।।2.39।। கர்மயோகத்திற்கான முகவுரை:
एषा तेऽभिहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु ।
बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि ।। ३९
ஏஷா தேऽபி4ஹிதா ஸாங்க்2யே பு3த்3தி4ர்யோகே3 த்விமாம் ச்1ருணு ।
பு3த்3த்4யா யுக்தோ யயா பார்த2 கர்மப3ந்த4ம் ப்ரஹாஸ்யஸி ।। 39
पार्थ பார்த2 பார்த்தா साङ्ख्ये ஸாங்க்யே ஆத்ம தத்துவ ஆராய்ச்சியில் एषा ஏஷா இந்த
बुद्धि: பு3த்3தி4: புத்தியானது ते தே உனக்கு अभिहिता அபி4ஹிதா சொல்லப்பட்டது
योगे तु யோகே3 து இனி யோக விஷயத்தில் इमाम् இமாம் இதை शृणु ச்1ருணு கேள்
यया बुद्ध्या யயா பு3த்3த்4யா அத்தகைய புத்தியோடு युक्त: யுக்த: கூடியவனானால்
कर्मबन्धं கர்மப3ந்த4ம் கர்ம பந்தத்திலிருந்து प्रहास्यसि ப்ரஹாஸ்யஸி விடுபடுவாய்.
ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவு உனக்குப் புகட்டப்பட்டது. இனி பார்த்தா, யோகத்தைப் பற்றிக் கேள். யோகபுத்தியைப் பெறுவாயாகில் நீ கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவாய்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
இங்ஙனம் உனக்கு ஸாங்க்ய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்த புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறி விடுவான்.
விளக்கம்:
இந்த அத்யாயத்தின் தலைப்பு சாங்க்ய யோகமாக இருந்த போதிலும், இங்கு வேறு தலைப்புகளும் விவாதிக்கப்படுகின்றன.
ஸ்லோகம் 11 - 30 ஆத்ம தத்துவம் புகட்டப்பட்டது.
ஸ்லோகம் 40, 41, 45-53 யோக விஷயம் கூறப்படும்.
=> இருவகையான வாழ்க்கை முறை:
கீதை, வேதாந்தத்தை குறிக்கும் மோக்ஷ-சாஸ்திரம் மற்றும் கர்ம காண்டத்தை குறிக்கும் கர்ம-சாஸ்திரம் என இருவகையான சாஸ்திரங்களை உள்ளடக்கியது. மோக்ஷ-சாஸ்திரம் ஆத்ம ஞானத்தை மையமாக கொண்டதாகவும், கர்ம-சாஸ்திரம் பலவிதமான சடங்குகள், பல்வேறு சாத்யங்களுக்கான வழிமுறைகள்(சாதனைகள்) இவற்றை மையமாக கொண்டதாகவும் உள்ளது. இதில் மோக்ஷ சாஸ்திரம், கர்மயோகம் மற்றும் சாங்க்யம்(அல்லது சந்யாசம்) என்னும் இருவகையான வாழ்க்கை முறையை கொண்டது. க்ருஷ்ணர் கர்மத்திற்கும் கர்மயோகத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக புரிந்துகொள்ளும் பொருட்டு பேசுகிறார். விவேகத்துடன் கூடிய ஒருவன், மோக்ஷத்தை அடையும் பொருட்டு, சித்த சுத்திக்காக செய்யப்படும் கர்மம் கர்மயோகம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட பாவனையில் செய்யப்படும் செயல் கர்மத்தை கர்மயோகமாக மாற்றுகிறது. ப்ரார்தனை, பக்தி, சமாதி மற்றும் அஷ்டாங்க யோகம் போன்றவை கர்மயோகத்திற்குள் வருவதாக சங்கரர் தனது உரையில் குறிப்பிடுகிறார். உண்மையில் கர்ம-யோகம் நேரடியாக மோக்ஷத்தை கொடுக்காது. கர்ம-யோகத்தினால் அந்தக்கரண சுத்தி(अन्तःकरण शुद्धि) அடைந்த ஒருவன் ஈஷ்வரனின் கருணையினால் ஞானத்தை அடைந்து கர்ம பந்தத்திலிருந்து விடுபடுகின்றான். இங்கு கர்ம-யோகத்தை புகழும் விதமாக பகவான் அர்ஜுனனிடம், கர்மயோகத்தை பற்றிய அறிவு அவனை கர்ம பந்தத்திலிருந்து விடுவிக்கும்(கர்மப3ந்த4ம் ப்ரஹாஸ்யஸி) என்கிறார்.
இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட ‘கர்ம’ என்பது தர்ம-அதர்மமான, அதாவது புண்ணிய பாபத்தை கொடுத்து ஒருவனை பந்தப்படுத்தும் சரியான மற்றும் தவறான செயல்கள். ஒருவனது கர்மமே அவனை பந்தப்படுத்துவதால் கர்ம-பந்தம்(கர்மப3ந்த4ம்).
--------------------------------------------------------------------------------------------------------------
।।2.40।। கர்ம யோகத்தின் மஹிமை:
नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते ।
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् ।। ४०
நேஹாபி4க்ரமனாசோ1ऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்3யதே ।
ஸ்வல்பமப்யஸ்ய த4ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப4யாத் ।। 40
इह இஹ இந்த கர்மயோகத்தில் अभिक्रम नाश: அபி4க்ரம நாச1: முயற்சி வீண்போதல்
न अस्ति ந அஸ்தி கிடையாது प्रत्यवाय: ப்ரத்யவாய: விபரீத பலன்(குற்றமாவது)
न विद्यते ந வித்3யதே இல்லை अस्य धर्मस्य அஸ்ய த4ர்மஸ்ய (கர்மயோகம் என்கிற) இந்த தர்மத்தின்
स्वल्पम् अपि ஸ்வல்பம் அபி சிறிது பழகினும் महत: भयात् மஹத: ப4யாத் பெரும் பயத்திலிருந்து
त्रायते த்ராயதே காப்பாற்றுகிறது.
இந்த கர்மயோகத்தில் முயற்சி வீண்போதல் கிடையாது. குற்றமொன்றும் வராது. இதை சிறிது பழகினும் பெரும் பயத்திலிருந்து இது காப்பாற்றும்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
இதில் முயற்சிக் கழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்த தர்மத்தில் சிறிதிருப்பினும், அது ஒருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.
விளக்கம்:
=> கர்ம யோகத்தின் மஹிமை:
பலனை எதிர்பார்த்து செய்யப்படும் எந்தவொரு கர்மமும் பல வகையான தடைகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால் கர்ம-பலனிற்காக அல்லாமல் மோக்ஷத்திற்காக செய்யப்படும் இந்த கர்மயோகம் முற்றிலும் ப்ரார்த்தனை வடிவம்; இங்கு செய்யப்படும் அனைத்து கர்மமும் நம் மனதை சுத்திகரிக்கும் ப்ரார்த்தனை ஆகிறது.
இங்கு பகவான் கர்மத்திற்கும் கர்ம யோகத்திற்குமுள்ள மூன்று முக்கிய வேறுபாடுகளைக் கூறுகிறார்:
(1) எந்தவொரு கர்மமும் தோல்வியில் முடிய வாய்ப்புள்ளது. உதாரணமாக பயிர் செய்யப்பட்ட தானியங்கள், அறுவடை செய்யப்படுவதற்கு முன் நீர் பற்றாக்குறை, மழையின்மை, வெள்ளம், பூச்சிகள் என பல தடைகளினால் பயிர் நாசமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் கடமையில் தோல்வி அடைந்த போதும், அது கர்மயோகமாக செய்யப்பட்டிருப்பின் அதன் பலனான மனத்தூய்மை, மனப்பக்குவத்தில் தோல்வி இல்லை(அபி4க்ரம நாச1: ந அஸ்தி).
(2) ப்ரத்யவாய: இருவகையான பொருளைக் குறிக்கும். (i) எடுத்த காரியத்தை முழுமையாக முடிக்காமல் பாதியில் கைவிடுவதினால் வரும் விபரீத விளைவு (ii) செய்யவேண்டிய செயலை சரியான காலத்தில் செய்யாமல் விடுவதினால் வரும் கேடு. உதாரணமாக 6 நாட்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை 2 நாட்களுக்கு மட்டும் எடுத்துக் கொள்வதும், அல்லது சரியான காலத்தில் மருத்துவரை அணுகாமல் விடுவதும் இரண்டுமே விபரீதமான விளைவையே உருவாக்கும். ஆனால் கர்மயோகமாக செய்யும் செயலில் குற்றம், பாபம் போன்ற எதிர்மறையான விளைவுகள் இல்லை(ப்ரத்யவாய: ந வித்3யதே).
(3) கர்மம் முழுமையாக செய்யப்படும் போது தான் பலன். ஆனால் கர்மயோகத்தை சிறிது பழகினும் அது ஸம்ஸார பயம், மரண பயம், ஜென்ம பயம் போன்ற பெரிய பயத்தினின்று காப்பாற்றுகிறது(மஹத: ப4யாத் த்ராயதே).
--------------------------------------------------------------------------------------।।2.41।। கர்ம யோகியின் மஹிமை:
व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन ।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम् ।। ४१
வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4ரேகேஹ குருநந்தன ।
ப3ஹுசா1கா2 ஹ்யனந்தாச்1ச பு3த்3த4யோऽவ்யவஸாயினாம் ।। 41
कुरुनन्दन குருநந்தன குருவம்சத்தில் பிறந்தவனே इह இஹ இந்த யோகத்தில்
व्यवसायात्मिका வ்யவஸாயாத்மிகா நிச்சயமான(உறுதிகொண்ட) बुद्धि: பு3த்3தி4: புத்தியானது
एका ஏகா ஒன்றே अव्यवसायिनाम् அவ்யவஸாயினாம் நிச்சயமில்லாதவர்களுடைய
बुद्धय: பு3த்3த4ய: புத்திகள் हि ஹி உண்மையில் बहुशाखा ப3ஹுசா1கா2 பல கிளைகளுடையன
अनन्ता: च அனந்தா: ச பலவகைப்பட்டவைகளாயும் இருக்கின்றன.
குருவம்சத்தில் தோன்றியவனே, இந்த யோகத்தில் உறுதி கொண்டவனுக்கு புத்தியானது ஒன்றே. உறுதிகொள்ளாதவர்களின் புத்திகள் பல கிளைகளையுடையனவாயும் முடிவற்றவைகளாகவும் உள்ளன.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
குருகுலத்தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமை யுடையது. உறுதியில்லா தோரின் மதி பலகிளைப்பட்டது, முடிவற்றது.
விளக்கம்:
=> ஒற்றை நோக்குடைய புத்தி:
இந்த ஸ்லோகத்தில் வ்யவஸாயாத்மிகா என்பது நிச்சயத்தைக் குறிக்கிறது. அதாவது ஒருவனது வாழ்க்கையின் குறிக்கோள் மற்றும் அதை அடைய அவன் தேர்ந்தெடுக்கும் பாதை இவையிரண்டில் உள்ள தெளிவைக் குறிக்கிறது. ஆகவே ஒற்றை நோக்குடைய புத்தி ஏகா. மோக்ஷத்தை இறுதி இலக்காக கொண்ட முமுக்ஷு(சாதகன்), பரப்ரம்ம ஞானத்திற்கு தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு கர்ம-யோக சாதனையை மேற்கொள்கிறான். விருப்பு வெறுப்புகளின் வீர்யத்தை மட்டுப்படுத்த உதவும் இச்சாதனை, எது நிலையானது? எது நிலையற்றது? என பிரித்தறியும் நித்ய-அநித்ய-வஸ்து-விவேகத்திற்கு தேவையான மனதை கொடுக்கிறது. இந்த யோகத்தில் உறுதி கொண்டவனுக்கு புத்தி ஒன்றேயாகும்(வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4: ஏகா). வாழ்க்கையில் சாதன சாத்ய விஷயத்தில் நிச்சயம் செய்துவிட்டான். அதில் மாற்றமே கிடையாது. ஒருமை புத்தியின் மூலம் மனதை ஒருமுகப்படுத்துதல் உலக கார்யத்திற்கும் பயன்படும், கர்மயோகத்தின் மூலம் மனத்தூய்மை அடைந்து மோக்ஷம் அடைவதற்கும் பயன்படும்.
ஆனால் உறுதி கொள்ளாதவர்களின் புத்திகள் பல கிளைகளைக் கொண்டவைகளாகவும் முடிவற்றவைகளாகவும் உள்ளன (அவ்யவஸாயினாம் பு3த்3த4ய: ப3ஹுசா1கா2 அனந்தா: ச). பணம், பதவி, அந்தஸ்து போன்ற விதவிதமான, முடிவற்ற சாதனைகளைக் கொண்டவர்களாகவும், அதில் திருப்தியற்றவர்களாகவும் இருக்கின்றனர். ஏனெனில், ஒருகால் பணத்தை சாத்யமாகக் கொண்டவன் அதை அடையக்கூடிய எண்ணற்ற வழிகளாலும், எவ்வளவு அடைந்தாலும் ‘இன்னும் அதிகம் வேண்டும்’ என்ற எண்ணத்தினாலும் பல சிந்தனைகளுடன் கூடியவனாக, நிலையற்ற புத்தியுடன இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------------------------
।।2.42।। - ।।2.44।। எதனால் ஒருவன் நிலையற்ற புத்தியுடன் உள்ளான்?
यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चित: ।
वेदवादरता: पार्थ नान्यदस्तीति वादिन: ।। ४२
कामात्मान: स्वर्गपरा: जन्मकर्मफलप्रदाम् ।
क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति ।। ४३
भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम् ।
व्यवसायात्मिका बुद्धि: समाधौ न विधीयते ।। ४४
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத3ந்த்யவிபச்1சித: ।
வேத3வாத3ரதா: பார்த2 நான்யத3ஸ்தீதி வாதி3ந: ।। 42
காமாத்மான: ஸ்வர்க3பரா: ஜன்மகர்மப2லப்ரதா3ம் ।
க்ரியாவிசே1ஷப3ஹுலாம் போ4கை3ச்1வர்யக3திம் ப்ரதி ।। 43
போ4கை3ச்1வர்யப்ரஸக்தானாம் தயாபஹ்ருதசேதஸாம் ।
வ்யவஸாயாத்மிகா புத்3தி4: ஸமாதெள4 ந விதீ4யதே ।। 44
पार्थ பார்த2 பார்த்தா अविपश्चित: அவிபச்1சித: அக்ஞானிகள்(அறிவில்லாதவர்கள்)
वेद वाद रता: வேத3 வாத3 ரதா: வேதத்தின் கர்ம காண்டத்தில் சுகித்திருப்பவர்கள்
अन्यत् அன்யத் போகத்தை தவிர வேறு न अस्ति ந அஸ்தி எதுவுமில்லை इति இதி என்று
वादिन: வாதி3ந: வாதிடுபவர்கள் कामात्मान: காமாத்மான: ஆசை நிறைந்தவர்கள்
स्वर्गपरा: ஸ்வர்க3பரா: சுவர்கத்தையே முடிவான லக்ஷியமாகக் கொண்டவர்கள்
जन्म कर्म फल प्रदाम् ஜன்ம கர்ம ப2ல ப்ரதா3ம் புதிய ஜென்மத்தை கர்ம பலனாக கொடுக்கிற
भोगैश्वर्य गतिं प्रति போ4கை3ச்1வர்ய க3திம் ப்ரதி போகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அடைதற்கு உபாயமான
क्रिया विशेष बहुलां க்ரியா விசே1ஷ ப3ஹுலாம் விதவிதமான அதிக கர்ம விசேஷங்கள் நிறைந்ததும்
याम् इमाम् पुष्पितां वाचं யாம் இமாம் புஷ்பிதாம் வாசம் எந்த இப்படிப்பட்ட அலங்காரமான வார்த்தையை
प्रवदन्ति ப்ரவத3ந்தி சொல்கிறார்கள்.
तया தயா அந்த வார்த்தையினால் अपहृत चेतसाम् அபஹ்ருத சேதஸாம் அபகரிக்கப்பட்ட மனதையுடையவர்களாய் भोगैश्वर्य प्रसक्तानां போ4கை3ச்1வர்ய ப்ரஸக்தானாம் போகத்திலும் ஐஸ்வர்யத்திலும் பற்றுடையவர்களுக்கு व्यवसायात्मिका बुद्धि: வ்யவஸாயாத்மிகா புத்3தி4: உறுதியான புத்தி समाधौ ஸமாதெள4 மனதிலேயே
न विधीयते ந விதீ4யதே உண்டாவதில்லை.
வேதத்தின் கர்ம காண்டத்தில் சுகித்திருப்பவர்கள், சுவர்க்கத்தை விளைவிக்கிற கர்மத்திற்கு அன்னியமாக வேறு ஒன்றுமில்லை என்பவர்கள், ஆசை நிறைந்தவர்கள், சுவர்கத்தையே முடிவான லக்ஷியமாகக் கொண்டவர்கள் — இத்தகைய அக்ஞானிகளுடைய அலங்காரமான வார்த்தையைக் கேட்டு அபகரிக்கப்பட்ட மனதையுடையவர்களுக்கும், போகத்திலும் ஐஸ்வர்யத்திலும் பற்றுடையவர்களுக்கும் உறுதியான புத்தி மனதில் உண்டாவதில்லை. அவர்களுடைய அலங்காரமான சொற்கள், போகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அடைதற்கு உபாயமான விதவிதமான காமிய கர்ம விசேஷங்கள் நிறைந்தனவாயும், புதிய பிறவிகளைக் கர்ம பலனாக கொடுப்பவைகளாயும் இருக்கும்.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப்போன்ற(அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கை யொழிய மற்றது பிழை யென்கிறார்கள். ।। 42 ।।
இவர்கள் காமிகள், ஸ்வர்கத்தை பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.।।43।।
இவர்கள் சொல்வதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியிலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது. ।।44।।
விளக்கம்:
=> உலகத்தவர் போக்கு:
அவிபச்1சித: என்பது அறிந்தும் அறியாதவர்களை, அவிவேகிகளைக் குறிக்கிறது. அதாவது வேதத்தை கற்றறிந்த, அதன் உண்மைத்தன்மையில் நம்பிக்கைகொண்ட, ஆனால் அதனுடைய முக்கிய உபதேசமான ஆத்மஞானத்தை அறியாதவர்களைக் கூறுகிறது. இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில வாக்கியங்களைக் கொண்டு பேசி, வாதாடி மற்றவர்களையும் நம்பவைக்கிறார்கள் என்று சங்கரர் தனது உரையில் விமர்சிக்கிறார். கேட்பதற்கு இனிமையான அலங்காரச் சொற்களைக் கூறி(யாம் புஷ்பிதாம் வாசம்), குழந்தை பேறு, உடல் ஆரோக்யம், செல்வம் போன்ற அனைத்துவிதமான உலக போகத்தை அடையும் சடங்குகளைக் கூறும் வேதத்தின் கர்ம காண்டத்தை மட்டும் கூறி(வேத3 வாத3 ரதா:), சொர்ககத்தையே மேலான முடிவான லக்ஷியமாக கொண்டவர்கள்(ஸ்வர்க3பரா:), மேலான பிறப்பை கொடுக்கும் கர்மபலனைப் பற்றியும்(ஜன்ம கர்ம ப2ல ப்ரதா3ம்), போகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அடைவதற்கான விதவிதமான சாதனைகளைப் பற்றியும் பேசுபவர்களிடம்(க்ரியா விசே1ஷ ப3ஹுலாம்), அதில் பற்றுடையவர்களின் புத்தி சென்றுவிடுவதால்(அபஹ்ருத சேதஸாம்) உறுதியான புத்தி அவர்களிடம் உண்டாவதில்லை(வ்யவஸாயாத்மிகா புத்3தி4: ந விதீ4யதே).
தவறான விஷயத்தை சொல்பவர்களிடம் நம்பிக்கை வைத்து, அவர்களின் ஆசை வார்த்தைகளினால் மோஹமடைந்த காரணத்தினால் அவர்களின் புத்தி நிச்சயமானதாக இல்லை. ஆசை எனும் கயிற்றினால் கட்டுண்டு கிடப்பவர்கள் தங்களது கல்வியையும், கேள்வியையும், சொல்வன்மையையும் சிற்றின்பத்தை அடையும் பொருட்டே கையாளுகின்றனர். பலவகைப்பட்ட இன்பங்களை நாடி பிறவிப் பெருங்கடலில் அழுந்திக்கிடப்பவர்க்கு வேதத்தின் கருமகாண்டம் பயன்படுகிறது. இன்பங்களைப் பெறுவது வாழ்க்கையின் லக்ஷியமன்று. பரிபூரணமடைவதே முடிவான லக்ஷியமாகும். அதற்கு ஞானத்திலும் யோகத்திலும் உறுதிபெற்ற உள்ளம் வேண்டும்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
கழுகு ஆகாயத்தில் உயரப் பறக்கிறது. ஆனால் கீழே எங்கு அழுகிய பிணம் கிடக்கிறது என்பதிலேயே அது கண்ணும்கருத்தும் உடையதாயிருக்கிறது. வேத சாஸ்திரங்களை எவ்வளவு கற்றிருந்தாலும் காமவசப்பட்டிருக்குமளவு அந்த சாஸ்திரிகள் கழுகு போன்றவர்களேயாவர். காமமும் காசு ஆசையும் உள்ளத்தில் குடிகொண்டிருக்குமளவு அவர்கள் ஈஷ்வர லாபத்தை அடைய முடியாது.
----------------------------------------------------------------------------------------------------------------
।।2.45।। வ்யவஸாயாத்மிகா(உறுதியான) புத்திக்கான உபாயம்:
त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन ।
निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम अात्मवान् ।। ४५
த்ரைகு3ண்யவிஷயா வேதா3 நிஸ்த்ரைகு3ண்யோ ப4வார்ஜுன ।
நிர்த்3வந்த்3வோ நித்யஸத்த்வஸ்தோ2 நிர்யோக3க்ஷேம ஆத்மவாந்।। 45
अर्जुन அர்ஜுன அர்ஜுனா वेदा: வேதா3: வேதங்கள் त्रैगुण्यविषया: த்ரைகு3ண்யவிஷயா முக்குண மயமான ப்ரபஞ்சத்தை விஷயமாகக் கொண்டவை निस्त्रैगुण्य: நிஸ்த்ரைகு3ண்ய: முக்குணத்திலிருந்து விடுபட்டவன்
निर्द्वन्द्व: நிர்த்3வந்த்3வ: இருமைகளினின்று விடுபட்டவன்
नित्यसत्त्वस्थ: நித்யஸத்த்வஸ்த2 : எப்போதும் சத்வ குணத்தில்(நடு நிலையில்) இருப்பவன்
निर्योगक्षेम: நிர்யோக3க்ஷேம: யோக க்ஷேமங்கள் அற்றவன் अात्मवान् ஆத்மவாந் ஆத்மசொரூபத்தில் நிலைத்தவன் भव ப4வ ஆகக்கடவாய்.
அர்ஜுனா, வேதங்கள்(கர்மகாண்டம்) முக்குண மயமான ஸம்ஸாரத்தைப் பற்றியவைகள். நீ இருமைகளினின்று விடுபட்டவனாக, எப்பொழுதும் சத்வ குணத்தில் இருப்பவனாக, யோக க்ஷேமங்கள் அற்று, ஆத்மசொரூபத்தில் நிலைத்திருந்து, முக்குணங்களைக் கடந்தவனாகுக.
பாரதியின் மொழிபெயர்ப்பு :
மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக. இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக க்ஷேமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.
விளக்கம்:
=> யோகத்தின் திறவுகோல்:
போகத்திலும் ஐஸ்வர்யத்திலும் உறுதி கொண்ட புத்தியுடையவர்களுக்கு முக்குண விஷய மயமான வேதத்தின் பூர்வ பாகமே அதன் முக்கிய அம்சமாகிறது. அதில் சொர்க்கம், மறுபிறவி போன்ற அறியாத சாத்யங்கள் மற்றும் குழந்தை பேறு, ஆயுள் விருத்தி போன்ற அறியப்பட்ட சாத்யங்களை அடையும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
மூன்று குணங்களின்(த்ரைகு3ண்ய) விளைவு:
(1) ஸத்வ குணம் - அமைதி, அறிவு
(2) ரஜோ குணம் - ஆசை, செயல்
(3) தமோ குணம் - மோஹம், செயலின்மை
ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குண மயமான இந்த ப்ரபஞ்சத்திலிருந்து போகத்தை அடைய வழிகாட்டியாக வேதத்தின் கர்ம காண்டம் உள்ளது. அர்ஜுனா, ஸம்ஸாரத்திற்கு காரணமான இந்த முக்குணத்தில் வைராக்யம் கொண்டவனாக இரு என பகவான் கூறுகிறார். இவ்வுலகம் அநித்யமானது, அதிருப்தியானது, முழுமையான சுகம் அற்றது என உணர்ந்து அதில் வைராக்யத்துடன் இரு— நிஸ்த்ரைகு3ண்ய: ப4வ. சங்கரர் தனது உரையில், ஆசையிலிருந்து விடுபட்டவனாக இரு — நிஷ்காம: ப4வ என விளக்கம் கூறுகிறார்.
லாபம்-நஷ்டம், வெற்றி-தோல்வி, சுகம்-துக்கம் போன்ற இருமைகளைக்(த்3வந்த்3வ:) கடந்தவனாக, விருப்பமான விருப்பமற்ற சூழ்நிலைகளைச் சமமாக பாவிப்பவனாக இரு என்கிறார். ஸத்வ குணத்திலிருக்கும் போது தான் ஒருவன் இருமையை கடந்தவனாக இருக்க முடியும். ஆகவே எப்பொழுதும் ஸத்வ குணத்திலேயே, நடுநிலைத் தவறாமல் இரு—நித்யஸத்த்வஸ்த2: ப4வ.
* ஸத்வ குணத்தின் அடையாளம்: அமைதியாக, பொறுமையாக இருத்தல்; ஒரு சூழ்நிலையை சரியாகக் கணித்தல்.
* செயல், பேச்சு, உணவு அளவாக இருத்தல் ஒருவனை ஸத்வ குணத்திலிருக்க வைக்க உதவும்.
=> யோகக்ஷேமம்:
பொருளை தேடிச் சேர்த்தல் யோகம் என்றும், சேர்த்த பொருளை வைத்துக் காப்பாற்றுதல் க்ஷேமம் என்றும் சொல்லப்படும். தனி மனிதனது எந்தவொரு பிரச்சனையும் இவை இரண்டுடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். தனக்கு தேவையானது கிடைக்கவில்லை அல்லது ஏற்கனவே இருந்த ஒன்று இழக்கப்பட்டு விட்டது என தலைமுடியில் ஆரம்பித்து நூற்றுக்கணக்கான பொருட்களில், விஷயங்களில் தொடரும் அனைத்துவித ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் ஒருவிதத்தில் யோகக்ஷேமத்தோடு தொடர்புடையதே. எல்லா நேரத்திலும் யோகக்ஷேமத்தில் ஈடுபடுபவனது புத்தி ஸத்வத்தில் நிற்காது. ஆகவே யோகக்ஷேமமற்றவனாக இரு நிர்யோக3க்ஷேம: ப4வ.
இப்படிப்பட்டவனாக ஒரு சாதகன் ஆத்ம சொரூபத்திலேயே திளைத்திருக்க வேண்டும்— ஆத்மவாந் ப4வ. தமோ குணத்திலிருந்து விடுதலை அடைந்தவனாக, எந்தப் பொருளும் தனது மனதை மயக்க அனுமதிக்காதவனாக இரு.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
கீதா, கீதா, கீதா என்று அடுத்தடுத்து அவசரமாக உச்சரித்தால் ‘தாகி, தாகி’ என்ற சப்தம் வருவது போலக் கேட்கும்[தாகி என்பது தியாகி என்பதின் சிதைவு]. உலகப் பற்றுள்ளவர்களே, துறவு கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் விட்டு ஈஷ்வரனிடம் மனதை நிலைநிறுத்துங்கள் என்று கீதையானது ஒரே வார்த்தையில் போதிக்கிறது.
-------------------------------------------------------------------------------------