||3.7|| ஆகவே கர்மயோகம் செய்:
यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन ।
कर्मेन्द्रियै: कर्मयोगमसक्त: स विशिष्यते ।। ७ ।।
யஸ்த்விந்த்3ரியாணி மநஸா நியம்யாரப4தேऽர்ஜுந ।।
கர்மேந்த்3ரியை: கர்மயோக3மஸக்த: ஸ விசி1ஷ்யதே ।। 7 ।।
तु து ஆனால் अर्जुन அர்ஜுன அர்ஜுனா य: ய: எவன் इन्द्रियाणि இந்த்3ரியாணி புலன்களை
मनसा மநஸா மனதினால் नियम्य நியம்ய அடக்கி असक्त: அஸக்த: பற்றற்று
कर्मेन्द्रियै: கர்மேந்த்3ரியை: கர்மேந்திரியங்களைக் கொண்டு कर्मयोगम् கர்மயோக3ம் கர்மயோகத்தை
आरभते ஆரப4தே ஆரம்பிக்கின்றானோ स: ஸ: அவன் विशिष्यते விசி1ஷ்யதே சிறந்தவன்.
அர்ஜுனா, ஆனால் புலன்களை மனதினால் கட்டுப்படுத்தி பற்றில்லாதவனாக கர்மேந்திரியங்களைக் கொண்டு கர்மயோகம் செய்பவன் மேலானவன்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.
விளக்கம்:
=> கர்மயோகமே சிறந்தது என்பதன் முடிவுரை:
பகுத்தறியும் அறிவையுடைய ஒருவனாலேயே தனது புலன்களைக் கட்டுபடுத்த முடியும். ஆகவே இங்கு பகவான் உபயோகிக்கும் ‘மனதினால்(மனஸா)’ என்பதை பகுத்தறியும் புத்தியினால் என்றும் பொருள் கொள்ளலாம். புலன்களை அடக்கி, அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒருவன், கர்ம பலத்தில் பற்றற்றவனாக(அஸக்த:) கர்ம யோகத்தை ஆரம்பிக்கிறான்(ஆரப4தே). அதாவது கர்மத்தை யோகமாக, மோக்ஷத்திற்கான சாதனையாக செய்கிறான். கர்ம யோகம் என்பது செயல் அல்ல, செய்வதற்கு. அது ஒரு பாவனை. சாஸ்திரத்தில் கூறப்படும் வைதிக கர்மமாக இருந்தாலும் சரி அல்லது மற்ற அனைத்து வகையான செயல்களை உள்ளடக்கிய லெளகிக கர்மமாக இருந்தாலும் சரி, கர்மயோக பாவனையுடன் மனத் தூய்மைக்காக செய்யப்படும் போது அவன் மோக்ஷ ஞானத்தை கிரஹிக்கும் தகுதியடைகிறான். மக்கள் பொதுவாக வைதிக கர்மங்களான யக்ஞங்கள், பிரார்தனைகள் முதலியவைகளைத் தங்களது பாதுகாப்பிற்காகவும், செல்வம், ஆயுள், சந்ததி, சொர்க்கம் போன்ற சுக போகத்திற்காகவும் செய்கிறார்கள். விருப்பு-வெறுப்பினால் தூண்டப்பட்டு செய்யப்படும் இக்கர்மங்கள், தர்மத்திற்கு உட்பட்டதாக இருந்த போதிலும் அவை காம்ய கர்மங்கள். அதைச் செய்பவன் கர்மி, அதாவது கர்ம பலத்தில் பற்று கொண்டவன். விருப்பம்(ராக) என்பது தன்னிடமில்லாத ஒன்றை அடைய விரும்பும் நோக்கிலும், வெறுப்பு(த்வேஷம்) என்பது ஒன்றை தவிர்க்க அல்லது அதிலிருந்து விடுபடும் நோக்கிலும் அமைகிறது. மேற்கூறிய இவ்விரு நோக்கத்திற்காக அல்லாமல் மோக்ஷத்திற்காக, ஆத்மாவை அறிய அதாவது ஈஷ்வரனை அறியும் பொருட்டு கர்ம யோகத்தை ஆரம்பிக்கிறான்(ஆரப4தே) யோகி. ஈஷ்வரனை அறிய அந்தக்-கரண-சுத்தி அவசியம்.
தனித்துவமான ஜீவனுக்கும், இறைவனான ஈஷ்வரனுக்கும் உள்ள ஒற்றுமையைக் கூறும் சாந்தோக்ய உபநிஷத்தின் ‘தத் த்வம் அஸி - நீ அதுவாக இருக்கிறாய்’ எனும் மஹாவாக்கியத்தின் சூக்ஷமம் புரிய, மனம் மிகவும் சூக்ஷமமானதாக இருக்க வேண்டும். நுண்ணறிவை கிரஹிக்கும் நுண்மையுடன் திகழ வேண்டும். ஆகவே கர்மப் பலனில் பற்றில்லாமல் மனத்தூய்மைக்காக கர்ம யோகத்தில் ஈடுபடுபவன், முன் சுலோகத்தில் கூறப்பட்ட மித்யாசாரனைக் காட்டிலும் சிறந்தவன்.
=> மித்யாசாரிக்கும் கர்மயோகிக்குமுள்ள வேறுபாடு:
முந்தய சுலோகத்தில் கூறப்பட்ட மித்யாசாரி புலன்களை அடக்கினான். ஆனால் மனதை அடக்க முடியவில்லை. அவனை விட மேலானவன் இந்த சுலோகத்தில் எடுத்துச் சொல்லப்படுகிற கர்மயோகி. இவன் மனதை ஒழுங்குப்படுத்தி இந்திரியங்களைப் பயன்படுத்துகிறான். அடங்காத மனதையுடையவனிடம் ஆசை சர்வகாலமும் அவனது உள்ளத்தில் குடி கொள்கிறது. அறிவுடையவனோ எல்லா கர்மங்களையும் சர்வேசுவரனுக்கு செய்யும் ஆராதனையாகவும், பலனை பகவானது பிரசாதமாகவும் ஏற்கின்றான். ஆகவே அர்ஜுனா, இந்திரியங்களைப் பாழ்படுத்துவது தகாது. அடங்கிய மனதால் அவைகளை மேம்படுத்துவதே சிறந்த முறை.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
ஒரு பொந்தில் ஒரு பாம்பு வசித்து வந்தது. அவ்வழியாகச் சென்றவர்களை அது கடித்து வந்தது. ஆதலால் அப்பக்கம் ஒருவரும் போவதில்லை. ஒரு நாள் சாது ஒருவர் அவ்வழியே போகும்போது அவரைக் கடிக்க அப்பாம்பு அவரைப் பின்பற்றியது. ஆனால் அவரைச் சமீபித்ததும் அவருடைய மஹிமையால் பாம்புக்கிருந்த மூர்க்கம் முழுவதும் போய்விட்டது. அந்த மஹான் பாம்பைப் பார்த்து, ‘நண்பா! என்னைக் கடிக்க நினைக்கிறாயா?’ என்று கேட்டார். பாம்பு வெட்கப்பட்டுப் பதில் சொல்லாமலிருந்தது. அதன்மேல் அந்த யோகி, ‘நண்பா கேள். இனிமேல் ஒருவருக்கும் தீங்கு செய்யாதே’ என்று சொல்லிப் போனார். அவர் சொல்லுக்கு கீழ்படிந்து நடப்பதாக பாம்பு தலையை அசைத்தது. மஹான் போன பிறகு பாம்பு தன் புற்றில் புகுந்துகொண்டு அந்த க்ஷணம் முதல் யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து வந்தது. கொஞ்ச நாளில் அவ்வூர் ஜனங்கள், அந்தப் பாம்புக்கு விஷமெலாம் போய்விட்டது; இனி ஒருவரையும் கடிக்காது என நினைத்து அதை தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். சிலர் அதன்மீது கற்களை எறிந்தார்கள்; வேறு சிலர் இரக்கமின்றி அதன் வாலைப் பிடித்து இழுத்தார்கள். இப்படியாக அதற்கு நேர்ந்த தொந்தரவிற்கு அளவேயில்லை. அதிருஷ்டவசமாய் முன்வந்த சாது அவ்வழியாய் மறுபடியும் வந்தார். உடம்பெல்லாம் புண்ணாகி மெலிந்திருக்கு பாம்பைப் பார்த்து அது அப்படியானதின் காரணத்தைக் கேட்டார். ‘ஸ்வாமி, தங்கள் உபதேசப்படி நான் ஒருவருக்கும் தீங்கு செய்யவில்லை. அதன் பயன் இது. ஜனங்கள் இரக்கமில்லாமல் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள்’ என்றது பாம்பு. யோகி இதைக் கேட்டு புன்சிரிப்புக் கொண்டு, ‘நண்பா, நான் யாரையும் கடிக்க வேண்டாம் என்றுமட்டும் உனக்குச் சொன்னேன். ஒருவரையும் பயமுறுத்த வேண்டாம் என்று நான் சொல்லவில்லையே’ என்றார்.
அதுபோல, நீ உலகத்தில் வாழ்ந்திருக்கும் வரையில் பிறர் உன்னிடம் அச்சமும் மரியாதையும் கொள்ளும்படி நட. ஆனால் ஒருவருக்கும் நீ தீங்கு செய்யாதே. பிறரால் உனக்குத் தீங்கு வராதபடியும் காத்துக்கொள். அதாவது மனதையும் இந்திரியங்களையும் முறையாகக் கையாள கற்றுக் கொள்.
----------------------------------------------------------------------------------------------------------------||3.8|| செயலின்மையை காட்டிலும் செயல் சிறந்தது:
नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मण: ।
शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येदकर्मण: ।। ८ ।।
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண: ।
ச1ரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்3த்4யேத3கர்மண: ।। 8 ।।
त्वं த்வம் நீ नियतं कर्म நியதம் கர்ம நித்திய(செய்தாக வேண்டிய) கர்மத்தை कुरु குரு செய்
हि ஹி ஏனென்றால் अकर्मण: அகர்மண: செயல் செய்யாததை விட कर्म கர்ம கர்மம் செய்வது
ज्याय: ஜ்யாய: சிறந்தது अकर्मण: அகர்மண: கர்மம் செய்யாதிருப்பதனால் ते தே உன்னுடைய
शरीरयात्रा अपि च ச1ரீரயாத்ரா அபி ச உடலைப் பேணுவதும் கூட
न प्रसिद्ध्येत् ந ப்ரஸித்3த்4யேத் சாத்தியமாகாது.
நீ செய்யப்பட வேண்டிய கர்மத்தை செய். செயலின்மையை விடச் செயல் சிறந்தது. செயல் செய்யாதவனுக்கு உடலைப் பேணுதலும் கூட இயலாது.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டுசெலுத்துதல்கூட உனக்கில்லாமல் போய்விடும்.
விளக்கம்:
=>செயலின்மையை காட்டிலும் செயல் சிறந்தது:
நியதம் - செய்யப்பட வேண்டியவை; கடமைகள். அனுதினமும் செய்பவைகள், குறிப்பிட்ட தருணத்தில் செய்பவைகள், எப்போதாவது செய்பவைகள் என செய்யப்பட வேண்டிய கர்மங்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். முன் சுலோகங்களில்(3.5) விசாரித்ததைப் போல செயல் செய்யாதிருத்தல் சாத்தியமாகாது. இந்த உடலினுடைய பயணத்திற்காக(ச1ரீரயாத்ரா அபி) அதாவது பிறப்பு தொடங்கி இறப்பு வரை தொடர்ந்து வாழ்வதற்காகவாவது ஒருவன் செயல் செய்தேயாக வேண்டும். செயல் செய்யாதிருத்தல் உடலையும் மனதையும் பாழாக்குகிறது.
=> செயல்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
(1) ராக-த்வேஷ ஜென்யம் கர்ம
விருப்பு-வெறுப்பிலிருந்து உற்பத்தியாகும் கர்மங்கள். இவற்றை மூன்றாகப் பிரிக்கலாம்.
(i) நிஷித்3த4 கர்ம(निषिद्ध कर्म) - செய்யக் கூடாத கர்மங்கள்; உ.ம்., திருடுதல், மது அருந்துதல்.
(ii) ப்ராயஷ்சித்த கர்ம(प्रायश्चित्त कर्म) - பிரச்சனை, சிக்கலை தீர்க்கும் பொருட்டு செய்யும் பரிகாரம். [நமக்கு வரும் கஷ்டமான சூழ்நிலை நம்மைப் பக்குவப்படுத்தும். பாபத்தை நீக்கும். நம்மைத் தூய்மைப்படுத்தும். ஆகவே முடிந்தவரை பிராயஷ்சித்தம் செய்வதை தவிர்க்கவும்.]
(iii) காம்ய கர்ம(काम्य कर्म) - போகத்திற்காக செய்யும் செயல்கள்.
(2) கர்த்தவ்ய புத்தி ஜென்யம் கர்ம
செய்தாக வேண்டும் என்று அறிவில் தோன்றும் செயல்கள்; பொதுவாக, செய்யப்பட வேண்டிய கடமைகளைக் குறிக்கும். உண்பது, உறங்குவது, நீராடுவது போன்ற நித்திய கர்மங்களும், நீத்தார் கடன் மற்றும் தர்ப்பணம் போன்ற நைமித்திக கர்மங்களும் இதில் அடங்கும். இவற்றைச் செய்வதால் புண்ணியம் ஏதும் கிடையாது. ஆனால் செய்யாவிட்டால் பாபம் உண்டு என்று சாஸ்திரம் கூறுகிறது. உதாரணமாக உணவு உண்பதால் புண்ணியம் ஒன்றும் இல்லை. ஆனால் உண்ணாது பட்டினி கிடந்தால் உடல் நலிதல் என்ற பாபம் ஏற்படுகிறது.
மனப்பக்குவத்துடன் நாளடைவில் சிறிது சிறிதாக ராக-த்வேஷத்திலிருந்து உற்பத்தியாகும் கர்மங்களைக் குறைத்து, கடமைகளில் அதிகம் ஈடுபட வேண்டும். எப்படிப்பட்ட பாவனையுடன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதற்கு பகவான் அடுத்த சுலோகத்தில் பதிலுரைக்கிறார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------||3.9|| கடமைகளில் இருக்க வேண்டிய பாவனை:
यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धन: ।
तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्ग: समाचर ।। ९ ।।
யஜ்ஞார்தா2த்கர்மணோऽந்யத்ர லோகோऽயம் கர்மப3ந்த4ந: ।
தத3ர்த2ம் கர்ம கௌந்தேய முக்தஸங்க3: ஸமாசர ।। 9 ।।
यज्ञार्थात्कर्मण: யஜ்ஞார்தா2த்கர்மண: இறைவனுக்காக செய்யப்படுகின்ற கர்மத்தை தவிர
अन्यत्र அந்யத்ர மற்ற கர்மத்தினால் अयं लोक: அயம் லோக: இந்த உலகம்
कर्मबन्धन: கர்மப3ந்த4ந: கர்மபந்தத்தை அடைகிறது कौन्तेय கௌந்தேய குந்தியின் மைந்தா
तदर्थं தத3ர்த2ம் அதன்பொருட்டு मुक्त-सङ्ग: முக்தஸங்க3: பற்றற்றவனாக कर्म கர்ம கர்மத்தை
समाचर ஸமாசர நன்கு இயற்று.
இறைவனுக்காக செய்யப்படுகின்ற கர்மத்தை தவிர மற்ற கர்மத்தினால் இவ்வுலகம் கர்மபந்தத்தை அடைகிறது. குந்தியின் மைந்தா, ஈஷ்வரனுக்காக பற்றை துறந்து முழு ஈடுபாட்டுடன் கர்மத்தை செய்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது. ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.
விளக்கம்:
=> யக்ஞகர்மம்:
தனி நலம் கருதாத புண்ணியச் செயல், தியாக புத்தியோடு செய்யும் சேவை, உலகத்தின் நன்மைக்கென்றே செய்யப்படும் செயல், ஈஷ்வர ஆராதனையாக ஆற்றும் வினை, பாரமார்த்திகப் பெரு நோக்கத்தோடு செய்யப்படும் கர்மம் ஆகிய இவையாவும் யஜ்ஞம் என்று அழைக்கப்படுகின்றன.
வேத சாஸ்திரத்தில் ‘யஜ்ஞம்’ எனும் சொல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ‘வழிபடுதல்’ என்னும் பொருளையுடைய ‘யஜ்’ வினைச் சொல்லிலிருந்து தோன்றிய இச்சொல், பொதுவாக யாக சாலையில் அக்னி மூட்டி தேவர்களுக்கு ஹவிஸை படைக்கும் வழிபாட்டைக் குறிக்கிறது. ஆனால் இங்கு அந்தச் சொல், ஒருவனுடைய வாழ்வில் அவனால் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஈஷ்வரனுக்கான வழிபாடு, ஆராதனை என்ற பொருளில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். விஷ்ணுவே யக்ஞசொரூபம் என்பது மறைமொழி.
பொதுவாக நாம் ஒன்றை இறைவனுக்காக படைக்கும் போது, ‘ஸ்வாஹா’ அல்லது ‘நம:’ என உபயோகிப்பது வழக்கம். உதாரணமாக ‘நம சிவாய’ என்பதன் பொருள் ‘இறைவன் சிவனுக்கு எனது நமஸ்காரத்தைப் படைக்கிறேன்’. இம்மந்திரத்தை தொடர்ந்து கூறும் போது அது ‘ஜப-யக்ஞம்’ ஆகிறது. உணவு உண்பதும் ஒருவகையான யக்ஞமே. பிராணனை இறைவனாகக் கொண்டு, ஜீரண சக்தி எனும் நெருப்பில் உணவை படைத்தல் எனும் யக்ஞம் நடைபெறுகிறது. ஆகவே தான் கீதையின் பதினைந்தாம் அத்தியாயமும், ‘ப்ரம்மார்பணம் ப்ரம்ம ஹவி: …(4.24)’ எனும் ஸ்லோகமும் உணவு உட்கொள்ளும் முன் உச்சாடனம் செய்வது வழக்கம். இவ்விதம் அனைத்து செயலும் யக்ஞமாக பார்க்கப்படுகிறது. இதை கீதையின் நான்காம் அத்தியாயத்தில் பகவான் மேலும் விளக்க இருக்கிறார்.
=> புலன்களையும் ஈஷ்வரனாகப் பார்த்தல்:
ஈஷ்வரனை இந்தச் சிருஷ்டியின் உபாதான காரணமாகக் கொண்டால், நமது உடலும் அதன் அங்கமான கண்கள் உள்ளிட்ட அனைத்து புலன்களும் இறைவனே. ஒருகால், இறைவனை நிமித்த காரணமாக எடுத்துக் கொண்டால் இந்தப் புலன்களின் செயல்பாட்டிற்குக் காரணமான தேவதைகளாக இறைவனே விளங்குகிறார். எங்கும் எதிலும் இறைவனைப் பார்க்கின்ற இந்த பாவனையே பக்தி. பக்தியின்றி கர்ம-யோகமில்லை. அனைத்து செயல்களையும் இறைவனுக்கான ஆராதனையாகவும், அதனால் வருகின்ற பலனை ஈஷ்வர பிரசாதமாகவும் கொள்ளும் பாவனை கர்ம-யோகம் ஆகும். மோக்ஷத்திற்கான இரண்டு நிஷ்டைகளில் பிரதானமான ஞான-யோகமும் பக்தியில்லாமல் இல்லை. சந்யாசி தன்னுடைய முழு வாழ்க்கையையே இறைவனை அறியும் பொருட்டு அர்ப்பிக்கிறான். ஈஷ்வரனைப் பற்றிய ஞானமே உண்மையில் தன்னைப் பற்றிய ஞானம். ஆக, கர்ம-யோகம் மற்றும் ஞான-யோகம் இரண்டிலும் பக்தி ஊடுருவியுள்ளது. இதைச் சரியாக புரிந்து கொள்ளாதவர்களே பக்தி-யோகம் என்பதை தனி மார்க்கமாக பேசுகிறார்கள்.
=> பந்தப்படுத்தாத கர்மம்:
எந்தவொரு கர்மமும் நம்மை பந்தப்படுத்தும். சுகம், புண்ணியம், சொர்க்கம், போகம் என்ற பலனில் பற்றில்லாது, இறைவனுக்காக செய்கிறேன் என்ற பாவனையுடன் கடமையைக் கர்மயோகமாக செய்தல் நம்மை பந்தப்படுத்தாது.
(1) இறைவன் - தலைவன், நான்- பணி செய்பவன். கடமையைச் செய் என தலைவன் கூற, நான் அவன் தொண்டாற்றுபவன் என்ற பாவனையுடன் செய்யப்படும் செயல் நம்மை பந்தப்படுத்தாது.
(2) இறைவன் நமக்களித்த இந்த வாழ்க்கை, சூழ்நிலை, உடல் மற்றும் மன ஆரோக்கியம் இவற்றின் மேண்மையை உணர்ந்து நன்றியுணர்வுடன், செய்ய வேண்டிய கடமையைச் செய்தல் நம்மை பந்தப்படுத்தாது.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:
பெறுதற்கரிய இம்மானிடப் பிறவியைப் பெற்றபின் இப்பிறவியிலேயே ஈசுவரனை அறிய ஒருவன் முயலாதுபோனால் அவன் வீணில் பிறந்தவனேயாவான். ஈசுவரனை அறிய முயலுக.
--------------------------------------------------------------------------------------------------------------------------
||3.10|| இறைவன் வகுத்துக் கொடுத்த வாழ்க்கை முறை:
सहयज्ञा: प्रजा: सृष्ट्वा पुरोवाच प्रजापति: ।
अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक् ।। १० ।।
ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி: ।
அநேந ப்ரஸவிஷ்யத்4வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமது4க் ।। 10 ।।
पुरा புரா ஆதியில்(சிருஷ்டியின் துவக்கத்தில்) प्रजापति: ப்ரஜாபதி: பிரஜாபதியானவர்
सहयज्ञा: ஸஹயஜ்ஞா: யக்ஞத்தோடுகூட/கர்மயோக வாழ்க்கை முறையோடு
प्रजा: ப்ரஜா: பிரஜைகளை सृष्ट्वा ஸ்ருஷ்ட்வா படைத்து अनेन அநேந இதனால்
प्रसविष्यध्वम् ப்ரஸவிஷ்யத்4வம் விருத்தியடையுங்கள் एष: ஏஷ: இது व: வ: உங்களுக்கு
इष्ट-कामधुक् இஷ்ட-காமது4க் இஷ்டமானதை கொடுப்பதாக[காமதேனுவாக]
अस्तु அஸ்து இருக்கட்டும் उवाच உவாச சொன்னார்.
சிருஷ்டியின் துவக்கத்தில் பிரம்மதேவன் யக்ஞத்தோடே மனிதர்களைப் படைத்து, “இதனால் விருத்தியடையுங்கள்; இது உங்களுக்கு காமதேனு ஆகட்டும்” என்றார்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: “இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.
விளக்கம்:
=> (1) யக்ஞம் = வேள்வி எனில்,
சிருஷ்டி கர்த்தாவான, அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்கும் பிரம்மதேவர் இங்கு ப்ரஜாபதி என்று அழைக்கப்படுகிறார். ‘ஆதியில் பிரம்மதேவர் கூறினார்’ எனும் இந்த வாக்கியம் வேதத்தைக் குறிக்கிறது. வேதம் எனும் அறிவு, மனிதனால் எழுதப்பட்டது அல்ல. அது பண்டைய ரிஷிகளுக்கு இறைவனால் வெளிக்காட்டப்பட்டதாக பார்க்கப்படுகிறது. தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு வழிகாட்டியாக வேதம் கொடுக்கப்பட்டது. அதில் அவர் யக்ஞங்களை உருவாக்கி, ஒவ்வொருவரையும் அவரின் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் இச் சடங்குகளைச் செய்யுமாறு கட்டளையிட்டார்.
=> வாழ்வின் எல்லா கால கட்டத்திற்குமான வேத சடங்குகள்:
அக்காலத்தில் பல வைதிக சம்பிரதாயங்கள், திருமணம் முடித்த ஒருவன்(பதி_पति) தன் மனைவியுடன்(பத்னி_पत्नि) சேர்ந்து செய்ய வேண்டிய ஒன்றாக இருக்கும். வேள்விகளைச் செய்வது கணவனாக இருந்தாலும் அதற்கு மனைவியின் ஒப்புதல் அவசியம். ஆகவேதான் பெண்ணுடன் கைகோர்த்து தனது வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் திருமண நிகழ்வு, யாகம் வளர்த்து சமயச் சடங்காக செய்யப்படுகிறது. மேலும் தாயின் கருவிலுள்ள குழந்தையின் பாதுகாப்பிற்காகவும் நன்மைக்காகவும் செய்யப்படும் சடங்கு முதல் குழந்தை பிறந்தவுடன் செய்வது, பெயர் சூட்டும் ‘நாம-கரண’ சடங்கு, காது குத்தும் சடங்கு என திருமண வயது வரை இவை தொடர்கின்றன. வேத கால நோக்கில் கூறினால் குழந்தை சடங்குகளுடன் பிறந்து சம்பிரதாயங்களினால் பேணப்படுகிறது. விடியலில் தொடங்கி, மதியம், சூரிய அஸ்தமனம் என தினந்தோறும் செய்தாக வேண்டிய ஹோமங்களும் உள்ளன. அதன் பின்னர் கிரஹஸ்தத்தில் செய்யப்பட வேண்டிய யக்ஞங்கள் என சமய வாழ்க்கைக்கு அர்ப்பணித்த வைதிகர்களுடைய வாழ்க்கையே யக்ஞ சொரூபம். இதையே பகவான் இந்த சுலோகத்தில் சிருஷ்டி துவக்கத்தில் யக்ஞத்தோடே பிரஜைகளைப் படைத்தார்(புரா ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா) என கூறுகிறார்.
‘ப்ரஸவ’ என்பது வளர்தலை, விருத்தியடைவதைக் குறிக்கிறது. முதலில் அஹம், நான் என்பதில் வாழ்க்கை தொடங்குகிறது. பிறகு யக்ஞத்தை பிரதானமாகக் கொண்டு மணம் முடித்து இரண்டாக மாறி, அங்கிருந்து மூன்று நான்கு என விருத்தியடைகிறது. இவ்விதத்தில் வேதத்தில் யக்ஞங்களைக் கொடுத்து, “இந்த யக்ஞத்தினால் விருத்தியடையுங்கள். இது உங்களுடைய விருப்பத்தை பூர்த்தி செய்யும் காமதேனு பசுவாக இருக்கட்டும்” என்று கூறினார்.
=> விரும்பியதைக் கொடுக்கும் காமதேனு:
இங்கு பகவானால் குறிப்பிடப்படும் காமதேனு பசு வசிஷ்ட முனிவரிடம் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாட வந்த மன்னர் விஸ்வாமித்ரர், பசியுடன் கூடிய தனது படைப் பரிவாரங்களுடன் வசிஷ்டரின் குடிசையைக் கண்டார். அங்கு சென்ற மன்னரை வரவேற்ற வசிஷ்டர், அனைவருக்கும் கணநேரத்தில் விருந்தளித்தார். இது எப்படி சாத்தியம் என வியந்த அரசர், அங்கிருந்த காமதேனு பசு மூலமே இத்தகைய இனிய விருந்தை முனிவரால் தர முடிந்தது என்பதைத் தெரிந்து கொண்டார்.
அந்த தெய்வீக பசுவை தனக்கு தருமாறு அரசர் கேட்டார். அப்போது வசிஷ்டர் அவரிடம், ‘நான் பசுவைக் கொடுத்தாலும் இது க்ஷத்திரியரான உங்களுக்கு எந்த பலனையும் கொடுக்காது. ஏனெனில் இது பிரம்மரிஷிகளுக்கு மட்டுமே அற்புதத்தை நிகழ்த்தக் கூடியது’ என்றார். பிரம்மரிஷி, அதாவது பிரம்ம ஞானத்தை அறிந்தவன், அனைத்தையும் அடைந்தவனாகிறான் என்ற கருத்தை இக்கதை உருவகப்படுத்துகிறது. வசிஷ்டரிடம் இருந்த பிரம்ம ஞானம் விஸ்வாமித்ரரிடம் இல்லை. விருப்பத்தை நிறைவேற்றும் வசிஷ்டரின் இந்த காமதேனு பசு ஞானத்தை குறிக்கிறது. எங்கும் வ்யாபித்து, எல்லாமாகவும் விளங்கும் ப்ரம்மத்தை ஆத்மாவாக அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகிறான்; அடைந்தவனாகிறான். ஆகவே இங்கு கிருஷ்ணர் கூறுகிறார் — ப்ரம்ம ஞானமே காமதேனுவாக ஆகட்டும்; அனைத்து விருப்பத்தையும் அது நிறைவேற்றட்டும்.
=> (2) யக்ஞம் = கர்மயோகம் எனில்,
முன் ஸ்லோகத்தில்(3.10) யக்ஞத்தை இறைவனுக்காக செய்யப்படும் கர்மம் என பார்த்தோம். தியாகம் செய்தல், பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பலனில் பற்றில்லாது இறைவன் பொருட்டு செய்யும் செயல், கர்மயோகம் ஆகிறது. யக்ஞ: - யாகத்தின் மூலம் விட்டுக் கொடுத்தல், பகிர்தல்.
கர்மயோக வாழ்க்கை முறையுடன் வாழலாம் என்ற அறிவுடன்(யஜ்ஞா: ஸஹ) சிருஷ்டியின் துவக்கத்தில்(புரா) மனிதர்களைப் படைத்து(ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா), ‘இந்த கர்மயோக வாழ்க்கையின் மூலம் மேன்மையடையுங்கள்(அநேந ப்ரஸவிஷ்யத்4வம்). இந்த வாழ்க்கைமுறை உங்களுக்கு இஷ்டமானதைக் கொடுப்பதாகட்டும்(ஏஷ: வ: இஷ்ட-காமது4க் அஸ்து)’ என்றார் பிரஜாபதி(ப்ரஜாபதி: உவாச).
* கர்மயோக வாழ்க்கையின் மூலம் ஞானயோகத்திற்கு செல்லுதல் எனும் மேன்மை கிடைக்கிறது. ஞான யோகத்தின் மூலம் ஆத்ம ஞானத்தை அடைந்து அவன் அனைத்து விருப்பத்தையும் அடைந்தவனாகிறான்.
----------------------------------------------------------------------------------------------------------------------
||3.11|| எப்படி யக்ஞம் நமக்கு வேண்டியதைக் கொடுக்கிறது:
देवान्भावयतानेन ते देवा भावयन्तु व: ।
परस्परं भावयन्त: श्रेय: परमवाप्स्यथ ।। ११ ।।
தே3வாந்பா4வயதாநேந தே தே3வா பா4வயந்து வ: ।
பரஸ்பரம் பா4வயந்த: ச்1ரேய: பரமவாப்ஸ்யத2 ।। 11 ।।
अनेन அநேந இந்த யக்ஞத்தால்/ இந்த கர்மயோகத்தால் देवान् தே3வாந் தேவர்களை
भावयत பா4வயந்த வளரச்செய்யுங்கள்/வழிபடுங்கள் ते देवा: தே தே3வா: அந்த தேவர்கள்
व: வ: உங்களை भावयन्तु பா4வயந்து வளர்க்கட்டும்/அணுகிரஹம் செய்யட்டும்
परस्परं भावयन्त: பரஸ்பரம் பா4வயந்த: ஒருவரையொருவர் வளர்த்து/நன்மை செய்து
श्रेय: ச்1ரேய: நன்மையை अवाप्स्यथ அவாப்ஸ்யத2 அடைகிறவர்களாவீர்கள்.
இதனால் தேவர்களைப் பேணுங்கள், தேவர்கள் உங்களைப் பேணட்டும். பரஸ்பரம் பேணிப் பெருநன்மை எய்துவீர்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.
விளக்கம்:
யக்ஞத்தின் மூலமாக அனைவரும் வளருங்கள் என முந்தய சுலோகத்தில் கூறியதை விரிக்கிறார் பகவான். அதாவது வேதத்தில் சொல்லப்பட்ட யாகங்களினால் ஈஷ்வரனின் அம்சங்களான தேவதைகள் எவ்விதத்தில் திருப்திபடுத்தப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்.
சூரியன் உலகிற்கு கிடைத்த ஒரு ஆசிர்வாதம் என்பதில் ஐயமில்லை. இம்மண்ணில் வாழும் ஒவ்வொரு உயிரும் சூரிய ஒளியினால் போஷிக்கப்படுபவைகளே. இந்த ஜடமான அக்னிப் பந்தை தெய்வம் என கூற முடியாது. ஆனால் சூரியனை, எங்கும் நிறைந்திருக்கும் கடவுளின் அங்கமாக பார்க்கும் போது அது தேவதையாகிறது. இது போலவே நீர், வருண தேவதையாக; காற்று, வாயு தேவனாக; நெருப்பு, அக்னி தேவனாக பார்க்கப்படுகிறது. இவ்விதத்திலேயே நம்மைச் சுற்றியுள்ள பூமி, ஆகாசம் என அனைத்தும் ஏன் காலமும் கூட நமக்கு ஆசி வழங்கும் தேவதையாக பார்க்கப்படுகிறது. இயற்கை சூழலை, சூழியலை மதித்தல் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட பார்வை. அது அவனுடைய உணர்வுத்திறனை பொறுத்தது. அண்ட சக்திகளை இறைவனின் அங்கமாக கிரஹித்தல் இன்னும் சூக்ஷமமானதாகப் பார்க்கப்படுகிறது.
நம் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாக விளங்கும் இந்த பஞ்ச பூதத்திற்கும், சூரிய சந்திரனுக்கும் நம் மதிப்பையும், நன்றியையும் வழிபடுதல் வாயிலாக காட்டுகிறோம். நீரைப் படையலாக கொடுத்து பேணப்பட்ட மாமரம் ஒருவனுக்கு மாங்கனியைத் தருகிறது. இதுபோல வேள்வி, யாகம், படையல் என வழிபாட்டுமுறை வேறுபடலாம். மழை, உணவுப் பயிர்கள், உடல் ஆரோக்கியம், வலிமை, மனத் தூய்மை போன்ற பலன்களை இத் தேவதைகள் கொடுத்து, பரஸ்பரம் பேணுதல் நடைபெறட்டும் என்கிறார் பகவான்.
=> தேவர்கள் = இந்திரியங்கள்,
சரீரத்திலுள்ள புலன்களுக்கு தேவர்கள் என்ற பெயர் உண்டு. சில நாட்கள் உடலுக்கு உணவு கொடுக்காமல் இருந்தால் புலன்கள் தங்களது சக்தியை இழந்து பலகீனமடைகின்றன. மறுபடியும் உணவு கொடுக்கும் போது அவைகள் தத்தம் வேலைகளில் செவ்வனே ஈடுபடுகின்றன. புலன்கள் ஒழுங்காக வேலை செய்யும் போது வாழ்க்கை இனிதே நடைபெறுகிறது. இப்படி உடல் வாழ்பவர் இந்திரியங்களைப் பேண, இந்திரியங்கள் அவர்களைப் பேண பரஸ்பரம் உதவியால் நன்மை வந்தடைகிறது.
=> தேவர்கள் = மேலோர்,
மேதக்க செயலில் ஈடுபடும் சான்றோர்க்கு தேவர் என்று பெயர். கைம்மாறு கருதாமல் இவர்களுக்கு துணைபுரிகின்றவளவு இச்சான்றோரின் சகாயம் கிடைக்கும். சமூகத் தொண்டிலேயே ஈடுபட்டிருப்பவர்களுக்கு தேவையானதை சமூகத்தார் எடுத்து வழங்குவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
=> தேவர்கள் = இயற்கை/தேவதைகள், யக்ஞம் = கர்மயோகம்
கர்மயோகத்தினால்(அநேந) தேவர்களை வழிபடுங்கள், இயற்கையை போற்றுங்கள்(தே3வாந் பா4வயந்த). தேவர்கள் உங்களுக்கு இயற்கையின் மூலமாக அணுகிரஹம் செய்யட்டும்(தே தே3வா: பா4வயந்து). தெய்வத்தை முழுமனதோடு ஆராதித்தால் அத்தெய்வத்தின் விபூதிகளெல்லாம் அம்மனிதனை வந்தடைகின்றன. பிறர்க்கு மனிதன் எதை எடுத்து வழங்குகிறானோ அதையே இயற்கையானது எடுத்து பன்மடங்கு அதிகமாக அவனுக்கு வழங்குகிறது. இப்படிப் பரஸ்பரம் பேணுதல் என்ற யாகத்தால் எல்லோர்க்கும் நன்மையே வந்தமைகிறது.
* धर्मो रक्षति रक्षित:_ தர்மோ ரக்ஷதி ரக்ஷித: => நம்மால் காப்பாற்றப்பட்ட தர்மம் நம்மைக் காப்பாற்றும்.
---------------------------------------------------------------------------------------------------------------------
||3.12|| பிறரைப் பேணாதார் யார்?
इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविता: ।
तैर्दत्तानप्रदायैभ्यो यो भुङ्क्ते स्तेन एव स: ।। १२ ।।
இஷ்டான் போ4கா3ந் ஹி வோ தே3வா தா3ஸ்யந்தே யஜ்ஞபா4விதா: ।
தைர்த3த்தாநப்ரதா3யைப்4யோ யோ பு4ங்க்தே ஸ்தேந ஏவ ஸ: ।। 12 ।।
यज्ञभाविता: யஜ்ஞபா4விதா: யக்ஞத்தினால் பேணப் பெற்ற देवा: தே3வா: தேவர்கள்
इष्टान् भोगान् இஷ்டான் போ4கா3ந் விரும்பிய போகங்களை व: வ: உங்களுக்கு
दास्यन्ते தா3ஸ்யந்தே கொடுப்பார்கள் हि ஹி அங்ஙனம் तै: दत्तान् தை: த3த்தாந் அவர்களால் கொடுக்கப்பட்டதை एभ्य: ஏப்4ய: இந்த தேவதைகளின் பொருட்டு अप्रदाय அப்ரதா3ய அளிக்காது, கைம்மாறு செய்யாது य: ய: யார் भुङ्क्ते பு4ங்க்தே அனுபவிக்கின்றானோ स: ஸ: அவன்
स्तेन: एव ஸ்தேந: ஏவ திருடனேயாவான்.
யாகத்தால் பேணப்பெற்ற தேவர்கள் உங்களுக்கு விரும்பிய போகங்களைக் கொடுப்பார்கள். அங்ஙனம் அவர்களால் கொடுக்கப்பட்டதை அவர்களுக்குக் கைம்மாறு அளிக்காது நுகர்பவன் திருடனேயாவான்.
சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு:
வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவன்.
விளக்கம்:
=> அங்கீகாரமும் நன்றி தெரிவித்தலுமே யக்ஞம்:
இங்கு பகவான், இறைவனுக்கென எதையும் வழங்காமல், அவரால் பலனாக கொடுக்கப்பட்டதை நுகர்பவன் திருடன் என்கிறார். பிறருக்கு சொந்தமானதை எடுத்துக் கொண்டு பதிலுக்கு எதையும் கொடுக்காமல் ஓடி ஒழிபவன் திருடன். கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் பதுங்குபவன் ஏமாற்றுக்காரனாகிறான். ஈஷ்வரனின் அம்சமாக விளங்கும் பிரபஞ்சத்திடமிருந்து நாம் உயிர் வாழத் தேவையான நீர், காற்று, உணவு போன்றவற்றை தொடர்ந்து பெறுகிறோம். இதற்கான நம் மதிப்பையும் நன்றியையும் தெரிவிப்பதே நுண்ணிய வாழ்க்கை தரத்தை குறிக்கும். தேவர்களாகப் பார்க்கப்படும் இந்த சக்திகளுக்கு நம்மிடமிருந்து எதுவும் தேவையில்லை; நாம் எதையும் கொடுக்காவிடினும் அவைகள் தத்தம் கடமைகளைச் செய்யும். ஆனால் பெற்றுக் கொண்ட பொருளுக்கு பதிலாக ஒன்றைத் திருப்பி கொடுப்பது, குறைந்தபட்சம் நன்றியையும் மதிப்பையும் காட்டுவது ஒருவன் வாழும் வாழ்க்கையின் ஆழத்தை, நுண்ணுணர்வை பிரதிபிம்பிக்கிறது. ஆகவே இத்தேவர்களுக்கு நமது நன்றியை யக்ஞத்தின் வாயிலாக சமர்ப்பிக்கிறோம். இந்த ஆழமான நன்றியுணர்வு மனத்தூய்மைக்கு வித்தாகிறது. அனைத்தையும் இறைவனாக பார்ப்பவன் ராகத்வேஷத்தின் பிடியிலிருந்து விரைவில் விடுபடுகிறான். இவ்விதம் வேதத்தில் கூறப்பட்டுள்ள வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி தர்ம வாழ்க்கை வாழ்பவன், அந்தகரண சுத்தியுடன் விரும்பிய போகங்களை அனுபவிக்கிறான். எதையும் திருப்பிச் செய்யாது எடுத்துக் கொள்வதில் மட்டும் குறியாயிருப்பவன் திருடனேயாவான்.
=> பிறரைப் பேணாதார் யார்?
உலகில் பிறந்தது முதல் ஒருவன் அனுபவிக்கும் அனைத்து நன்மைகளும் பிறர் செய்த யாகத்தின் பயனாகும். பிறந்த குழந்தையை பாதுகாப்புடன் பேணுதல் பெற்றோரின் யாகம். இளைஞனாக அவன் பெறும் கல்வி, ஆசிரியர்களின் யாகம். உண்ண உணவு, குடியிருக்க வீடு, பிரயாண வசதிகள், விதவிதமான இன்ப நுகர்ச்சிகள் யாவும் மற்றவர்கள் செய்த யக்ஞத்தின் பயனே. இனி, தன்னுடைய வாழ்க்கை உலகுக்கு எப்படிப் பயன்படுகிறது என்பதை சிந்தித்து, செய்கின்ற செயல் பிறருக்கு பயன்படும்படி விரிக்குமளவு அது வேள்வியாக வடிவெடுக்கிறது. அதிகம் பெற்று, சிறிது வழங்கியவன் கடன்பட்டவனாகிறான். உலகுக்கென எதையும் செய்யாது உலகத்திலிருந்து எல்லாம் தனக்காகவென்று ஏற்றுக் கொள்ளுதலிலேயே கண்ணுங்கருத்துமாயிருப்பவன் திருடனாகிறான்.
=> ஆசை :
நாம் விரும்பும் போகங்களை அடைவதற்காக செய்யப்படும் காம்ய கர்மத்திலும் கூட பின்வரும் இரண்டு பாவனைகள் இருக்க வேண்டும்.
1. பிரசாத புத்தி
2. பகிர்ந்து அனுபவித்தல்
=> ஆசையை நீக்க மூன்று படிகள்:
1. தர்மமில்லாத ஆசைகளை விடுதல்
2. தர்மத்திற்குட்பட்ட ஆசையை முறையாக ஒழுங்குப்படுத்துதல்
3. முறைப்படுத்தப்பட்ட ஆசையை பந்தப்படுத்தாத ஆசையாக மாற்றுதல்.
-------------------------------------------------------------------------------------------