ்ய ஏவ ஸ்புரணம்) அசத்திற்கு சமமான நாமரூபமாக இருக்கின்ற அர்த்தத்திற்குள் சென்று(அசத் கல்பார்தக3ம்) நமக்கு தெரிகின்றது/விளங்குகின்றது(பாஸதே). 

ஆத்மாவின் ஸத் சொரூபமானது, அஸத்திற்கு சமமான நாமரூபத்துடன் இருக்கின்ற ஒரு பொருளுக்குள்ஸத்தாகசென்றுள்ளது. ஆகவே ஸத் சொரூபமான பரப்ரம்மன் இந்த பொய்யான உலகத்தில்இருத்தல்_ ஸத்என்ற சொரூபமாக உள்ளே நுழைந்துள்ளது

ப்ரம்மம் தான் பொய்யான இந்த முழு பிரபஞ்சத்திலும் சத் சொரூபமாக இருக்கின்றது

ஸாக்ஷாத்தத்வமஸீதி வேதவசஸா யோ போதயத்யாஶ்ரிதான் |


எந்த பரம்பொருள் இந்த பொய்யான பிரபஞ்சத்தில்ஸத்தாகவியாபித்துள்ளதோ அந்த பரம்பொருளே(தத்) நீயாக இருக்கின்றாய்(த்வம் அஸி) என்று நேரடியாக(இதி சாக்ஷாத்) எந்த தக்ஷிணாமூர்த்தியானவர் உபதேசம் செய்கிறாரோ(: போதயதி) வேத வாக்கியத்தை (வேத வசஸா) தன்னிடம் வந்தவர்களுக்கு(ஆச்ரிதான்)

ஸாக்ஷாத் - சிஷ்யன் குருவின் உபதேசத்தை இந்திரியத்தினாலோ, அல்லது அனுமானத்தினாலோ புரிந்து கொள்ளாமல், தானாக(தனது சுயமாக) புரிந்து கொள்ளுதல் நடைபெறுகிறதுஅபரோக்ஷ ஞானம். எந்தவிதமான பிரமாணமும் இல்லாமல் நான் என்னை ஸ்வயமாக புரிந்து கொள்கிறேன்

வேத வசஸா - குருவானவர் ச்ரோத்ரியனாக இருக்கின்றார். பிரமாணத்தின் அடிப்படையில் இந்த உபதேசத்தை செய்கின்றார் என்பது பொருள்.

ஆச்ரிதான் - தகுதியுடையவர்களுக்குதான் உபதேசம் செய்யப்பட வேண்டும் என்பதாகத் தன்னை வந்தடைந்த சிரத்தையுடைவர்களுக்கு அவர் இதை போதித்தார் என்பது காட்டப்படுகிறது

ய: ஸாக்ஷாத்கரணாத்பவேன்ன புரனாவ்றுத்திர்பவாம்போனிதௌ

இந்த ஞானத்தின் பலன் கூறப்படுகிறது

எந்த தத்துவத்தை நேரடியாக, தெளிவாக அறிந்துகொண்டால்(: சாக்ஷாத் கரணாத்) சம்சாரக் கடலில் (பவ அம்போனிதௌ) மீண்டும் வருதல் என்பது கிடையாது; ஜன்மம் கிடையாது (புன: ஆவ்ருத்தி: பவேத்)

இந்த ஞானத்தினால் மீண்டும் பிறத்தல் கிடையாது. ஆகவே ஜீவன் முக்திக்கு பின்னர் உடலை விடும்போது கடைசி மரணம் நடக்கிறது; அதாவது அவர்கள் மோக்ஷத்தை அடைகிறார்கள்.

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

இப்படிப்பட்ட ஈஷ்வரனாக இருக்கின்ற தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

சுலோகம்: 4

நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹா தீபப்ரபாபாஸ்வரம்

ஞானம் யஸ்யது சக்ஷுராதி கரண த்வாரா பஹிஸ்பந்ததே |

ஜானா மீதி தமேவ பாந்தமனுபாத்யேதத் ஸமஸ்தம் ஜகத்

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ||

नानाच्छिद्रघटोदरस्थितमहादीपप्रभा भास्वरं

ज्ञानं यस्य तु चक्षुरादिकरणद्वारा बहिः स्पन्दते

जानामीति तमेव भान्तमनुभात्येतत्समस्तं जगत्

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥४॥


பல துவாரங்களைக் கொண்ட பானைக்குள் வைக்கப்பட்ட பெரிய தீபத்தின் ஒளிபோன்று எந்த ஆத்மாவினுடைய ஞானமானது கண் முதலிய புலன்களின் வழியாக வெளியே செல்கிறதோ, அந்த தானாக விளங்குகின்ற(ஆத்ம தத்துவத்தை) தொடர்ந்து இந்த முழு உலகமும் நான் அறிகிறேன் என்று அறிகிறதோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).


=> முகவுரை:

      முதல் மூன்று சுலோகத்தில் சாரம் முடிவடைகிறது. ஏற்கனவே பார்த்த கருத்துக்களில் ஏதேனும் ஒன்றின் விளக்கம் இனிவரும் சுலோகங்களில் வரவுள்ளது. இந்த சுலோகத்தில்,

(1) ஸத் சொரூபமும் சித் சொரூபமும் வேறல்ல என காட்டப்படுகிறது. ‘ஸதேவ சித்; சிதேவ ஸத்’.

(2) ப்ரம்மத்தின் ஞானம்தான் ஜகத்திலும் ஞானமாக இருக்கின்றது. ‘ஆத்ம ஸத்தா ப்ரகாசாப்யாம் ஜகத: ஸத்தா ப்ரகாசெள’ - ஆத்மாவின் ஸத் மற்றும் பிரகாசத்தினால் ஜகத்திற்கு ஸத் மற்றும் பிரகாசம் வருகின்றது

(1) எப்படி ஸத்-தையும், சித்-தையும் பிரிக்க முடியாது

ஒரு பொருள் இருக்கின்றது என்று சொல்லவேண்டுமெனில் அதனோடு ஞானம் என்பதை சேர்க்காமல் அதனுடைய இருத்தலே சித்திக்காதுஞானாத் பா4 சித்3தி4: —  அறிவினால் ஒரு பொருளின் இருத்தல் ஏற்படுகின்றது; அப்பொருள் அறிவிற்கு விஷயமாகும்போதே அதன் இருப்பும் நிகழ்கின்றது. எது இருக்கின்றதோ(அஸ்தி) அது விளங்கவேண்டும்(பா4தி). விளங்கவேண்டுமெனில் அது அறிவோடு சம்பந்தப்பட வேண்டும். ஆகவே ஸத் வேறு சித் வேறு அல்ல.

(2) ப்ரம்மத்தின் ஸத் சொரூபம் பிரஞ்சம் முழுதும் வியாபித்துள்ளது என சென்ற சுலோகத்தில் பார்த்தோம். மேலும் ஸத்-தையும், சித்-தையும் பிரிக்க முடியாது எனவும் பார்த்தோம். எனில், பிரபஞ்சம் முழுதும் ப்ரம்மத்தின் சித் சொரூபமும் இருக்கவேண்டும். சித் சொரூபமும் இருக்கிறதெனில் அது எப்போதும் விளங்கிக்கொண்டே இருத்தல் வேண்டும். ஆனால் நம் அனுபவமானது அதற்கு முரணானதாக உள்ளது. தூங்கும்பொழுது இவ்வுலகம் இருப்பதில்லையே, சென்றுவிடுகிறதே; ஜடமாக இருக்கின்றதே; போன்ற சந்தேகம் வரும்பொழுது இந்த சுலோகம் அதற்கு பதில் சொல்கிறது.  

எவ்விதம் பரமாத்மாவின் ஸத்-தை வெளிப்படுத்த இவ்வுலகிற்கு நாமரூபம் தேவைப்படுகிறதோ, அவ்விதம் ஆத்மாவின் ஞானசொரூபம் வெளிப்பட வேண்டுமென்றால் மனம் என்ற கருவியின் உதவி தேவை. மனதினுடைய உதவி ஆத்மாவை விளக்குவதற்காக அல்ல; மனதின் உதவி ஆத்மாவின் ஞானசொரூபத்தை, சைத்தன்யத்தை வெளிப்படுத்துவதற்காக

இக்கருத்தை இங்கு ஆசிரியர் ஒரு உதாரணத்தின் மூலமாக விளக்குகிறார். ஐந்து துவாரங்களைக் கொண்டு பானை ஒன்று இருட்டறையில் வைக்கப்பட்ட தீபத்தின் மேல் மூடப்பட்டுள்ளது. தீபத்தின் ஒளியானது இந்த துவாரங்களின் வழியாக வெளிவந்து அந்த அறையிலுள்ள பொருட்களைப் பிரகாசிக்கிறது. இதில் இந்த பானை நம் உடலையும், ஐந்து துவாரங்கள் நமது புலன்களையும், தீபம் ஆத்மாவையும்(சைத்தன்யத்தையும்) குறிக்கிறது. அதாவது பானைக்குள் இருக்கின்ற தீபம் ஓட்டைகளின் வழியாக வெளிவிஷயத்தை பிரகாசப்படுத்துவது போல, இந்த உடலிலுள்ள ஆத்மா, மனதின் மூலமாக, புலன்களின் மூலமாக வெளிவிஷயத்தை பிரகாசிக்கின்றது. உலகத்திற்கென்றோ, மனதிற்கென்றோ அல்லது புலன்களுக்கென்றோ விளங்குதல் என்ற தன்மை கிடையாது. இவைகளின் விளங்குதல் ஆத்மாவின் பிரகாசத்தை சார்ந்தது.


விளக்கம்:

 நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹா தீபப்ரபாபாஸ்வரம்

விதவிதமான துவாரங்கள் கொண்ட பானையின்(நானாச்சித்ர கட) மத்தியில் இருக்கின்ற (உதர ஸ்தித) பெரிய தீபத்தினுடைய ஒளியின் வெளிப்பாடு (மஹா தீப ப்ரபா பாஸ்வரம்),

இரண்டாம் வரியில் உள்ள ஞானம் என்பதற்கு இந்த முதல் வரி அடைமொழி.

ஞானம் யஸ்யது சக்ஷுராதி கரண த்வாரா பஹிஸ்பந்ததே

இப்படிப்பட்ட ப்ரம்மத்தினுடைய/தக்ஷிணாமூர்த்தியினுடைய ஞானம்(ஞானம் யஸ்ய) கண் முதலிய கரணங்களின் வழியாக வெளியே செல்கின்றது (சக்ஷுராதி கரண த்வாரா பஹி: ஸ்பந்ததே); எந்த ஆத்மாவினுடைய ஞானம்(மனதில் பிரதிபிம்பித்து இந்திரியங்களின் வழியாக) வெளியே சென்று அனைத்தையும் பிரகாசிக்கிறதோ என்பது பொருள். இருவகை ஞானமுண்டு. எல்லா இடத்திலும் எப்போதுமிருக்கின்ற ஞானம் எங்கும் செல்வதில்லை. இங்கு பேசப்படுகின்ற ஞானம், பிரதிபிம்ப ஞானம்.

ஜானா மீதி தமேவ பாந்தமனுபாத்யேதத் ஸமஸ்தம் ஜகத்

நான் அறிகின்றேன் என்று (ஜானாமி இதி) யாருடைய ஞானத்தினால்(தம் பாந்தம்) இந்த பிரபஞ்சமுமே விளங்குகின்றதோ (ஸமஸ்தம் ஜகத் அனுபாதி)

எந்தவொரு ஞான சொரூபத்தினால்நான் அறிகின்றேன்அறிகின்றேன்…’ என்று சொல்கிறோமோ அதைத் தொடர்ந்து இவ்வுலகம்  விளங்குகின்றது

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.

-----------------------------------------------------------------------------------------------

சுலோகம்:5

தேஹம் ப்ராணமபீம்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச ஶூன்யம் விது:

ஸ்த்ரீ பாலாம்த ஜடோபமாஸ்த்வஹமிதி ப்ராம்தாப்றுஶம் வாதின: |

மாயாஶக்தி விலாஸகல்பித மஹாவ்யாமோஹ ஸம்ஹாரிணே

தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே நம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே ||

देहं प्राणमपीन्द्रियाण्यपि चलां बुद्धिं शून्यं विदुः

स्त्रीबालान्धजडोपमास्त्वहमिति भ्रान्ता भृशं वादिनः

मायाशक्तिविलासकल्पितमहाव्यामोहसंहारिणे

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥५॥


குழந்தைகள், சிறு-பெண்கள், குருடர்கள், மூடர்கள் இவர்களுக்கு நிகரான மிகவும் குழப்பம் அடைந்த வாதம் புரிபவர்கள், உடலையும் பிராணனையும் இந்திரியங்களையும், சலனமான புத்தியையும், சூன்பத்தையும்நான்என்று(= ஆத்மா என்று) அறிந்து கொண்டிருக்கிறார்கள். மாயாசக்தியால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பெரிய மயக்கத்தை அடியோடு அழிக்கின்ற அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது). 

=> முகவுரை:

     இங்கு இரண்டு கருத்துக்கள் அடங்கியுள்ளது:

   (1) அனாத்ம நிஷேத:, எனக்கு புரம்பான ஒன்றை அதாவது அனாத்மாவை நீக்குதல். மோக்ஷம் என்பது இரண்டு படியில் அடையப்படுகிறது

       (i) ‘நான்என்ற ஆத்மாவின் தன்மையை அறிவது.

       (ii) ‘நான் யார் அல்லஎன்பதை தெரிந்து கொள்வது

இதில் எவைகளெல்லாம் நான் அல்ல என்ற அறிவு இங்கு முதல் வரியில் விளக்கப்படுகிறது. அனாத்மா எனில் எனக்கு அந்நியமானது; நான் அல்லாதது என்பது பொருள். நாம் எவைகளிடத்திலெல்லாம்நான்என்ற புத்தியை வைக்கிறோமோ, ஆத்மா என்று தவறாக நினைக்கிறோமோ அதை, அதாவது அனாத்மாவை சாஸ்திரம் ஐந்தாகப் பிரித்துள்ளது. அவைகள் பஞ்ச கோஷம் எனப்படும். அன்னமய கோஷம், பிராணமய கோஷம், மனோமய கோஷம், விக்ஞானமய கோஷம் மற்றும் ஆனந்தமய கோஷம். இவைகளிலிருந்துநான்என்ற புத்தியை நீக்க சாஸ்திரம் பிரயத்தனம் செய்கிறது. இங்கு முதலிரண்டு வரிகள் அனாத்மாவிலிருந்து நம்மை நாம் பிரித்துக் கொள்ளவேண்டும் எனக் கூறுகிறது.  

   (2) குரு உபதேஷாத் மோஹ நிவ்ருத்தி:, குருவினுடைய உபதேசத்தினால்தான் இந்த அனாத்ம மயக்கம் அல்லது மோஹம் நீங்கும்.


விளக்கம்:

தேஹம் ப்ராணமபீம்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச ஶூன்யம் விது:

ஸ்த்ரீ பாலாம்த ஜடோபமாஸ்த்வஹமிதி ப்ராம்தாப்றுஶம் வாதின: |

அன்னமய கோஷம் அல்லது ஸ்தூல சரீரத்தை(தேஹம்), பிராணமய கோஷம் அல்லது பிராணனை, பசி மற்றும் தாகத்தை(பிராணம்), மனோமய கோஷம் அல்லது மன மற்றும் இந்திரியங்களை (இந்த்ரியாணி) விக்ஞானமய கோஷம் அல்லது சலனமான புத்தியை/க்ஷணிக விக்ஞானத்தை(சலாம் புத்திம்) நான் என்று (அஹமிதி) ஆத்ம-அனாத்ம விஷயத்தில் குழம்பியவர்கள்(ப்ராந்தா) மிக உறுதியாக, ஆழமாக வாதம் புரிகிறார்கள்(ப்ருசம் வாதின:). மேலும் சிலர் தங்களை சூன்யம் என்றும் அறிகிறார்கள்(சூன்யம் விது:), வாதிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சில உதாரணத்தை ஆசிரியர் கூறுகிறார்.

ஜடத்திற்கு சமமானவர்கள்(ஜட உபமா:), குருடர்களுக்கு சமமானவர்கள்(அந்த உபமா:) உறவுகளாலும் உணர்வுகளாலும் பந்தப்பட்டுள்ள கள்ளமற்ற சிறுமியர்க்கு சமமானவர்கள்(ஸ்த்ரீ பாலா) இப்படிப்பட்டவர்களாக இந்த அக்ஞானிகள் மேற்கூரிய விதத்தில் வாதம் செய்கிறார்கள்

மாயாஶக்தி விலாஸகல்பித மஹாவ்யாமோஹ ஸம்ஹாரிணே

இரண்டாவதாக கூறப்பட்டகுரு உபதேஷாத் மோஹ நிவ்ருத்தி:என்ற கருத்து வருகிறது. மறைத்தல் மற்றும் தோற்றுவித்தல் எனும் சக்தியையுடைய மாயையின் (மாயாசக்தி) விளையாட்டால்/செயல்பாட்டால்(விலாச) பொய்யாக தோற்றுவிக்கப்பட்ட(கல்பித) பெரிய மயக்கத்தை(மஹா வ்யாமோஹ) அதாவது முதலிரண்டு வரிகளில் குறிப்பிடப்பட்ட மோஹத்தை அல்லது மயக்கத்தை(வ்யாமோஹ) நாசம் செய்பவரே(ஸம்ஹாரிணே)

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.


-----------------------------------------------------------------------------------------------

சுலோகம்:6 

ராஹு கிரஸ்த திவாகரேந்து ஸத்ருசோ மாயா ஸமாச்சாதநாத்

ஸந்மாத்ர: கரணோப சம்ஹரணதோ யோ பூத் ஸுஷுப்த: புமான் |

ப்ராகச்வாப் சமிதி பிரபோத ஸமயே ய: ப்ரத்யபிக்ஞாயதே

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ||

राहुग्रस्तदिवाकरेन्दुसदृशो मायासमाच्छादनात्

सन्मात्रः करणोपसंहरणतो योऽभूत्सुषुप्तः पुमान् ।

प्रागस्वाप्समिति प्रबोधसमये यः प्रत्यभिज्ञायते

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥६॥


மாயையால் மறைக்கப்பட்டதனால் எந்த புருஷனானவர் ராஹுவால் மறைக்கப்பட்ட சூரிய சந்திரனை போன்றவராகவும் கரணங்கள் அடங்கியதால் உறக்க நிலையில் ஸத்சொரூபமாக மட்டும் இருக்கிறாரோ, எவர் விழிப்பு நிலையில் முன் நான் சுகமாக தூங்கினேன் என்று ஞாபகப்படுத்திக் கொண்டு இருந்து வருகிறாரோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).


=> முகவுரை:

இந்த சுலோகத்தின் சாரம் என்னவெனில் இங்கு சூன்ய வாதம் நிஷேதம் செய்யப்படுகிறது. தர்க்க சாஸ்திரத்தில் ‘ப்ரதம மல்ல நியாயம்’ என்றொரு நியாயம் உள்ளது. ஏற்கனவே சிறு சிறு ஆட்களையெல்லாம் வென்றவனை ஜெயித்துவிட்டால் அது மற்றவர்களையெல்லாம் வென்றதற்கு சமம் ஆகிறது. இதன்படி உடல், பிராணன், மனம் முதலிய அனாத்மாக்களை ஆத்மா என கூறிய அனைத்து வாதத்தையும் ஏற்கனவே நிராகரணம் செய்துவிட்ட நின்று கொண்டிருக்கும் சூன்யவாதத்தை நீக்குவதன் மூலம் முன் சுலோகத்தில் கூறிய அனைத்து வாதத்தையும் நீக்குகிறோம். 

சூன்ய வாதம்: ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படும் பொருளும் இல்லை. அதாவது ப்ரமாதா, ப்ரமாணம் மற்றும் ப்ரமேயம் என எதுவும் அங்கு இல்லை. சூன்யம் மட்டுமே உள்ளது.

பதில்: 

(1) ஒன்றை நாம் அனுபவிக்காமலிருக்க இரண்டு காரணங்களைக் கூறலாம். (i) அனுபவிக்கப்படும் பொருளே இல்லாமல் இருத்தல். (ii) அனுபவிக்கப்படும் பொருளானது இருந்தும், அது மறைக்கப்பட்டிருந்தால் அது நம் அனுபவத்திற்கு வராமலிருக்கலாம். 

இதில் ஆழ்ந்த உறக்கத்தில் எதுவும் இல்லாததற்கு காரணமாக சூன்யவாதி முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தை கூறுகிறான். நாம்(வேதாந்தி) இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தை கூறுகிறோம். எனில் அது இருந்தும் எப்படி மறைக்கப்படுகின்றது? அதற்கு ஆசிரியர் உதாரணத்துடன் பதிலுரைக்கிறார். 


ராஹு கிரஸ்த திவாகரேந்து சத்ருசோ மாயா சமாச் சாதநாத்

சூரியனும் சந்திரனும் ராஹுவினால் மறைக்கப்பட்ட காரணத்தினால் எப்படி தெரியவில்லையோ அதுபோல ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பவன் மறைக்கப்பட்டதனால் அவனை நாம் அறிவதில்லை. 

=> ஆழ்ந்த உறக்கத்தில் ‘நான்’ இருந்தேன் என நிரூபித்தல்:

ஆழ்ந்த உறக்கத்திலும் ‘நான்’ இருந்தேன் என்பதை நிரூபணம் செய்ய, முதலில் 3 வார்த்தைகளை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

(1) ஞானம் (அ) ப்ரத்யக்ஷம் - வெளிவிஷயத்தை நேரடியாகப் பார்த்தவுடன், மனதில் ஏற்படுகின்ற அறிவிற்கு ஞானம் அல்லது ப்ரத்யக்ஷம் என்று பெயர். எ.கா., ராமசாமி என்பவரை முதல்முறையாக நேரடியாகப் பார்க்கும்போது தோன்றும் எண்ணம். Cognition. 

(2) ஸ்ம்ருதி - ஏற்கனவே ஏற்பட்ட ஞானம் மனதில் ஸம்ஸ்காரமாக, ஞாபக சக்தியாக இருக்கிறது. அனுபவிக்கப்பட்ட பொருளை மனதில் நினைத்துப் பார்த்தல் ஸ்ம்ருதி என்று பெயர். எ.கா., அடுத்த நாள் ‘ராமசாமியை தெரியுமா?’ என்ற கிருஷ்ணசாமியின் கேள்விக்கு, நேற்று பார்த்த ராமசாமியை நினைவுபடுத்தி ‘தெரியும்’ என பதிலுரைப்பது.

(3) ப்ரத்ய பிக்ஞா - ஏற்கனவே அனுபவிக்கப்பட்ட ஒன்று, மீண்டும் அனுபவத்திற்கு வரும்பொழுது ஸ்ம்ருதியின் துணைகொண்டு அறிந்து கொள்வதற்கு பெயர் ப்ரத்ய பிக்ஞா. எ.கா., மூன்றாம் நாள் மீண்டும் ராமசாமியை பார்க்கும் போது, ஏற்கனவே பார்த்த ஞாபகத்தின் துணைக்கொண்டு மனதில் வரும் எண்ணத்தினால் அவரை அறிந்துகொள்வது. Re-Cognition. 

ப்ரத்ய பிக்ஞா = ப்ரத்யக்ஷம் (அ) ஞானம் + ஸ்ம்ருதி:

காலையில் விழித்தவுடன், ‘நான் நன்கு உறங்கினேன்’ என்கிறோம். இதில் ‘நான்’ என்பது ப்ரத்ய பிக்ஞா-வுக்கு பொருளாகிறது. உறக்கம் என்பது ‘ஸ்ம்ருதி’-க்கு பொருளாகிறது. ஸ்ம்ருதி-யின் லக்ஷணம், நான் ஒன்றை அனுபவித்தேன் ஆனால் இப்போது அதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அது என் கண்முன் கிடையாது; ஞாபகத்தில் மட்டுமே உள்ளது. ஆகவே உறக்கத்தை நான் அனுபவித்தேன்; ஆனால் இப்போது நான் அதைக் கூறும்போது நான் உறங்கிக் கொண்டிருக்கவில்லை.

ப்ரத்ய பிக்ஞா-வின் லக்ஷணம், ஏற்கனவே அனுபவித்த ஒன்று, இப்போது கூறும்போதும் அனுபவித்திலிருக்க வேண்டும். ஆகவே தூங்கும்போது இருந்த  ‘நான்’, இப்போது ‘நான் நன்கு உறங்கினேன்’ என்று கூறும்போதும் அதே ‘நான்’ அனுபவத்திலேயே இருக்கிறது. அப்படியெனில் ‘நான்’ ஆழ்ந்த உறக்கத்தின் போதும் இருந்தேன்; அதாவது விழிப்பு நிலை, உறக்கம் என்ற இரண்டு அவஸ்தையிலும் நான் இருக்கின்றேன். அனுபவிக்காத ஒரு விஷயம், ஸ்மிருதிக்கும் வராது, ப்ரத்ய பிக்ஞாவிற்கும் வராது. 

எனில் ஆழ்ந்த உறக்கத்தில் ‘நான்’ இருந்தும் ஏன் எனக்கு தெரியவில்லை? கரணங்கள் ஒடுக்கத்தை அடைந்திருந்த காரணத்தினால் ‘நான்’ இருந்தும் மறைக்கப்பட்டிருந்தேன். இப்போது விளக்கத்திற்குச் சென்றால்…


விளக்கம்:

ராஹு கிரஸ்த திவாகரேந்து ஸத்ருசோ மாயா ஸமாச்சாதநாத்

சூரிய கிரஹணம் மற்றும் சந்திர கிரஹணம் சமயத்தில் ராகுவினால் மறைக்கப்பட்ட சூரிய சந்திரன்(ராஹு கிரஸ்த திவாகர இந்து), அவைகள் மறைக்கப்பட்ட காரணத்தினால் நம்மால் அனுபவிக்கப்படவில்லை. அதற்குச் சமமானது(சத்ருச:)

ஸந்மாத்ர: கரணோப சம்ஹரணதோ யோ பூத் ஸுஷுப்த: புமான்

எந்த ஜீவன்/மனிதன் (ய: புமான்), ஸத் சொரூபமாக மட்டும் இருந்துகொண்டு(ஸந்மாத்ர:) உறங்கியவன் ஆகிவிட்டான்(ஸுஷுப்த: அபூத்) மனம் எனும் கரணம் ஒடுங்கிவிட்ட காரணத்தினால்(கரண உபசம்ஹரண த:), ராகுவினால் மறைக்கப்பட்ட சூரிய சந்திரனைப்போல அவன் மறைக்கப்பட்டவன்போல் இருக்கின்றான். மாயையினால் நன்கு மூடப்பட்டிருக்கின்றான்(மாயா சமாச் சாதநாத்). மாயையின் சொரூபம் அக்ஞானம்; ஆகவே உறக்கத்தில் இவன் அறியாமையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். மாயையின் இரு சக்தியில் ஒன்றான விக்ஷேபமும்கூட செய்ய முடியாதவளவு, கரணங்கள் ஒடுக்கப்பட்டதனால் மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ளான்.

ஆகவே ஆழ்ந்த உறக்கத்தில் ‘நான்’ இருக்கின்றேன்; ஆனால் கருவிகள் ஒடுங்கிவிட்ட காரணத்தினால், இருக்கின்றேன் என்ற ஞானம் கிடையாது.

ப்ராகச்வாப் சமிதி பிரபோத ஸமயே ய: ப்ரத்யபிக்ஞாயதே

இதற்குமுன் நான் உறங்கினேன் என்று(ப்ராக் அச்வாப்சம் இதி) இந்த ஜாக்ரத் அவஸ்தையில் யார் ஞாபகப்படுத்தி/புரிந்து கொள்கிறாரோ (பிரபோத ஸமயே ய: ப்ரத்யபிக்ஞாயதே)

உறங்கிக் கொண்டிருந்த அந்த நானே இந்த விழிப்புநிலையில் இருக்கின்ற இந்த நானாக இருக்கின்றேன் என யார் அறிந்து கொள்கிறாரோ, 

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.

இப்படிப்பட்ட ஜீவ சொரூபமாகவே இருக்கின்ற தக்ஷிணாமூர்த்திக்கு நமஸ்காரம் எனக் கூறி ஜீவ-ஈஷ்வர ஐக்கியத்தை செய்கின்றார். 

————————————————————————————————————————————————————————

சுலோகம்:7

பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷு ததா ஸர்வாஸ்வவஸ்தாஸ்வபி

வ்யாவ்றுத்தா ஸ்வனு வர்தமான மஹமித்யம்த: ஸ்புரம்தம் ஸதா |

ஸ்வாத்மானம் ப்ரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா

தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே நம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே ||

बाल्यादिष्वपि जाग्रदादिषु तथा सर्वास्ववस्थास्वपि

व्यावृत्तास्वनुवर्तमानमहमित्यन्तः स्फुरन्तं सदा ।

स्वात्मानं प्रकटीकरोति भजतां यो मुद्रयाभद्रया

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥७॥


மாறி மாறி வருகின்ற இளமைப்பருவம் முதலியவைகளிலும் அவ்விதமே விழிப்பு முதலிய எல்லா அவஸ்தைகளிலும் தொடர்ந்து வருகின்றதும், உள்ளே எப்பொழுதும் ‘நான்’ என்று விளங்கி வருகின்றதான தனது ஆத்ம தத்துவத்தை சிஷ்யர்களுக்கு எவர் மங்களமான சின் முத்திரையினால் வெளிப்படுத்திக் காட்டினாரோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).


=> முகவுரை:

இந்த சுலோகத்தில் மீண்டும் ‘த்வம்’ பத விவேகம், ஜீவாத்ம சொரூப விவேகம், யுக்தியுடன் செய்யப்படுகிறது. யார் ஒன்றை அனுபவிக்கிறார்களோ அவர்கள்தான் அந்த அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்லமுடியும். சூன்யவாதி, ஆழ்ந்த உறக்கத்தில் ‘நான்’ எனும் அனுபவம் இல்லையாதலால் அனைத்தும் சூன்யம் என்று கூறினான். அதை நிராகரணம் செய்யும் பொருட்டு, ‘நான்’ என்ற அஹங்காரமானது ஜாக்ரத்(விழிப்பு நிலை), ஸ்வப்ன(கனவு) மற்றும் சுசுப்தி(ஆழ்ந்த உறக்கம்) இந்த மூன்று அவஸ்தையிலும் தொடர்ந்து இருப்பதாக கூறினோம். மேலும் ‘எது தொடர்ந்து இருக்கின்றதோ அது சத்தியம்’ என கூறப்படுவதால் இந்த மூன்று நிலையையும் அனுபவிப்பவனாக இருக்கும் அஹங்காரம்தான் ஆத்மாவா? என்ற கேள்வியானது சந்தேகத்தை விளைவிக்கலாம். இதை ஆசிரியர் ஒரு யுக்தியுடன் நீக்குகிறார். அந்த யுக்தியானது, ‘வ்யாவ்ருத்தி-அனுவ்ருத்தி நியாய:’ என்பதாகும். இதுவே ‘அந்வய-வ்யதிரேக நியாயம்’ என்றும் அழைக்கப்படும். 

இதை விளக்க ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். இந்த ஸ்தூல உடலை வியாபித்துள்ள சைத்தன்யமும்(அறிவும்), இந்த உடலும் ஒன்றா? அல்லது வேறுபட்டதா? இது பிரிக்கக் கூடியதா? ஜாக்ரத் அவஸ்தை முழுதும் உடலும் இந்த அறிவும் சேர்ந்தே அனுபவிக்கப்படுவதாக உள்ளது. ஸ்வப்ன அவஸ்தையில் அறிவு மட்டுமே செயல்படுகிறது, ஆனால் இந்த ஸ்தூல உடல் ஜடமாக ஆகிவிடுகிறது. சரீரத்திலிருக்கின்ற சைத்தன்யம் அதனோடு சம்பந்தப்படவில்லை. இதிலிருந்து ஸ்தூல உடலும் அதிலிருக்கின்ற சைத்தன்யமும் வேறு வேறு என்பது தெளிவாகிறது. இவ்விதம் வ்யாவ்ருத்தி-அனுவ்ருத்தி நியாயத்தின் மூலமாக இருவேறு நிலையில் நின்று இரண்டும் பிரித்துக்காட்டப்படுகிறது. ஆகவே ஒன்றாகவே இருப்பதுபோலத் தெரியும் இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட, இந்த வ்யாவ்ருத்தி-அனுவ்ருத்தி நியாயமானது பயன்படுத்தப்படுகிறது — ப்ருதக்துவ சித்தி:. இது முதல் படி. இப்போது இதில் எது சத்தியம்? எனும்போது, எது தொடர்ந்து இருக்கின்றதோ அது சத்தியம். அனுவ்ருத்தி என்றால் தொடர்ந்து இருத்தல்; வ்யாவ்ருத்தி என்றால் இல்லாமல்போதல்; அதன் இருப்பு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல்போதல். இதைக்கொண்டு ஆசிரியர், சைத்தன்யம் தொடர்ந்து உள்ளது; மற்ற அவஸ்தைகள் வந்து வந்து செல்கின்றது எனக் காட்டுகிறார். ‘ஆத்மா’ — அனுவ்ருத்தி; சரீரங்கள் மற்றும் அனுபவங்கள் — வ்யாவ்ருத்தி.

 

விளக்கம்:

பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷு ததா ஸர்வாஸ்வவஸ்தாஸ்வபி

குழந்தைப்பருவம் முதலிய நிலைகளில்(பால்யாதிஷு) விழிப்பு நிலை முதலிய அனுபவங்களிலும் (ஜாக்ரதாதிஷு அபி) அவ்விதம் மற்ற அவஸ்தைகளிலும் (ததா சர்வாசு அவஸ்தாசு அபி)

வ்யாவ்றுத்தா ஸ்வனு வர்தமான மஹமித்யம்த: ஸ்புரம்தம் ஸதா |

வந்துசெல்லும் இவைகள் (வ்யாவ்ருத்தாஸு) எப்பொழுதும், எல்லா நிலைகளிலும் தொடர்ந்து இருப்பது(சதா அனுவர்த்தமானம்) மனதிற்குள்ளேயே ஒளிர்கின்ற, விளங்கிக்கொண்டிருக்கின்ற(அந்த ஸ்புரந்தம்) ‘நான்’ என்பதுதான்(அஹம் இதி)

* பால்ய ஆதிஷு — குழந்தைப்பருவம், இளமைப் பருவம், வயோதிகம் — இவைகள் வந்துசெல்வதால் வ்யாவ்ருத்தி; ‘நான்’ இவை மூன்றிலும் தொடர்ந்து இருப்பதால்(அனுவ்ருத்தி) நான் வேறு; இந்த நிலைகளை அனுபவித்த போக்தா வேறு. நான் ஆத்மா. 

* ஜாக்ரத் ஆதிஷு — ஜாக்ரத், ஸ்வப்னம், சுசுப்தி.

* சர்வாசு அவஸ்தாசு — நோயை உடையவனாக இருத்த நிலை (ரோக அவஸ்தா), ஆரோக்கியத்தை உடையவனாக இருத்த நிலை, செல்வமுடையவனாக இருத்தல்(தன அவஸ்தா) போன்ற விதவிதமான அனுபவங்கள்.

  இவைகளனைத்தும் வரும் போகும்(வ்யாவ்ருத்தாஸு). மேற்கூரிய மூன்றிற்கும் இது அடைமொழி; அதாவது வந்து போகிற இந்த அவஸ்தைகளில் எந்தவொன்று தொடர்ந்து இருக்கின்றதோ அந்த ‘நான்’ சத்தியமானது. மற்றவை அனைத்தும் மித்யா.

ஸ்வாத்மானம் ப்ரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா

எந்த தக்ஷிணாமூர்த்தி(ய:) [தன்னை] நாடியவர்களுக்கு/தேடியவர்களுக்கு(பஜதாம்) ஆத்ம தத்துவத்தை(ஸ்வாத்மானம்) மங்களமான(பத்ரயா) [சின்] முத்திரையினால்(முத்ரயா)  விளக்குகின்றாரோ (பிரகடீகரோதி). 

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.

ஜீவசொரூபமான எந்தவொரு ஸத்-சித்-ஆனந்த-சொரூபம் அனுவ்ருத்தமாக தொடர்ந்து இருந்ததோ அதுவே ஈஷ்வரனாகிய தன்னுடைய சொரூபமாக இருப்பதாக தெளிவாக விளக்குகிறார். 

பஜதாம் - அதிகாரத்துவத்தை குறிக்கின்றது. வைராக்கியம் முமுக்ஷுத்வம் முதலிய தகுதியுடையவர்களுக்கே இந்த ஞானம் பொருள்படும். 

————————————————————————————————————————————————————————

சுலோகம்:8

விஸ்வம் பஸ்யதி கார்ய காரண தயா ஸ்வஸ்வாமி சம்பந்தத:

சிஷ்யாசார்யதயா ததைவ பித்ருபுத்ரா த்யாத்மனா பேதத: |

ஸ்வப்னே ஜாக்ரதிவா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ||

विश्वं पश्यति कार्यकारणतया स्वस्वामिसम्बन्धतः

शिष्याचार्यतया तथैव पितृपुत्राद्यात्मना भेदतः ।

स्वप्ने जाग्रति वा य एष पुरुषो मायापरिभ्रामितः

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥८॥


எந்த இந்த புருஷனானவர் மாயையினால் மோகத்தை அடைந்தவராக கனவு நிலையிலும், விழிப்பு நிலையிலும் கார்ய காரண சம்பந்தம் உடையதாகவும், உடைமை யஜமானன் என்ற சம்பந்தம் உடையதாகவும், சிஷ்யன் ஆசார்யன் என்ற சம்பந்தத்தை உடையதாகவும் அவ்விதமே தந்தை மகன் முதலிய ரூபமாகவும் உலகத்தை வேற்றுமையுடன் பார்க்கிறாரோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).


=> முகவுரை:

இந்த சுலோகத்தில் ஆசிரியர் ‘ஜகத் மித்யா’ என காட்டுகிறார். பொதுவாக நமது துயரம் ஒன்றின் மீதுள்ள சம்பந்தத்தினால் உண்டாகிறது. ஆகவே துயத்திரத்திலிருந்து விடுதலைப் பெறவேண்டுமெனில் அதன் மீதான சம்பந்தத்தை விசாரம் செய்வது அவசியமாகிறது. உலகம் நமக்கு துன்பத்தை தருவதால், அதை விசாரம் செய்து அதன் சொரூபத்தையும் சம்பந்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ‘ஜகத் மித்யா’ எனும் ஞானம், ‘ப்ரம்ம சத்யம்’ எனும் ஞானத்தை போலவே மிக முக்கியமான ஒன்று. 

ஜகன் மித்யா எனில் ஈஷ்வரனும் சாஸ்திரமும் மித்யாவா எனும் கேள்விக்கு, ‘ஆம், ஈஷ்வரனும் சாஸ்திரமும் மித்யா’ என பதிலளிக்கும் போது பின்வரும் கேள்வி எழுகிறது. அதாவது, கானல்நீர் எவ்விதம் உண்மையான தாகத்தை தணிக்க முடியாதோ அதேபோல மித்யாவான சாஸ்திரம் எப்படி மோக்ஷத்தை அளிக்கும்? இந்த கேள்விக்கு இரு விதமாக பதிலளிக்கலாம்.

(1) ஒரு பொருள் மித்யாவாக இருந்தாலும் அது சத்தியமான ஒன்றை காட்டிக்கொடுக்க பயன்படும். உதாரணமாக, கனவில் ஒரு புலி நம்மை கடிக்க வருவதாக அனுபவிக்கும்போது பயத்தில் விழித்துக் கொள்கிறோம். சத்தியமான இந்த விழிப்பு நிலைக்கு வரக் காரணம், கனவில் நாம் பார்த்த பொய்யான(மித்யாவான) புலி. எனில், மித்யாவான சாஸ்திரம் சத்தியமான மோக்ஷத்தை ஏன் கொடுக்கமுடியாது! ஆகவே சாஸ்திரம் மித்யா தான், சம்பந்தம் மித்யா தான்; என்றாலும் இது சத்தியமான ஞானத்தைக் கொடுக்கிறது.

(2) மோக்ஷத்தையும் சத்தியம் என கூறிவிட முடியாது. மோக்ஷமும் மித்யா தான். ஏனெனில் ஜகத் மித்யா எனில் பந்தமும் மித்யா. ஆகவே பொய்யான பந்தத்திலிருந்து கிடைக்கும் மோக்ஷமும் மித்யாவே. 


விளக்கம்:

விஸ்வம் பஸ்யதி கார்ய காரண தயா  ஸ்வஸ்வாமி சம்பந்தத:

சிஷ்யாசார்யதயா ததைவ பித்ருபுத்ரா த்யாத்மனா பேதத:

ஸ்வப்னே ஜாக்ரதிவா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:

காரிய காரண ரூபமாக(கார்ய காரண தயா), செல்வம் மற்றும் பொருள்கள்(ஸ்வ) அந்த பொருளுக்கு தலைவன், அப்பொருளையுடையவன்[பொருள்-அதன் எஜமானன்] என்ற சம்பந்தத்துடனும்(ஸ்வாமி சம்பந்தத:) சிஷ்யன்-ஆச்சார்யன் என்ற சம்பந்தத்துடனும் (சிஷ்யாசார்யதயா) அப்படியே(ததைவ) தந்தை-மகன் சம்பந்தமாக (பித்ருபுத்ரா தயா) அந்தந்த தன்மையுடன் விதவிதமான பேதத்தில்( ஆத்மனா பேதத:) உலகத்தை(விஸ்வம்) கனவிலும் விழிப்பிலும் (ஸ்வப்னே ஜாக்ரதிவா) மாயையின் மறைக்கின்ற சக்தியினால்(மாயா) முழுமையாக மோஹத்துக்கு உட்பட்டவராக (பரிப்ராமித:).

ஈஷ்வரனாக இருக்கின்ற எந்த(ய:) இந்த ஜீவன்(ஏஷ புருஷ:) பார்க்கின்றாரோ (பஸ்யதி).

அவரே ஞானத்திற்கு பிறகு முக்த புருஷனான தக்ஷிணாமூர்த்தியாக அமர்ந்துள்ளார்.

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.

* கார்ய காரண தயா — ஏதோ ஒரு பொருள் இருப்பதாகவும், ஒன்றிலிருந்து இனியொன்று வந்ததைப் போலவும் பார்க்கின்றான். எ.கா., விதை-மரம்-மரக்கட்டை-நாற்காலி.

முன் சுலோகத்தில், ஒரு பொருளின் இருப்பானது ஞானம், அறிதல் எனும் ப்ரமாணத்தினால் நிகழ்கிறது எனப் பார்த்தோம். இங்கு இனியொரு நியாயத்தை பார்க்கிறோம். அது, 

லக்ஷண ப்ரமாணாப்யாம் வஸ்து சித்தி: — ஒரு பொருளினுடைய இருப்பு அதன் இலக்கணம் அல்லது லக்ஷணத்தினால் காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வேந்தாந்த கயிறு-பாம்பை எடுத்துக் கொண்டால் கயிற்றில் தெரியும் பாம்பிற்கு எந்த லக்ஷணமும் கொடுக்கமுடியாது. இருக்கிறது எனவும் சொல்ல முடியாது; ஏனெனில் ஞானம் வந்தவுடன் அங்கு பாம்பு இல்லை. சரி இல்லை என லக்ஷணம் கூறலாமே என்றால், அப்படியும் சொல்லிவிட முடியாது; ஏனெனில் பயத்தை நாம் அனுபவித்தோம். ஆகவே இவ்விதம் ஒரு குறிப்பிட்ட லக்ஷணத்தை கொடுக்கமுடியாத ஒன்று மித்யா; உண்மையில் அது வெறும் தோற்றமே. 

இந்த நியாயத்தின்படி, இந்த உலகத்தில் எதையுமே இது இப்படித்தான் என லக்ஷணம் கொடுத்துவிட முடியாது; அனைத்து ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டுள்ளது. உதாரணமாக இவர் தந்தை என ஒருவருக்கு லக்ஷணம் கூறிவிட முடியாது; ஏனெனில் அவர் இனியொரு கோணத்தில் மகனாகவும், மற்றொரு கோணத்தில் கணவனாகவும் உள்ளார். இவ்விதத்தில் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால், இந்த பிரபஞ்சம் மித்யா. 

 

இந்த முதல் எட்டு சுலோகத்தில் ஜீவ-ஈஷ்வர ஐக்கிய ஞானம் சொல்லப்பட்டது. தக்ஷிணாமூர்த்தியே ஜீவனாக காட்டப்பட்டு, ஞானத்தினால் ஈஷ்வரனாக அமர்ந்தார் என கூறப்பட்டது. மேலும் ஜகத் மித்யா, வெறும் தோற்றம் என கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், மனத் தூய்மையும் இல்லாத ஒருவனால் இதை புரிந்துகொள்ளவோ, ஏற்றுக் கொள்ள்வோ முடியாத ஒன்றாக இருக்கலாம். அவர்களுக்காக அடுத்த சுலோகத்தை ஆசிரியர் எடுத்தாள்கிறார். 

உலகம், ஜீவன் மற்றும் ஈஷ்வரன் மித்யா என சொல்லும்போது, அதை எப்படி புரிந்துகொள்வது? ஈஷ்வரனை மித்யா என எப்படி பார்ப்பது? ஈஷ்வரன் இவ்வுலகிற்கு காரணமானவர்; இவ்வுலகை நியதிகளின் மூலம் ஆள்பவர். இப்போது இவ்வுலகம் மித்யா என சொல்லும்போது அதில் ஈஷ்வரனிடமுள்ள, ‘ஈஷ்வரன் எனும் தன்மை’ பொய்யாகிவிடுகிறது. ஆனால் ஈஷ்வரனின் உண்மையான சொரூபமான ப்ரம்ம சொரூபம் மித்யாவாக ஆகாது. ஆகவே ஈஷ்வரனை மித்யா என கூறும்போது அவரிடமுள்ள ஈஷ்வரன் எனும் தன்மை மித்யா. அதேபோல ஜீவனிடமும், ‘ஜீவன் எனும் தன்மை’ மித்யா; ஜீவனுடைய உண்மையான ஆத்ம சொரூபமோ, ஈஷ்வரனின் உண்மையான ப்ரம்ம சொரூபமோ மித்யா என கூறப்படவில்லை. மித்யா என்றாலே தோன்றிக் கொண்டிருப்பது மித்யா, அதற்கு ஆதாரமாக உள்ளது சத்தியமானது. அது ப்ரம்ம அல்லது ஆத்ம தத்துவம். 

————————————————————————————————————————————————————————

சுலோகம்:9

பூரம்பாம்ச்யநலோ நிலோம்பரமஹர்நாதோ ஹிமாம்சு புமான்

இத்யாபாதி சராச்சராத்மகமிதம் யச்யைவ மூர்த்யஷ்டகம் |

நான்யத்கிஞ்சன வித்யதே விம்ருசதாம் யஸ்மாத் பரஸ்மாத்விபோ:

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ||

भूरम्भांस्यनलोऽनिलोऽम्बरमहर्नाथो हिमांशु पुमान्

इत्याभाति चराचरात्मकमिदं यस्यैव मूर्त्यष्टकम् ।

नान्यत् किञ्चन विद्यते विमृशतां यस्मात्परस्माद्विभोः

तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥९॥

 

அசைகின்ற அசையாத தன்மையுடைய இந்த உலகம் பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், சூரியன், சந்திரன், யஜமானன் என்று எந்த இறைவனுக்கு இவை மட்டும் உடலாக விளங்கி வருகிறதோ, உண்மையில் ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு எந்த வியாபகமான பரம்பொருளைக் காட்டிலும் வேறு ஒன்றும் இல்லையோ அந்த குருவான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு (என்னுடைய) இந்த நமஸ்காரம் (சமர்ப்பிக்கப்படுகிறது).


=> முகவுரை:

ஞானயோகத்திற்கு தகுதியில்லாதவர்களுக்கு, அதாவது ‘ப்ரம்ம சத்யம்,  ஜகன் மித்யா’ என்பதை கிரஹிக்க முடியாதவர்களுக்கு இங்கு ஆசிரியர் உபாயம் கொடுக்கிறார். ப்ரம்ம சத்யம் என ஏற்றுக் கொள்வது சிறிது எளிமையானதாக இருந்தாலும், ஜகத் மித்யா என புரிந்துகொள்வதும் ஏற்றுக் கொள்வதும் பலருக்கு மிகக் கடினம். பஞ்ச பூதங்கள், எத்தனையோ நியதிகள், காரிய-காரண சம்பந்தங்கள் என முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கும், திடமாக கண்முன் தோன்றிக் கொண்டிருக்கும் இவ்வுலகை எப்படி பொய் என ஏற்றுக் கொள்ள முடியும் என்பது அவர்களின் கேள்வியாக இருக்கும். உபநிஷத் கூறும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாததற்கு காரணம் நம்முடைய விருப்பு-வெறுப்புகள். மனத்தூய்மை, அதாவது விருப்பு-வெறுப்பில்லாமல் இருத்தல் மற்றும் வைராக்கியத்தை அடித்தளமாகக் கொண்ட மனமுதிர்ச்சி இங்கு முக்கியமான தகுதி. வெறுப்பதற்கு ஆள் இல்லாதளவு வெறுப்பு நம்மை விட்டு நீங்கனால், இந்த ஜகத் மித்யா என்பது நம் மனதில் ஸ்புரிக்கும்.  

ஆகவே இவ்வுலகை பொய் என நீக்க முடியவில்லையெனில் இவ்வுலகை ஈஷ்வரனாக பார்; பார்ப்பவை அனைத்தும் இறை சொரூபமாக பார், என ஆசிரியர் உபாயத்தை கூறுகிறார். இதனால் மனம் தூய்மையாகும். மனம் தூய்மை ஆக ஆக வேதாந்த வாக்கியம் நமக்கு புரிய ஆரம்பிக்கும். 


விளக்கம்:

பூரம்பாம்ச்யநலோ நிலோம்பரமஹர்நாதோ ஹிமாம்சு புமான்

இத்யாபாதி சராச்சராத்மகமிதம் யச்யைவ மூர்த்யஷ்டகம்

பூமி(பூ:) தண்ணீர்(அம்பாம்சி) நெருப்பு(அநல:) காற்று(அநில:) ஆகாசம்(அம்பரம்) சூரியன்/பகலுக்கு தலைவன் (அஹர் நாத:) சந்திரன் (ஹிமாம்சு:), ஜீவராசிகள்(புமான்) என(இதி) இந்த நகர்கின்ற நகராத தன்மையையுடைய/ சேதன அசேதன ரூபமாக(இதம் சரம் அசரம் ஆத்மகம்) விளங்கிக்கொண்டுள்ள(ஆபாதி)

 எந்த இறைவனுக்கு இந்த எட்டும் உடலாக இருக்கின்றதோ(யஸ்ய ஏவ மூர்த்தி: அஷ்டகம்)

* முதல் ஏழு சொற்களிலிருந்து இந்த ஜட பிரபஞ்சம் அனைத்தும், பதினான்கு லோகங்களும், அதில் வாழும் அனைத்து உயிர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

* ‘அனைத்தும் ஈஷ்வரன்’ என்ற இக்கருத்தை ஒரு வேதாந்தியான நாம் எந்த அளவு ஏற்றுக் கொள்கிறோம் என்பது முக்கியம். நாம் இதை உபாசனைக்காகவும் மனத்தூய்மைக்காகவும் பேசப்படுவதாக ஏற்றுக் கொள்கிறோம். நம் மனதிலுள்ள விருப்பு-வெறுப்புகள் நீங்க உலகையே ஈஷ்வரனின் உடலாக பார்க்கிறோம். ஆனால் இதுவே முடிவான தத்துவம் கிடையாது. 

நான்யத்கிஞ்சன வித்யதே விம்ருசதாம் யஸ்மாத்  பரஸ்மாத்விபோ:

ஞானயோகத்தினால் விசாரம் செய்து பார்ப்பவர்களுக்கு(விம்ருசதாம்) எந்த மேலான ப்ரம்ம/எங்கும் வியாபித்துள்ள ப்ரம்மத்தைக் காட்டிலும்(யஸ்மாத் பரச்மாத் விபோ:) வேறான ஒன்றுமே கிடையாதோ(ந அந்யத் கிஞ்சத்)

தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

இப்படிப்பட்ட தக்ஷிணாமூர்த்திக்கு எனது நமஸ்காரம் இருக்கட்டும்.

ஆகவே இந்த சுலோகத்தில் ஆசிரியர் இரண்டு திருஷ்டியைக் கொடுக்கிறார்.(1) அத்வைத திருஷ்டி - ‘ஜகத் மித்யா; ப்ரம்ம சத்யம்’; உலகம் என்ற ஒன்று கிடையாது; இருப்பது ப்ரம்ம ஒன்று தான். ஒருகால் ஜகத் கல்பிதம் என ஏற்றுக் கொள்ள முடியவில்லையெனில் ஜகத் சிருஷ்டம் என ஏற்றுக் கொண்டு இரண்டாவது திருஷ்டிக்கு செல்கிறோம். 

(2) பார்ப்பதெல்லாம் இறைவனின் சொரூபம். இறைவன் காரணம்; உலகம் காரியம். காரணத்திலிருந்து காரியம் வேறாக இல்லாத காரணத்தினால் அனைத்தும் ஈஷ்வரன். 

————————————————————————————————————————————————————————

சுலோகம்: 10

ஸர்வாத்மத்வமிதி ஸ்புடீக்றுதமிதம் யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே

தேனாஸ்வ ஶ்ரவணாத்ததர்த மனனாத்த்யானாச்ச ஸம்கீர்தனாத் |

ஸர்வாத்மத்வமஹாவிபூதி ஸஹிதம் ஸ்யாதீஶ்வரத்வம் ஸ்வத:

ஸித்த்யேத்தத்புனரஷ்டதா பரிணதம் சைஶ்வர்ய மவ்யாஹதம் ||


सर्वात्मत्वमिति स्फुटीकृतमिदं यस्मादमुष्मिन् स्तवे

तेनास्य श्रवणात्तदर्थमननाद्ध्यानाच्च संकीर्तनात् ।

सर्वात्मत्वमहाविभूतिसहितं स्यादीश्वरत्वं स्वतः

सिद्ध्येत्तत्पुनरष्टधा परिणतं चैश्वर्यमव्याहतम् ॥१०॥

இவ்விதம் இந்த ஸ்தோத்திரத்தில் யாதொரு காரணத்தால் இந்த எல்லாமாக இருக்கும் தன்மை( = ஸர்வாத்மத்வம்) நன்கு விளக்கப்பட்டுள்ளதோ, அதனால் இதை கேட்பதனாலும், இதிலுள்ள பொருளை சிந்திப்பதாலும், தியானிப்பதாலும், திரும்பத்திரும்பக் கூறுவதாலும் எல்லாமாக இருத்தல் என்ற உயர்ந்த மேன்மையுடன் கூடிய ஈஷ்வரத்தன்மை ஏற்படும். மேலும் எட்டுவிதமான அந்த அணிமா முதலிய ஐசுவர்யமும் தடையில்லாமல் தானாகவே கிடைக்கும்.

=> முகவுரை:

இந்த தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம், தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் என்றும் அழைக்கப்படும். அஷ்டகம் என்றால் எட்டு பகுதியை(சுலோகத்தை) உடையது என்பது பொருள். முதல் எட்டு சுலோகத்தில்தான் ஜீவ-ப்ரம்ம ஐக்கிய ஞானத்தை பற்றிப் பேசுவதால் அவ்விதம் சொல்வதாகக் கூறப்படுகிறது. 

இந்த ஸ்தோத்திரத்தை படிப்பதாலும், புரிந்துகொள்வதினாலும் கிடைக்கும் பிரயோஜனத்தை பற்றி இந்த சுலோகத்தில் ஆசிரியர் கூறுகிறார்.

விளக்கம்:

ஸர்வாத்மத்வமிதி ஸ்புடீக்றுதமிதம் யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே


யாது காரணத்தினால்(யஸ்மாத்) இந்த ஸ்தோத்திரத்தில்(அமுஷ்மின் ச்தவே) அனைத்தும் ஆத்மா எனும் தத்துவம்(சர்வாத்மத்வம்) இங்கு தெளிவாக விளக்கப்பட்டதோ(இதம் ச்புடீக்ருதம்)

* சர்வாத்மத்வம் - எனில் அனைத்தும் ஆத்மாவாக, நானாக இருத்தல்; அனைத்தும் ப்ரம்மனாக இருத்தல்; அனைத்தும் ஈஷ்வரனாக இருத்தல்.

தேனாஸ்வ ஶ்ரவணாத்ததர்த மனனாத்த்யானாச்ச ஸம்கீர்தனாத் |


அந்த காரணத்தினால்(தேந) இந்த ஸ்தோத்திரத்தை(அஸ்ய) கேட்டல், அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்(ஸ்ரவணாத்) சிந்தித்து சந்தேகம் தெளிதல்(ததர்த்த மனநாத்) நிதித்யாசனம் செய்து(த்யானாத்) மற்றவர்களுக்கு இதை உபதேசம் செய்வதாலும்கூட(சங்கீர்த்தநாத் ச

*சங்கீர்த்தநாத் - இதை புரிந்து, புரிந்தபடி வாழ்க்கையை வாழ்வதே மற்றவர்களுக்கு இதன் மஹிமையை நாம் காட்டிக் கொடுப்பதாகிறது. இவ்விதத்தில் மக்களுக்கு நன்மையைச் செய்யலாம்.

ஸர்வாத்மத்வமஹாவிபூதி ஸஹிதம் ஸ்யாதீஶ்வரத்வம் ஸ்வத:

மிகப் பெரிய பெருமையை உடைய/ மிக உயர்ந்ததான(மஹா விபூதி ஸஹிதம்) சர்வாத்மத்துவத்தை(சர்வாத்மத்வம்) சுபாவமாகவே, எந்த விதமான உதவியுமின்றி இயற்கையாகவே(ஸ்வத:) அவனே ஈஷ்வரனாக ஆகின்றான், ஈஷ்வரத்துவத்தை அடைகின்றான்(ஈஸ்வரத்வம் ஸ்யாத்)

* சர்வாத்மத்துவத்தை புரிந்து கொள்வதால் கிடைக்கும் பலன் சர்வாத்மத்துவமே. வேதாந்தத்தில் மட்டும்தான் இவ்விதம் நடக்கும்; அறியப்படும் விஷயமே பிரயோஜனமாகிறது. ப்ரம்மத்தை புரிந்துகொள்ளும் ஒருவன் ப்ரம்மனாகவே ஆகிறான்— ப்ரம்ம வேத ப்ரம்மைவ பவதி

எந்தவொரு காரியத்திலும் முக்கிய பலனும், அவாந்தர பலனும்(அமுக்கிய பலன்) கிடைக்கும். உதாரணமாக தேங்காயிலிருந்து எண்ணை எடுக்கப்படும்போது கிடைக்கும் முக்கியப் பலன் தேங்காய் எண்ணை. அவாந்தரப் பலன், அதனுடைய சக்கையாகிய புண்ணாக்கு. எண்ணைக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுமே தவிர புண்ணாக்கு வேண்டுமென்பதற்காக யாரும் அக்காரியத்தில் ஈடுபடுவதில்லை. அவ்விதம் இந்த ஸ்தோத்திரத்தினால் கிடைக்கும் அவாந்தப் பலனாக அஷ்டமஹா சித்தியை, நான்காவது வரியில் ஆசிரியர் கூறுகிறார். ஆகவே ஒருவனின் முக்கியத்துவம் மோக்ஷத்தில் இருக்கவேண்டுமே தவிர, சித்தி என்பதெல்லாம் அமுக்கியமானது.

விசாரத்திற்கு முன் மனதை ஒருமுகப்படுத்தும் சாதனையின்போதும், உபாசனையின் பலனாகவும் மஹான்களுக்கு இப்படிப்பட்ட சித்துக்கள் வரலாம். ஆனால் அவர்கள் அதற்காக இச்சாதனையில் ஈடுபடவில்லை. ஒருகால் இந்த சித்துக்களினாலும்கூட அவர்களின் கவனம் சிதறடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் விசாரத்திற்கு வந்தபின், வைராக்கியத்தின் முக்கியதுவத்தை அறிந்தபின், இவர்களுக்கு தங்களது சித்துக்களின் மீதே வைராக்கியம் ஏற்பட்டுவிடுகிறது. அப்போது அவர்களிடம் சித்துக்கள் இருந்தும் அதை அவர்கள் பயன்படுத்தவோ, முக்கியத்துவம் கொடுக்கவோ மாட்டார்கள். சில மஹான்களின் வாழ்க்கையில் சித்துக்கள் இருந்ததாகப் படிக்கிறோம். அதை நாம் இவ்விதத்தில் புரிந்து கொள்ளலாம். சித்தியில் வைராக்கியம் இருப்பவர்களுக்கே இந்த ஞானம் சாத்தியமாகும் என்பதை இவ்விடத்தில் தெளிவாக புரிந்துகொள்வது அவசியம்.  

ஸித்த்யேத்தத்புனரஷ்டதா பரிணதம் சைஶ்வர்ய மவ்யாஹதம் ||


எட்டுவிதமாக இருக்கின்ற சித்திகள்/அஷ்டமஹா சித்தி(அஷ்டதா பரிணதம் சைஸ்வர்யம்) தடையின்றி கிடைக்கும்(அவ்யாஹதம் சித்தயே)

=> அஷ்டமஹா சித்திகள்:

அனிமா மஹிமா சைவ கரிமா லகிமா ததா

ப்ராப்தி ப்ராகம்யமீஷித்துவம் வசித்வம் சாஷ்டசித்தய:

1. அனிமா — மிகச் சிறியதாக தன்னை மாற்றிக் கொள்ளுதல்

2. மஹிமா - மிகப் பெரியதாக தன்னை மாற்றிக் கொள்ளுதல்

3. கரிமா - மிகப் பளுவாக மாறுதல்

4. லகிமா - மிக லேசாக மாறுதல்

5. ப்ராப்தி - ஓரிடத்திலிருந்து இனியோரிடத்திற்கு பயணிக்காமல் செல்லுதல் 

6. ப்ராகம்யம் - விரும்புவதை அடைதல்

7. ஈஷித்வம் - ஆள்தல்

8. வசித்வம் - மற்றவர்களை வசீகரித்தல்; மயக்குதல்.

————————————————————————————————————————————————————————

ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் பாடல்கள்