।।2.46।। முக்குணங்களைக் கடந்து செல்வதால் வரும் நன்மை:
यावानर्थ उदपाने सर्वत: सम्प्लुतोदके ।
तावान्सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानत: ।। ४६
யாவாநர்த2 உத3பானே ஸர்வத: ஸம்ப்லுதோத3கே ।
தாவான் ஸர்வேஷு வேதே3ஷு ப்3ராஹ்மணஸ்ய விஜாநத: ।। 46
सर्वत: ஸர்வத: எங்கும் सम्प्लुत-उदके ஸம்ப்லுத-உத3கே நீர்ப் பெருக்கெடுத்திருக்கையில்
उदपाने உத3பானே கிணற்றில் यावान् யாவான் எவ்வளவு अर्थ அர்த்த2 பிரயோஜனமோ
तावान् தாவான் அவ்வளவுதான் विजानत: விஜாநத: ப்ரம்மத்தை அறிகிற
ब्राह्मणस्य ப்3ராஹ்மணஸ்ய ப்ரம்ம நிஷ்டனுக்கு सर्वेषु ஸர்வேஷு எல்லா
वेदेषु வேதே3ஷு வேதங்களிலும் (பிரயோஜனமுள்ளது).
எங்கும் நீர்ப் பெருக்கெடுத்திருக்கையில் கிணறு பயன்படுகிறவளவு, ஞானத்தையுடைய ப்ரம்ம நிஷ்டனுக்கு வேதங்கள் பயன்படுகின்றன.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது; அன்னபொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.
விளக்கம்:
=> கர்ம யோகத்தின் இறுதி லக்ஷியம் மோக்ஷம்:
நீர் இல்லாத இடத்தில் கிணற்று நீர் நிச்சயமாகப் பயன்படும். ஆனால் எங்கும் நீர்மயமாக இருக்குமிடத்தில் கிணற்றை தேடுவார் யாருமில்லை. அது போல அக்ஞானத்திலிருக்குமளவு வேதங்களால் பயனுண்டு. கர்ம காண்டத்தில் கூறப்பட்டுள்ள நெறிகளைப் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் பலவிதமான இன்பங்களை அடையலாம். ஆனால் ஞான காண்டத்தின் மூலம் பேரின்ப சொரூபமான ப்ரம்ம ஞானத்தை அடைந்த ஞானிக்கு வேதங்களினால் பெரிய பலன் ஏதுமில்லை. ப்ரம்ம ஞானம் என்ற பேரானந்தத்தில் எல்லா ஆனந்தங்களும் அடங்கப் பெற்றிருக்கின்றன.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
அரசனுடைய காமக்கிழத்தி தெருப்பிச்சைகாரனைக் கண்ணெடுத்தும் பார்க்கமாட்டாள். அதுபோல ஈஷ்வர சன்னிதானத்தில் பேரின்பம் அடையப்பெற்ற ஆத்மாவானது அற்பமாகிய உலக இன்பங்களில் ஆசைவைப்பதில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------।।2.47।। கர்ம யோக லக்ஷணம்:
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन ।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ।। ४७
கர்மண்யேவாதி4காரஸ்தே மா ப2லேஷு கதா3சந ।
மா கர்மப2லஹேதுர்பூ4ர்மா தே ஸங்கோ3ऽஸ்த்வகர்மணி ।। 47
कर्मणि கர்மணி கர்மத்தில் एव ஏவ மட்டும் ते தே உனக்கு
अधिकार: அதி4கார: அதிகாரமுண்டு(தகுதியுண்டு) कदाचन கதா3சந ஒருபோதும்
फलेषु ப2லேஷு பலன்களில் मा மா இல்லை कर्मफलहेतु: கர்மப2லஹேது: கர்மபலன்களை உண்டுபண்ணுபவன் मा भू: மா பூ4: ஆகாதே अकर्मणि அகர்மணி கர்மம் செய்யாதிருப்பதில்
ते தே உனக்கு सङ्ग: ஸங்க3: பற்றுதல் मा अस्तु மா அஸ்து இருக்கலாகாது.
செயல் செய்வதற்கு மட்டும்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதனுடைய பலனில் ஒருபொழுதும் இல்லை. கர்மபலனை விளைவிப்பவன் ஆகாதே. உனக்கு செயலின்மையில் விருப்பம் இருக்க வேண்டாம்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.
விளக்கம்:
=> கர்ம பலன்:
புத்தியில் இருக்க வேண்டிய பாவனை ஆதலால் கர்ம யோகத்தை புத்தியோகம்(2:49) என்றே பகவான் அழைக்கிறார். அதாவது ஒரு செயலில், சூழ்நிலையில் ஒருவனுக்கு இருக்க வேண்டிய பாவனை கர்ம யோகத்தை நிர்ணயிக்கிறது. இப்பாவனை நம் மனதில் ஏற்பட தேவையான சில அறிவு(ஞானம்) இங்கு கூறப்படுகிறது. எல்லா ஜீவராசிகளுக்கும் செயல் செய்வதற்கு மட்டும் அதிகாரம் உள்ளது(கர்மணி ஏவ அதி4கார:). இங்கு ‘அதி4கார:’ என்பது தெரிவு செய்வது(choice), உரிமை, ஒருவனது ஆற்றலுக்கு உட்பட்டதாக இருப்பது என பொருள்படும். அர்ஜுனா, கர்மத்தில் மட்டுமே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உனக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனுடைய பலனை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உனக்கு ஒருபோதும் இல்லை என்கிறார் பகவான். இதை அறிவுரையாக கூறவில்லை. இது ஒரு பொதுநியதி. இதை மாற்றலாகாது.
* ஒரு செயலை செய்ய 3 வித வாய்ப்புண்டு:
(1) அதைச் செய்யலாம் (2) செய்யாமல் இருக்கலாம்
(3) வேறு விதத்திலும் செய்யலாம்.
இந்த மூன்றில் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஒருவனுக்கு உண்டு. ஆனால் அதனுடைய பலனை தேர்ந்தெடுக்கும் உரிமை எப்போதும் இல்லை(கதா3சந ப2லேஷு மா).
இங்கு கர்மபலனை விரும்பாதவர் செயல் செய்யவேண்டிய அவசியமில்லை என பொருள்படுத்தக் கூடாது. ஆகவே தான் செயல் செய்யாமலிருப்பதில் விருப்பம் கொள்ளாதே(அகர்மணி ஸங்க3: மா அஸ்து) என்றும் கூறி இதை தெளிவுபடுத்துகிறார். பகவான் கர்மத்தின் பலனை எதிர்பாராமல் கர்மம் செய் எனக் கூறவில்லை. எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் இப்படித்தான் வரவேண்டும் என்ற ஏக்கம் கூடாது. கிடைக்கும் பலன் எப்படிப்பட்டதாக இருந்தாலும் ஈஷ்வரப்ரஸாதமாக, முழுமனதுடன் ஏற்றுக் கொள். ஆசையோடு கூடிய கர்மமே பந்தத்தை விளைவிக்கும். வினைப்பயனை விரும்பாதவர்கள் ஆசையை வென்றவர்கள். ஆசையை வெல்லுமளவு மனிதன் சுதந்திரத்தில் நிலைபெறுகிறான்.
* பலன் 2 வகை:
(1) த்ருஷ்ட பலன் (2) அதிருஷ்ட பலன்
(1) நேரடியாகப் பார்த்து அனுபவிக்கக் கூடிய, கண்ணுக்கு தெரிகின்ற பலன், த்ருஷ்ட பலன்.
(2) ஒரு செயலின் போது அதைச் செய்யும் பாவனையின் அடிப்படையில் அதிருஷ்ட பலன் நிச்சயிக்கப்படுகிறது. கர்ம பலனில் உனக்கு அதிகாரமில்லையென்ற போதிலும் உண்மையில் நீயே கர்மபலனை நிர்ணயிக்கின்றாய். அதாவது கர்மத்தின் போது உனக்குள்ள பாவனையினால் அதன் பலனை நீயே நிர்ணயிக்கின்றாய். ஆகவே சங்கல்பத்தின் அடிப்படையில் பலன் வருவதால் கர்மம் செய்யும் போது எந்தவித சங்கல்பத்தையும் மேற்கொள்ளாதே. கர்மயோகப்படி வினையாற்றும் போது, அது பாப புண்ணியத்தை கொடுக்காமல், சித்த சுத்தியை கொடுக்கிறது. கர்மத்தின் பலனை விளைவிப்பவனாக ஆகாதே(கர்மப2லஹேது: மா பூ4:).
இதே ஸ்லோகத்தை கீழ்கண்டவாறும் பொருள் கூறலாம்:
அர்ஜுனா! உன்னைப் போல முழுமையான சித்த சுத்தி இல்லாதவர்களுக்கு கர்மயோகத்தில் தான் உரிமையுள்ளது. கர்மத்தை துறந்து சந்யாசத்தை எடுத்து ஞானயோகத்திற்கு செல்ல உனக்கு தகுதி(உரிமை) இல்லை. பலனில் பற்று வைக்க வேண்டாம். சங்கல்பத்தினால் கர்மபலன் வருவதனால், கர்மம் செய்யும் போது எந்தவித சங்கல்பத்தையும் மேற்கொள்ளாதே. செயலின்மையில் பற்று வேண்டாம். கடமையைச் செய்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
படகு நீரில் இருக்கலாம். ஆனால் நீர் படகில் இருக்கலாகாது. அங்ஙனம் மனிதன் உலகில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவன் உள்ளத்தில் புகுந்துவிடலாகாது.
-------------------------------------------------------------------------------------।।2.48।। கர்ம யோக லக்ஷணம்:
योगस्थ: कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय ।
सिद्ध्यसिद्ध्यो: समो भूत्वा समत्वं योग उच्यते ।। ४८
யோக3ஸ்த2: குரு கர்மாணி ஸங்க3ம் த்யக்த்வா த4னஞ்ஜய ।
ஸித்3த்4யஸித்3த்4யோ: ஸமோ பூ4த்வா ஸமத்வம் யோக3 உச்யதே ।। 48
धनञ्जय த4னஞ்ஜய தனஞ்ஜயா योगस्थ: யோக3ஸ்த2: யோகத்தில் உள்ளவனாய்
सङ्गं ஸங்க3ம் பற்றுதலை त्यक्त्वा த்யக்த்வா விட்டுவிட்டு(துறந்து)
सिद्ध्यसिद्ध्यो: ஸித்3த்4யஸித்3த்4யோ: வெற்றி தோல்விகளுக்கிடையில் सम: ஸம: சமமாக
भूत्वा பூ4த்வா இருந்து கொண்டு कर्माणि கர்மாணி கர்மங்களை कुरु குரு செய்
समत्वं ஸமத்வம் நடுவுநிலை(சமமாக இருத்தல்) योग: யோக3: யோகம்(கர்மயோகம்)
उच्यते உச்யதே என்று சொல்லப்படுகிறது.
தனஞ்ஜயா, யோகத்தில் நிலைபெற்று, பற்றுதலை துறந்து, வெற்றி தோல்விகளைச் சமமாகக்கொண்டு, கர்மங்களைச் செய். நடுவுநிலை யோகம் என்று சொல்லப்படுகிறது.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.
விளக்கம்:
=> ஆசையை வென்றவன் கர்மம் செய்யும் விதம்:
இரண்டு வித புத்தியே கர்ம யோகம்:
(1) ஈஷ்வரார்ப்பண புத்தி (2) ப்ரஸாத புத்தி
* பொதுவாக நாம் செய்யும் செயல்களை இரண்டாகப் பிரிக்கலாம்:
(i) செய்ய வேண்டிய கடமைகள் (duties)
(ii) விருப்பத்திற்காக செய்யும் செயல்கள் (காம்ய கர்ம_काम्य कर्म)
(i) கடமைகள்:
ஒருவன் எல்லா கடமைகளையும் விருப்பத்துடனே செய்கிறான் என கூற முடியாது. சிலவற்றை விருப்பத்துடனும், சில கடமைகளை வேறு வழியின்றியும் செய்கிறான். கர்மயோகப்படி, கீழ்கண்ட பாவனைகளுடன் செயலில் ஈடுபட வேண்டும்:
* விருப்பு வெறுப்பில்லாமல் சமமாக இருத்தல்.
* கடமைகள் வெற்றியில் அல்லது தோல்வியில் முடியலாம். இரண்டிலும் மனதை நடுநிலையில் வைத்து(ஸமத்வம் யோக3:), பலனை ஈஷ்வர ப்ரஸாதமாக முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளுதல்.
* ஒருவரின் கடமை(duty) மற்றவருக்கு உரிமை(rights) ஆகிறது. உரிமையை பார்க்காமல் கடமையைச் செய்தல்.
உதாரணமாக, தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தல் பெற்றோரின் கடமை. அதற்குப் பலனாக பிற்காலத்தில் அவர்களிடம் உரிமை பாராட்டக் கூடாது. எதிர்பார்ப்பை தியாகம் செய். பிறருக்கு உதவ வேண்டிய சூழ்நிலை வரும்போது, அது ப்ராரப்தமாக வந்துள்ளது; அதன் பலனை ஈஷ்வரன் கொடுப்பார் என்ற மனதுடன், பலனை அடைந்தவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் கடமையை செய்வதோடு முற்றுப்புள்ளி வைக்கவும்.
(ii) காம்ய கர்மம்:
* ஒரு குறிப்பிட்ட பலனில் ஆசை வைத்து செய்யும் செயல்கள் இவை; (உ.ம்) பொழுதுபோக்கு செயல்கள். ஆரம்ப காலகட்டத்தில் காம்ய கர்மத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும், மனப்பக்குவத்துடன் அதிலிருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும். பலனை எதிர்பார்த்துச் செய்யும் இவ்வித கர்மத்தினால் வருகின்ற பலனை, ஈஷ்வரனின் ப்ரஸாதமாக அனுபவிக்கவும்.
* எதைச் செய்தாலும் ஈஷ்வரனுக்கு அர்ப்பணித்து பலனை ப்ரஸாதமாக ஏற்றுக் கொள்ளவும்.
யோகி தனது கர்மத்தை ஈஷ்வரனுக்காக, அவரின் கட்டளையாகச் செய்கிறான். செயலெல்லாம் ஈஷ்வரனுடையது என எண்ணுவதால் பற்றுதல் போய் விடுகிறது. அவருடைய வேலைக்காரனாகத் தன்னை வைத்துக் கொண்டு, நடுநிலையான மனதுடன் செயலில் ஈடுபடுவதால் மனத் தெளிவும், உறுதியும் உண்டாகின்றன. தெளிந்து அசையாமலிருக்கும் நீரில் பிம்பம் தெளிவாக தெரிவது போல, தெளிந்து உறுதி பெற்ற உள்ளத்தில் மெய்ப்பொருள் காட்சி நன்கு புலனாகும். அது சமநிலையினால் மனம் பெறும் மேன்மையாகும்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
பணக்காரன் வீட்டுப் பணிப்பெண் போன்று நீ உலகில் இரு. எஜமானனுடைய செல்வத்தையும் செல்வர்களையும் தன்னுடையவைகளென்று வேலைக்காரி சொல்லிக்கொள்கிறாள். ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் வேலையினின்று விலகி வெளியேற அவள் ஆயத்தமாயிருக்கிறாள். சாதகன் உலகில் அங்ஙனம் கருமம் புரிந்திருக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
।।2.49।। கர்மயோகத்தை கடைபிடி எனும் அறிவுரை:
दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय ।
बुद्धौ शरणमन्विच्छ कृपणा: फलहेतव: ।। ४९
தூ3ரேண ஹ்யவரம் கர்ம பு3த்3தி4யோகா3த்3த4னஞ்ஜய ।
பு3த்3தௌ4 ச2ரணமந்விச்ச2 க்ருபணா: ப2லஹேதவ: ।। 49
धनञ्जय த4னஞ்ஜய தனஞ்ஜயா
बुद्धि-योगात् பு3த்3தி4-யோகா3த்3 (சம புத்தியோடு செய்யும்)கர்மயோகத்தை காட்டிலும்
कर्म கர்ம பலனில் ஆசையுடன் செய்யும் செயல்கள்(காம்ய கர்ம)
दूरेण अवरं हि தூ3ரேண அவரம் ஹி மிகக் கீழானது
बुद्धौ பு3த்3தௌ4 சம புத்தியிலேயே(கர்ம யோகத்தில்)
शरणम् ச1ரணம் தஞ்சம் अन्विच्छ அந்விச்ச2 அடைக
फलहेतव: ப2லஹேதவ: பலனை விரும்பிச் செயல்செய்பவர்கள்
कृपणा: க்ருபணா: பரிதாபத்திற்குரியவர்கள்(கீழோர்).
சம புத்தியோடு செயல் புரிவதைவிட ஆசையோடு செயல்புரிவது மிகக் கீழானதே. சம புத்தியிலேயே தஞ்சம் அடைக. பலனை விரும்பிச் செயல்செய்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள்.
விளக்கம்:
=> சமபுத்தியின்கண் சரணடைக:
புத்தியில் இருக்க வேண்டிய பாவனை ஆதலால் கர்ம யோகத்தை புத்தியோகம் என்று பகவான் கூறுகிறார். விருப்பு வெறுப்பினால் தூண்டப்பட்டு செய்யும் செயலானது, சமபுத்தி பாவனையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்யப்படும் கர்மயோகத்திலிருந்து முற்றிலும் வேறானது, மிகவும் கீழானது(தூ3ரேண அவரம் ஹி). ஆகவே ‘அர்ஜுனா, கர்மயோக புத்தியில் சரணடைவாயாக(ச1ரணம் அந்விச்ச2)’ என்கிறார் க்ருஷ்ணர். ஏன்?
ஏனெனில் மனத்தூய்மை(அந்தக்கரண சுத்தி_अन्त करण सुद्धि) மற்றும் மோக்ஷத்திற்காக அல்லாமல் பலனிற்காக மட்டும் கர்மம் செய்பவன் பரிதாபத்திற்குரியவன்; கருமி(ப2லஹேதவ: க்ருபணா:). நிறைய பணம் வைத்திருந்தும் தனக்காகவோ அல்லது பிறருக்காகவோ உபயோகிக்க விருப்பாதவனை பொதுவாக கஞ்சன், கருமி என்கிறோம். தங்களது முன்னுரிமைகளில் தெளிவில்லாமல், பணத்தை உபயோகிக்க மனமில்லாமல், எதிர்காலத்திற்காக என சேமித்து அதன் பலனை அடையாமலேயே இறக்கிறார்கள். இப்பாங்கு புத்தி விஷயத்திலும் நீடிக்கிறது. சங்கரர் தனது உரையில் இக்கருமிகளை பலகீனமானவர்கள்(க்ருபணா:) என்று வரையறுத்து ப்ருஹதாரண்யக உபநிஷத்திலிருந்து பின்வரும் வாக்கியத்தை மேற்கோள்காட்டுகிறார்.
यो वा एतदक्षरं गार्ग्यविदित्वास्माल्लोकात्प्रैति स कृपण: ।
யோ வா ஏதத1க்ஷரம் கா3ர்க்3யவிதி3த்வாஸ்மால்லோகாத்ப்ரைதி ஸ க்ருபண: । (Brhadaaranyakopanisad - 3.8.10)
மனிதன் தன்னிடமுள்ள சிறந்த செல்வமான பகுத்தறியும் ஆற்றலை, தன்னை(ஆத்மாவை) அறியும் பொருட்டு உபயோகிக்காமலேயே மடிகின்றான். மோக்ஷம் என்னும் பெரும் பலனை அடையாது, புலனின்பம் முதலிய அற்பமான பலனை குறிக்கோளாக கொண்டவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்(க்ருபணா:).
------------------------------------------------------------------------------------------------------------------------
।।2.50।। கர்மயோகத்தின் முடிவான பலன் & கர்மயோக லக்ஷணம்:
बुद्धियुक्तो जहातीह उभे सुकृतदुष्कृते ।
तस्माद्योगाय युज्यस्व योग: कर्मसु कौशलम् ।। ५०
பு3த்3தி4யுக்தோ ஜஹாதீஹ உபே4 ஸுக்ருதது3ஷ்க்ருதே ।
தஸ்மாத்3யோகா3ய யுஜ்யஸ்வ யோக3: கர்மஸு கௌச1லம் ।। 50
बुद्धियुक्त: பு3த்3தி4-யுக்தோ கர்மயோக புத்தியுடன் இருப்பவன்
इह இஹ இங்கேயே(இந்த ஜென்மத்திலேயே)
उभे सुकृत-दुष्कृते உபே4 ஸுக்ருத-து3ஷ்க்ருதே புண்ணிய பாபம் இரண்டையும்
जहाति ஜஹாதி விட்டு விடுகின்றான்(துறக்கின்றான்) तस्मात् தஸ்மாத் ஆகையினால்
योगाय யோகா3ய (கர்ம)யோகத்தில் युज्यस्व யுஜ்யஸ்வ சேர்வாயாக कर्मसु கர்மஸு கர்மங்களில் कौशलम् கௌச1லம் திறமையுடன் இருத்தல் योग: யோக3: (கர்ம)யோகம்.
சம புத்தியுடன் இருப்பவன் நன்மை தீமையிரண்டையும் இங்கேயே துறக்கின்றான். ஆகையினால் நீ யோகத்தைச் சார்ந்திரு. திறமையுடன் செயல்புரிதல் யோகம்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம்.
விளக்கம்:
=> கர்ம யோகப் பலன்:
ஸுக்ருத என்பது சரியாக செய்யப்பட்டது என்றும், து3ஷ்க்ருத என்பது தவறாக(ஒழுங்கில்லாமல்) செய்யப்பட்டது என்றும் பொருள்படும். இந்த இரண்டுவித செயல்களும் முறையே புண்ணியம் மற்றும் பாபம் என்ற பலனைத் தருகிறது. இந்த ஸ்லோகத்தில், பு3த்3தி4-யுக்த: என்பது யோக புத்தியுடன் கூடியவன் அதாவது கர்மயோகி, இங்கேயே இந்த ஜென்மத்திலேயே புண்ணியம் மற்றும் பாபத்தை விட்டுவிடுகின்றான்(உபே4 ஜஹாதி) என்று கூறப்படுகிறது. ஆனால் கர்மயோகியினால் அவ்வாறு புண்ணிய பாபத்தை விடமுடியுமா? பதில், முடியாது. ஏனெனில் அவனிடம் ‘நான் செய்கிறேன்’ எனும் கர்த்ருத்வம்(कर्तृत्वम्) இருப்பதால் அவனால் அதை நேரடியாக செய்ய முடியாது. அவன் சமபுத்தியினால் ராகத்வேஷத்தை அடக்கியதால் அவற்றிலிருந்து விடுதலை அடையலாம். எனில் இந்தக் கருத்தை எப்படிப் புரிந்து கொள்ளலாம்? கர்மயோகத்தில் ஈடுபடும் ஒருவனுக்கு ஞானம் தொலைவில் இல்லை. சங்கரர் தனது உரையில், ‘ஸத்வ சுத்தி ஞான த்வாரேன’ என குறிப்பிடுகிறார். சமபுத்தியுடன் கர்மத்தை செய்பவன் மனத்தூய்மை அடைவதால் அவன் ஞானத்தை அடையும் தகுதியை அடைகிறான். ஆத்ம ஞானத்தை அடைவதன் மூலம் அவன் புண்ணிய பாபத்தை கடக்கிறான். கர்மயோகம் ஞானத்திற்கான படிநிலை ஆகையால் நீ கர்மயோகத்தைச் சார்ந்திரு(யோகா3ய யுஜ்யஸ்வ) என்கிறார் பகவான்.
கர்மத்தினால் ஜீவர்கள் பந்தப்படுகிறார்கள். செயல் முடிந்தாலும், அதைப் பற்றிய ராகத்வேஷத்தை அச்செயலானது பதிய வைக்கிறது. இந்த விருப்பு வெறுப்பு ஒருவனை மீண்டும் செயலில் ஈடுபடுத்துகிறது. இந்த சுழற்சி தொடர்கிறது. ஆனால் கர்மயோகி சுயநல எண்ணமில்லாமல் கர்மத்தில் ஈடுபடுவதால் விருப்பு வெறுப்பிலிருந்து விடுதலை அடைகிறான். பந்தத்தை கொடுக்கும் அதே கர்மம் இவனது சமத்துவ பாவனையினால் ராகத்வேஷத்தை நீக்குகிறது. இதுவே திறமையுடன் செயல் புரிவதாகும்(கர்மஸு கௌச1லம்).
சுவாமி விவேகானந்தர் :
சிதறடையும் சிந்தையுடைய யோகி ஒருவன் மலைக்குகையில் தியானம் பழகுகிறான் என்று வைத்துக்கொள்வோம். செருப்புத் தைக்கும் சக்கிலியன் ஒருவன் கடைத்தெருவில் உட்கார்ந்து கொண்டு ஒருமை மனதாகத் தன் தொழிலைத் திறம்படச் செய்கிறான் என்றும் வைத்துக் கொள்வோம். இவ்விருவருள் மனபரிபாகத்தில் அல்லது கர்மயோகத்தில் சக்கிலியனே சிறந்தவன்.
---------------------------------------------------------------------------------------------------------------------
।।2.51।। திறம்படச் செய்யும் வினைகளுக்குள் தலைசிறந்த வினை:
कर्मजं बुद्धियुक्ताहि फलं त्यक्त्वा मनीषिण: ।
जन्मबन्धविनिर्मुक्ता: पदं गच्छन्त्यनामयम् ।। ५१
கர்மஜம் பு3த்3தி4யுக்தா ஹி ப2லம் த்யக்த்வா மநீஷிண: ।
ஜந்மப3ந்த4விநிர்முக்தா: பத3ம் க3ச்ச2ந்த்யநாமயம் ।। 51
बुद्धियुक्ता: பு3த்3தி4யுக்தா: கர்மயோகியாக இருப்பவர்கள்(சம புத்தியுடையவர்கள்)
मनीषिण: மநீஷிண: ஞானிகள் कर्मजं फलं கர்மஜம் ப2லம் கர்மத்திலிருந்து தோன்றிய பலனை
त्यक्त्वा த்யக்த்வா தியாகம் செய்து जन्मबन्धविनिर्मुक्ता: ஜந்மப3ந்த4விநிர்முக்தா: ஜென்மம் என்னும் பந்தத்திலிருந்து விடுபட்டு अनामयम् அநாமயம் துன்பமற்ற पदं பத3ம் நிலையை हि ஹி நிச்சயமாக गच्छन्ति க3ச்ச2ந்தி அடைகிறார்கள்.
நடுவு நிற்கும் ஞானிகள் கர்மத்திலிருந்து தோன்றிய பலனை தியாகம் செய்து, ஜென்மம் என்னும் பந்தத்திலிருந்து விடுபட்டு, கேடில்லாப் பெரு நிலையடைகிறார்கள்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி, ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.
விளக்கம்:
=> கர்ம யோக பலன்:
கர்மத்தின் பலனில் விருப்பு வெறுப்பின்றி, சம புத்தியுடன் கர்மயோகியாக இருப்பவன், காலப்போக்கில் விவேகத்தை அடைகின்றான். இப்படிப்பட்ட தகுதியுடன் கூடிய ஒருவன், ஆத்ம ஞானமடைந்து மநீஷிண: அல்லது ஞானி ஆகின்றான். பின்னர் ஜென்மம் எனும் பந்தத்திலிருந்து விடுபடுகின்றான் (ஜந்மப3ந்த4விநிர்முக்தா:). பந்தத்திலிருந்து விடுதலை என்பது மரணத்திற்கு பின் அல்ல, வாழும் போதே நிகழ்கிறது என சங்கரர் இங்கு தெளிவுபடுத்துகிறார்.
கஷ்டமான நிலை அல்லது பிரச்சினை ஆமய(अामय) எனப்படும். சங்கரர் அநாமயம் என்பதற்கு सर्व उपद्रव रहित-அனைத்துவித பிரச்சினைகளிலிருந்து விடுதலை என பொருள் கூறுகிறார். தன்னை ப்ரம்மன் என அறிந்த ஞானி, எல்லா பந்தத்திலிருந்தும் விடுதலை அடைந்து வாழும் போதே துன்பமற்ற நிலையை அடைகின்றான் (அநாமயம் பத3ம் க3ச்ச2ந்தி).
துன்பத்திற்கு ஏதுவாக, பிறவிக்கு வித்தாயிருக்கும் இவ்வுலக வாழ்க்கையைத் துன்பமற்றதாகவும், பிறப்பற்ற பெருநிலையாகவும் செய்துகொள்கிறான் கர்மயோகி. மனிதனைக் கட்ட வந்த கர்மத்தை எடுத்து முக்தி மார்க்கமாக மாற்றுகிறான். அப்படிச் செய்யும் செயலே செயற்கரிய செயலாகிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
அநித்தியத்தைக் கொண்டு நித்தியத்தை அடைக.
------------------------------------------------------------------------------------------------
।।2.52।। கர்மயோகப் பலனுக்கான அடையாளம்:
यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति ।
तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च ।। ५२
யதா3 தே மோஹகலிலம் பு3த்3தி4ர்வ்யதிதரிஷ்யதி ।
ததா3 க3ந்தாஸி நிர்வேத3ம் ச்1ரோதவ்யஸ்ய ச்1ருதஸ்ய ச ।। 52
यदा யதா3 எப்பொழுது ते தே உன்னுடைய बुद्धि: பு3த்3தி4: புத்தியானது
मोहकलिलं மோஹகலிலம் அவிவேகம்(மயக்கம்) என்னும் அழுக்கை
व्यतितरिष्यति வ்யதிதரிஷ்யதி கடந்து செல்லுமோ तदा ததா3 அப்பொழுது
श्रोतव्यस्य ச்1ரோதவ்யஸ்ய கேட்கப் போகிற விஷயத்திலும் श्रुतस्य च ச்1ருதஸ்ய ச கேட்டதிலும்
निर्वेदं நிர்வேத3ம் வைராக்யம்(பற்றின்மையை) गन्तासि க3ந்தாஸி அடைவாய்.
உன் அறிவானது எப்பொழுது அவிவேகம் என்னும் அழுக்கை கடக்குமோ அப்பொழுது கேட்கப் போவதிலும் கேட்டதிலும் பற்றின்மையைப் பெறுவாய்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.
விளக்கம்:
(1) கர்மயோகப்படி வாழ்வதன் முதல் பலனாக புத்தியிலுள்ள மோஹம் சென்றுவிடும். புத்தியின் சுபாவம், எது தர்மம் - அதர்மம்? எது உண்மை - பொய்? என பிரித்துப் பார்த்தல் மற்றும் தீர்மானம் செய்தல். ஆத்மா, அனாத்மா இவ்விரண்டுக்கும் வேற்றுமை விளங்காத நிலை அவிவேகம்(மோஹம்) ஆகும்.
மோஹத்தை பின்வருமாறு விளக்கலாம் :
* நன்மையை(ஹிதம்) தீமை(அஹிதம்) என்றும், நன்மை
அல்லாததை நன்மை என்றும் புரிந்து கொள்ளுதல்.
* ஆத்ம அனாத்ம விபரீத ஞானம் - நிலையானதை(ஆத்மா)
நிலையற்றதாக(அனாத்மா) புரிந்து கொள்ளுதல்.
* பணம், பதவி முதலிய சாதனையை, சாத்யமாக எடுத்துக்
கொள்ளுதல்.
மோஹம் நீங்கினால் விவேகம் வெளிப்படும்.
(2) கர்மயோகத்தின் இரண்டாவதான பலன் வைராக்யம்.
விருப்பு(राग:) என்பது பற்று, ஒட்டிக் கொள்ளுதல், சார்ந்து இருத்தல். மனதிலுள்ள பற்றை நீக்குதல் வைராக்யம்.
வைராக்யம் என்பது செயல்(action) அல்ல. உலகப் பொருட்களைக் குறித்து மனதிலுள்ள ஒருவித பாவனை. பாவனையை பலனாக அடையலாமே தவிர அதை தேர்ந்தெடுத்து செயல்படுத்த முடியாது. எந்த ஒரு பொருளையும் நமது போகத்திற்கு, இன்பத்திற்கு எப்படிப் பயன்படுத்தலாம் என எண்ணும் போக்கு வைராக்யத்திற்கு எதிரான பாவனை. இதை துறத்தல் வைராக்யம் எனப்படும். ஒரு பொருளை நமது சிற்றின்பத்திற்கு உரியதாக பார்க்காமல் அது பகவானால் படைக்கப்பட்டது என்ற பாவனையுடன் போக(भोग) புத்தியை துறத்தல் வைராக்யம் - வியவகாரத்திற்காக(transaction) பார்க்கலாம், கேட்கலாம், சாப்பிடலாம்; ஆனால் அதை இன்பத்திற்காக செய்யாமலிருத்தல் வைராக்யம். உண்மையில் ஒரு பொருளின் மீதுள்ள போகத்தை துறத்தல் என்பது அதிலிருந்து வரும் துக்கத்தை துறத்தலாகும்.
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் - திருக்குறள்.
---------------------------------------------------------------------------------------------