சனி, 27 பிப்ரவரி, 2021

ஸாங்கிய யோகம் 2.9 - 2.14

||2.9||

                            सञ्जय उवाच

एवमुक्त्वा हृषीकेशं गुडाकेश: परन्तप:

योत्स्य इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव ।।  

ஸஞ்ஜய உவாச

ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஷம் கு3டா4கேச1: பரந்தப

யோத்ஸ்ய இதி கோ3விந்த3முக்த்வா தூஷ்ணீம் 3பூ4   ।।


परन्तप:  பரந்தப:  பகைவரை  வாட்டுபவனான  गुडाकेश:  கு3டா4கேச1:  குடாகேசனாகிய அர்ஜுனன்  

हृषीकेशं  ஹ்ருஷீகேஷம்  ஐந்து புலன்களின் தலைவன்   एवम्    ஏவம்  இவ்விதம்  

उक्त्वा  உக்த்வா உரைத்து   योत्स्य   யோத்ஸ்ய  யுத்தம் செய்ய மாட்டேன்  

इति  இதி  என்று  गोविन्दम्  கோ3விந்த3ம்  கோவிந்தருக்கு  उक्त्वा  உக்த்வா  கூறி  

तूष्णीं  தூஷ்ணீம்  பேசாது   बभूव   3பூ4   இருந்தான்.


பகைவரை பொசுக்கும் குடாகேசனாகிய அர்ஜுனன், ஹ்ருஷீகேஷனாகிய கோவிந்தனுக்கு இவ்விதம் உரைத்துபோர் புரியேன்என்று பேசாதிருந்தான்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

ஸஞ்ஜயன் சொல்கிறான்-

பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு பசு நிரை காக்கும் பகவனை நோக்கிப்  “போர் ரினிப் புரியேன்என்று வாய் புதைந்திருந்தான்.


விளக்கம்: 

=> யுத்தமும் நடைபெற கூடாது, ராஜ்யமும் தன் பிள்ளைகளுக்கே இருக்கவேண்டும் என்ற திருதராஷ்டிர மன்னனது எண்ணத்தை புரிந்தவராய், அது நிறைவேறாது என்பதை கூறும் விதமாக ஸஞ்ஜயர் இந்த ஸ்லோகத்தில் வார்த்தைகளைக் கையாளுகிறார்.


=> அர்ஜுனன் குடாகேசன் என்ற பட்டம் பெற்றவன். அதாவது தூக்கத்தை அறவே வென்றவன். விரும்பிய வேளையில் விரும்பிய அளவுக்குத் தான் அவனுக்கு உறக்கம் வரும். தன் உடலையும் உள்ளத்தையும் நன்கு கட்டி ஆளுபவனுக்கே இது இயலும். அர்ஜுனன் தன்னையே கட்டி ஆண்டதுபோன்று எதிரிகளை விரட்டி யோட்டவும்(பரந்தப:), வென்று வசப்படுத்தவும் வல்லவனாயிருந்தான்.


=> ஹ்ருஷீகேஷர் - இந்திரியங்களுக்கு இறைவனாயிருப்பவர்

கோ- உயிர்களை; விந்தன் - அறிபவன். அர்ஜுனனின் இந்த தற்காலிக தளர்வை துடைக்க வல்லவன்.


=> அர்ஜுனன் தன் ரதம் மற்றும் குதிரைகளுடன் தன் வாழ்க்கையையும் கிருஷ்ணரிடம் கொடுத்துவிட்டு, தனக்குள் புயலென கிளம்பிய மனப்போராட்டத்தை பின்தொடர்ந்த அமைதியாய் மௌனமாக இருந்தான்.

---------------------------------------------------------------------------------------------------------

                     ||2.10||

तमुवाच हृषीकेश: प्रहसन्निव भारत

सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वच: ।। १० 

தமுவாச ஹ்ருஷீகேச1: ப்ரஹஸன்னிவ பா4ரத

ஸேனயோருப4யோர்மத்4யே விஷீத3ந்தமிதம் வச।। 10


भारत  பா4ரத  பரத வம்சத்துதித்தவரே  हृषीकेश:  ஹ்ருஷீகேச1:  ஹ்ருஷீகேசர்  

उभयोसेनयोमध्ये  உப4யோ: ஸேனயோ: மத்4யே  இரண்டு சேனைகளுக்கு மத்தியில்  

विषीदन्तं  तं  விஷீத3ந்தம் தம்  துயரப்படுகின்ற அவனுக்கு(அர்ஜுனனுக்கு)  

प्रहसन् इव  ப்ரஹஸன் இவ புன்முறுவல் பூத்தவர் போல 

 इदं  वच:  இதம் வச: இந்த வசனத்தை  उवाच உவாச  சொன்னார்.


இரண்டு சேனைகளுக்கு மத்தியில் துயரப்பட்டு நின்றிருந்த  அர்ஜுனனுக்கு புன்முறுவல் பூத்தவராய் ஹ்ருஷீகேசர் இந்த வசனத்தை சொன்னார்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ்வசனமுரைக்கிறான்.


விளக்கம்

=> ‘புன்னகை பூத்தவர் போலஎன்பதை எப்படி புரிந்துகொள்ளலாம்? அர்ஜுனன், சரணடைந்த மனதுடன் உபதேசத்திற்கு பாத்திரமான மகிழ்ச்சியில் புன்னகைத்தார். அல்லது தான் அளிக்கப்போகும் இந்த ஞானம் அர்ஜுனனின் இந்தப் பெருந்துயரை சிரமமின்றி நீக்கப்போகிறது என இளமுறுவல் புரிந்தார். அல்லது அர்ஜுனனுக்கு தான் அளிக்கப்போகும் உபதேசம் எல்லா துக்கத்தையும் நீக்கி ச்ரேயஸ் தரும் பேரானந்தத்தை தரவல்லது. இதற்கு மேல் பெறவேண்டியது ஒன்றுமில்லை. அதற்கேற்ற தருணம் அர்ஜுனனுக்கு இப்போது வந்துவிட்டதை பாராட்டி புன்முறுவலுடன் அருள்புரிய ஆரம்பிக்கிறார்.

=> பகவான், யுத்த களத்திலேயே தனது உபதேசத்தை ஆரம்பிக்கிறார். இந்த ஞானத்தை பெற, குருவின் வாக்யத்தில் நம்பிக்கை கொண்டு சரணடைந்த சிஷ்யனுக்கு முன்னால் இடம், காலம் என எதுவும் முக்யத்துவம் பெறுவதில்லை.



-------------------------------------------------------------------------------------

       ||2.11|| கீதா சாஸ்த்திர துவக்கம்:

श्री भगवानुवाच

अशोच्यानन्वशोचस्त्वम् प्रज्ञावादांश्च भाषसे

गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डिता: ।। ११

ஶ்ரீ பகவானுவாச 

அசோ1ச்யானன்வசோ1சஸ்த்வம் ப்ரக்ஞாவாதாம்ஸ்ச பா4ஷஸே

3தாஸூனக3தாஸூன்ஸ்ச நானுசோ1சந்தி பண்டி4தா: ।। 11


त्वम्  த்வம்  நீ   अशोच्यान्   அசோ1ச்யான்  துயரப்படத்தகாதவர் பொருட்டு  

अन्वशोच:  அன்வசோ1:  துயரப்படுகிறாய்  प्रज्ञावादांन्   ப்ரக்ஞாவாதான் ஞானியரது சொற்களையும்  भाषसे  பா4ஷஸே  பேசுகிறாய்   पण्डिता:  பண்டி4தா:  பண்டிதர்கள்   

गतासू्न् (गत असून्)   3தாஸூன்(கத அஸூன்)  இறந்தார்         மற்றும்    

अगतासूंन्   அக3தாஸூன்  இருப்பவர்   अनुशोचन्ति  அனுசோ1சந்தி  துயரப்படமாட்டார்கள்.


நீ துயரத்திற்கு யோக்யதை இல்லாத விஷயத்தை குறித்து துயரப்படுகிறாய். ஞானியரது சொற்களையும் பேசுகிறாய். பண்டிதர்கள் இறந்தார் மற்றும் இருப்பவர் குறித்து துயரப்படமாட்டார்கள்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

ஶ்ரீ பகவான் சொல்கிறான்,

துயர்படத்தகாதார் பொருட்டு துயர்ப் படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கிறாய்! இறந்தார்க்கேனும் இருந்தார்க்கேனுந் துயர் கொளார் அறிஞர்.


விளக்கம்

=> கீதா சாஸ்த்திரத்தின் சாரம்

இது உபக்ரம(ஆரம்ப) ஸ்லோகம். பொதுவாக முகவுரையில் உரைக்கான சாரம் கூறப்படுவது மரபு. இங்கும் கீதா சாஸ்த்திரத்தின் சாரம் இவ்விதம் கூறப்படுகிறது


பண்டா(पण्डा) -  ஆத்ம ஞானம்(self-knowledge)

பண்டிதா:(पण्डिता:) - ஆத்ம ஞானமுடையவர்கள்

பண்டிதா: அனுசோசந்தி - ஞானிகள் துயரப்படுவதில்லை () அஞ்ஞானிகள் துயரப்படுகிறார்கள்.

* ஞானிகள் துயரப்படுவதில்லை —> அஞ்ஞானிகள் துயரப்படுகிறார்கள் —> ஆத்ம அக்ஞானம் துயரத்திற்கு காரணம் —> ஆத்ம ஞானம் துயரத்தை நீக்க காரணம்  —> ஆகவே ஆத்ம ஞானத்தை கொடுத்து சோகத்தை நீக்குதல்(சோக நிவ்ருத்தி) சாரம்.

* சாதனம் = ஆத்ம ஞானம்;   சாத்யம் = சோகத்தை நீக்குதல்


=> சோக காரணம்:

மரணம்? மரணமே ஒருவனை சோகப்படுத்துகிறதா அல்லது தனக்கு வேண்டப்பட்டவன் என்ற சம்பந்தம் மனதிற்கு துயரத்தை தருகிறதா? எந்த சூழ்நிலையில்நான் (அஹம்_अहम् )’, ‘எனது (மம_मम)’ எனும் பாவனை இருக்கிறதோ அது நமக்கு பந்தத்தை தருகிறது. ஒருவனது துயரத்தை நீக்க சூழ்நிலை மாற்றம் அவசியமில்லை. தன்னை அச்சூழ்நிலையோடு பிணைக்கும்நான்’, ‘எனதுபாவனை நீங்கினால் போதும்

உண்மையில் நான்(ஆத்மா), எனது(நான் அல்லாதது_அனாத்மா) சோக காரணமா? ஆத்மா சோக காரணமெனில் அதை குறித்து கவலை அடைய தேவையேயில்லை. ஏனெனில் சோகம் ஆத்மாவின் சுபாவம்(இயற்கை) என்றாகிவிடும். எதுவும் சுபாவப்படி இருப்பது தானே நல்லது. தாவுதல் குரங்கின் இயற்கையெனில் அது அப்படி இருப்பது தான் சிறந்தது. அமைதியாக இருக்கும் குரங்கில் பிரச்சனை இருக்கிறது என்றே அர்த்தம். ஆகவே ஆத்மா சோக காரணமெனில் அது எனக்கு பிரச்சனையாக இருக்கப்போவதில்லை.

அப்படியெனில் அனாத்மா சோக காரணமா? ‘என்னுடையதுஎன நான் தேர்ந்தெடுத்தது காரணமெனில் மீண்டும்நான்என்பதை நோக்கியே சிக்கல் திரும்புகிறது. சோகத்தை நீக்க ஆத்மா அனாத்மா விசாரம் செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. இதுவே கீதையின் கருப்பொருள்.


=> நான் யார்?

இயற்கையாகவே எல்லா ஜீவராசிகளும்நான்என்பதை தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். தன்னைப் பற்றிய அறியாமையுடனேயே (அக்ஞானம்) பிறக்கிறார்கள். அக்ஞானத்திற்கு துவக்கம் இல்லை. ஆனால் முடிவு உண்டு. ஒருமுறை சென்றபின் மீண்டும் வருவதில்லை.

அக்ஞானத்தின் விளைவு அத்யாசம்( வேறொன்றை ஏற்றி வைத்தல்). உதாரணமாக மங்கிய வெளிச்சத்தில் கயிற்றை பாம்பு என நினைத்தல். இதில் கயிற்றின்இருத்தல்பாம்பிற்கு செல்கிறது. பாம்பின் விஷத்தை கயிற்றிற்கு கொடுத்து இல்லாத துயரத்திற்கு பயந்து ஓடுகிறோம். அதுபோல, தன்னைப் பற்றிய அறியாமையில் தனக்கு அப்பாற்பட்டதைநான்என எடுத்துக் கொண்டு அதன் மீது அபிமானத்தை ஏற்றிவைத்து துயரப்படுகிறோம். வேதாந்த உபதேசம் சூழ்நிலையை மாற்றுவதில்லை. ஆத்மா விசாரத்தின் மூலம் அச்சூழ்நிலையை சந்திப்பவனின் புத்தியை மாற்றுகிறது.


=> யோகத்திற்கு அஸ்திவாரம்:

யோகத்திற்கான முதற்படி இங்கு மறைமுகமாக புகட்டப்படுகிறது. ஞானி போல் பேசுவதும், அக்ஞானி போல விசனப்படுவதும் அர்ஜுனன்பால் இருந்த முரண்பாடாகும். அறிந்தோ அறியாமலோ பலபேர் இத்தவறை செய்கின்றனர். அவர்கள் சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறொன்றாகவும் இருக்கிறது. மனம், மொழி, செயல்(மெய்) ஆகிய மூன்றுக்குமிடையில் யோகம் செய்தல் சாதகனது முதற்கடமையாகின்றது. மனமொன்று எண்ண, மொழியொன்று பேச, இவ்விரண்டிற்கும் மாறான மற்றொன்றை மெய் செய்ய, மனிதனது ஆற்றல் சிதறடைகிறது. ஆகவே ஒருவன் சிந்திப்பதும், சொல்லுவதும், செய்வதும் முற்றிலும் பொருந்தி ஒன்றுபட்டிருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவன் ஆத்மசக்தியுடையவன் ஆகின்றான்.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

நெஞ்சில் உள்ளதையே வாயால் சொல்லு. உனது சொல்லுக்கும் சிந்தைக்கும் முழுமையான ஒற்றுமை இருக்கட்டும். அப்படி ஒற்றுமை ஏற்படாவிடில் உனக்கு யாதொரு நன்மையும் உண்டாகாது.


-----------------------------------------------------------------------------------------------------------------

।।2.12 - 2.25।। ஆத்ம ஞானம் உபதேசிக்கப்படுகிறது ( இதில் ।।2.14 & 2.15।। அனாத்மா குறித்தது)


இந்த அத்யாயத்தின் தலைப்பில் வரும் 'ஸாங்கியம்' என்ற சொல்லின் பொருள் - எதில் தத்வம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளதோ = ஆத்ம ஞானம்.

ஸாங்கிய யோக: => ஆத்ம ஞானத்தை தலைப்பாகக்(பொருளாக) கொண்டது.


முகவுரை

அனாத்மா:

* அறியப்படும் பொருள்(த்ருஷ்யம்_दृश्यम् )   

* சரீரம் = ஸ்தூல சரீரம் + சூக்ஷம சரீரம் + காரண சரீரம்

* ஞானேந்திரியங்கள் [5]  = மெய், வாய், கண், செவி, மூக்கு இவற்றின் சக்தி

      (தொடுதல், சுவை, பார்வை, கேட்டல், நுகர்தல்)

* கர்மேந்திரியங்கள் [5] = செயல் செய்யும் இந்திரியங்கள் ( வாக்கு, கை,  

                                              கால்கள், மலவாய், கருவாய்) 

* ப்ராணன் [5] = ப்ராணன், அபானன், வ்யானன், சமானன், உதானன்.

சூக்ஷம சரீரம் = ஞானேந்திரியங்கள்[5] + கர்மேந்திரியங்கள்[5] + ப்ராணன் [5] + 

மனம் + புத்தி + சித்தம் + அஹங்காரம்.

* காரண சரீரம் = ஸ்தூல, சூக்ஷம சரீரங்களுக்கு காரணமானது. பாப புண்ணியங்களின் இருப்பிடம். வெளித்தோற்றத்திற்கு வராதது(அவ்யக்தம்). இதன் தோற்றத்தை சொல்ல முடியாது(அநாதி).


ஆத்மா:

* மூன்று உடலையும் அறிபவன்(த்ருக்_दृक्)

* சித்(consciousness) , சேதனம், ஞான சொரூபம் 

* ஸத், சித், ஆனந்த சொரூபம்


=> அர்ஜுனனிடம் பகவான் கேட்கும் 3 முக்கிய விகல்பங்கள்:

உன்னுடைய துயரம் பீஷ்மர், த்ரோணரின்,

(1) ஆத்மாவை குறித்ததா?

(2) அனாத்மாவை குறித்ததா? அல்லது

(3) இது அதர்மம் என துயரப்படுகிறாயா

மேற்கூறிய இந்தக் கேள்விகளுக்கு பதில் உரைக்கும் நோக்கிலேயே பகவானின் உபதேசம் அமைந்துள்ளது.


।।2.12।। ஆத்மா என்றும் இருப்பது(நித்யம்)[அனாத்மா அழிவிற்குட்பட்டது] :

त्वेवाहं जातु नासं त्वं नेमे जनाधिपा:

चैव भविष्याम: सर्वे वयमत: परम् ।। १२

த்வேவாஹம் ஜாது நாஸம் த்வம் நேமே ஜனாதி4பா:

சைவ 4விஷ்யாம: ஸர்வே வயமத: பரம் ।। 12


अहं   அஹம்  நான்   जातु   ஜாது   எப்போதாவது  न  तु अासं  ந து ஆஸம் இருந்ததில்லை(என்பது)   

न एव   ந ஏவ  இல்லவே இல்லை    त्वं  த்வம்  நீ ( अासी:  ந ஆஸீ:  இருந்ததில்லை என்பது)       இல்லை  

इमे  இமே இந்த   जनाधिपा:  ஜனாதி4பா:   அரசர்கள்  (न अासन्  ந ஆஸன்  இருந்ததில்லை என்பது)  

    இல்லை   अत: परम्  அத: பரம்  இனிமேல்   सर्वे वयम्  ஸர்வே வயம்  நாமெல்லோரும்   

न भविष्याम:  च  ந ப4விஷ்யாம: ச  இருக்கமாட்டோம் என்பதும்  न एव   ந ஏவ   இல்லவே இல்லை.


முன்பு எப்போதாவது நான் இருந்ததில்லை என்பது இல்லை. நீயும், இந்த அரசர்களும் இருந்ததில்லை என்பதும் இல்லை. இனி நாம் எதிர்காலத்தில் இல்லாமல் போவோம் என்பதும் இல்லவே இல்லை.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.


விளக்கம்:

=>  ஆத்மா என்றும் இருப்பது(நித்யம்_नित्यम् ):

எந்த ஒரு பொருளுக்கும், உற்பத்திக்கு முன் இல்லாமலிருத்தல் என்பதும், அதனுடைய அழிவிற்கு பின் இல்லாமலிருத்தல் என்பதும் உண்டு. இது அநித்யத்தை குறிக்கிறது. நான் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றியவன் என எண்ணுகிறோம். பிறந்த நாள் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையில் தோன்றியது இந்த நாமரூபம்; சரீரம். சரீரத்தின் தோற்றத்தை ஆத்மாவிற்கு ஏற்றிவைத்துநான் பிறக்கின்றேன், முதுமை அடைகின்றேன், இறக்கப் போகின்றேன்என்று குழம்புகிறோம். இங்கு பகவான் எதிர்மறை வாக்கியங்கள்(இருந்ததில்லை என்பது இல்லவே இல்லை) மூலம் அதை நீக்குகிறார். ஆத்மாவாகியநான்பிறப்பதில்லை. இல்லாமல் போவது என்பது இல்லவே இல்லை. ஆத்மா என்றும் இருப்பது - நித்யம்.


=> ஆத்மா ஒன்று(एकम् _ஏகம்) : 

  இங்கு க்ருஷ்ணர், ‘நான், நீ(அர்ஜுனன்), இந்த மன்னர்கள் அனைவரும் இல்லாமல் இருந்ததில்லை. இனி இல்லாமல் போவதும் இல்லைஎன பன்மையில் கூறுவது, சரீர(உபாதி_ उपाधि:) அடிப்படையில். உதாரணமாக பானைகள் வந்து செல்கின்றன. பானை ஆகாசம் என்பது அனைத்து பானைகளுக்கும் ஒன்றுதான். ஏனெனில் பானைகளுக்கு உள்ளும் வெளியும் பரவிக்கிடக்கும் ஆகாசம் ஒன்றே. அது போல க்ருஷ்ணர், அர்ஜுனன், கூடியிருந்த மன்னர்கள் என உடல்கள், சரீரங்கள்(உபாதி) பலவாயினும், ஆத்மா ஒன்று. காலத்திற்குட்பட்ட அநித்யமான இந்த உடல்கள் குண, வடிவ வரையறைக்குட்பட்டதாக பலவாக உள்ளது. காலத்தை கடந்த நித்ய_ஆத்மா, வடிவம் மற்றும் குணங்களைக் கடந்து ஒன்றாக உள்ளது

 

=> சரீரம்_உபாதி:

    उप समीपे स्थित्वा स्वीयं धर्मं रूपम् अन्यत्र अादधाति इति उपाधि:

(உப ஸமீபே ஸ்தி2த்வா ஸ்வீயம் 4ர்மம் ரூபம் அன்யத்ர ஆத3தா4தி இதி உபாதி4:)

   எந்த ஒன்று தன்னருகில் இருக்கும் இனியொன்றிற்கு தனது  குணங்களை அளிக்கிறதோ அது உபாதி.

ரோஜா மலர் தனது குணங்களில் ஒன்றாகிய சிவப்பு வர்ணத்தை தனக்கு அருகில் உள்ள ஸ்படிகத்திற்கு கொடுப்பதால், இங்கு மலர் உபாதி. சரீரம் தன்னருகில் இருக்கும் ஆத்மாவிற்கு, தன்னுடைய குணங்களான தோன்றுதல், மாற்றமடைதல், இறத்தல்முதலியவற்றை கொடுப்பதால் சரீரம், உபாதி எனப்படுகிறது. இங்கு கொடுத்தல் என்பது உண்மையில் கொடுப்பது அல்ல; கொடுப்பதை போல தெரிதல். உதாரணத்தில் சொல்லப்பட்ட ஸ்படிகம் உண்மையிலேயே சிகப்பாக மாறுவதில்லை. சிகப்பாக மாறியதை போல தெரிகிறது. அதுபோல உண்மையில் ஆத்மா எந்த குணத்தையும் அடைவதில்லை. அடைந்ததை போல தெரிகிறது அவ்வளவே. ஆத்மா மற்றும் அனாத்மா பற்றிய புரிதல் அதிகரிக்க, இந்த ஸ்லோகத்தின் முதல் வரி குறித்த புரிதலும் அதிகரிக்கும்.

---------------------------------------------------------------------------------------

।।2.13।। ஆத்மா மாறாதது(நிர்விகார:_निर्विकार: ) [அனாத்மா மாற்றத்துடன் கூடியது]:


देहिनोऽस्मिन्यथा देहे कौमारं यौवनं जरा

तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र मुह्यति ।। १३

தே3ஹினோऽஸ்மின்யதா2 தே3ஹே கெளமாரம் யெளவனம் ஜரா

ததா2 தே3ஹாந்தரப்ராப்திர்தீ4ரஸ்தத்ர முஹ்யதி ।। 13


यथा   யதா2  எப்படி  देहिन:   தே3ஹின:  உடலை உடையவனுக்கு (ஆத்மாவுக்கு)   

अस्मिन्  देहे  அஸ்மின்  தே3ஹே இவ்வுடலில்  कौमारं  கெளமாரம்  குழந்தைப் பருவம்  

यौवनं   யெளவனம்  இளமைப் பருவம்   जरा  ஜரா  முதுமை  तथा  ததா2  அப்படியே  

देहान्तरप्राप्ति:    தே3ஹாந்தரப்ராப்தி:  வேறு உடலை எடுப்பதும்  तत्र   தத்ர அதைப் பற்றி   

धीर:  தீ4:  தீரன்(ஞானி मुह्यति   முஹ்யதி  மோஹமடைவதில்லை.


ஆத்மாவிற்கு இவ்வுடலில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை உண்டாவதைப் போலவே வேறு உடலை எடுப்பதும் அமைகிறது. இவ்விஷயத்தில் தீரன் மோஹமடைவதில்லை.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும், இளமையும் மூப்பும் தோன்றுகின்றனவோ, அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்பும் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.


விளக்கம்:

=> ஜீவன்(உடல், மனம், புலன்களுடன் கூடிய ஆத்மா):

ஜீவன் = ஆத்மா + மனம் + சிதாபாசம்(चिदाभास:)

ஆபாச4: (अाभास: ) = அதைப்போல (similar; like that)

சிதாபா4ச: (चिदाभास:) = சித்- தின் ஆபாசம்; reflection of consciousness.

ஆத்மாவின் அறிவு சொரூபம் சூக்ஷமமான மனதில் ப்ரதிபிம்பிக்கிறது. சித்-தின் ஆபாசம்(reflection) நடக்கிறது. ஜடமான மனம் ப்ரகாசித்து, அறியும் தன்மையை அடைகிறது. மரணத்தில் சிதாபாசத்துடன் கூடிய மனம் வெளிக் கிளம்புகிறது. இதையே நாம் உயிர் என்கிறோம்

உயிர் = மனம் + சிதாபாசம்.

* ஆத்மா எல்லா இடத்திலும் இருப்பது. எங்கும் செல்வது கிடையாது.

சிதாபாசம் மனதுக்கும், இவையிரண்டும் சேர்ந்து உடலுக்கும் உணர்வை கொடுக்கின்றது


=> ஞானி கலங்குவதில்லை:

இங்கு பகவான் உடலில் நடக்கும் மூன்று வித மாறுதல்களை குறிப்பிடுகிறார். ஒவ்வொன்றும் மற்ற இரண்டிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. குழந்தை ப்ராயத்திலிருந்து, இளமை பருவத்திற்கு வரும் போதும், முதுமையில் புலன்கள் தேய்ந்து, குரல் நடுங்கிய நிலையிலும், உடலில் ஏற்படும் மாற்றங்கள்நான்’- பாதிப்பதில்லை. இளமையில் இருந்தவன் ஒருவன், முதுமையை அடைந்தவன் வேறொருவன் என சொல்லுதல் பொருந்தாது. அதனால் தான் ஒரு முதியவரால் இளமையில் தனது சாதனைகள் குறித்த கதைகளை உற்சாகமாக சொல்லமுடிகிறது. வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களிலும் மாறாத நித்ய வஸ்துவாக ஆத்மா இருக்கிறது

ஒரு ஜீவனின் இந்த மூன்று நிலைகளில் எவ்விதம் ஆத்மா மாறாததாக உள்ளதோ அவ்விதமே உடல் மரணித்து வேறு உடல் கிடைக்கும் போதும் அது எவ்வித மாற்றாத்தையும் அடைவதில்லை. எப்படி குழந்தை பருவத்தில் முதல் மூன்று வருடங்கள் ஒருவனுக்கு நினைவில் இருப்பதில்லையோ, அதுபோலவே முற்பிறவிகளில் வேறு உடலில் இருந்ததும் நினைவிலிருப்பதில்லை. நல்ல வேளையாக ஒருவனுக்கு பூர்வ ஜென்ம   ஞாபகம் வருவதில்லை. இல்லையெனில் அந்த நிகழ்வுகளையும் மனதில் வைத்துக் கொண்டு ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டிருப்போம். ஒரு ஜீவனுக்கு, தான் பெற்ற புதிய உடல் புதிய துவக்கத்தை அளிக்கிறது. ஒருகால் முந்தய உடலை சரியாக உபயோகப்படுத்தியிருக்க வில்லையெனில், புதிதாகப் பெற்றதின் உபயோகத்தை மேம்படுத்தலாம்

ஆத்மா என்றும் இருப்பது. உடலின் மாற்றம், காலத்தை கடந்த ஆத்மாவை எதுவும் செய்வதில்லை என்பதை ஞானி அறிகின்றான். ஆகவே மரணத்தை குறித்து அவன் கலங்குவதில்லை.

--------------------------------------------------------------------------------------------------------

।।2.14।। அனாத்மாவை குறித்து துயரப்படத் தேவையில்லை:

मात्रास्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदु:खदा:

अागमापायिनोऽनित्यास्तांस्तितिक्षस्व भारत ।। १४

மாத்ராஸ்பர்சா1ஸ்து கௌந்தேய சீ1தோஷ்ணஸுக2து:2தா3:

ஆக3மாபாயினோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பா4ரத  ।। 14


कौन्तेय  கௌந்தேய  குந்தியின் புதல்வா  मात्रास्पर्शा:  மாத்ராஸ்பர்சா1:   விஷயங்களுடன் இந்திரியங்கள்(புலன்கள்) சம்பந்தம் வைக்கும் பொழுது   तु  து  நிச்சயமாக   

शीतोष्ण सुखदु:खदा:  சீ1தோஷ்ண ஸுக2து:2தா3:  குளிர்வெப்பம் இன்பம் துன்பம் இவைகளைக் கொடுக்கின்றன  अागम अपायिन:   ஆக3 அபாயின:  தோன்றி மறையும் தன்மையுடையது   

अनित्या:  அநித்யா:  நிலையற்றது  भारत   பா4ரத   பாரதா   तान्   தான்  அவைகளை  तितिक्षस्व  திதிக்ஷஸ்வ  சகித்துக் கொள் 


குந்தியின் மைந்தா, விஷயங்களுடன் புலன்கள் சம்பந்தம் வைக்கும் பொழுது குளிர்வெப்பம் இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன. தோன்றுதலும் மறைதலும், நிலையாமையும் அவைகளின் இயல்பு. பாரதா அவைகளை பொறுத்துக் கொள்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

குந்தியின் மகனேகுளிரையும் வெப்பத்தையும் இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்று மிருப்பனவல்ல. பாரதா அவற்றை பொறுத்துக் கொள்.  


விளக்கம்:

=> சகிப்புத் தன்மை

இந்திரிய விஷயங்கள் மாற்றத்திற்குட்பட்டவை. குளிர்-வெப்பம், இன்பம்-துன்பம் இவைகளின் மாற்றத்தை மாற்ற முடியாது. இவ்விதமான மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத தன்மை துயரத்திற்கு காரணம். சகித்துக் கொள்ளுதல் நல்வாழ்க்கைக்கு இன்றியமையாதது.

புலன்கள் வெளிவிஷயங்களோடு சம்பந்தம் வைக்கும்போது, இந்த உலகம் வேண்டப்படுபவை, வேண்டப்படாதவைகளாகப் பிரிந்து சுகம் அல்லது துக்கத்தை விளைவிக்கின்றது. இந்த ஸ்தூல உலகம், ஸ்தூலமான இந்த உடலுக்கு சில கஷ்டங்களைக் கொடுக்கலாம். இதை தவிர்க்க இயலாது. கோடை வெப்பம் ஒருவனுக்கு இன்பத்தையும் குளிர்காலம்  துயரத்தையும் கொடுக்கலாம். ஆகவே கோடையே வருடம் முழுதும் நீடிக்க வேண்டும் என நினைக்கலாம். ஆனால் பருவ மாற்றம் இயற்கை நியதி. மேலும் குளிர்காலத்தில் நெருப்பின் அருகாமையை விரும்பும் ஒருவன், கோடையில் அதிலிருந்து விலகிச் செல்கிறான். ஒரே விஷயம் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் எதிர்மறையான விளைவை கொடுக்கிறது. எதுவும் நிரந்தரமானது அல்ல. வந்து செல்வது. இந்திரியங்களுக்கு விஷயமாகும் பொழுது தோன்றவும், விஷயமாகாத பொழுது மறையவும் செய்கின்றன. ஆகவே இங்கு பகவான், இது போன்ற இருமையின் நியதிகளை புரிந்து கொள், பொறுத்துக் கொள் என்கிறார்.


-----------------------------------------------------------------------------------------