சனி, 13 மார்ச், 2021

ஸாங்கிய யோகம் 2.15 - 2.24

।।2.15।। பொறுத்துக் கொள்வதால் அடையும் பலன்:

यं हि व्यथयन्त्येते पुरुषं पुरुषर्षभ।

समदु:खसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते ।। १५ 

யம் ஹி வ்யத2யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப4

ஸமது3:2ஸுக2ம் தீ4ரம் சோऽம்ருதத்வாய கல்பதே ।। 15 


पुरुषर्षभ   புருஷர்ஷப4  புருஷர்களில் காளையை போன்றவனே(சிறந்தவனே)   

एते  ஏதே  இவைகளில்(குளிர் வெப்பம் முதலியவைகளில்)  

समदु:खसुखं  ஸமது3:2ஸுக2ம்  சுக துக்கங்களை சமமாகக் கொண்டவன்   

धीरं   தீ4ரம்  தீரனான  यं पुरुषं  யம் புருஷம் எந்த மனிதனை  

व्यथयन्ति    வ்யத2யந்தி   அசைக்கவில்லையோ :  :   அவன்    हि   ஹி  நிச்சயமாக  

अमृतत्वाय   அம்ருதத்வாய மோக்ஷத்திற்கு  कल्पते  கல்பதே தகுதியை அடைகின்றான்.


புருஷ சிரேஷ்டனே, இந்த விஷயங்கள் எந்த மனிதனை கஷ்டப்படுத்தவில்லையோ, இன்ப துன்பங்களை எவன் சமமாக உணர்கிறானோ, அப்படிப்பட்ட தீரனே மோக்ஷத்திற்கு தகுதியை அடைகின்றான்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

யாவன் இவற்றால் துயர்ப் படான், இன்பமுந் துன்பமு நிகரெனக் கொள்வான், அந்த தீரன் சாகா திருக்கத் தகுவான்.


விளக்கம்:

ஞானத்திற்கான தகுதி எப்படி வந்தமைகிறது?

பகுத்தறியும் மனதுடையவன், புலன்களினால் உடலுக்கு வரும் இன்ப துன்பங்களினால் சஞ்சலப்படாதவனாக சமநிலையில் இருப்பான். தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கும் இருமைகளின் வந்து செல்லும் போக்கை தெளிவாக அறிந்தவன் தீரனாகின்றான். முந்தய 2.11-ல் குறிப்பிடப்பட்டபண்டிதன்எனும் அர்தத்திலேயே இங்கு தீரன் என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது. நிலையற்ற இந்த இருமைகளால் அசைக்கப்படாமல், ஆத்ம சொரூபத்தில் மனதை வைத்தவனாக சாகாநிலையாகிய மோக்ஷத்திற்கு தகுதியடைகின்றான்

இவ்வுலக அனுபவங்களை முறையாக ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மையை உணர்ந்து நம்மை தீரனாக மாற்றிக் கொள்ளுதல் சிறந்த வாழ்க்கைமுறையாகும்

-----------------------------------------------------------------------------------------------------------------

।।2.16।। ஆத்மா சத்யமானது(ஸத்யம் _ सत्यम् )[அனாத்மா மித்யா] :


नासतो विद्यते भावो नाभावो विद्यते सत:

उभयोरपि दृष्टोऽन्तस्त्नयोस्तत्त्वदर्शिभि: ।। १६

நாஸதோ வித்3யதே பா4வோ நாபா4வோ வித்3யதே ஸத:

உப4யோரபி த்3ருஷ்டோऽந்தஸ்த்னயோஸ்தத்வத3ர்சி1பி4: ।। 16


असत:  அஸத:  இல்லாததற்கு   भाव:  பா4: இருப்பு  विद्यते   வித்3யதே  இல்லை  

सत: अपि   ஸத: அபி  இருப்பதற்கும்   अभाव:    அபா4:   இல்லாமை     विद्यते    வித்3யதே  இல்லை  तत्त्वदर्शिभि: तु தத்வத3ர்சி1பி4து   தத்துவத்தை அறிந்தவர்களாலேயே    

अनयो: उभयो:   அனயோ: உப4யோ:   இந்த இரண்டினுடைய  

अन्त:   அந்த:   முடிவு     दृष्ट:   த்3ருஷ்டகாணப்படுகிறது.


இல்லாததற்கு இருப்பு கிடையாது. இருப்பது இல்லாமற்போவதுமில்லை. உண்மையை அறிந்தவர்களாலேயே இந்த இரண்டினுடைய முடிவு காணப்படுகிறது.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இல்லாதது உண்மை யாகாது. உள்ளது இல்லாத தாகாது. உண்மை யறிவார் இவ் விரண்டுக்கு முள்ள வேற்றுமை யுணர்வார்.


விளக்கம்:

=> அஸத்(असत्)

அஸத் இரண்டாக வகைப்படுத்தலாம்:

(1) அத்யந்த அஸத்எல்லா காலங்களிலும் அனுபவத்திற்கு இல்லாதது. .: சூன்யம், முயற்கொம்பு

(2) மித்யாஅனுபவத்திற்கு மட்டும் இருப்பது. விசாரம் செய்யும் போது உண்மையில் இல்லாதது

.: கயிற்றில் தெரியும் பாம்பு.

மித்யா என்பது ஸத்-திற்கும், அஸத்திற்கும் இடையில் இருப்பது. பொதுவாக நாம், அனுபவத்திற்கு வரும் ஒன்றிற்குஸத்என்ற நிலையையும் அனுபவிக்கவில்லையெனில் அது இல்லை- ‘அஸத்என்ற நிலையையும் கொடுத்து விடுகிறோம். இங்கு பகவான், அது தவறு. அறிவின் அடிப்படையில் ஸத், அஸத் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்கிறார்.


=> ஸத் மற்றும் அஸத்

* ஸத் லக்ஷணம்:

(1) எது மூன்று காலத்திலும் உள்ளதோ

(2) எது சுயமாக, சுதந்திரமாக(independent) உள்ளதோ

* அஸத் லக்ஷணம்:

(1) எது நிகழ்காலத்தில்(present) மட்டும் உள்ளதோ

(2) எது பரதந்திரம்(परतन्त्र)- இனியொன்றை சார்ந்து(dependent) உள்ளதோ

  உதாரணம்:

  மந்த வெளிச்சத்தில், கயிற்றை பாம்பாக பார்த்தல். இதில் கயிறு - ஸத். மூன்று காலத்திலும் இருப்பது, தன் இருப்பிற்கு எதையும் சார்ந்து இல்லை. பாம்பு-அஸத். தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தெரிவது; மேலும் பாம்பின் இருப்பு கயிற்றை சார்ந்தது. கயிறு எந்த விதத்தில் வளைந்து, எவ்வளவு அடி நீளத்தில் உள்ளதோ அதுபோலத் தான் பாம்பு தெரிகிறது. இது போலவே கானல் நீர் மற்றும் களிமண்-பானை இவற்றில் மேற்கூரிய லக்ஷணங்களைப் பொருத்திப்பார்க்கலாம்.


=> ஆத்மா ஸத்

ஆத்மா ஸத் என்பது அவஸ்தா த்ரய விவேகத்தின் மூலம் விளக்கலாம். அவஸ்தா த்ரயம் = மூன்று அவஸ்தைகள்/அனுபவங்கள். விழிப்பு நிலை அனுபவம், கனவு நிலை அனுபவம், ஆழ்ந்த உறக்கம்.

* விழிப்பு நிலையில் ஸ்தூல உடல் மற்றும் அறிபவன் உண்டு.

* கனவு நிலையில் ஸ்தூல உடல் இல்லை.

* ஆழ்ந்த உறக்கத்தில் மனமும் ஒடுக்கத்தை அடைகிறது.

இந்த மூன்று அனுபவங்களிலும்நான்தொடர்ந்து மாறாமல் இருக்கின்றேன். உடல்கள்(ஸ்தூல, சூக்ஷம) வந்து செல்கின்றன. ‘நான்என தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் இந்த ஸ்தூல உடல் கனவு நிலையில் இல்லை. மேலும் குழந்தை பருவத்திலிருந்து முதுமை வரை உடல் பல வகையான மாற்றங்களுக்கு உட்படுகிறது; அதாவது உடலானது அப்போது, அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டும் அவ்வாறு இருக்கிறது. ஆகவே அது மித்யா.

மேலும்நான்என்ற அபிமானம் வைக்கும்போதுதான் உடல் செயல்படுகிறது. அபிமானமில்லாத பட்சத்தில் உடல் ஜடமாகிறது(கனவு நிலை). ஆகவே உடல் பரதந்திரம், இனியொன்றை சார்ந்து இருப்பது. மித்யா

ஆழ்ந்த உறக்கத்திலும் அதை அறிபவனாக, எதையும் சாராமல் சுதந்திரமானவனாக இருப்பதால் ஆத்மாவாகியநான்ஸத்யம்.


மூன்று காலத்திலும் இருப்பதற்கு(ஸத:) இல்லாமை(அபா4:) என்பது கிடையாது( வித்3யதே). அனுபவத்தில் இருந்தாலும், இல்லாவிடினும் மூன்று காலத்திலும் இருப்பது, இல்லாமல் போகாது. . கயிறு-பாம்பு. கயிற்றில் பாம்பை பார்க்கும் முன்னும்(1), பார்க்கும் போதும்(2), அது பாம்பு அல்ல கயிறு என்ற அறிவிற்குப் பின்னும்(3) என மூன்று காலத்திலுமே அது கயிறாகத் தான் இருக்கிறது. அதை ஒருவன் பாம்பாக பார்க்கும் போது (2), அவனுடைய அனுபவத்திற்கு கயிறு இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாம்பில் கயிறு இருந்தது. ஒன்றை ஏற்றி வைக்கும் போது அதிஷ்டானம் தெரிவதில்லை.


=>அனாத்மா அஸத்

அனாத்மா நிகழ்காலத்தில் மட்டும் இருப்பதால்(அஸத:) எப்போதும் இருத்தல்( பா4:) என்பது கிடையாது( வித்3யதே). அது மித்யா. வேகமாக மாறும் ஒன்று மாறாமல் இருப்பது போன்றே காட்சியளிக்கும்; . நீரோடை. அதுபோல உலகமும் வேகமாக மாறிக்கொண்டே வருகிறது. மாறுவது மூன்று காலத்திலும் இல்லையென்பதால் மித்யா. கயிற்றில் பாம்பை பார்த்து, அப்போது தோன்றிக்கொண்டிருக்கும் பாம்பை ஒருவன் சத்தியமாகவே கருதுகிறான், நாம் இவ்வுலகை நினைப்பதைப் போல.


இந்த ஸ்லோகத்திற்கு சங்கரர் 8 படிகளில் விசாரத்தை மேற்கொள்கிறார்:

(1) குளிர்-வெப்பத்தை கொடுக்கும் இந்த ப்ரபஞ்சம், சுக-துக்கத்தை கொடுக்கும் இந்த உடல் மற்றும் இவற்றிக்கு காரணமாக விளங்கும் அனைத்தும் மித்யா என்ற உறுதிமொழி(ப்ரதிஞா_प्रतिज्ञा) செய்கிறார்.

(2) இதற்கான காரணம்(हेतु _ ஹேது) => மாற்றமடைதல் (विकारत्वम् _ விகாரத்வம்). 

* மாயை முதற்கொண்டு அனைத்தும் மாற்றத்தை அடைவதனால் அனைத்தும் மித்யா.

(3) பூர்வ பக்ஷம்(கேள்வி): அனைத்தும் மித்யா எனில் சூன்யவாதம் வருகின்றதே?

(4) நமக்கு வரும் ஒவ்வொரு அறிவிலும் 2 அம்சங்கள் உள்ளது:

(i) அஸத் புத்தி     (ii) இருத்தல் எனும் உணர்வு(ஸத் புத்தி)

., புத்தகம் + இருக்கிறது(book is), பானை + இருக்கிறது(pot is), மரம் + இருக்கிறது(tree is), 

கிளை + இருக்கிறது, இப்படி ஒவ்வொன்றாக பார்க்கும் போது அவற்றை பற்றிய அறிவில் புத்தகம், பானை, மரம், கிளை என மாறினாலும்( அஸத் புத்தி), இருக்கிறது என்ற இருத்தல்(is-ness) புத்தி தொடர்ந்து மாறாமல் தொடர்கிறது(ஸத் புத்தி). இந்த இருத்தல்(ஸத்) ப்ரம்மன். பொருள் நாசம் அடையலாம். இருத்தலுக்கு நாசம் கிடையாது.


(5) கேள்வி:ஒரு பானையை, பார்த்த பின் உடைந்து விட்டால் பானையுடன் இருத்தல் என்ற புத்தியும் சென்றுவிடுமே

பதில்: பானை உடைந்தாலும், உடனே புத்தகம், மரம், கிளை என மற்ற பொருளை பார்க்கும் போது இருத்தல் எனும் உணர்வு தொடர்கிறது. அஸத் புத்திக்கு(பானைக்கு) தான் நாசம்.


(6) பூர்வ பக்ஷம்(கேள்வி): இந்தப் பானை நாசமடைந்தாலும் இனியொரு பானையை பார்க்கும் போது பானை என்கிற புத்தி(உணர்வு), இருத்தல் என்கிற புத்தியை போல தொடர்ந்து இருக்கிறதே? ஆகவே பானைக்கும் அழிவில்லை; அதுவும் ஸத் என்றாகிவிடுமே?

பதில்: ஒரு பானை உடைந்து இனியொறு பானையைப் பார்க்கும் போது திரும்ப பானை புத்தி வந்தாலும், பிறகு துணி, பேனா என மறுபடியும் பொருட்கள் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. வந்து செல்வது அநித்யமே. தொடர்ந்து இருப்பது தான் நித்யம்.


(7) பூர்வ பக்ஷம்(கேள்வி): பானை உடையும் போது அதற்கான இருத்தல் என்பது  தெரியவில்லையே? அதாவது பானை உடைந்ததற்கு பிறகும் ஸத் தொடர்ந்து இருந்தாலும் அது எனக்கு தெரியவில்லையே?

பதில்: ஒரு ஸத்-தைஸத்என அனுபவிக்க நாமரூபம்(name and form) தேவை. நாமரூபமில்லாத நிர்விஷேஷமான ஸத் அனுபவத்திற்கு வராது. அதன் ப்ரதிபிம்பத்தையே பார்க்க முடியும்(Reflective medium is needed to experience sath). . கண், வெளிச்சத்தின் ப்ரதிபிம்பத்தை மட்டுமே பார்க்க முடியும். வெளிச்சத்தை அதனால் நேரடியாக பார்க்க இயலாது. வெளிச்சமும் கூட ஒரு பொருள் இருக்கும் பொழுதுதான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். பொருள் இல்லாத பட்சத்தில் அதை உணரமுடியாது. இரவில் டார்ச் வெளிச்சத்தை வானத்தை நோக்கி காட்டினால், அதன் வெளிச்சத்தை பார்க்க இயலாது. அதுவே ஒரு மரத்தை நோக்கியோ அல்லது சுவரை நோக்கியோ காட்டினால் வெளிச்சத்தை அல்லது வெளிச்சத்தின் ப்ரதிபிம்பத்தை பார்க்கலாம்.


(8) பூர்வ பக்ஷம்(கேள்வி): எப்படி ஒரு இடத்தில் ஸத் மற்றும் அஸத் சேர்ந்து இருக்கும்?ஒரே எண்ணத்தில்  ஸத் புத்தி, அஸத் புத்தி எப்படி சேர்ந்து இருக்க முடியும்?

      பதில்: சரி தான். ஸத், அஸத் ஒரே இடத்தில் இருக்காது. அத்யந்த அஸத்தும்(3 காலத்திலும் இல்லாதது), ஸத்தும் ஒரே இடத்தில் இருக்காது. ஆனால் மித்யாவான அஸத்-தும், ஸத்தும் ஒரே இடத்தில் இருக்கலாம் - . மித்யாவான பாம்பும் சத்தியமான கயிறும் ஒரே இடத்தில் இருப்பதைப் போல. மித்யாவான கானல் நீர் சத்தியமான வறண்ட நிலத்தில் தெரிவதைப் போல

------------------------------------------------------------------------------------

।।2.17।। ஆத்மா எல்லா இடத்திலும் இருப்பது(ஸர்வக3த: _सर्वगत:) [அனாத்மா ஒரு இடத்தில் மட்டும் இருப்பது]: 


अविनाशि तु तद्विद्धि येन सर्वमिदं ततम् ।

विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति ।। १७

அவினாசி1 து தத்3வித்3தி4 யேன ஸர்வமித3ம் ததம் ।

வினாச1மவ்யயஸ்யாஸ்ய ந கச்1சித்கர்துமர்ஹதி  ।। 17


येन  யேன  எதனால்   इदं सर्वम् இத3ம் ஸர்வம்  இவை அனைத்தும்(இவ்வுலகம்)  

ततम्   ததம்  வியாபிக்கப்பட்டுள்ளதோ   तत्   தத் அது   तु  து  உண்மையில்  

अविनाशि  அவினாசி1  அழியாதது  विद्धि  வித்3தி4  என அறிவாயாக   

अस्य अव्ययस्य  அஸ்ய அவ்யயஸ்ய  இந்த மாறாத்தன்மையுடையதற்கு   विनाशम्    வினாச1ம் நாசத்தை  

कश्चित्  கச்1சித் யாரும்   कर्तुं  கர்தும் செய்ய   अर्हति   அர்ஹதி  முடியாது.


இவ்வுலகெலாம் பரவிய அந்த தத்துவத்தை அழியாதது என அறிவாயாக. இந்த அழியாப்பொருளை அழிக்க யாருக்கும் அர்ஹதை கிடையாது. 


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இவ்வுலக முழுதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்றதென்றறி; இது கேடற்றது; இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.


விளக்கம்:

=> ஸத்-அஸத் ஸம்பந்தம்:

இங்கு ‘தத்’ அது என்பது, முன் ஸ்லோகத்தில்(2.16) சொல்லப்பட்ட உண்மையை அறிந்த ஞானிகளால் புரிந்துகொள்ளப்பட்ட அபாவமற்ற(இல்லாமையற்ற) ‘ஸத்’ - த்தை குறிக்கிறது. இந்த உலகம் முழுமையும் வியாபித்துள்ள ஸத்-ஆத்மா அழிவற்றது(அவினாசி1). மாற்றத்திற்குட்பட்டு அழியும் காரணத்தினால் இவ்வுலகம் அஸத்(மித்யா).

ஸத் என்பது அஸத்திலிருந்து வேறுபட்டதாகவும், அதே சமயத்தில் அஸத் ஸத்திலிருந்து வேறுபடாததாகவும் இருக்கிறது. அதாவது ஸத் -த்திற்கு வேறானதாக மித்யாவான அஸத்திற்கு இருப்பு கிடையாது. ஸத்-தை சார்ந்தே மித்யா உள்ளது. களிமண்ணால் செய்யப்பட்ட பானையின் இருத்தல் களிமண்ணை சார்ந்து இருப்பதை போல. களிமண்ணை நீக்கிவிட்டால் அங்கு பானை என்ற ஒன்று இல்லை.

அதாவது மித்யா ஸத்-தை சார்ந்தும், ஆனால் ஸத் மித்யாவை சாராமலும்(independent) இருக்கிறது.  


=> மாறாத்தன்மையுடையது(அவ்யயம்):

       வ்யயம்(व्ययम्)- தேய்வு, செலவு, சீர்கேடு;

‘ஸத்’ அவ்யயம்; தேயாதது, அழியாதது. அனைத்தும் ஸத்-தினால் வ்யாபிக்கப்பட்டுள்ளதால் இதை அழிக்க, இதற்கு வேறான ஒன்று இல்லை. ஸத் வஸ்து ‘ஏகம் அத்3விதீயம் (एकम् अद्वितीयम्)-சாந்தோக்ய உபநிஷத்’— இரண்டாவதற்றதாக, ஒன்றாக இருப்பது. ஆகவே ஸத்-தை அழிக்க, தேய்வை உண்டுபண்ண இரண்டாவதான எதுவும் இங்கு இல்லை. ஆகவேதான் இங்கு கிருஷ்ணர், இதற்கு நாசத்தை செய்ய யாராலும் முடியாது என்கிறார். எவ்வளவு உயிரினங்கள், பொருட்கள், செயல்கள், சூழ்நிலைகள் இருந்த போதிலும் 

ஸத்-ஆத்மா இருமையற்றது; ஏகம். 

சங்கரர் தன்னுடைய உரையில், ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவை எல்லாம் வல்ல ஈஷ்வரனாலும் கூட அழிக்க முடியாது என்கிறார். ஏனெனில் ஈஷ்வரனே ஆத்மாவாக இருக்கிறார். 

ஆத்மா = ப்ரம்மன்; ஈஷ்வரா = ப்ரம்மன். ஆகவே, ஆத்மாவும் ஈஷ்வரனும் ஒரே ப்ரம்மன் தான். ஈஷ்வரனுக்கும் ஆத்மாவுக்குமிடையில் செய்பவன்-செய்யப்படும் பொருள் என்கிற சம்பந்தம்(कर्तृ-करण सम्बन्ध) இல்லை, இரண்டும் ஒன்றே. ஆனால் பக்தன் என்று எடுத்துக்கொண்டால், ஆத்மாவை உடல், மனம், உணர்வுடன் சேர்த்து அறிவதால், ‘கடவுள்-பக்தன்’ அல்லது ‘படைத்தவன்-படைக்கப்பட்டவன்’ என்ற சம்பந்தம் ஏற்படுகிறது. இங்கு ஈஷ்வரன் தனது பக்தர்களை அருளுதல், தண்டித்தல் மற்றும் அழித்தல் நடைபெறும்.

ஒருவன் தற்கொலை செய்து கொள்வதை போல், தனது ஒரு கையை கொண்டு மற்றொரு கையை வெட்டுவது போல், ஆத்மா தன்னைத் தானே அழித்துக் கொள்ளலாமே என ஒருவன் வாதாடினால், ஆத்மா அங்கங்கள் அற்றது. தேயாதது(அவ்யயம்).


=> ஆகாசத்தில் சிறிதும் பெரிதுமாக தோன்றும் மேகங்கள், ஆகாசத்தை கூட்டவோ, குறைக்கவோ அல்லது பிளவுபடுத்துவோ முடியாது. அதுபோல சிதாகாசத்தில்(அறிவு வெளியில்) தோன்றி மறையும் இவ்வுலகத்தினால், சிதாகாசத்தை கூட்டவோ, தேய்க்கவோ இயலாது. அது அனைத்திற்கும் சாக்ஷியாக இருப்பது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்யும் போது குருவானவர் பிரம்மம், மாயை என்பன இரண்டென்பதைச் சுட்டிக்காட்டத் தமது இரண்டு விரல்களை முதலில் நீட்டினார். பின்னர் ஒரு விரலை மடக்கிக் கொண்டு மாயை மறைந்ததும் பரபிரம்மத்தைத் தவிர வேறொன்றும் நிலைத்திருப்பதில்லை யென்பதைக் கற்பித்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------

।।2.18।। ஆத்மா கூடஸ்த நித்யம்(कूटस्थ नित्यम्); ஆத்மா அனுபவத்திற்கு வராதது(அப்ரமேயம் _अप्रमेयम्)[அனாத்மா அறியப்படுவது]


अन्तवन्त इमे देहा नित्यस्योक्ता: शरीरिण: ।

अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत ।। १८

அந்தவந்த இமே தே3ஹா நித்யஸ்யோக்தா:  ச1ரீரிண: ।

அனாசி1நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்3யுத்4யஸ்வ பா4ரத ।। 18 


नित्यस्य   நித்யஸ்ய   என்றும் இருப்பதாய்  अनाशिन:   அனாசி1ன:  நாசமற்றதாய்   

अप्रमेयस्य  அப்ரமேயஸ்ய  அனுபவத்திற்கு வராததாய்; அளவிட முடியாததாய்   

शरीरिण:    1ரீரிண:  சரீரத்தை உடையவனுக்கு(ஆத்மாவுக்கு)   इमे   இமே  இந்த   देहा  தே3ஹா:  உடல்கள்   अन्तवन्त:  அந்தவந்த:  முடிவுடையவைகளாக   उक्ता:   உக்தா:  சொல்லப்படுகின்றது   

तस्मात्   தஸ்மாத்    ஆகவே   भारत   பா4ரத   பாரதா    युध्यस्व  யுத்4யஸ்வ   யுத்தம் செய். 


நித்யமாய், நாசமடையாததாய், அளப்பரியதாய் உள்ள ஆத்மாவின் இவ்வுடல்கள் யாவும் அழியும் தன்மையுடையதாக சொல்லப்படுகிறது. ஆகவே பாரதா, யுத்தம் செய்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

ஆத்மா சாதன்; அழிவற்றான்; அளவிடத் தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால், பாரதா, போர் செய். 


விளக்கம்:

=> ஸ்தூல உடல் மித்யா:

மனித உடலை ஒரு கோணத்தில், எலும்புக் கூடு, தோல், சதை, இரத்தம், செல்கள், டி.என்.ஏ இவற்றின் சேர்க்கை எனலாம். இனியொரு கோணத்தில், புரதம், கொழுப்பு, நீர்சத்து, மாவுச்சத்து மற்றும் தாதுப்பொருட்களின் சேர்க்கை எனலாம். இவைகள் ஒவ்வொன்றும் இனியொன்றை சார்ந்துள்ளதால் இந்த ஸ்தூல உடல் மித்யா. வேதாந்தத்தின் பார்வையில் எடுத்துக்கொண்டாலும் உடலானது, பஞ்ச பூதங்களைச் சார்ந்துள்ளது. ஆகவே மித்யா. 

உடல் காரியம்(product). ஒரு காலத்தில் தோன்றி, மாற்றத்திற்கு உட்பட்டு, முடிவை அடைகிறது. இங்கு பகவான், தனது உடல் உட்பட, அவர்களின் முன் நின்றிருந்த அனைத்து உடல்களையும் சுட்டிக்காட்டி, ‘இந்த உடல்கள் முடிவுடையவைகள்(அந்தவந்த:)’ என்கிறார்.

இந்த உடல்கள் யாருடையது? ஸத்-வஸ்துவான ஆத்மாவே, இந்த உடலுக்கு இருத்தலையும், பிரக்ஞையையும் கொடுக்கிறது. ஆத்மாவின் அறிவு சொரூபத்தை சூக்ஷம உடல் ப்ரதிபிம்பிப்பதால், ஸ்தூல சரீரமும் உணர்வை அடைகிறது. ஆகவே சரீரம், அதில் வசித்துக்கொண்டிருக்கும் ஆத்மாவை சார்ந்தது.

இந்த ஸ்லோகத்தில் உடலைக் குறித்து 2 சொற்கள் உள்ளன-     இந்த உடல்கள் ( இமே தே3ஹா:) பன்மையிலும், சரீரத்தை உடையவன் ( 1ரீரிண:) ஒருமையிலும் குறிப்பிட்டுள்ளார். மாற்றத்திற்குட்பட்டு முடிவை அடையும் இந்த அனைத்து உடல்கள் பன்மையிலும், ஆனால் என்றுமுள்ள மாற்றமடையாத ஆத்மா ஒன்றுதான் என்பதை ஒருமையிலும் குறிப்பிடுகிறார்.

இங்கு ஒரே வரியில் பகவான், மூன்று மெய்மையை உணர்த்துகிறார்.

(1) உடல்கள் பலவாக இருப்பினும் ஆத்மா ஒன்று தான். (2) ஒவ்வொரு உடலிற்குப் பின்னும் இருக்கின்ற ஆத்மா முடிவற்றது. (3)ஆத்மா அழியாதது.


=> ஆத்மா தானாக விளங்குவது (ஸ்வத-ஸித்34: _स्वतःसिद्ध):

சங்கரர் தனது உரையில், வேதம் முதலிய ப்ரமாணங்களால் அறியப்பட, ஆத்மா அறியப்படும் பொருளாக இல்லை என்கிறார். பிறகு இதில் வேத சாஸ்திரங்களின் பங்கு தான் என்ன? நாம் ஏன் அதை கற்க வேண்டும்? ஆத்மாவைப் பற்றிய தவறான புரிதலை நீக்குவதாலேயே வேதம் ப்ரமாணமாகிறது.

உண்மையில் பரப்ரம்மமான ஆத்மா தானாக விளங்குவது(ஸ்வத-ஸித்34ம்). ஸ்வத-ஸித்த-ஆத்மாவின் இந்த சொரூபத்தை தவறாக ஜீவனாக, செயல் செய்பவனாக(கர்த்தா), இன்பத்தை அனுபவிப்பவனாக(போ4க்தா) புரிந்துகொண்டுள்ளோம். ஒவ்வொரு ஜீவனின் இந்த இயற்கையான முடிவு அறியாமையினால்(அவித்யா) ஏற்படுகிறது. இந்த அவித்யையினால், சுய அடையாளத்தை தவறாக ஜீவாத்மாவின் மீது ஏற்றிவைத்துளோம். இந்த குழப்பத்தையே சாஸ்திரம் நீக்குகிறது. அறியாமையினால் ஆத்மாவின் மீது ஏற்றிவைக்கப்பட்டுள்ள தவறான புரிதலை நீக்கும் திறன் கொண்டதாகையால் சாஸ்த்திரம் ப்ரமாணம் எனும் நிலையை அடைகிறது.

சாஸ்திரம் ஆத்மாவை அறியப்படும் பொருளாக கூறுவதில்லை. தானாக விளங்குவதான(அபரோக்ஷம்) இந்த ப்ரம்ம-ஆத்மாவினாலேயே மற்றவை அனைத்தும் விளங்கிக் கொண்டிருக்கின்றன என சங்கரர் சாஸ்திரத்தை மேற்கோள்காட்டுகிறார். இந்த ஸ்லோகத்தில் க்ருஷ்ணர், அனைத்து உடல்களும் அழிவிற்குட்பட்டது என்றும், உடலை வசிப்பிடமாக கொண்ட ஆத்மாவை அழியாதது என்றும் குறிப்பிடுகிறார். ஏனெனில் ஆத்மா அறிபவன்; அறியப்படும் பொருள் அல்ல - அப்ரமேயம். அதாவது, அனைத்து அறியப்படும் பொருளும் அழிவிற்குட்பட்டது. அறியப்படும் பொருளாக இல்லாத காரணத்தினால் ஸ்வத-ஸித்த-ஆத்மா என்றுமிருப்பது(நித்யம்). காலத்தினால் வரையறுக்க இயலாத காரணத்தினால் அது அழியாதது(அனாசி1ன:)


=> மோக்ஷ-சாஸ்திரம்:

ஒருவேளை அர்ஜுனன், பீஷ்மரின் ஆத்மாவை அழிக்க நினைத்தால் அது இயலாது. அதுபோல, பீஷ்மரின் உடலை மரணமடையாமல் தடுக்க நினைத்தால் அதுவும் இயலாது. இங்கு க்ருஷ்ணர், ‘போர் புரி’ என அர்ஜுனனுக்கு ஆணையிடவில்லை. ஏற்கனவே போர் புரியும் பொருட்டே அர்ஜுனன் தனது முழு சேனையுடன் யுத்த களத்திற்கு வந்துள்ளான். அங்கு அவன் மோஹத்தினாலும் சோகத்தினாலும் செய்வதறியாது தவிக்கின்றான், சரணடைகின்றான். பகவான் இங்கு அவனது சோகத்தை நீக்கி, எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செய் என சொல்கிறார். ஒருவனது கடமை எதுவோ, தர்மம் எதுவோ அதைச் செய்ய சொல்கிறார். போர் புரியச் சொல்வதால், கீதா சாஸ்திரத்தை கர்ம காண்டத்தை போல பல்வேறு சடங்குகளையும் அதன் பலன்களையும் கூறும் ப்ரவ்ருத்தி-சாஸ்திரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அர்ஜுனனின், சோகத்தின் மூலக்காரணமாக விளங்கிய அறியாமையை நீக்குவதால் இது நிவ்ருத்தி-சாஸ்திரம், மோக்ஷ-சாஸ்திரம்.


=> கடமையை செய்வதன் பலன்:

கடமை(ஸ்வதர்மம்) —> மனத்தூய்மை —> ஆத்மாவை பற்றிய ஞானத்திற்குத் தகுதி —> ஆத்ம ஞானம் —> மோக்ஷம்.


-------------------------------------------------------------------------------------

 ।।2.19।। ஆத்மா அகர்த்தா, அபோக்தா(अकर्ता, अभोक्ता) [அனாத்மா கர்த்தா, போக்தா]:


य एनं वेत्ति हन्तारां यश्चैनं मन्यते हतम्

उभौ तौ विजानीतो नायं हन्ति हन्यते ।। १९

ய ஏனம் வேத்தி ஹந்தாரம் யச்1சைனம் மன்யதே ஹதம் ।

உபெள4 தெள ந விஜானீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே ।। 19


य:  ய:  யார்   एनं  ஏனம்   இந்த ஆத்மாவை   हन्तारां  ஹந்தாரம்  கொலை செய்பவனாக   

वेत्ति  வேத்தி   அறிகிறானோ       மேலும்   य:  ய:  யார்   एनं  ஏனம்   இந்த ஆத்மாவை    

हतम्    ஹதம்  கொல்லப்பட்டவன் என்று   मन्यते   மன்யதே  நினைக்கிறானோ   

उभौ तौ   உபெள4 தெள  அவ்விருவரும்  विजानीत:   ந விஜானீத:  அறியவில்லை  

अयम्   அயம்  இந்த ஆத்மா  न हन्ति   ஹந்தி   கொல்வதில்லை  

न हन्यते  ந ஹன்யதே  கொல்லப்படுவதில்லை.


இந்த ஆத்மாவைக் கொலை செய்பவன் என அறிபவனும், கொல்லப்பட்டவன் என்று நினைப்பவனும் இருவரும் அறியவில்லை. இந்த ஆத்மா கொல்வதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இவன் கொல்வா னென்று நினைப்போனும், கொல்லப் படுவானென்று நினைப்போனும் — இருவரும் அறியாதார். இவன் கொல்வதுமில்லை, கொலை யுண்பது மில்லை.


விளக்கம்:

=> உபநிஷத் வாக்கியம்:

தான் கூறும் கருத்துக்களை உறுதிப்படுத்தும் விதமாக கீதையில் பகவான் ஆங்காங்கு ப்ரமாண-க்ரந்தமான உபநிஷத்தை மேற்கோள்காட்டுகிறார். அந்த வரிசையில் ஸ்லோகம் 19 மற்றும் 20 கடோபநிஷத்திலிருந்து கூறப்பட்டுள்ளது. கீதையில் வேறொரு இடத்தில் க்ருஷ்ணர், ‘வேதங்களினால் அறியப்படுபவனாக நானே இருக்கின்றேன்’ என கூறுகிறார். கீதை முழுதும் க்ருஷ்ணர் ஈஷ்வரனாகவே பேசுகிறார். நாம் அதை ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, முழு ஸம்வாதமும் க்ருஷ்ண உருவத்திலிருக்கும் ஈஷ்வரனுக்கும் அர்ஜுனனுக்குமிடையே நடப்பதாகவே வ்யாஸர் அருளுகிறார். ஈஷ்வரனாக, க்ருஷ்ணர் தனது உபதேசத்தை நிரூபிக்க தேவையில்லையெனினும், கீதை ஒரு குறிப்பிட்ட காலத்தில், க்ருஷ்ணரின் மனதிலிருந்து தோன்றியதால் ஸ்ம்ருதி எனும் நிலையை பெறுகிறது. எந்தவொரு ஸ்ம்ருதியும் ஸ்ருதி வாக்கியத்திற்கு இசைந்ததாக இருக்க வேண்டும். இந்த பாரம்பரியத்தை பின்பற்றும் விதமாக, பல இடங்களில் பகவான் உபநிஷத்துக்களை, முக்கியமாக கடோபநிஷத்தை மேற்கோளாக சுட்டிக்காட்டுகிறார்.


=> ஆத்மா அகர்த்தா:

இந்த ஸ்லோகத்தில், இந்த (ஏனம்) எனும் சொல் 2.18-ல் விளக்கப்பட்ட நித்யமான, அப்ரமேயமான, தோன்றிக்கொண்டிருக்கும் எல்லா அஸத்திற்கும் ஆதாரமாக, தானாக விளங்கும் ‘ஸத்’-தான ஆத்மாவைக் குறிக்கிறது. 

எவனொருவன் ஆத்மாவை கொல்பவனாக, அதாவது கொலை என்னும் செயலில் ஈடுபடுபவனாக(கர்த்தாவாக) பார்க்கின்றானோ; மேலும் எவனொருவன் ஆத்மாவை கொல்லப்படுபவனாக, அதாவது கொலை செய்யப்படும் பொருளாக(கர்மமாக) பார்க்கின்றானோ; இவ்விருவரும் ஆத்மாவை அறியவில்லை (உபெள4 தெள ந விஜானீத:). ஆத்மா கொல்லும் செயலைச் செய்வதுமில்லை, கொலையாவதுமில்லை. அது கொலைகாரனுமல்ல, கொல்லப்படுபவனுமல்ல ( ஹந்தி ந ஹன்யதே). ஆத்மா அகர்த்தா(செயல் செய்யாதவன்). 

ஆத்மா செயலில் ஈடுபடுபவனாகவோ, செயலுக்கான பொருளாகவோ இல்லை. அகர்த்தாவின் மீது செயல் செய்பவனெனும் தன்மை(கர்த்ருத்வம்_कर्तृत्वम्) ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் புரிந்துகொள்ள சந்யாசத்தை பற்றிய ஒரு சிறிய விசாரம் உதவலாம்.

சந்யாசம் இரண்டுவகை. (1) சந்யாச வாழ்க்கைமுறை  (2) ஸர்வ-கர்ம-சந்யாசம்.

சந்யாச வாழ்க்கையில், சந்யாசியானவன், வேதம் ஒருவனுக்கு விதிக்கும் அனைத்துவிதமான நித்ய நைமித்திக கர்மத்திலிருந்து விடுபடுகிறான். இது கர்ம-சந்யாசம். இவ்வகையான கர்ம-சந்யாசம் ஒருவனது கர்த்ருத்வத்தை நீக்குவதில்லை. ஆனால் ஸர்வ-கர்ம-சந்யாசம் என்பது, ‘நான்’ எனும் ஆத்மாவை செயலற்றவனாக, செயலிலிருந்து விடுபட்டவனாக அறிவது. ‘நான் எந்த செயலையும் செய்பவன் அல்ல’, ‘நான் அகர்த்தா’ எனும் ஞானம் ஒருவனை எல்லா கர்மங்களிலிருந்தும் விடுவிக்கிறது. இந்த சுதந்திரமே இங்கு சந்யாசம். இந்த ஞானத்துடன் கூடிய கர்த்தா, செயல் செய்தபோதிலும் அவன் அகர்த்தா.

க்ருஷ்ணரின் உபதேசம், வ்யாஸரின் படைப்பு, சங்கரரின் உரை அல்லது எந்தவொரு ஞானியும் செயல் செய்யும் போது கர்த்தா ஆகின்றான்; ஆனால் ஞானமடைந்த கர்த்தா. அதாவது ஆத்மாவாகிய தன்னை, ஞானி ஒருகாலும் கர்த்தா என தவறாக கொள்ளாத நிலையில் இருப்பான். 

=> ஒரு செயலை செய்து முடித்தவுடன், நம்முள்ளிருந்து ‘நான் தான்  இதைச் செய்தேன்’ என்ற எண்ணம் எழுகிறது. இது அஹங்காரம்; கர்த்தா. பாப புண்ணியத்தின் விளைவான சுக, துக்கங்கள் கர்த்தாவைச் சேர்ந்தது. உரிய காலத்தில் ஈஷ்வரன் அவற்றை கர்த்தாவிடம் சேர்க்கிறார். அவற்றை அனுபவிக்கும் போது ஒருவன் போக்தா ஆகிறான்.

கர்த்தா —> போக்தா —> ஸம்ஸாரி. 

ஆத்மா —> அகர்த்தா  —> அபோக்தா —> அஸம்ஸாரி.


=> எப்படி ஜடமான அனாத்மா கர்த்தா?

ஆத்மாவின் ஞான சொரூபமானது அனாத்மாவான மனதில் சேதனத்துவத்தை(அறிவை) ப்ரதிபிம்பத்தை போல உண்டு பண்ணுகிறது. உ. கண்ணாடியில் சூரியனின் ப்ரதிபிம்பத்தை போல. இதனால் ஜடமான மனம் ஆத்மாவைப் போல சேதனத்துவத்தை அடைகிறது. இப்போது மனம் கர்த்தா, போக்தா ஆகிறது.

ஸ்தூல, சூக்ஷம சரீரத்தை, ‘நான்’ என எண்ணுவது அஹங்காரம். மாறுபடும் தன்மையுடையது சரீரம். மாறாப் பெருநிலையில் வீற்றிருப்பது ஆத்ம சைத்தன்யம். தோன்றிய மேகம் மறையும் போது ஆகாசம் எப்படி அழிவதில்லையோ, அப்படி உடல் அழியும் போது ஆத்மா அழிவதில்லை.

-----------------------------------------------------------------------------------------------------------------------

।।2.20।। ஆத்மா விகாரமற்றது:

न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूय: ।

अजो नित्य: शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ।। २०

ந ஜாயதே ம்ரியதே வா கதா3சின்

நாயம் பூ4த்வாப4விதா வா ந பூ4ய: ।

அஜோ நித்ய: சா1ச்1வதோऽயம் புராணோ 

ந ஹன்யதே ஹன்யமானே ச1ரீரே ।। 20


अयम्  அயம்  இந்த(ஆத்மா)  कदाचित्  கதா3சித்  ஒருபோதும்   न जायते   ந ஜாயதே  பிறப்பதில்லை  

वा   வா  அல்லது  न म्रियते   ந ம்ரியதே  இறப்பதில்லை  वा  வா  அல்லது  भूत्वा   பூ4த்வா  இல்லாதிருந்து  

भूय:   பூ4ய:  மீண்டும்  भविता   4விதா  உண்டாவதில்லை [ வேறு மொழிபெயர்ப்பு: भूत्वा   பூ4த்வா  உண்டாகி   भूय:   பூ4ய:  மீண்டும்  भविता   4விதா  இல்லாமற்போவது    கிடையாது]  

अज:  அஜ:   பிறப்பற்றது  नित्य:   நித்ய:  என்றுமிருப்பது(இறப்பற்றது)  

शाश्वत:  சா1ச்1வத:  தேயாதது(தொடர்ந்திருப்பது)  पुराण:  புராண:  வளராதது(புதியதாகவே இருப்பது)  

शरीरे हन्यमाने  1ரீரே ஹன்யமானே   உடலானது கொல்லப்பட்டாலும்  अयम्  அயம்  இந்த ஆத்மா 

न हन्यते  ந ஹன்யதே  கொல்லப்படுவதில்லை.


இவ்வாத்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இது இல்லாதிருந்து பிறகு பிறந்ததன்று. [இருந்து பிறகு இறந்து போவதன்று.] இந்த ஆத்மா பிறவாதது, இறவாதது, தேயாதது, வளராதது. உடலானது கொல்லப்பட்டாலும் இந்த ஆத்மா கொல்லப்படுவதில்லை.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

  இவன் பிறப்பது மில்லை. எக்காலத்திலும் இறப்பது மில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவது மில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப் படான்.


விளக்கம்:

=> உடலானது கீழ்கண்ட 6 வித மாற்றங்களுக்கு(षड् भाव विकार) உட்பட்டது.

(1) அஸ்தி(अस्ति ) - இருத்தல்( பிறப்பிற்கு முன்; கர்ப்பத்தில்)

(2) ஜாயதே(जायते ) - பிறத்தல்

(3) வர்த்ததே (वर्धते) - வளர்தல்

(4) விபரினமதே ( विपरिणमते) - மாறுதல்

(5) அபக்ஷீயதே ( अपक्षीयते) - தேய்தல்

(6) வினஷ்யதி ( विनश्यति) - மாய்தல்

இந்த விகாரங்கள் ஆத்மாவுக்கு இல்லை.


=> ஆத்மா மாறாதது(அவிக்ரிய_ अविक्रिय):

ஆத்மா எப்போதும், எவ்விதத்திலும் மாறாதது என்பதை உணர்த்தும் விதமாக ஸ்ருதியிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. முன் ஸ்லோகம் அனுஷ்டுப் சந்தத்திலும்(மீட்டரில்), இந்த ஸ்லோகம் த்ரிஷ்டுப் மீட்டரிலும் கூறப்பட்டுள்ளது. உச்சாடனத்திற்கு எளிதான அனுஷ்டுப் சந்தத்திலேயே மகாபாரதம் மற்றும் இராமாயண ஸ்லோகங்கள் அமைந்துள்ளன.

இங்கு க்ருஷ்ணர், ஆத்மா பிறப்பதில்லை(ந ஜாயதே), இறப்பதில்லை (ந ம்ரியதே); அதாவது பிறப்பு, இறப்பு எனும் இந்த இருவித மாற்றம் ஆத்மாவிற்கு இல்லை என்கிறார்.

பொதுவாக இரண்டு வகையான தோற்றம் கூறப்படும். (1) ஏற்கனவே இல்லாத ஒன்று இருத்தலுக்கு வருவது(अभाव -> भाव). உதாரணமாக பானை. (2) ஒரு வடிவத்திலிருந்து இனியொரு வடிவத்திற்கு மாறுதல்(भाव -> भाव). உதாரணமாக விதை என்னும் வடிவம் முளைவிட்டு செடியாக மாறுதல். ஆத்மாவிற்கு இந்த இருவித மாற்றமும் இல்லை. 

அடுத்த வரியான ‘நாயம் பூ4த்வாப4விதா வா ந பூ4ய:’, 2 விதமாக பொருள் கூறலாம். சங்கரரும் தன் உரையில் கீழ்கண்ட இரு பொருள் விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஆத்மா ஒருகாலத்தில் தோன்றி, பின் இல்லாமல் போவதில்லை ( பூ4த்வா பூ4ய: ந 4விதா ந). முன்னொரு காலத்தில் இல்லாமலிருந்து மீண்டும் இப்போது இருந்துகொண்டிருப்பதாகவும் இல்லை( ந பூ4த்வா பூ4ய: ப4விதா ந). அதாவது கடந்த காலத்தில் இல்லாமல் இருந்ததுமில்லை; எதிர்காலத்தில் இல்லாமல் போகப் போவதுமில்லை. 

இல்லாமலிருந்து, இருத்தலுக்கு வருவதை பிறப்பு என்றும், இருந்துகொண்டிருப்பது, இல்லாமல் போவதை இறப்பு என்றும் கூறுகிறோம். ஆத்மாவுக்கு இவையிரண்டும் இல்லாததால், இது பிறப்பற்றது(அஜ:). மரணமற்ற காரணத்தினால் காலத்திற்கு அப்பாற்பட்டு, என்றுமிருப்பது(நித்ய:). நதியானது தொடர்ந்து மாற்றத்தை அடைந்து கொண்டே நித்யமாக இருக்கிறது. இது ப்ரவாக நித்யம் எனப்படும். இந்த சாத்தியத்தை நீக்கி, ஆத்மா எப்போதும் மாறாமல், என்றுமிருப்பது என்பதை சாசுவதம்(சா1ச்1வத:) என்ற சொல் குறிக்கிறது. இங்கு ஆத்மாவைக் குறிக்கும் இனியொரு சொல்லான புராண:, பொதுவாக புராதனமானது எனப் பொருள்படும். ஆனால் இங்கு, புதியது என்பது பொருள். 

  *  पुरा एव नव: पुराण: (புரா ஏவ நவ: புராண:) - முன்னமிருந்தே புதியது. 

அதாவது வளராதது, தேயாதது, எப்போதும் புதியதாகவே இருப்பது. மேலும் உடல் அழியும் போதும், ஆத்மா அழியாதது( 1ரீரே ஹன்யமானே ந ஹன்யதே). எந்தவொன்று குணத்துடன் கூடியதாக உள்ளதோ அதுவே வளர்தல், தேய்தல், ஒளிர்தல், மங்குதல், வீங்குதல் மற்றும் சுருங்குதல் போன்ற மாற்றத்தை அடையும். உதாரணமாக, நிறம் ஒன்றின் குணமாக இருக்கும் பட்சத்தில் அது மங்கலாம் அல்லது வேறு நிறமாக மாறலாம். ஆனால் எந்தவித குணமோ, அங்கங்களோ, பிரிவுகளோ இல்லாத ஆத்மா, எப்போதும் புதியதாகவும், எந்த செயலிலும் ஈடுபடாத அகர்த்தாவாகவும்(अकर्ता), செயலுக்கு உட்பட்டு மாற்றத்தை அடையும் பொருளாக இல்லாத அகர்மமாகவும்(अकर्म) இருப்பதால் ஆத்மா சோகத்திற்கான மூலம் அல்ல(अशोच्य). 

சங்கரர் இந்த ஸ்லோகத்திற்கான உரையை, ஸ்தூல உடலில் காணப்படும் 6 விகாரங்கள் அற்றது ஆத்மா என்றும், க்ருஷ்ணர் இந்த அனைத்து விதமான மாற்றத்தையும் நிராகரிப்பதாகவும் கூறி முடிக்கிறார். 



-------------------------------------------------------------------------------------

 ।।2.21।। ஆத்மா காரியத்தை செய்விப்பவன் அல்ல( ந ஹேது கர்த்தா):

वेदाऽविनाशिनं नित्यं य एनमजमव्ययम्।

कथं स पुरुष: पार्थ कं घातयति हन्ति कम् ।। २१

வேதா3ऽவிநாசி1னம் நித்யம் ய ஏனமஜமவ்யயம் ।

கதம் ஸ புருஷ: பார்த்த3 கம் கா4தயதி ஹந்தி கம் ।। 21


पार्थ  பார்த்த3   பார்த்தா    य:   ய:  யார்    एनम्   ஏனம்   இந்த(ஆத்மாவை)  

अविनाशिनं   அவிநாசி1னம்  நாசமற்றதாக   नित्यं  நித்யம்  என்றுமுள்ளதாக   अजम्  அஜம்   பிறவாததாக   

अव्ययम्  அவ்யயம்  குறையாததாக  वेद   வேத3   அறிகிறானோ   

स:  पुरुष:   ஸ: புருஷ:  அப்புருஷன் (அந்த ஞானியானவன்)    कथं   கதம்  எப்படி  कं   கம்   யாரை   

हनति   ஹந்தி  கொல்லுகிறான்   कं  கம்  யாரை  घातयति   கா4தயதி கொல்லச்செய்கிறான்.


பார்த்தா, இந்த ஆத்மாவை அழியாதது, மாறாதது, பிறவாதது, குறையாதது என்று அறிபவன் எப்படி யாரைக் கொல்வான், யாரைக் கொல்விப்பான்? 


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இப் பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்று முளது — இங்ஙன முணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்ப தெவனை?


விளக்கம்:

=> ஆத்மா அகர்த்தா:

க்ருஷ்ணர், ஆத்மா எந்தச் செயலையும் செய்பவனாகவோ(subject), எந்தவொரு செயலுக்கும் பொருளாகவோ(object) இல்லை என முந்தய ஸ்லோகங்களில் கூறியதை இங்கு சுருங்கச் சொல்கிறார். மேலும் அது உடலுக்கு ஏற்படும் 6 வித மாற்றங்களுக்கு(षड् भाव विकार)  உட்படாததால் நாசத்தை அடையாதது(அவிநாசி1) எனவும், நாசத்தை அடையாமல் என்றுமிருப்பதால் நித்யமானது(நித்யம்) எனவும், பிறவாதது(அஜம்), குறையாதது(அவ்யயம்) எனவும் கூறுகிறார். இந்த ஆத்மஞானத்தை உடையவனே உண்மையில் ஆத்மாவை அறிபவன். 

இப்படிப்பட்ட ஞானி அகங்காரமற்றவனாதலால் எந்தச் செயலுக்கும் ‘நான் கர்த்தா’ என்ற உணர்ச்சி அவனுக்கு வருவதில்லை. ஒரு வினையும் ஆத்ம ஞானியைச் சாராது என்பதற்கு சான்றாகக் கொல்லுதல், கொல்வித்தல் எனும் இரண்டு கொடிய செயல்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஞானியானவன் யாரைக் கொல்லுகிறான்?(கம் ஹந்தி) யாரைக் கொல்லச்செய்கிறான்?(கம் கா4தயதி). இங்கு ‘கொல்லுதல்’ என்பது யுத்தகளம் என்னும் சூழ்நிலை பொருட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக இது பேசுதல், நடத்தல், படித்தல் போன்ற ஒருவன் செய்யும் செயலைக் குறிப்பதாக சங்கரர் தனது உரையில் கூறுகிறார். 

 இரண்டு விதமான கர்த்தா உண்டு. 

(1) செயலை செய்பவன்(கர்த்தா_कर्ता)

(2) இனியொருவனை ஒரு கார்யத்தை செய்ய வைப்பவன்(ஹேது கர்த்தா_हेतु कर्ता/காரயிதா_कारयिता). உ. தந்தை மகனை படிக்கச் செய்தல்.

இங்கு பகவான், ஆத்மா இவையிரண்டும் அல்ல எனக் கூறகிறார். ஞானி ஆத்மாவை, தான் என அறிந்த காரணத்தினால், ஆத்மாவின் லக்ஷணம் ஞானிக்கு செல்கிறது.

=> ஸர்வ கர்ம சந்யாசி:

ஸர்வ-கர்ம-சந்யாசியிடம், ‘நான் செய்கிறேன்’ என்ற கர்த்ருத்வ-புத்தி(कर्तृत्व बुध्दि ) இல்லை. மனதைப் பின்னனியாகக் கொண்டு புலன்கள் அந்தந்த செயல்களில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. ஆகவே செயல் செய்து கொண்டிருந்த போதிலும், ‘நான் கர்த்தா அல்ல’ என்ற அறிவுடனே இருக்கின்றான். இந்த விவேகத்துடன் கூடியவன் ‘வித்வான்’ என்றழைக்கப்படுகிறான். இவனுடைய ப்ரார்த்தனை, யோகம், நற்பண்புகளுக்கான சாதனை மற்றும் தனது சந்யாச வாழ்க்கையும் கூட ஸர்வ-கர்ம-சந்யாசத்தில் முழுமையை அடைகிறது. தனது உரையில் சங்கரர், இதற்கு பிறகு, கர்மபலத்தை எதிர்பார்த்து அவன் எந்த கர்மத்திலும் ஈடுபடுவதில்லை என்கிறார். அவனுடைய எல்லாவித வழிபாடும் இந்த கண்டறிதலில் முழுமை பெறுவதாகவும், இதை கண்டறியவே அனைத்து கர்மங்களும் செய்யப்பட்டதாகவும் கூறி வேதாந்த சாஸ்திரத்தை கர்ம சாஸ்திரத்துடன் இணைக்கிறார். இந்த பலனுக்காகவே கர்மயோகம். ஸர்வ-கர்ம-சந்யாசமே உண்மையான சந்யாசம். 

சாஸ்திரத்தில் கூறப்பட்ட கர்ம-சந்யாசத்திற்கான சடங்குகள் செய்யப்படாமல், க்ரஹஸ்த வாழ்க்கை முறையில் இருந்துகொண்டும், ஒருவன் ஸர்வ-கர்ம-சந்யாசியாக ப்ராரப்த கர்மத்தை தொடர முடியும். உதாரணமாக வேந்தனான ஜனகர், ஞானத்திற்குப் பிறகும் எந்த பாதிப்புமின்றி ராஜ்ஜியத்தை தொடர்ந்து ஆட்சி புரிந்தார். ஆகவே ஜனகரைப் போன்று தனது கடமையை தொடர்ந்து செய்து கொண்டும் அல்லது சந்யாசத்தை மேற்கொண்டும் ஞானத்தை பின்பற்றலாம். ஞானியாக இருப்பதற்கும் வெளித்தோற்றத்தில் அவனது செயலுக்கும் சம்பந்தமிருக்க வேண்டிய அவசியமில்லை என சங்கரர் உரையில் விளக்குகிறார். ப்ராரப்த கர்மத்தினால் சில குறிப்பிட்ட செயல்கள் நடைபெறலாமே தவிர, எந்த கர்மபலத்திற்காகவும் அவன் செயல் செய்வதில்லை. இக்கருத்து கீதா-சாஸ்திரத்தில் பல இடங்களில் கூறப்படுகிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஒரு சாதுவானவர் ஜன நெருக்கமுள்ள தெருவழியே போய்க் கொண்டிருந்தார். அப்போது தற்செயலாய் ஒரு துஷ்டனுடைய காலை மிதித்துவிட்டார். அப்பொல்லாதவன், தாங்க முடியாத கோபத்தினால் சிறிதும் இரக்கம் காட்டாமல் சாதுவை மிகைப்பட தாக்கி அடித்தான். சாது பிரக்ஞையற்றுத் தரையில் விழுந்தார். அதைக் கேள்விப்பட்டு வந்த சிஷ்யர்கள் அவருக்கு பணிவிடை செய்து சரீரப் பிரக்ஞை வரும்படிச் செய்தார்கள். சாது கொஞ்சம் கண் திறந்துப் பார்த்தார். சிஷ்யர்களில் ஒருவர் அவரிடம், ‘சுவாமி, இப்போது தங்களுக்கு குற்றேவல் புரிவது யார் என்று தெரிகிறதா?’ என்று கேட்டார். ‘இந்தச் சரீரத்தை அடித்த கை இப்போது இதற்குப் பணிவிடை பண்ணுகிறது’ என்று சாது பதில் கூறினார். உண்மையான ஞானிக்கு மித்ரன் என்றும் சத்ரு என்றும் அடிப்பவனென்றும் அடிபடுபவனென்றும் வித்தியாசமே கிடையாது.


-----------------------------------------------------------------------------------------------------------------------

।।2.22।। ஆத்மா மாற்றத்தை அடையாதது (நிர்விகார:)

वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि ।

तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही।। २२

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா2 விஹாய

நவானி க்3ருஹ்னாதி நரோऽபராணி।

ததா21ரீராணி விஹாய ஜீர்ணாந்-

யன்யானி ஸம்யாதி நவானி தே3ஹீ ।। 22


नर:  நர:  ஒரு மனிதன்  यथा   யதா2  எப்படி  जीर्णानि  ஜீர்ணானி  பழைய(பழுதுபட்ட) 

वासांसि   வாஸாம்ஸி  ஆடைகளை  विहाय  விஹாய விட்டுவிட்டு   अपराणि   அபராணி  வேறு  

नवानि   நவானி  புதியதை  गृह्णाति  க்3ருஹ்னாதி  எடுத்துக் கொள்கிறானோ  तथा  ததா2   அப்படியே   

देही   தே3ஹீ  தேஹத்தை உடையவன்(ஆத்மா)  जीर्णानि   ஜீர்ணானி  பழைய  शरीराणि  1ரீராணி  சரீரங்களை  विहाय  விஹாய  விட்டுவிட்டு   अन्यानि  அன்யானி   வேறு  नवानि   நவானி  புதியதை  

संयाति  ஸம்யாதி  அடைகிறான்.   


பழுதுபட்ட பழைய துணிகளைக் களைந்துவிட்டு மனிதன் வேறு புதிய துணிகளைப் போட்டுக் கொள்வதைப் போல ஆத்மா பழைய சரீரங்களை விட்டுவிட்டு வேறு புதியதை அடைகிறான்.


பாரதியின் மொழிபெயர்ப்பு : 

நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்து விட்டு, மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான். 


விளக்கம்:

=> உடையை போன்றது உடல்:

இங்கு க்ருஷ்ணர், உதாரணத்தின் மூலமாக ஆத்மா அழியாமல் என்றும் நித்யமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார். எவ்விதம்(யதா2) என்பது உதாரணத்தின் தொடங்கத்தை குறிக்கிறது; மனிதன் தனது பழைய ஆடைகளை கைவிட்டு புதியதை அணிகின்றான்(ஜீர்ணானி வாஸாம்ஸி விஹாய அபராணி நவானி க்3ருஹ்னாதி). பொதுவாக பழைய ஆடை என்பது குறிப்பிட்ட மனிதர்களைப் பொறுத்து மாறுபடும். சிலர் ஒரிரு வருடம் உபயோகித்த ஆடைகள் பழையது என்பர், ஒரு சிலர் அந்த ஆடையின் நிறம் மாறும் வரை அல்லது அது கிழியும் வரை அதை பழையதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திருவனந்தபுரத்து ராஜா, ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு புதிய உடையை தான் அணிய வேண்டும் என்பதால் ஒரு நாள் அணிந்தது அவரை பொருத்தவரையில் பழையது. ஆகவே பழையது அல்லது உபயோகப்படாதது என்பது அவரவர்களுடைய தகுதியை, சூழ்நிலையைப் பொறுத்து அமைகிறது.  

அவ்விதம் சரீரத்தை உடையவனான ஆத்மா(ததா2 தே3ஹீ) பழைய உடலை கைவிட்டு புதியதை அடைகிறான்(ஜீர்ணானி 1ரீராணி விஹாய அன்யானி   நவானி ஸம்யாதி). சரீர(शरीर) எனும் சொல் சிதைவுக்குட்பட்டது எனப் பொருள்படும். உடலானது வயது முதிர்வு, நோய் அல்லது சரியாக பராமரிக்கப்படாதது என பல்வேறு காரணங்களால் பழையதாகவோ உபயோகப் படாததாகவோ(ஜீர்ண) மாறலாம். ஏன் விபத்து, கொலை, தற்கொலை போன்றவைகளும் உடலை அழித்து உபயோகமற்றதாக ஆக்குகிறது. உடல் மூப்பின் காரணமாக மரணமடையும் போது பழைய உடல் என்பதை புரிந்துகொள்ளலாம். ஆனால் குழந்தையின் மரணம், இளவயதில் நோயினால் இறப்பு இவற்றை எப்படிப் புரிந்துகொள்வது? கர்ம வினை; ப்ராரப்த கர்மம். 


=> ப்ராரப்த கர்மம்:


      சஞ்சித கர்மம் —> ப்ராரப்த கர்மம் —> ஆகாமி கர்மம்


சஞ்சிதத்திலிருந்து வெளிப்படும் ஒரு சிறு பகுதி ப்ராரப்தம். சஞ்சிதத்தில் சேர்ந்த அனைத்து பாவ புண்ணியங்களையும் ஒரே உடலில் தீர்க்க முடியாது.  ஆகவே  ஒரு குறிப்பிட்ட சுக துக்கத்தை தீர்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட உடல் கொடுக்கப்படுகிறது. ஆகவே ப்ராரப்த கர்மத்தை தீர்க்க ஜீவனுக்கு உடல் கொடுக்கப்படுகிறது. நம் முயற்சிக்கு அப்பாற்பட்டதான விஷயங்கள் இதன் மூலமே கிடைக்கின்றன (உ.: பெற்றோர், உடல், ஆண்-பெண், ஆயுட்காலம்….).

ஒரு ஜீவன் சூக்ஷம சரீரத்திலிருந்து ஸ்தூல சரீரத்தை தேர்ந்தெடுக்க பாப புண்ணியம் வெளிப்பட்டிருக்க வேண்டும். அந்த வெளிப்பட்ட பாப புண்ணியங்கள் ப்ராரப்த கர்மம் எனப்படும். சிறு பகுதியான இவை தீரும் போது ஸ்தூல சரீரம் விடப்படுகிறது. இப்போது சூக்ஷம சரீரத்தில் வேறுவித பாப புண்ணியங்கள் வெளிப்பட அது வேறொரு ஸ்தூல சரீரத்தை அடையும். 

ஆகவே ப்ராரப்த கர்மத்தினாலேயே ஒரு ஜீவாத்மா குறிப்பிட்ட தேஹத்துடன் பிறந்து, அதன் நோக்கம் நிறைவடைந்தவுடன் அதை விடுகிறது. 

இதிலனைத்தும் தேஹத்தை உடையவனான(தே3ஹீ) ஆத்மா மாறாமல் சாக்ஷியாக இருக்கிறது. ஆகவே உண்மையில் இக்காரியத்தை ஆத்மா செய்வதில்லை. ஜடமான சூக்ஷம சரீரம் இதை செய்த போதிலும், ஆத்மாவின் அணுக்ரஹத்தினால் நடைபெறுவதால் இது ஆத்மாவினால் செய்யப்படுவது போலத் தெரிகிறது. ஆத்மாவின் இருப்பில் சூக்ஷம சரீரம் இக்காரியத்தை செய்கிறது. ஸ்தூல, சூக்ஷம சரீரம் மாறும் போது ஆத்மாவிற்கு மாற்றம் கிடையாது.

தேஹம் என்பது அழிவிற்கு உட்பட்டது. அது திடீரென்று ஒரு நாள் மரணிப்பதில்லை, சதா அழிந்து கொண்டிருப்பது. ஆனால் தேஹியை அழிக்க முடியாது. இவ்விரு உண்மையைத் தெளிவாக புரிந்து கொண்டால், சோகத்திற்கான காரணம் என எதுவுமில்லை— ‘அசோ1ச்யான் அன்வசோ1ச: த்வம் துயரப்படத்தகாதவர் பொருட்டு  துயரப்படுகிறாய்’ என்பதற்கான பகவானின் விளக்கம் தொடர்கிறது.


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

பாம்பும் அதன் மேல்சட்டையும் வெவ்வேறானவை. அதுபோல ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை.

-------------------------------------------------------------------------------------

 ।।2.23।। ஆத்மா அழியாதது(அவிநாசி), நிஷ்பிரபஞ்சப் பொருள்:

नैनं छिन्तन्ति शस्त्राणि नैनं दहति पावक:

चैनं क्लेदयन्त्यापो शोषयति मारुत: ।। २३

நைனம் சி2ன்தந்தி 1ஸ்த்ராணி நைனம் 3ஹதி பாவக:

சைனம் க்லேத3யன்த்யாபோ சோ1ஷயதி மாருத: ।। 23


शस्त्राणि   1ஸ்த்ராணி  ஆயுதங்கள்  एनम्  ஏனம் இதை(ஆத்மாவை

छिन्तन्ति   சி2ன்தந்தி வெட்டுவதில்லை  पावक:  பாவக:  நெருப்பு  एनम्  ஏனம் இதை(ஆத்மாவை)  

दहति   3ஹதி எரிப்பதில்லை  अापஆபநீர்   एनम्  ஏனம்  இதை(ஆத்மாவை)  

क्लेदयन्ति  க்லேத3யன்தி  நனைப்பதில்லை  मारुत:   மாருத:   காற்றும்  

शोषयति   சோ1ஷயதி  உலர்த்துவதில்லை.


ஆயுதங்கள் ஆத்மாவை வெட்டுவதில்லை. நெருப்பு இதை எரிப்பதில்லை. நீர் நனைப்பதில்லை. காற்றும் உலர்த்துவதில்லை


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது, நீர் இவனை நனைக்காது. காற்றுலர்த்தாது.


விளக்கம்:

=> பஞ்ச பூதங்களினால் ஆத்மா அழிவதில்லை:

இந்த ஸ்லோகத்தில் க்ருஷ்ணர், நாசத்தை உண்டாக்கும் சில வழிமுறைகளை கூறி இவைகள் எதுவும் ஆத்மாவை பாதிக்காது என்கிறார். முதலில் ஆயுதங்கள். பூமியை உபாதான காரணமாக(material cause) கொண்டு உருவாக்கப்படும் இவைகள் 2 வகைப்படும். (1) அம்பு, குண்டு போன்ற ஒருவருடைய கையிலிருந்து விடுவிக்கப்படும் ஆயுதங்கள் அஸ்திரம்(अस्त्र) என்றும் (2) கத்தி, சுத்தியல் போன்ற கையில் பிடித்து உபயோகிக்கும் ஆயுதங்கள் சஸ்திரம்(शस्त्र) என்றும் கூறப்படும். இங்கு சொல்லப்பட்ட 1ஸ்த்ராணி எனும் சொல் இவ்விரு வகையையும் குறிக்கும்

ஆயுதங்கள் ஆத்மாவை வெட்டாது( சி2ன்தந்தி).

தீயானது(பாவக:) ஸ்தூல உடலை எரிக்கலாம், ஆனால் ஆத்மாவை எரித்து அழிக்க முடியாது. சூக்ஷம சரீரத்தையே தீயினால் அழிக்கமுடியாது எனும்போது ஆத்மாவை பற்றி என்ன சொல்லமுடியும்! மேலும், நீரானது ஆத்மாவை நனைக்கவோ(க்லேத3யன்தி) மூழ்கடிக்கவோ முடியாது. காற்றினால் ஆத்மாவை உலர்த்த முடியாது( சோ1ஷயதி) என இங்கு பகவான் காற்று, நெருப்பு, நீர், பூமி இந்த நான்கு பூதங்களினாலும் ஆத்மா நாசமடைவதில்லை என்கிறார். பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் பொதுவாகவே எதற்கும் நாசத்தை கொடுப்பதில்லை.

ஸ்தூல மற்றும் சூக்ஷம நிலையில் பஞ்ச பூதங்களே இவ்வுலகமாக தோன்றிக் கொண்டிருக்கின்றது என சாஸ்திரம் கூறுகிறது. சூக்ஷம பூதங்களிலிருந்து மனம், இந்திரியங்கள், ப்ராணன்கள், சித்தம் மற்றும் அஹங்காரம் ஆகியவைகளும், ஸ்தூல பூதங்களிலிருந்து ஸ்தூல உடல் மற்றும் ஸ்தூல உலகமும் தோன்றியதாக கூறுகிறது


=> அழிவின் இயல்பு:

ஒரே மெய்மை தளத்தில் உள்ள பொருட்களே ஒன்றையொன்று பாதிக்கும். உதாரணமாக, ஒரே நிஜத்தில் உள்ள ஆயுதம் ஸ்தூல சரீரத்தை தாக்கலாம், காயமடையச் செய்யலாம் அல்லது அழிக்கலாம். ஒருவேளை, எப்படியாவது ஆயுதத்தை கொண்டு மரத்தின் நிழலை வெட்ட நினைத்தாலோ அல்லது கல்லின் நிழலைக் கொண்டு நாயை அடிக்க நினைத்தாலோ அது கண்டிப்பாக முடியாது. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு மெய்மையைச் சார்ந்தது. ஆத்மா பாரமார்த்திக சத்யம். வ்யாவஹாரிக சத்யத்தில் இருக்கும் இந்த தோற்றங்களினால் அதிஷ்டானமான ஆத்மாவை என்ன செய்துவிட முடியும்!

மேலும் எந்தவொரு பொருளும் தனது இருப்புக்கு இனியொன்றை சார்ந்தே உள்ளது. களிமண்ணால் செய்யப்பட்ட பானை அதன் இருப்புக்கு களிமண்ணை சார்ந்தும், களிமண் அணுக்களைச் சார்ந்தும், அணுக்கள் எலக்ட்ரான், புரோட்டான் போன்ற துகள்களைச் சார்ந்தும் உள்ளது. ஆகவே எந்தவொன்றும் மற்றதைச் சார்ந்து இருப்பதோடு, அந்த மற்றது ஒருவருடைய கருத்தை அல்லது எண்ணத்தை பொருத்து அமைகிறது. இறுதியில் எண்ணம் ப்ரக்ஞையை சார்ந்தது. ப்ரக்ஞை எதையும் சாராதது. எதையும் சாராமல், தானாக விளங்கிக் கொண்டிருக்கும்ஸத்ஆத்மாவினாலேயேஅஸத்’-தான சிருஷ்டி முழுமையும் விளங்கிக் கொண்டிருக்கிறது. ‘ஸத்’-தை அஸத் எப்படி அழிக்க முடியும்?!

சைத்தன்யத்தின் ஒரேயொரு மூலமான ஆத்மாவினாலேயே இந்த உலகம் காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆத்மா(‘நான்’) தவிர மற்றவை அனைத்தும் அறியப்படும் பொருள்(objects). மனம், புலன்கள், உடல் மற்றும் இவ்வுலகம் என்னால் அறியப்படுபவை. அறியப்படும் பொருளினால் அறிபவனை அறிய முடியாது. சைத்தன்யத்தினால் விளங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் சைத்தன்யத்தையே எப்படி அழிக்க முடியும்?!


ஶ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்:

ஆத்மா ஒன்றினோடும் பந்தப்பட்டதன்று. இன்ப துன்பம், பாப புண்ணியம் முதலியன ஒருபோதும் ஒருவிதத்திலும் ஆத்மாவைச் சார்வதில்லை. ஆனால் அவைகள், சரீரமே தாங்களென்று கருதியிருப்போரைச் சார்கின்றன. புகையானது சுவரைக் கரியாக்கும். ஆனால் அதனால் சூழப்பட்டிருக்கும் வெளியிடத்தைக் கரியாக்காது


-------------------------------------------------------------------------------------------------------------------

।।2.24।। ஆத்ம தத்துவத்தின் ஸாரம்:

अच्छेद्योऽयमदाह्योऽयमक्लेद्योऽशोष्य एव

नित्य: सर्वगत: स्थाणुरचलोऽयं सनातन: ।। २४

அச்சே2த்3யோऽயமதா3ஹ்யோऽயமக்லேத்3யோऽசோ1ஷ்ய ஏவ

நித்ய: ஸர்வக3: ஸ்தா2ணுரசலோऽயம் ஸனாதன: ।। 24


अयम्   அயம் இது(இந்த ஆத்மாअच्छेद्य:   அச்சே2த்3:  வெட்டப்படாதது  अयम्   அயம்  இது(இந்த ஆத்மாअदाह्यஅதா3ஹ்ய:   எரிக்கப்பட முடியாதது अक्लेद्य:   அக்லேத்3:  நனைக்கப்பட முடியாதது   

अशोष्य: एव   அசோ1ஷ்ய: ஏவ   உலர்ததப்படவும் முடியாதது   अयम्   அயம்  இது(இந்த ஆத்மா)   

नित्यநித்ய:   என்றுமுள்ளது   सर्वगतஸர்வக3:  எங்கும் நிறைந்தது   स्थाणुஸ்தா2ணு:   ஸ்திரமானது  अचलஅசல:   அசையாதது    सनातनஸனாதன:  எப்போதுமிருப்பது(அநாதி).     


இந்த ஆத்மா வெட்டப்படாதவன்; தகனமடையாதவன்; நனையாதவன்; உலர்பவனுமல்லன்; இவ்வாத்மா நித்யமானவன், எங்கும் நிறைந்தவன், ஸ்திரமானவன், சலனமில்லாதவன், எப்பொழுதுமிருப்பவன்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன், நித்யன்; எங்கும் நிறைந்தவன், உறுதி யுடையான், அசையாதான். என்று மிருப்பான்.


விளக்கம்:

=> எப்பொழுதுமிருப்பது:

இல்லாத ஒன்றை அழிக்க முடியாது. உதாரணமாக, ‘மலடியின் மகன்’- குழந்தை பெற முடியாதவளின் மகனை எவ்விதத்திலும் அழிக்க முடியாது. அதாவது அங்கு மகன் என்ற ஒருவன் இல்லை. அதுபோல, வெட்டவோ நனைக்கவோ எரிக்கவோ முடியாது எனில் அப்படி ஒரு பொருள் இல்லையோ-சூன்யம்-இல்லாமை என்ற சந்தேகம் வரலாம். இந்த ஸ்லோகத்தில், க்ருஷ்ணர் உபயோகிக்கும் இது(அயம்) என்ற சொல் தானாக இருந்து கொண்டிருக்கும் ஆத்மாவை குறிக்கிறதே தவிர இல்லாத ஒன்றைஇதுஎன கூறமுடியாது. ‘நான் இருக்கின்றேன்என்பதை ஒருவன், புலன்களினாலோ அனுமானத்தினாலோ அல்லது எடுத்துக்காட்டை கொண்டோ அறியத் தேவையில்லை. அது தானாக விளங்குவது, ஸ்வத-சித்தம்(स्वत-सिद्ध).

அறியப்படும் பொருளாக இல்லாத ஆத்மா வெட்டப்படாதது(அச்சே2த்3:), எரிக்கப்படாதது(அதா3ஹ்ய:), நனைக்கப்படாதது(அக்லேத்3:), உலர்ததப்படாதது(அசோ1ஷ்ய:) என மீண்டும் இங்கு பகவான் கூறுவது, இது சூன்யம் அல்ல எனும் நோக்கில்

காலத்தினால் வரையறுக்கப் படாத நித்யமான இந்த ஆத்மா எல்லா இடத்திலும் வ்யாபித்திருப்பது(ஸர்வக3:). எங்கும் நிறைந்திருந்து போவதற்கு புதிய இடமில்லாததால், ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நகராது ஸ்திரமாய்(ஸ்தா2ணு:) இருப்பது. அப்படியெனில் மரங்களைப் போல் ஒரே இடத்தில் நின்று அசைந்து கொண்டிருப்பதா? என்ற கேள்வி வரும்போது, அது அசையாதது(அசல:). மேலும் க்ருஷ்ணர், ஆத்மா சநாதனம்(ஸனாதன:) என்கிறார். காரணமற்றது, உண்டுபண்ணப்படாதது. அது எப்பொழுதுமிருப்பதாகிறது

வார்த்தையால் விளக்க முடியாத ஆத்மாவை, வார்த்தைகளைக் கொண்டு விளக்க முற்படும்போது, ஏதேனும் ஒரு விளக்கம் அர்ஜுனனின் உள்ளத்தில் படிந்து அவனது துக்கத்தை நீக்கலாம். அக்ஞானத்தால் மனிதன் துக்கத்தை வருவித்துக் கொண்டு தனது மேண்மைகளை இழக்கின்றான். அக்கீழ்மை வேண்டப்படுவதன்று என அறிவுறுத்துவதற்கே வாசுதேவர் இத்தனைவித விளக்கங்களைக் கையாளுகிறார்.

-------------------------------------------------------------------------------------