ஞாயிறு, 7 நவம்பர், 2021

கர்மயோகம் 3.1 - 3.6

 மூன்றாம் அத்தியாயம்

கர்மயோகம் [कर्मयोग:]

||3.1|| அர்ஜுனனுக்கு ஏற்பட்ட ஐயம்

अर्जुन उवाच

ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन

तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव ।।  ।।

அர்ஜுன உவாச

ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு3த்3தி4ர்ஜனார்த3ன ।

தத்கிம் கர்மணி கோ4ரே மாம் நியோஜயஸி கேச1வ ।। 1 ।।   


अर्जुन उवाच  அர்ஜுன உவாச  அர்ஜுனன் சொன்னது

जनार्दन   ஜனார்த3  ஜனார்தனா   केशव   கேச1   கேசவா    कर्मण:   கர்மண:   கர்மத்தை விட    

बुद्धि:   பு3த்3தி4:  ஞானமானது    ज्यायसी   ஜ்யாயஸீ   சிறந்தது   ते  தே  உங்களால்   

मता चेत्  மதா சேத்   கருதப்படுகிறதெனில்   तत्   தத்   அப்பொழுது   किम्   கிம்   ஏன்     

घोरे कर्मणि   கோ4ரே கர்மணி   பயங்கரமான கர்மத்தில்   मां   மாம்   என்னை    

नियोजयसि   நியோஜயஸி   தூண்டுகிறீர்? 


அர்ஜுனன் சொன்னது:

ஜனார்தனா, கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்ததென்பது உங்களது கருத்தெனில், கேசவா, என்னை ஏன் கோரமான கர்மத்தில் ஈடுபடுத்துகிறீர்?


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?


விளக்கம்: 

=> அர்ஜுனனின் கேள்வி:

இங்கு அர்ஜுனன் பகவான் கிருஷ்ணனை, ‘ஜனார்தனாஅதாவது தவறான கர்மத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதற்குரிய கர்ம பலனான துக்கத்தை உரிய நேரத்தில் கொடுப்பவர் என்று அழைக்கிறான்.

கண்ணனின் கருத்துப்படி, எந்தவொரு செயலையும் விட ஞானத்தை அடைவதே மேலானது என அர்ஜுனன் பார்த்தான். அப்படியிருக்கையில்  இந்த மிக மோசமான செயலான, பலரின் குருதி சிந்துதலுக்கும், அழிவிற்கும் காரணமான யுத்தத்தில் தன்னை ஏன் ஈடுபடுத்துகிறார் என குழம்பினான். அதனால் அர்ஜுனன், ‘என்னை ஏன் இந்த பயங்கரமான கர்மத்தில் ஈடுபடுத்துகிறீர்(கோ4ரே கர்மணி கிம் நியோஜயஸி)? மோக்ஷத்தை பற்றிய அறிவே மேலானது என கூறினீர். மோக்ஷத்திற்கு ஞானமே போதுமெனில் என்னை ஏன் கர்மத்தை செய்யச் சொல்கிறீர்?’ என்று கேட்கிறான். அடுத்த சுலோகத்திலும் அர்ஜுனனுடைய கேள்வி தொடர்கிறது

---------------------------------------------------------------------------------------

||3.2|| அர்ஜுனனின் குழப்பமும் அவனுடைய ஸ்ரத்தையும்:

व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे

तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् ।। ।। 

வ்யாமிச்1ரேணேவ வாக்யேந பு3த்3தி4ம் மோஹயஸீவ மே

ததே3கம் வத3 நிச்1சித்ய யேந ச்1ரேயோऽஹமாப்னுயாம் ।। 2 ।।


व्यामिश्रेण    வ்யாமிச்1ரேண  முரண்படுகின்ற   वाक्येन इव   வாக்யேந இவ வாக்கியங்களைப் போல

मे    மே  என்னுடைய     बुद्धिं   பு3த்3தி4ம்    புத்தியை मोहयसी इव   மோஹயஸி இவ   மயக்குகின்றீர் போலும்   

येन    யேன    எதனால்     अहम्   அஹம்   நான் श्रेय: ச்1ரேய:   நன்மையை     

अाप्नुयाम्   ஆப்னுயாம் அடைவதற்கான      तत् एकं   தத் ஏகம் அந்த ஒன்றை  

निश्चित्य    நிச்1சித்ய    நிச்சயமாக    वद    வத   கூறுங்கள்.


முரண்படுவது போன்ற வாக்கியங்களினால் என் அறிவைக் குழப்புகின்றீர் போலும். நான் நன்மையை அடைவதற்கான ஒன்றை நிச்சயமாகச் சொல்லுங்கள்.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.


விளக்கம்: 

=> அர்ஜுனனின் ஸ்ரத்தையின் வெளிப்பாடு

ஸ்ரத்தை(நம்பிக்கை) 3 வகைப்படும்:

(1) அஸ்ரத்தா(अश्रद्धा) - நம்பிக்கை இல்லாத தன்மை;  

                                                 வாக்கியத்தில் குறை காண்பது.

(2) குஸ்ரத்தா(कुश्रद्धा) - மூட நம்பிக்கை

                  முரண்பாடு இருந்தாலும்  அப்படியே பின்பற்றுவது.

(3) ஸ்ரத்தா(श्रद्धा) - திட நம்பிக்கை; முரண்பாடு தெரிந்தால், தான் புரிந்து கொண்ட விதத்தில் தவறு ஏற்பட்டுவிட்டதாக எண்ணி தனது புத்தியைக் கேள்வி கேட்டல். சரியாக புரிந்து கொள்ளும் வரை சிந்தித்து, விசாரம் செய்தல்.

* ஸ்ரத்தை என்பது ஒரு சாதகனுக்குத் தேவையான முக்கியமான பண்பாகும். ஒரே உபதேசத்தைக் கேட்டாலும் அவரவர்களுடைய அதிகாரித்துவத்தைப் பொறுத்தே அக்கருத்தை கிரஹிக்க முடியும்

=> அர்ஜுனனின் குழப்பத்திற்கான காரணம்

எக்காரணத்திற்காகவும் அர்ஜுனன் கர்மத்தைப் புறக்கணிக்க கூடாது என்று பகவான் கூறினார். கர்மத்தில் அவனைத் தூண்டியவர், கர்மத்தைக் கர்மயோகமாக மாற்றிவிட வேண்டுமென்று உபதேசித்தார். கர்மயோகிதான் அனைத்தையும் சாதிக்கவல்லவன் என்பது பகவானின் கோட்பாடு. பின்பு அவர் ஞானமடைந்தவனது சம்பூரண நிலையை சந்தேகத்துக்கு இடமில்லாது  சிலாகித்துப் பேசினார். அதனால் அர்ஜுனனுக்கு இந்த ஐயம் வருவதாயிற்று.

அர்ஜுனன் பகவானின் மீதிருந்த ஸ்ரத்தையின் காரணமாக, அவருடைய உபதேசத்தில் குறை காணாமல், தன்னுடைய புரிதலில் முரண்பாட்டைக் கண்டான். அதை இங்குபோல(இவ)’ என்ற வார்த்தையின் மூலம் வெளிப்படுத்துகிறான். கர்மம் மற்றும் ஞானம் இவையிரண்டில் ஏதேனும் ஒன்றுதான் தனக்கு நன்மை தரும். பகவான் மோக்ஷத்திற்கு ஞானமே சாதனம் என்று உபதேசித்த பின்னர், தன்னை ஏன் கர்மத்தில் ஈடுபட சொல்கிறார் என குழம்பி, தனக்கு சிறந்ததாக நினைக்கும் ஒன்றை மட்டும் கூறுங்கள் என்று பகவானிடம் கேட்கின்றான்.

=> மோக்ஷம் கர்மத்தினால் உண்டாவதல்ல

கர்மம், அதாவது செய்யப்படும் செயல் என்பது ஒருவனது விருப்பத்தினால் உருவாவது; ஆனால் மோக்ஷத்தை உருவாக்கவோ, தயாரிக்கவோ முடியாது. உலகியல் அல்லது மத சம்பந்தமான கர்மத்தின் மூலம் பின்வரும் நான்கில் ஒன்று நடக்க வாய்ப்புள்ளது:

(1)  ஏதேனும் ஒன்று உருவாக்கப்படலாம்.

(2)  உருவாக்கப்பட்ட ஏதேனும் ஒன்று மாற்றப்படலாம் அல்லது அழிக்கப்படலாம்.

(3)   ஏதேனும் ஒன்று தூய்மை செய்யப்படலாம்.

(4)   ஏதேனும் ஒரு இடத்தை பயணத்தின் மூலம் அடையலாம்.

ஆனால் மோக்ஷத்தை உருவாக்க முடியாது. ஒருவேளை மோக்ஷம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவாக்கப்பட கூடியதாக இருந்தால் அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அழிந்து விடும். ஒருவேளை ஆத்மாவைத் தூய்மை செய்வதன் மூலம் மோக்ஷம் அடையப்படுவதாக இருந்தால், ஆத்மாவானது மீண்டும் தூய்மையற்றுப் போக வாய்ப்புள்ளது. மேலும் ஆத்மா என்னிடமிருந்து வேறாக இல்லாமல், நானாகவே இருப்பதால் அதை பயணம் செய்து அடைய முடியாது. மாற்றத்திற்கு உட்படுத்தி ஆத்மாவை அடையமுடியுமெனில் அது காலத்திற்குட்பட்டதாகிறது. அதாவது மோக்ஷத்தை இழப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிடும். மேலும் ஆத்மா பார்க்கப்படக்கூடிய பொருள் அல்ல, அதை மாற்றியமைக்க

=> ஞானத்தின் இயல்பு

ஞானம் கர்மத்திலிருந்து முற்றிலும் வேறானது; ஏனெனில் ஞானத்தை உருவாக்க முடியாது. இருப்பதை இருப்பதைப் போலவே அறிவது ஞானம். அசுத்தமான பொருளை அசுத்தமானது என அறிவதும் அல்லது சுத்தமான ஒன்றை சுத்தமானது என அறிவதும் ஞானம். உண்மையை உண்மை என்றும், உண்மை அல்லாததை அவ்விதமே அறிவதும் ஞானம். ஞானம் என்பது நம்முடைய விருப்பத்தை சார்ந்ததல்ல; அது அந்த குறிப்பிட்ட விஷயத்தைச் சார்ந்தது. ஞானத்தை நமது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்க இயலாது

இவ்வாறாக கர்மமும் ஞானமும் முற்றிலும் முரணான வேற்றுமைகளைக் கொண்டது. ஆகையினாலேயே இங்கு அர்ஜுனன், தனக்கு எது சிறந்தது, கர்மமா? அல்லது ஞானமா? ஏதேனும் ஒன்றை நிச்சயம் செய்து கூறுங்கள்(தத் ஏகம் நிச்1சித்ய வத) என்கிறான்.

---------------------------------------------------------------------------------------

||3.3|| இருவகையான மார்க்கங்களின் அறிமுகம்:

 श्री भगवानुवाच

लोकेऽस्मिन्द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानघ  

ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनाम् ।। ।। 

ஸ்ரீப43வாநுவாச

லோகேऽஸ்மின் த்3விவிதா4 நிஷ்டா2 புரா ப்ரோக்தா மயானக4

ஜ்ஞாநயோகே3 ஸாங்க்2யானாம் கர்மயோகே3 யோகி3னாம் ।। 3 ।।


श्री भगवान्    ஸ்ரீப43வான்   ஶ்ரீ பகவான்    उवाच    உவாச    சொன்னது

अनघ   அனக4   பாபமற்றவனே   अस्मिन्  लोके   அஸ்மின் லோகே     இவ்வுலகில்      

द्विविधा   த்3விவிதா4  இரண்டு விதமான    निष्ठा   நிஷ்டா2   வாழ்க்கை முறை (நன்னெறிகள்)  

पुरा   புரா   முன்பே     मया   மயா    என்னால்   प्रोक्ता     ப்ரோக்தா     புகட்டப்பட்டது

ज्ञानयोगेन   ஜ்ஞாநயோகே3    ஞானயோகத்தால்   साङ्ख्यानां    ஸாங்க்2யானாம்   தத்துவ விசாரம் செய்கிறவர்களுக்கு/சந்யாசிகளுக்கு    कर्मयोगेन    கர்மயோகே3   கர்மயோகத்தினால்    

योगिनाम्    யோகி3னாம்   யோகிகளுக்கு (அனுஷ்டிக்கிறவர்களுக்கு).


பாபமற்றவனே, தத்துவ விசாரம் செய்கிறவர்களுக்கு ஞானயோகம் என்றும், யோகிகளுக்கு கர்மயோகம் என்றும் இரண்டு விதமான வாழ்க்கை முறை முன்பே என்னால் உபதேசிக்கப்பட்டது.


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்: பாபமொன்று மில்லாத அர்ஜுனா, இவ்வுலகில் இரண்டுவித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்டது. ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.


விளக்கம்:

=> 2 முக்கிய தலைப்புகளின் அறிமுகம்:

(1) இரண்டு சாதனைகள் (சாதன த்3வயம்_सादन द्वयम्):

      இரண்டு விதமான யோகம் இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. யோகம் என்பதற்குகொண்டு சேர்ப்பதுஎன்று பொருள்

(i) கர்ம யோகம் (कर्म योग:)

கர்ம அனுஷ்டானத்தை முறையாகச் செய்து வருவதால் அறிவு தெளிவடைகிறது. தெளிந்த அறிவுடன் ஞான யோக சாதனை மேற்கொள்ளப்படுகிறது. இங்குயோகம்’ —> எது ஞான யோகத்தில் கொண்டு சேர்க்குமோ அது. கர்ம யோகத்தின் சாத்யம் ஞான யோகம்.

(ii) ஞான யோகம் (ज्ञान योग:)

விவேகம், வைராக்கியம், துறவு முதலியவைகள் வாயிலாகத் தெளிவுபட்ட அறிவானது ஆத்ம சொரூபத்தை நேரே கிரஹிக்குமானால் அதற்கு ஞான யோகம் என்று பெயர். ஞான யோகத்தின் சாத்யம் பரம புருஷார்த்தம் அல்லது மோக்ஷம். இதில்யோகம்’ —> எது ப்ரம்மனிடம் கொண்டு சேர்க்குமோ அது.

(2) இரண்டு வாழ்க்கைமுறை (நிஷ்டா த்3வயம்_ निष्ठा द्वयम्):

(i) ப்ரவ்ருத்தி மார்க்கம் (प्रवृत्ति मार्ग:)

கிரஹஸ்த ஆஸ்ரமம்; இல்லற வாழ்க்கை முறை. இல்லறத்தில் இருப்பவர்களுக்கு கர்ம யோகம் என்ற சாதனை பரிந்துரைக்கப்படுகிறது.

(ii) நிவ்ருத்தி மார்க்கம் (निवृत्ति मार्ग:)

சந்யாச வாழ்க்கை முறை, துறவறம். ஞான யோக சாதனைக்கு துறவற வாழ்க்கை முறை பரிந்துரைக்கப்படுகிறது

* இந்த வாழ்க்கை முறை ஒருவனுக்கு மோக்ஷத்தைக் கொடுக்காது, சாதனையே மோக்ஷத்தை நிர்ணயிக்கிறது. இல்லறத்தில் இருந்து கொண்டும் ஞான யோகத்தை மேற்கொண்டு ஒருவன் மோக்ஷத்தை அடையலாம்

இங்கு கிருஷ்ணர் தன்னை ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த யாதவ குல கிருஷ்ணனாக அல்லாமல், இறைவனாக ஈஷ்வரனாகப் பேசுகிறார். உண்மையில் ஒரு சில இடங்களைத் தவிர முழு கீதையும் அவர் பகவானாகவே உபதேசிக்கிறார்

இந்த சுலோகத்தில் பகவான், வேதத்தில் இரண்டு விதமான மார்க்கங்கள் முன்னரே என்னால் விளக்கப்பட்டுள்ளது என கூறுகிறார். நிஷ்டா - உறுதியாக பின்பற்றும் வாழ்க்கை முறை. உதாரணமாக, இறைவனின் நாமத்தை ஜபிக்கும் வாழ்க்கை முறையை பின்பற்றுபவன் ஜப-நிஷ்டன் என்றும், பிரார்த்தனை மற்றும் தவத்தை முக்கியமாகக் கொண்ட ஒருவன் தபோநிஷ்டன் என்றும் அழைக்கப்படுகிறான். ப்ரம்மத்தை அடைவதை நிஷ்டையாகக் கொண்டவன் ப்ரம்ம-நிஷ்டா. இங்கு பகவான் முன்னரே உலகத்திற்கு தான் தெரியப்படுத்திய, சந்யாசிகளான சாங்கியர்கள் பின்பற்றும், ஞானத்தை சாதனையாக கொண்ட ஞான யோகத்தை சொல்கிறார். சந்யாசிகள் அல்லாத, கர்மத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு, அதாவது கர்ம யோகிகளுக்கு கர்ம யோகத்தை சொல்கிறார்

सम्यक् ख्यायते सा वैदिकी सम्यग्बुद्धि: साङ्ख्या तया प्रकाश्यत्वेन सम्बन्धि तत्त्वं साङ्ख्यम् ।। 

तद्विषया बुद्धि: साङ्ख्यबुद्धि:   सा साङ्ख्यबुद्धि: येषां ज्ञानिनाम् उचिता भवति ते साङ्ख्या: ।।

ஸாங்க்ய எனும் சொல்லின் பொருள் அறிவு அல்லது ஞானம். பகவான் கீதையில் அதை சந்யாசம் என்ற அர்த்தத்திலும் உபயோகிக்கின்றார். ஞானத்திற்காகத் தன்னை அர்பணித்தவர்கள் ஸாங்கியர்கள் என்றும், எல்லா உபநிஷத்திலும் தெளிவாக விளக்கப்படும் வேதாந்தத்தின் மைய விஷயமான இந்த ஞானம் ஸாங்க்யம் என்றும் கூறப்படும். வேதாந்தத்தின் ஒரே முக்கிய கருத்துஆத்மாவே ப்ரம்மன்என்பதால் ஸாங்க்யம் ப்ரம்மத்தைக் குறிக்கும். மேலும் ப்ரம்மத்தைஸாங்க்யம் ப்ரம்மஎன்றும் ப்ரம்மத்தை பற்றிய ஞானத்தை ஸாங்க்யம் என்றும், அந்த ஞானத்தை பின்தொடர்பவர்களை ஸாங்க்யர்கள் என்றும் அழைக்கலாம்.

கர்ம யோக மற்றும் ஞான யோக வாழ்க்கைமுறை, வைதிக நெறியில் நான்காகப் பிரிக்கப்பட்ட வாழ்க்கையின் படி நிலைகளில் ஒத்துப் போகிறது. ப்ரம்மசரிய-ஆஸ்ரமம் என்று அழைக்கப்படும் முதல் நிலை, கற்றலை முக்கிய குறிக்கோளாகக் கொண்ட பருவமாகவும் அடுத்த ஆஸ்ரமமான கிரஹஸ்தத்திற்கு ஒருவனை தயார் செய்யும் பருவமாகவும் உள்ளது. சாந்தோக்ய உபநிஷத்தில், பனிரெண்டு வயதில் குருகுலத்திற்குச் சென்ற ஸ்வேதகேது, பனிரெண்டு வருடங்கள் குருகுல வாசம் செய்ததாகப் படிக்கின்றோம். ஆக, ஒருவனது வாழ்க்கையின் முதல் இருபத்தி நான்கு வருடங்கள் ப்ரம்மசரிய-ஆஸ்ரமத்தில் கழிகிறது. குடும்ப வாழ்க்கையை பிரதானமாகக் கொண்டதாக, இரண்டாவது நிலையான கிரஹஸ்த-ஆஸ்ரமம் அமைகிறது. வானப்ரஸ்த-ஆஸ்ரமம் என அழைக்கப்படும் மூன்றாவது நிலையில், மண வாழ்க்கையில் இருந்தபோதிலும் கணவன் மனைவி நண்பர்களைப் போல வாழ்வதோடு, உலக சம்பந்தமான லெளகிக பொறுப்புக்களைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு, எளிமையான திருப்தியான வாழ்க்கைமுறையை மேற்கொள்கின்றனர். இந்த வானப்ரஸ்த-ஆஸ்ரம வாழ்க்கை ஒருவனை நான்காவது மற்றும் இறுதி நிலையான துறவறத்திற்கு தயார்படுத்துகிறது. உண்மையில் உலகம் தரும் இன்பங்களில் வைராக்கியமும், தத்துவத்தை அறியும் வேட்கையும் கொண்டவனாகத் தன்னை அறியும் ஒருவன் அன்றே சந்யாசம் எடுத்துக் கொள்ள வேதம் அவனுக்கு முழுஅனுமதி அளிக்கிறது.

=> சந்யாசத்தின் வகைகள்:

  சாஸ்திரத்தில் இரண்டு முக்கிய வகையான சந்யாசம் பேசப்படுகிறது. இது குறித்த ஒரு சிறிய விளக்கம் சென்ற அத்யாயத்தில் சுலோகம் 2.19-ல் பார்க்கப்பட்டது. இங்கு வேறொரு கோணத்தில் அதைப் பற்றி விசாரம் செய்யலாம்

(1) ஏற்கனவே ஞானத்தை அடைந்த ஞானி ஒருவன், ஞான நிஷ்டைக்காக மேற்கொள்ளும் சந்யாசம், வித்3வத் சந்யாசம்(विद्वत् संन्यास: ). .ம். ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் யாக்ஞவல்க்யர் எடுத்துக் கொண்ட சந்யாசம். ப்ரம்மசரிய-ஆஸ்ரமம், கிரஹஸ்த-ஆஸ்ரமம் மற்றும் வானப்ரஸ்த-ஆஸ்ரமம் இவற்றில் எந்த நிலையில் ஞானம் அடையப்பட்டிருந்தாலும் ஒருவன் நேரடியாக வித்3வத் சந்யாசத்தின் மூலம் கடமையை துறந்து சந்யாச-ஆஸ்ரமத்தை மேற்கொள்ளலாம்

(2) இரண்டாவதான சந்யாசம் விவிதி3ஷா-சந்யாசம்(विविदिषा). தன்னை, ஆத்மாவை அறிய விரும்புபவர்களாக, அதற்காக பின்பற்றப்பட வேண்டிய பாதையை நன்கு அறிந்தவர்களாக, இவர்கள் சந்யாசத்தை மேற்கொள்கிறார்கள். वेदितुम् इच्छा - विविदिषा (வேதி3தும் இச்சா2 விவிதி3ஷா) - அறிய விரும்புவது. உலக இன்பங்களில் ஆர்வமற்றவர்களாக, போதிய அளவு விவேகத்துடனும், வைராக்கியத்துடனும், நிலையான - நிலையற்ற வஸ்துக்களைப் பகுத்தறியும் தகுதியுடனும், மோக்ஷத்தை அடையும் இச்சையுடன் கூடிய முமுக்ஷுவாக, ஆத்மாவை ப்ரம்மமாக அறியும் பொருட்டு எடுத்துக் கொள்ளப்படும் இந்த சந்யாசம் விவிதி3ஷா-சந்யாசம்.   

ஆபத்-சந்யாசம் என்றழைக்கப்படும் மூன்றாவது வகையான சந்யாசம் ஒன்று உள்ளது. மரணத் தருவாயில் இருக்கும் ஒருவன், இல்லறத்திலோ அல்லது வானப்ரஸ்தத்திலோ அல்லாமல் சந்யாசியாக உயிர் துறக்க விரும்புபவன் எடுத்துக் கொள்ளும் சந்யாசம். ஆபத் (अापत्)என்பதன் பொருள் ஆபத்து. இப்படிப்பட்ட துறவறத்தை மேற்கொள்ள குருவும் கூடத் தேவையில்லை. சூரியன் மற்றும் பஞ்ச பூதங்களுடன் அனைத்து கடவுளர்களையும் சாக்ஷியாகக் கொண்டு அதற்கான மந்திரத்தை உச்சாடனம் செய்து எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி. ஒருகால் அவன் இக்கட்டிலிருந்து மீண்டு பிழைப்பானாகில், அவன் மேற்கொண்ட உறுதிமொழியை முறையாக அங்கீகரித்துக் கொள்ளலாம். இம்முறைமையில் தான் சங்கரர் சந்யாசம் எடுத்துக் கொண்டார்

=> சங்கரரின் சந்யாசம்:

இள வயதிலிருந்தே சங்கரருக்கு சாதுவாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அவருடைய தாயார் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். இப்படி சென்றுகொண்டிருந்த அவரது வாழ்க்கையில், ஒரு நாள் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது தனது காலை கவ்விக் கொண்ட முதலை ஒன்றின் உதவி கிடைத்தது. இச்சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சங்கரர், கரையோரத்தில் தனக்காக காத்துக் கொண்டிருந்த தன் அன்னையிடம் நடப்பதைக் கூறினார். இது ஒரு களியாட்டமாகவோ அல்லது ஒருவேளை இந்த முதலை ஸம்ஸாரத்தை குறிக்கும் குறியீடாகவோ கூட இருக்கலாம் நமக்கு தெரியாது. தனது மைந்தனின் நிலைமையைப் பார்த்து கூச்சலிட்டு அழ ஆரம்பித்த தாயிடம் சங்கரர், சந்யாசத்திற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டால் இந்த முதலை தன்னை விட்டுவிடும் என்று கூறினார். தாயும் அதை ஒப்புக் கொண்டார். அப்போது அவரது வாழ்க்கை ஆபத்தின் விளிம்பில் இருந்ததால் ஆபத்-சந்யாசம். சங்கரர் அதற்கான மந்திரத்தை உச்சாடனம் செய்து சங்கல்பத்தை மேற்கொண்டார். என்ன ஆச்சரியம்! முதலை அவரது காலை விடுவித்தது

பிறகு அவர் ஆற்றங்கரையை அடைந்தவுடன், அவரது தாய், ‘சரி வா, நாம் வீட்டிற்குப் போகலாம்என்றார். சங்கரர், ‘நான் இப்போது சந்யாசிஎன்றார். முதலையின் பொருட்டே உறுதிமொழி எடுத்ததாக தாய் கூறிய போது, சங்கரர், ‘இல்லவே இல்லை. நான் உறுதிமொழி எடுத்துவிட்டேன். ஆகவே நான் செல்கிறேன்என்று கூறி நர்மதா நதிக்கரையில் வாழ்ந்து கொண்டிருந்த கோவிந்த-பகவத்-பாதா எனும் குருவை அடைந்து அவருடைய சிஷ்யரானார். அங்கு சங்கரரின் உறுதிமொழியை அங்கீகரித்து கோவிந்தபாதா முறையான சந்யாசம் வழங்கினார்

சந்யாச-ஆஸ்ரமத்தில் மரணித்தவன் நற்கதியை அடைவதாகவும் அல்லது மறு பிறவியை அடைவதில்லை என்றும் மக்கள் நினைக்கிறார்கள். ஒருகால், அப்படி பிறந்தபோதிலும் ஆத்ம ஞானத்தை அடைவதற்கான மேலான சூழ்நிலையில் பிறப்பெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார்கள். ஒருவேளை சாதுவாக தனது வாழ்க்கையை தொடங்கும் வாய்ப்பு எளிதாக இருக்கும் குடும்பத்திலோ அல்லது ப்ரம்மச்சரிய நிலையிலிருந்து இல்லறத்திற்கு செல்லாமல் நேரடியாக துறவறம் மேற்கொள்ளும் வாய்ப்பு இருக்கும் பிறப்போ அமையலாம்.  

=> ஒரு சந்யாசியினால் செய்யப்படும் கடைசி சடங்கு:

துறவறம் மேற்கொள்ளும் சந்யாசி, அனைத்து விதமான கர்மங்களையும் விடுவதற்கான குறியீடாக, கடைசியாக செய்யப்படும் விஷேஷமான அக்னிச் சடங்கு ஒன்று உள்ளது. இந்த சடங்கானது அவன் அனைத்துவிதமான வைதிக மற்றும் லெளகிக கடமைகளிலிருந்து விடுபட்டதைக் குறிக்கிறது. சந்யாசத்தை எடுத்துக் கொள்பவன், ஆத்ம ஞானத்தை அடையும் பொருட்டு மற்ற கடமைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக சொல்லி, தனது மூதாதையர்களின் ஆசிகளைக் கேட்டு, பின்னர் அபயத்திற்கான உறுதிமொழியை அதாவது மரம் செடி உட்பட எந்தவொரு ஜீவராசிக்கும் எந்தவித தீங்கும் விளைவிக்க மாட்டேன் என்ற உறுதிமொழியை எடுக்கிறான். மேலும் இந்த சமுதாயத்தில், பொருளாதாரம் மற்றும் அரசியல் நோக்கில் யாருக்கும் தான் போட்டியாளன் அல்ல, ஞானமே முழுக் குறிக்கோள் என்பதற்கான உறுதிச்சொல்லையும் தருகின்றான். இதன் பின், மோக்ஷத்திற்கான திசையான வடக்கு நோக்கி அடையாளத்திற்காக சில அடிகள் எடுத்து வைத்து, குருவினால் திரும்பி அழைக்கப்பட்டு, எளிமையான உடைகள் கொடுக்கப்பட்டு, சேவை செய்யும் மனப்பான்மையுடன் குருவிடம் கற்றலைத் தொடர்கிறான். இதுவே வித்வத் சந்யாசம் மற்றும் விவிதிஷா-சந்யாசத்திற்கான வழிமுறைகள் என்று சங்கரர் தன்னுடைய பாஷ்யத்தில் குறிப்பிடுகிறார்.

=> கர்ம யோகத்தின் நோக்கம்:

கர்மமானது பந்தத்தில் பிணைக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம். ஆனால் விருப்பு வெறுப்பை மட்டுப்படுத்தும் நோக்குடன், அந்தக்கரண-சுத்திக்காகவும் ஈஷ்வரனுடைய அருளைப் பெறுவதற்காகவும் செய்யப்படும் பிரார்த்தனை, சடங்குகள் மற்றும் கடமைகள் உள்ளிட்ட எல்லாவித கர்மங்களும் மோக்ஷத்திற்கான சாதனையாக, யோகமாக மாறுகிறது. கர்ம-யோக வாழ்க்கை வாழ்ந்தவனுக்கே சந்யாசம் சாத்தியப்படுகிறது. ராகத்வேஷத்தை மட்டுப்படுத்தாத துறவறம் வேதனைமிக்கது

கர்மம் அல்லது ஞானம், இரண்டில் தனக்கு எது நன்மையை கொடுக்கவல்லது என்று கேட்ட அர்ஜுனனிடம் பகவான், கர்ம-யோகம் மற்றும் ஞான-யோகம் என்ற இந்த இரண்டு வித வாழ்க்கைமுறையை அறிமுகப்படுத்துகிறார். இரண்டுமே மோக்ஷம் என்னும் முடிவை நோக்கியே செல்கிறது. இரண்டுமே (சுலோகம் 2.19 விளக்கப்பட்ட) ஸர்வ-கர்ம-சந்யாசத்தை, ‘நான் எந்த செயலையும் செய்பவன் அல்ல’, ‘நான் அகர்த்தாஎனும் ஞானத்தையே அடைவிக்கிறது

----------------------------------------------------------------------------------

 ||3.4|| இவ்விரண்டு சாதனைகளுக்குமான சம்பந்தம்

कर्मणामनारम्भान्नैष्कर्म्यं पुरुषोऽश्नुते

सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति ।। ।।

கர்மணாமனாரம்பா4ந்நைஷ்கர்ம்யம் புருஷோऽச்1நுதே

ஸந்ந்யஸனாதே3 ஸித்3தி4ம் ஸமதி43ச்ச2தி ।। 4 ।।


पुरुष:   புருஷ:  ஒரு மனிதன்    कर्मणाम्   கர்மணாம்  கர்மங்களின்   अनारम्भात्    அனாரம்பா4த்   ஆரம்பிக்காமையிலிருந்து    नैष्कर्म्यं    நைஷ்கர்ம்யம்  கர்மமற்ற நிலையை(ப்ரம்மத்தை)    

अश्नुते    அச்1நுதே   அடைவதில்லை          மேலும்   

सन्न्य सनात् एव    ஸந்ந்யஸனாத் ஏவ   வெறும் சந்யாசத்தினாலேயே    सिद्धिं   ஸித்3தி4ம்   நிறைநிலையை   

समधिगच्छति   ஸமதி43ச்ச2தி    பெறுவதில்லை


கர்மங்களைத் துவங்காமல் தவிர்த்து விடுவதால் மட்டும் ஒரு மனிதன் கர்மமற்ற நிலையை அடைவதில்லை. வெறும் சந்யாசத்தினாலேயே மோக்ஷத்தை பெறுவதில்லை


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.


விளக்கம்:

=> கர்ம யோகம் செய்து பக்குவப்படாமல் நிவ்ருத்தி மார்க்கம் முழு பலன் தராது:

முன் சுலோகத்தில், இரண்டு வகையான வாழ்க்கைமுறை, நிஷ்டா - ஞானயோக நிஷ்டா மற்றும் கர்மயோக நிஷ்டா முறையே சந்யாசிகள் மற்றும் கர்மயோகிகளால் மேற்கொள்ளப்படுகிறது என பார்த்தோம். மோக்ஷத்தை விரும்பும், சந்யாசிகளல்லாத மற்றவர்கள் கர்மயோகிகள் எனப்படுகிறார்கள். இதற்கான விளக்கத்தை, கர்மயோகத்திற்கும் ஞானயோகத்திற்குமான தொடர்பை பகவான் இந்த சுலோகத்தில் கூறுகிறார்.

விருப்பு-வெறுப்பிலிருந்து விடுதலையடைந்த ஒருவனாலேயே ஞானயோகியாக, முழுவதுமாக ஞானத்தை பின் தொடர முடியும். விருப்பு-வெறுப்பே நம்முடைய அனைத்து சலசலப்பிற்கும் மூலக்காரணம் என்று கீதை கூறுகிறது. ராகத்வேஷத்தை மட்டுப்படுத்தும் களமாக கர்மயோக வாழ்க்கை அமைகிறது. ஆகவே கர்மயோகம், ஞானயோகத்திற்கான தகுதியை அடைவிக்கும் சாதனையாகவும், ஞானயோகம் மோக்ஷத்திற்கான சாதனையாகவும் அமைகிறது.

சென்ற அத்யாயத்தில்(2.19) ‘ஸந்யாஸம்என்பதற்கான இரண்டு பொருளைப் பார்த்தோம். ஒன்று, ஞானத்தை அடையும் பொருட்டு உறவுகளையும் கடமைகளையும் துறக்கும் வாழ்க்கைமுறை. இனியொன்று, ஞானத்தினால் கர்மத்தை துறப்பது(ज्ञानेन कर्म संन्यास: _ஞானேன கர்ம ஸந்யாஸ:). பெரும்பாலும் சங்கரர் இந்த வகையான ஸர்வ-கர்ம-சந்யாசத்தையே சந்யாசத்திற்கான பொருளாக கொடுக்கிறார். ஏனெனில் இந்த வழிமுறையில்ஆத்மாவாகிய நான், செயல் செய்பவன் அல்ல; அகர்த்தாஎன்ற ஞானத்தினால் அனைத்து செயல்களும் விடப்படுவதால் - ஞானேன கர்ம-ஸந்யாஸ:.  ‘ந்யாஸ(न्यास)என்றால் துறவு; ‘ஸந்யாஸஎன்பது குறைபாடற்ற பூரணமான அல்லது முற்றுப்பெற்ற துறவு. ஆகவே ஸர்வ-கர்ம-சந்யாசமே எல்லாவிதமான செயல்களிலிருந்தும் விடுவிக்கும் முற்றுப்பெற்ற துறவு; ஞானத்தினால் மட்டும் அடையப்படும் பூரணமான துறவு. இதற்கான சரியான மனநிலை கர்மயோகத்தினாலேயே அடையப்படும்

நைஷ்கர்ம்யம் - செயலில்லாமல் இருத்தல். ப்ரம்ம, நிஷ்க்ரியம்; செயலற்றது. செயலை துவங்காமலிருத்தல், செயலற்ற நிலையை அடைய உபாயம் ஆகாது. மேலும் சந்யாசத்தை மேற்கொள்வதால் மட்டுமே ஒருவன் மோக்ஷத்தை(கர்மமற்ற நிலை_ நைஷ்கர்ம்யம்) அடைய முடியாது என்கிறார் பகவான். நைஷ்கர்ம்யம் என்பதற்கும் சித்தி என்பதற்கும் பொருள் ஒன்றே. பழம் முழுமையாக பழுக்குமிடத்து அது சித்தியாய்விட்டது எனலாம். அதற்கு முன்பு அது காய்ந்து முதிர்ந்து கனிகிற செயல்களெல்லாம் அதனுடைய கர்மமாகிறது. பழுத்த பழம் மரத்தை விட்டுப் பிரிவது அதன் சந்யாசம். மனிதனுடைய வாழ்க்கை இதற்கு ஒப்பானது. கர்மத்தின் மூலமே மனிதன் ஞானமுதிர்ச்சியடைகிறான்


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

நீ அணிந்துள்ள ஆடையின் ஒரு நுனியில் வேதாந்தத்தை முடிந்து வைத்துக் கொண்டு ஆழ்ந்து சாதனத்தில் ஈடுபடு. அதாவது வாழ்க்கையின் குறிக்கோள் பரம்பொருளில் லயமாவது என்பதை மனதில் வைத்துக் கொண்டு உன் கர்மத்தைச் செய்.

--------------------------------------------------------------------------------------------------------------

||3.5|| பலவந்தமாக ஏன் கர்மத்தை தியாகம் செய்யலாகாது?

हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत्

कार्यते ह्यवश: कर्म सर्व: प्रकृतिजैर्गुणै: ।। ।।

ஹி கச்1சித்க்ஷணமபி ஜாது திஷ்ட2த்யகர்மக்ருத்

கார்யதே ஹ்யவச1: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்கு3ணை: ।। 5 ।।


जातु   ஜாது   எப்பொழுதாவது   क्षणम् अपि  க்ஷணம் அபி    கணப்பொழுதும்     कश्चित्    கச்1சித்   யாரும்   

अकर्मकृत् तिष्ठति  அகர்மக்ருத் திஷ்ட2தி   கர்மம் செய்யாதிருத்தல்   हि     ஹி   முடியாது     

हि   ஹி   ஏனென்றால்    प्रकृतिजै:   ப்ரக்ருதிஜை: மாயையிலிருந்து தோன்றிய    गुणैகு3ணை:   குணங்களால்     

सर्व:   ஸர்வ:   எல்லா உயிர்களும்    अवशஅவச1:  தன் வசமின்றி    

कर्म कार्यते    கர்ம கார்யதே   கர்மத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.


யாரும் ஒரு கணப்பொழுதேனும் செயலாற்றாமல் இருப்பதில்லை. ஏனென்றால் மாயையிலிருந்து உதித்த குணங்களால் ஒவ்வொரு உயிரும் தன் வயமின்றிக் கர்மம் செய்விக்கப்படுகின்றது


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.


விளக்கம்:

=> கர்மத் தியாகம்:

முந்தய சுலோகத்தில் பகவான் கூறிய கருத்தின் தொடர்ச்சியாக இது அமைகிறது. கர்மத்தை ஆரம்பிக்காமல் கர்மமற்ற நிலையை, நைஷ்கர்ம்யத்தை அடைய முடியாது. வேத முறைப்படி சந்யாசத்தை எடுத்துக் கொள்வதால் மட்டும் ஒருவன் எல்லா செயலிலிருந்தும் விடுபட முடியாது. ஏனெனில் உடல் ரீதியாக அனைத்து கர்மத்தையும் துறப்பது என்பது முடியாத ஒன்றாகும். பிக்ஷைக்கு செல்லுதல், உணவை உண்ணுதல், ஸ்நானம் செய்தல், படித்தல், நடத்தல், சுவாசித்தல் என அனைத்துமே கர்மம் தான். ஆகவேதான் நைஷ்கர்ம்ய சித்தி என்பது ஸர்வ-கர்ம-சந்யாசத்தினால் மட்டுமே, ஞானத்தினால் கர்த்ருதுவத்தை(நான் செயல் செய்பவன் என்ற கோட்பாட்டை) துறந்தவனால் மட்டுமே அடையப்பட முடியும்.

=> செயலுக்கான காரணம்:

ஒருகால் செயல் என்பது ஒருவரின் விருப்பத்தின் காரணமாக செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் கூட அவரவர்களின் குணத்திற்கு ஏற்றார் போல், அறியப்படாத காரணத்தினால் தூண்டப்பட்டவர்களாக, தன் வசமின்றி ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு செயலில்  ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இதை பகவான் இச்சுலோகத்தின் இரண்டாவது வரியில்ப்ரக்ருதிஎன்ற சொல்லின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்.

ப்ரக்ருதி_மாயை என்பது ஜகத்தின் உபாதான காரணமாக விளங்குவதைக் குறிக்கிறது. எதிலிருந்து சிருஷ்டி தோன்றியதோ அது மாயை. ஒவ்வொருவரின் மனமும் கூட மாயையின் வெளிப்பாடே. சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குண மாயையிலிருந்து தோன்றிய அனைத்தும் முக்குணத்துடனே விளங்குகிறது. தங்கத்தை கொண்டு உருவாக்கப்பட்ட வளையலில் தங்கத்தின் தன்மை காணப்படுவது போல மாயையிலிருந்து தோன்றிய மனமும் முக்குணத்தை அடிப்படையாகக் கொண்டது. இக்குணங்களுக்கு ஏற்றார் போல் அவரவர்களின் மனதில் விருப்பம் வெளிப்பட்டு அதற்கேற்றவாறு செயல்களும் நடைபெறுகின்றன. இக்குணங்களின் தன்மைகளை கீதையின் பின்வரும் அத்யாயங்களில் விளக்கமாகப் பார்க்கலாம். உதாரணமாக மூன்று வகையான தானம்_கொடுத்தல் பேசப்படுகிறது. தனக்கு தேவையான ஒன்று பதிலுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கொடுப்பது தமஸையும், பெருமைக்காகக் கொடுப்பது ரஜஸையும் காட்டுகிறது. கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் கொடுத்து, கொடுக்கப்பட்ட பின் அதை மறந்து விடுதல் சத்வத்திலிருந்து தோன்றுவது. செயல் ஒன்றாக இருந்த போதிலும் இவை மூன்றிற்குமான தெளிவான வேறுபாட்டை நம்மால் பார்க்க முடியும்.

இப்படியாக ஒவ்வொரு உயிரும் மாயையின் முக்குணத்தினால் தூண்டப்பட்டு, அவற்றிலிருந்து வெளிப்படும் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றன

=> ‘கச்1சித்_ எவரும்என்பதின் 2 விதமான பொருள்விளக்கம்:

(1) கச்1சித்(कश्चित्) யாரும் = அக்ஞானி 

ஆத்ம ஞானமில்லாது, அனாத்மாவான உடல்-மனதைநான்என எடுத்துக் கொள்ளும் அக்ஞானி, ஒரு கணமும் கூட செயலற்று இருக்க முடியாது. ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குண மாயையிலிருந்து தோன்றிய அனாத்மா, கர்ம சொரூபம். அதில் கட்டுண்டு கிடப்பவர்கள் கர்மம் செய்தே ஆகவேண்டும். உண்பது, உறங்குவது, சுவாசிப்பது, ஹிருதயம் அடிப்பது ஆகியவை அனைத்தும் கர்மமே. அனாத்மாவிற்கு என்றுமே ஓய்வு கிடையாது. ஆகவே அனாத்மாவில்நான்எனும் புத்தி வைத்தவனுக்கு ஒரு கணப்பொழுதேனும் கூட ஓய்வில்லை

ஆனால் ஞானியானவன், அனாத்மா செயல்படும் பொழுது கூட, ‘நான் செயலற்ற ஆத்மா, அகர்த்தாஎனும் ஞானத்தில் நிற்பதால் அவன் செயலற்றவனாக உள்ளான்

(2) கச்1சித்(कश्चित्) யாரும் = ஞானி மற்றும் அக்ஞானி

எவராக இருந்தாலும் அனாத்மாவான சரீரத்தின் அடிப்படையில் செயல்படாமல் இருக்க முடியாது. இயற்கையில் இயங்காதிருப்பது எது? அணு முதல் அண்டம் வரையில் எல்லாம் அசைகின்றன. அதில் பிணிக்கப்பட்டுள்ள உயிர்க்குக் கர்மத்தை விடும் சுதந்திரம் கிடையாது


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

வைத்தியசாலைக்குள் நோயாளியாகப் பதிவு செய்யப்பட்டவன் நோய் தீரும் முன்பு அதைவிட்டுப்போக அனுமதிக்கப்படமாட்டான். நோய் நீங்கியபின் வைத்தியசாலைக்குள் அவனுக்கு வேலையில்லை. அங்ஙனம் அக்ஞானம் என்னும் நோய்க்கு உட்பட்டவர்கள் பிரகிருதி என்ற வைத்தியசாலைக்குள் இருந்தே ஆகவேண்டும். அப்பொழுது கர்மம் செய்தல் என்ற சிகிச்சைக்கு அவர்கள் உட்பட்டே ஆகவேண்டும்

-------------------------------------------------------------------------------------

||3.6|| பற்று மனதளவில் நீக்கப்படவில்லையெனில்:

कर्मेन्द्रियाणि संयम्य अास्ते मनसा स्मरन्  

इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचार: उच्यते ।। ।। 

கர்மேந்த்3ரியாணி ஸ்ம்யம்ய ஆஸ்தே மனஸா ஸ்மரந்

இந்த்3ரியார்தா2ந் விமூடா4த்மா மித்2யாசார: உச்யதே ।। 6 ।।


:  ய:  யாரொருவன்   कर्मेन्द्रियाणि    கர்மேந்த்3ரியாணி   கர்மேந்திரியங்களை    संयम्य   ஸம்யம்ய   அடக்கி   

इन्द्रियार्थान्     இந்த்3ரியார்தா2ந்   இந்திரிய விஷயங்களை   मनसा   மனஸா   மனதால்      

स्मरन् आस्ते   ஸ்மரந் ஆஸ்தே    எண்ணிக் கொண்டிருக்கின்றானோ       :   :    அவன்    

विमूढात्मा   விமூடா4த்மா   மூடாத்மா   मिथ्याचार:   மித்2யாசார:   பொய்யொழுக்கமுடையவனென்று    

उच्यते    உச்யதே   சொல்லப்படுகிறது.    


கர்மேந்திரியங்களை அடக்கி, இந்திரிய விஷயங்களை மனதால் எண்ணிக் கொண்டிருக்கும் மூடன் பொய்யொழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்


சுப்ரமணிய பாரதியின் மொழிபெயர்ப்பு

கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.


விளக்கம்:

=> மித்யாசாரன்(மித்2யாசார:): 

பற்றானது மனதளவில் நீக்கப்படாமல், செயலற்ற நிலையை எடுத்துக் கொள்ளுதல் ஆன்மீக வாழ்க்கையில் வீழ்ச்சியை அடையச் செய்யும். வெளித்தோற்றத்தில் விட்டுவிட்டு மனதில் அப்பொருளை நினைத்துக் கொண்டிருப்பவன், தன்னையே ஏமாற்றிக் கொள்வதோடு, பொய்யான வாழ்க்கைமுறையை மேற்கொண்டவனாகிறான். அவன் மனதை அடக்காது வெளிக்கரணங்களை அடக்குவதால் தன் இயல்பை பிளவுபடுத்துகிறான். எது வாழ்வைக் குலைக்கிறதோ அது பொய்யொழுக்கம்

மித்யா - பொய்; ஆசார: - ஒழுக்கம்;

மித்யாசார: - பொய்யழுக்கமுடையவன்; வெளியில் துறந்து மனதளவில் துறக்காதவன்.

அக்ஞானத்தில் இருப்பவன் கர்மத்தை விட்டுவிடுவதாகப் பாசாங்குசெய்வது மித்யாசாரம் ஆகிறது. அது துராசாரத்திற்கு ஒப்பானது

=> ஆத்ம ஞானமில்லாமல் கர்மமற்ற நிலை சாத்தியமா?

ஆத்ம ஞானம் இல்லாத ஒருவன், செயலில் ஈடுபடாத நிலையே நைஷ்கர்ம்யம் என எண்ணி, எதுவும் செய்யாது அல்லது பேசாது அமர்கிறான். இந்நிலையில் அவன் எதைப் பற்றிச் சிந்திக்க முடியும்? ஏற்கனவே தான் அனுபவித்த பொருட்களையும், இந்திரிய விஷயங்களையும் மற்றும் வருங்காலங்களில் தான் அனுபவிக்கப் போகும் விஷயங்களையும் எண்ணிக் கொண்டிருப்பான். இப்படிப்பட்ட வாழ்க்கை பொய்யானது என்று பகவான் அர்ஜுனனிடம் கூறுகிறார். சங்கரர் தனது பாஷ்யத்தில் ஒரு படி மேலே சென்று இம்மாதிரியான வாழ்க்கை முறை பாபத்தை தருவது, பாபாசார என்கிறார்

ஆத்மாவை அறிந்தவனுக்கு இந்த பிரச்சனை இல்லை. ஆத்மா அகர்த்தா என்ற அறிவினால் அவன் ஏற்கனவே நைஷ்கர்ம்யத்தை அடைந்து விட்டான். பிராரப்தம் அதாவது ஊழ்வினை முடியும் வரை அவன் அந்த ஞானத்தையே எண்ணி சுகித்திருப்பான்.  


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

மனிதனுடைய புண்ணிய பாபங்கள் அவனுடைய காரியங்களைச் சார்ந்திராமல் அவனுடைய மனநிலைமையைத்தான் சார்ந்துள்ளன. இரண்டு நண்பர்கள் கூடிப்போகையில் ஶ்ரீமத் பாகவதம் வாசிக்கப்படும் இடத்தையடைந்தனர். அவர்களில் ஒருவன், “நண்பா! இங்கே சற்று தாமதித்து அருள்மொழியைக் கேட்கலாமேஎன்றான். மற்றவன், “பாகவதத்தை கேட்பதினால் என்ன சுகம்? தாஸி வீட்டில் போய் இன்பம் நுகரலாம் வாஎன்றான். முன்னவன் அதற்கு இணங்கவில்லை. ஆதலால் அவன் பாகவதம் படிக்கும் இடத்தில் உட்கார்ந்து கதை கேட்கத் தொடங்கினான். மற்றவனோ தாஸி வீட்டிற்குப் போனான். என்றாலும் அவனுக்கு ஆங்கு இன்பம் ஏற்படவில்லை. “அடடா! என்ன செய்துவிட்டேன்! ஏன் இங்கு வந்தேன்? எனது நண்பன், ஹரியின் திவ்ய சரித்திரத்தை கேட்டு மகிழ்ந்திருப்பான்என்று நினைத்துக்கொண்டு, தாஸி வீட்டிலிருந்த போதிலும் ஹரியைப்பற்றி நினைத்திருந்தான். பாகவதத்தைக் கேட்க உட்கார்ந்தவனுக்கு இன்பம் உண்டாகவில்லை. “என் நண்பனோடு தாஸி வீட்டுக்குப் போயிருந்தால் அவனைப் போல நானும் இன்ப நுகர்ச்சி பெற்றிருக்கலாம்என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆகவே, இவன் பாகவத படனம் செய்யும் இடத்தில் இருந்தபோதிலும், அதைக் கேட்காமல் தாஸி வீட்டைப்பற்றிய சிந்தனையுள்ளவனாக இருந்தபடியால், அங்கு நேரில் போகாதுபோனாலும் வாஸ்தவத்தில் போவதால் பெறக்கூடிய பாபத்தை அடைந்தான். தாஸி வீட்டிற்குச் சென்றவன் பாகவத படனத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபடியால், அவனுக்கு அந்தக் கெட்ட இடத்திலுங்கூடப் புண்ணியமே வாய்த்தது.

-------------------------------------------------------------------------------------